Read in : English
சரியாக செயல்படுத்தாத கழிவு மேலாண்மையால், சென்னையின் புறநகர்ப் பகுதியிலுள்ள நகராட்சிகளில் கழிவு நிலக்கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைக் கரிமப்பொருட்கள் அழுகி, அதிலிருந்து மீத்தேன் வெளியாகிறது; அந்த வாயுவைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்னை திணறுகிறது.
சென்னையிலும் (உலகத்தின் பிற பகுதிகளிலும்) ஏற்படும் பசுமையில்ல வாயுக்களின் ஆகப்பெரிய மூலங்களை அடையாளம் காணும் ஒரு கட்டமைப்பு ‘வானிலைக் கண்டுபிடிப்பு’ (Climate Trace). இதில் செயற்கைக்கோள்கள், செயற்கை நுண்ணறிவு, மரபார்ந்த தரவு மூலங்கள் ஆகியவை ஒன்றிணைந்து செயல்படுகின்றன. பசுமையில்ல வாயுக்களின் வெளிப்பாட்டை மதிப்பீடு செய்து வானிலை மாற்றத்தின் தீயவிளைவுகளைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டிற்கு வலு சேர்க்கிறது இந்த அதீத தொழில்நுட்பக் கட்டமைப்பு. பல மூலங்களிலிருந்து வெளிப்படும் வாயுக்களைக் கண்காணிக்கும் திட்டம் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதியும் வானிலைச் செயற்பாட்டாளருமான அல் கோரேவால் தொடங்கப்பட்டது. வானிலை மாற்றம் பற்றிய பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தைக் கொண்டது இந்தத் திட்டம்.
‘கிளைமேட் டிரேஸ்’ வரைபடத்திற்குள் நுழைந்து இந்தியாவைப் பார்வையிட்டு பின் மாநகரங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கவனிக்கும்போது சென்னை வருகிறது. பெருநகர சென்னையில் பல்வேறு பசுமையில்ல வாயுக்கள் வெளிப்படும் இடங்கள் தென்படுகின்றன.
அவற்றில் பிரதானமானவை பின்வருமாறு: சென்னை விமானநிலையம், குப்பைக் களங்களான பெருங்குடி, கொடுங்கையூர், மாதவரம் பெருங்களத்தூர்-தாம்பரம், சுண்ணாம்பு குளத்தூர், அத்திப்பட்டு-அம்பத்தூர் ஆகியவை.
கரியமில வாயுவை விட மிகவும் நாசம் செய்யும் ஒரு பசுமையில்ல வாயு மீத்தேன்
இந்தப் பகுதிகளில் ‘கழிவு’ அளவுகோலின்படி மதிப்பீடு செய்யப்படும் வாயு மீத்தேன். கரியமில வாயுவை விட மிகவும் நாசம் செய்யக்கூடிய ஒரு பசுமையில்ல வாயு மீத்தேன். பரிச்சயமான ஒரு வாயுவும் கூட. எரிசக்தி உற்பத்தி, தொழில், போக்குவரத்து போன்ற பிற முக்கியமான துறைகளும் இந்த அளவுகோலின்படி அளவிடப்படுகின்றன.
சென்னையின் புறநகர் நகராட்சிகளின் கழிவு நிலக்கிடங்குகளில் ஏராளமாகக் கொட்டப்படும் குப்பைக் கரிமப்பொருட்கள் அழுகும்போது வெளிவரும் வாயுதான் இந்த மீத்தேன். இவ்வளவுக்கும் திடக்கழிவைப் பிரித்தெடுக்கவும், மக்கும் குப்பையைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் உரமாக்கவும் ஒரு திட்டம் நடப்பில் இருக்கிறது.
சுத்தப்படுத்தும் செயல்
‘கிளைமேட் டிரேஸ்’ தரவுகளை உள்ளூர்மயமாக்குவது வரவேற்கத் தக்கது. ஏனெனில், அது தமிழக அரசிற்கும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் பிற முகமைகளுக்கும் நுண்மையானதோர் அறிவைத் தரும். அதனால் அகில உலக அமைப்புகளையும், ஐக்கிய நாட்டு அமைப்பினையும், உள்நாட்டு நிதியாளர்களையும் அணுகி நிதியுதவி பெற்று சுத்திகரிக்கும் செயலைச் செய்வது எளிதாகலாம்.
மேலும் படிக்க:பெருங்குடி குப்பைக் கிடங்கு தீ விபத்து: மீத்தேன் அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?
