Read in : English
மாண்டஸ் புயல் மேற்கு கடற்கரைக்குச் சென்றுவிட்டது. ஆனாலும் அது தந்த கனமழை மேலும் தொடரலாம் என்ற கவலையோடு இருக்கிறது தமிழ்நாடு. டிசம்பர் 20 வரை சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், டிசம்பர் 16 வரை சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதன்பின்னர் லேசான மழையும் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை கடந்த புதன் (14.12.2022) அன்று ஆரூடம் சொல்லியிருக்கிறது..
லேசான மழை என்றால் 2.5 முதல் 15.5 மி.மீ. மழை என்றும், மிதமான மழை என்றால் 15.6 – 64.4 மி.மீ. மழை என்றும் அர்த்தம். தமிழ்நாட்டில் டிசம்பர் 19லிருந்து ‘பரவலான மழை’ பெய்யலாம் என்று பிரதீப் ஜான் போன்ற சுயாதீன வானிலை அவதானிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
கடந்த புதன் அன்று சென்னையில் மழை இல்லை. என்றாலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் பெய்த மழை இன்னும் அப்பகுதிகளில் வழமையைவிட அதிகமான மழைப்பொழிவுக்குச் சாத்தியம் இருப்பதைக் காட்டுகிறது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 30 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. நீடாமங்கலத்தில் (திருவாரூர் மாவட்டம்) 16 செ.மீ. மழையும், திருமனூரில் (அரியலூர்) 15 செ.மீட்டரும், நீலகிரி மற்றும் திருவையாறு பகுதிகளில் 10 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.
டிசம்பர் 20 வரை சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், டிசம்பர் 16 வரை சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதன்பின்னர் லேசான மழையும் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை கணித்திருக்கிறது
சங்கீதமும் மழையும்
ஆகாயத்தை அச்சத்தோடு அவதானிப்பவர்களில் ஆயிரக்கணக்கான இசை ரசிகர்களும் அடங்குவர். கோவிட் தடைகளுக்குப் பின்னர் இந்தாண்டு மார்கழியில்தான் முழுமையான சங்கீதத் திருவிழா நடக்கவிருக்கிறது. டிசம்பர் மத்தியில் தொடங்கி ஆங்கிலப் புத்தாண்டு வரை கோலாகலத்துடன் நடக்கப்போகும் சங்கீத விழா அது.
சென்னையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் ஊளையிட்டபடி பலத்த உயிர்ச்சேதங்களையும் பிற நாசங்களையும் ஏற்படுத்தாமல் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று இரவு மாண்டஸ் புயல் கடந்தபின்பு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 10) அன்றுதான் சென்னை நிம்மதிப் பெருமூச்சு விட்டது. பெருத்த நட்டம் என்று சொன்னால் சென்னையில் பலவிடங்களில் மரங்கள் பல வீழ்ந்ததுதான். அவை குடிமை ஊழியர்களால் உடனுக்குடன் அகற்றப்பட்டு விட்டன.
2021ல் நடந்தது போல, பல இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. நன்றாகக் கட்டப்பட்ட அதிதிறன் மழைநீர் வடிகால்கள்தான் அதற்குக் காரணம்.
மேலும் படிக்க:ஆண்டு முழுவதும் சவால்தரும் அதிசக்திப் புயல்கள்
வெள்ளிக்கிழமை காலையிலிருந்து பெய்த மழையில் அதிகபட்சமாக 25 செ.மீ. பெற்று திருவண்ணாமலையின் வெம்பாக்கம் முன்னணியில் நின்றது. சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நன்றாக மழை பெய்ததால் மாண்டஸ் புயல் வருவதற்கு முன்பிருந்த பருவகால மழைப் பற்றாக்குறை தீர்ந்து போனது. பின்வரும் பகுதிகளில் பெய்த மழையளவு (செ. மீட்டரில்): ஆவடி – 17; அயனாவரம் தாலுகா அலுவலக ஏரியா – 15; பெரம்பூர் – 14; ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், எம்ஜிஆர் நகர், ஆலந்தூர் மற்றும் கும்மிடிப்பூண்டி – 13; சென்னை விமான நிலையப் பகுதி, கொரட்டூர், அம்பத்தூர், செங்குன்றம் – 12; மைலாப்பூர் டிஜிபி அலுவலப் பகுதி, நுங்கம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி – 11; அண்ணா பல்கலைக்கழகப் பகுதி – 10. தமிழகத்தின் மேற்கு, மத்திய, தென்கிழக்கு மற்றும் குன்று சார்ந்த மாவட்டங்களில் குறைவான அளவு மழையே பதிவாகியுள்ளது.
மணிக்கு 92 கி.மீ. வேகத்தில் வீசிய மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் மரங்கள் விழுந்தன; மாற்றுத்திறனாளிகளுக்கென்று மெரினாவில் சமீபத்தில் கட்டப்பட்ட சிறப்பு நடைபாதை அஸ்திவாரங்கள் தூர்ந்து போயின; மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னையின் நீர்ப்பரப்பு
பள்ளிக்கரணையை அணைத்தவாறு கிழக்கு நோக்கி மழைநீர் வடிந்து செல்லும் சரிவுப் பிரதேசத்தில் சில பகுதிகளில் எதிர்பார்த்தவாறு நீர் தேங்கியது. இந்தத் தடவை தொலைக்காட்சிகளில் அது போன்ற நிகழ்வுகளைக் காட்டியது மிகவும் அபூர்வமாக இருந்தது.
மாநகரத்தின் மையத்திலிருந்து பள்ளிக்கரணை நோக்கி தென்கிழக்காகப் பரந்து கிடக்கும் சமவெளிப் பகுதி முழுவதும் மானாவாரியாக கட்டப்பட்ட வீடுகளாலும் கட்டிடங்களாலும் சீர்குலைந்து விட்டது என்று நீர்வியலாளர்கள் சுட்டிக் காட்டியதை நினைவிற்குக் கொண்டுவருவது நல்லது. அங்கே அதிகவட்டிக்கு கடன் வாங்கில் கட்டப்பட்ட வீடுகள் நிறைய முளைத்துவிட்டன. எதிர்காலத்தில் பருவமழையால் அவை சோதனைக்குள்ளாகலாம். ஆதலால் சில அதிரடியான தீர்வுகளைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும்.
பாஜகவினாலும் அதன் தலைவர் அண்ணாமலையாலும் தொடர்ந்து எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கும் வேளையில் திமுக அரசிற்கு பெரும் சோதனையைத் தந்துவிடாமல் பாதுகாப்பாகக் கடந்துவிட்டது மாண்டஸ்
பாஜகவினாலும் அதன் தலைவர் கே.அண்ணாமலையாலும் தொடர்ந்து எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கும் இந்த வேளையில் திமுக அரசிற்கு மாண்டஸ் பெரும் சோதனையைத் தந்துவிடாமல் பாதுகாப்பாகக் கடந்துவிட்டது. பாட்டாளிக் கட்சி தலைவர்கள் டாக்டர். எஸ்.ராமதாஸும், டாக்டர் அன்புமணியும் புயல் கடந்து சென்றவுடனே முதல்வர் எம்.கே.ஸ்டாலினுக்குப் பூங்கொத்துக்கள் அனுப்பி மோசமான வானிலையைத் திறமையாகக் கையாண்டதற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
மாண்டஸ் 400 கி.மீ. தூரத்திற்கு அப்பால் மையம் கொண்டிருந்தபோது அண்ணா சாலை, ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் பொதுவிடத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட திமுக கட்சிக்கொடியின் பெரிய இரும்புக் கம்பத்தை விமர்சித்தது அறப்போர் தொண்டு நிறுவனம். “பெரும் புயலடித்து அந்தப் பெரிய கம்பம் விழுந்தால் என்ன செய்வீர்கள்?” என்று சமூக ஊடகக் காணொலிக் காட்சி ஒன்றில் அறப்போர் தலைவர் ஜெயராமன் கேட்டிருந்தார். குடிமக்களின் எச்சரிக்கையை அது எதிரொலித்தது. அந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டிருப்பதாக ட்விட்டரில் கடந்த புதன்கிழமையன்று தெரிவித்தது அறப்போர் இயக்கம்.
திட்டமிடுதல் பற்றிய கேள்வி
பெரும் புயலின் கோரத்திலிருந்து சென்னை தப்பியிருக்கலாம். ஆனால் கட்டுப்படுத்தாத வீட்டு வளர்ச்சிப் பிரச்சினை சென்னையில் தொடர்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. கட்டிட வணிகர்கள் கண்டுகொள்ளாத பிரச்சினை வடிகால் கட்டமைப்பு. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையமும் பெருநகர சென்னை மாநகராட்சியும் இதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் நீர் வடிகால் கோணத்தில் எந்த எந்த பகுதிகள் வரக்கூடாது என்பதற்குச் சரியான விதிகளை வகுக்கவில்லை. மாநகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் பருவமழையைத் தேக்கி வைக்க ஏரிகளையும் குளங்களையும் உருவாக்குவதற்கான சிந்தனையை அது கொண்டிருக்கவில்லை. சுற்றுப்புறச் சூழல்வாதிகள் மழைநீரைப் பிரச்சினையாக அல்ல, இயற்கைக் கொடையாகப் பார்க்கிறார்கள்.
மேலும் படிக்க: பருவநிலை மாற்றத்தினால் சென்னைக்குப் பாதிப்பு: ஐபிசிசி அமைப்பு எச்சரிக்கை!
மூன்றாவது மாஸ்டர் பிளானை சிஎம்டிஏ வடிவமைக்கும்போது பருவகாலத்தையும் வானிலை தொடர்பான நிகழ்வுகளையும் முக்கிய காரணிகளாகக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நீண்ட இடைவெளிக்குப் பின்பு 2023 எல் நினோ வருடமாக இருக்கலாம். அப்போது மழையளவு குறைந்து 2024ல் நீர்ப்பஞ்சம் ஏற்படலாம். 2024 உலகம் முழுவதிற்கும் ஆகப்பெரும் உஷ்ணமான ஆண்டாக மாறலாம் என்று வானிலைவியலாளர் ஜேம்ஸ் ஹான்சென்னும் அவரது குழுவினரும் கருதுகிறார்கள்.
மரங்கள் முக்கியம்
புயல் பருவம் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கலாம். பழுதுபட்ட சாலைகளையும் நடைபாதைகளையும் சரிசெய்ய வேண்டிய வேலைகள் இன்னும் பாக்கியிருக்கின்றன. வானிலை அலுவலகத்திலிருந்து நிலைமை சரியாகி விட்டது என்ற தகவல் வரும்வரை அந்த வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் படிநிலையில் பெரிய எந்திரங்கள் வேலை செய்வதால் பல நெருக்கடியான சாலைகளில் இடைஞ்சல்கள் உருவாகின்றன. 2022 முழுவதும் சென்னையில் ஏற்பட்டிருக்கும் இடைஞ்சல்களைக் குறைக்க வேண்டும். 2023ல் மெட்ரோ ரயில் பணிகள் உச்சத்தைத் தொடும். அப்போது ஏற்படக்கூடிய சாலைப் போக்குவரத்து இன்னல்களைத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும்.
அரசு தந்திருக்கும் புள்ளிவிவரங்கள்படி, சென்னை சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆகும் செலவு ரூ.1,171 கோடி.
வண்டலூர் மிருகக் காட்சிசாலைப் பூங்காவில் விழுந்த மரங்கள் உட்பட சென்னை சாலைகளில் விழுந்துவிட்ட மரங்களுக்குப் பதில் புதிய மரங்களை நடவேண்டிய வேலை இருக்கிறது. சென்னை வானிலைக்குப் பொருத்தமான மரங்கள் – பலத்த காற்றுக்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய மரங்கள் – வேண்டும்.
வண்டலூர் மிருகக் காட்சிசாலைப் பூங்காவில் விழுந்த மரங்கள் உட்பட சென்னை சாலைகளில் விழுந்துவிட்ட மரங்களுக்குப் பதில் புதிய மரங்களை நட வேண்டிய வேலை இருக்கிறது
தமிழ்நாடு பல்லுயிரி வாரியத்தின் உறுப்பினரும் மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றிய டி.நரசிம்மன் ”நகர்ப்புற வனத்திற்குப் பொருத்தமான நீண்ட சாலைகளில் நடக்கூடிய மரங்கள்” என்ற பட்டியலைத் தருகிறார். அதில் களிமக்கீரை (4 மீட்டர் வரை வளரும்), புங்கம், வாகை, வெள்ளை மருது மற்றும் மகிழம் (20 மீட்டர் வரை கூட வளரக்கூடியது) ஆகிய மரவகைகள் இடம் பெற்றிருக்கின்றன.
நீண்ட சாலைகளில் நடக்கூடிய மரங்களின் வேர்க் கட்டமைப்புகள் அருகிலிருக்கும் கட்டுமானங்களைப் பாதிக்காதவாறு இருக்க வேண்டும்; மோசமான வானிலையிலும் தாக்குப்பிடிக்கக் கூடிய அளவுக்கு ஆழமாக இருக்க வேண்டும். மரங்கள் எளிதில் விழுந்துவிடாத தன்மையோடு நிழல் தரும் விதத்தில் பறவைகளுக்கு வசிப்பிடம் தரும் வண்ணம் அமைய வேண்டும். அந்தப் பகுதியின் தாவரவியல் சூழலோடு பொருந்திப் போகும் வண்ணம் அவை உருவாக வேண்டும். உணவு தரக்கூடிய சோலைகளை மாநகரங்களில் வளர்த்தெடுக்கும் உலகப் போக்கிற்கு பொருத்தமாகப் பழங்கள் தரும் மரங்களையும் நாம் வளர்க்க வேண்டும்.
Read in : English