மீத்தேனை உருவாக்கவல்ல மக்கும் குப்பைகளையும் கழிவுகளையும், வீடுகளிலிருந்து சேகரிக்கும்போதே பிரித்தெடுத்து அவற்றைக் கட்டுப்படுத்திய சூழலுக்கு உட்படுத்தி உரமாக்கலாம். அதனால் வளிமண்டலத்தில் மீத்தேன் போய்ச் சேராது. இதைச் சென்னை, ஆவடி, தாம்பரம் போன்ற மாநகராட்சிகளும் பல நகராட்சிகளும் ஊராட்சிகளும் இதனை முன்னெடுக்கலாம். மக்கும் குப்பைகளிலிருந்து எரிசக்தியை உற்பத்தி செய்ய உயிரிவாயு ஆலைகளைப் பயன்படுத்தலாம்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு 2020-21ல் சமர்ப்பித்த அறிக்கையொன்று, தமிழகத்தில் தினமும் 13,422 டன் திடக்கழிவு உற்பத்தியாகிறது என்று கூறுகிறது. எனினும் சென்னைக்கென்று தனியாக தரவுகள் கொடுக்கப்படவில்லை. சுமார் 5,200 முதல் 5,600 டன் வரையிலான திடக்கழிவு சென்னையில் உற்பத்தியாகிறது என்று அதிகாரப்பூர்வமான மதிப்பீடுகள் சொல்கின்றன.
கழிவின் ஈரப்பகுதி 40 முதல் 60 சதவீதம் வரை இருப்பதால், சென்னையிலும் மற்ற மாநகரங்களிலும் நகரங்களிலும் அவற்றிலிருந்து பெரிய அளவில் உரமும் உயிரி எரிசக்தி வாயுவும் தயாரிக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. குடிமக்களுக்கு அதிக செலவு வைக்காத இந்தத் தீர்வைக் கடைப்பிடிக்க எந்தவிதமான பிரயத்தனமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
வாஸ்தவம்தான். சென்னையில் பாரம்பரியமாகக் குப்பைக் கொட்டும் களங்களான பள்ளிக்கரணையையும் கொடுங்கையூரையும் மீட்டெடுக்கும் முயற்சிகள் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அது சம்பந்தமாக சமீபத்தில் அறிவிப்புகள் கூட வெளிவந்திருக்கின்றன. பாரம்பரிய கழிவுகள் கொண்ட சிறிய மலைகளைத் தகர்க்க அங்கே 252ஏக்கர் இடத்தில் ரூ.648 கோடி செலவழிக்கும் திட்டத்திற்குச் சென்னை மாநகர சபை ஒப்புதல் அளித்திருக்கிறது.
அளவெடுக்கும் பிரச்சினை
ஒருபுறம் சென்னையும் பிற நகர்ப்புறங்களும் தங்களின் ஈரக்கழிவைச் சமாளிக்க முடியாமல் போராடுகின்றன. மறுபுறம் பாரிஸ் ஒப்பந்தத்தின்படி நாட்டில் வெளிப்படும் பசுமையில்ல வாயுக்களை அளந்து வானிலை மாற்றம் சம்பந்தமான ஐநா கட்டமைப்பு மன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. வளர்ந்த நாடுகளை விட இந்தியா போன்ற வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கு பசுமையில்ல வாயுக்களை அளந்து அறிக்கை அளிக்க வேண்டிய கட்டாயம் மிகக்கடுமையாக இல்லை. ஆனாலும் பாரிஸ் ஒப்பந்தத்திலிருக்கும் எல்லா உறுப்பினர் நாடுகளும் ஒளிவுமறைவில்லாத தன்மை பற்றிய விதிகளுக்குக் கட்டுப்படுகின்றன. ஒப்பந்தத்தின்படி, அந்த விதிகள் 2024ல் நடைமுறைக்கு வரவிருக்கின்றன.
செயற்கைக்கோள்களையும், நிலத்தின் மற்றும் கடலின் சென்சார்களையும், பொது தரவுகளையும் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி கணிப்புகள் ஆகியவற்றின் உதவியோடு தொலைதூரத்திலிருந்து கரியமில வாயு வெளிப்பாடுகளை மதிப்பீடு செய்யும் பலமானதொரு கட்டமைப்பு உருவாகி இருக்கிறது. இந்தப் பின்னணியில் திடக்கழிவு மேலாண்மை, கழிவு கொட்டும் களங்கள், மூலத்திலே கழிவுகளைப் பிரித்தெடுத்தல், கழிவை உரமாக்குதல் மற்றும் உயிரிவாயு ஆலைகள் மூலமாக மீத்தேனை எரிசக்தியாக மாற்றுதல் ஆகிய முக்கிய அம்சங்களில் தமிழகம் கவனம் செலுத்திச் சிறப்பாகச் செயல்பட வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது. முன்பு சொன்னதைப் போல, துல்லியமாக அளந்து திரட்டப்பட்ட தரவுகள் மீட்சி திட்டங்களுக்குப் பெரிதும் உதவும்; நிதியுதவிகள் பெறுவதற்கும் அவை உதவும்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு 2020-21ல் சமர்ப்பித்த அறிக்கையொன்று, தமிழகத்தில் தினமும் 13,422 டன் திடக்கழிவு உற்பத்தியாகிறது என்று கூறுகிறது
அர்பசேர் சுமீத் என்னும் தனியார் அமைப்பின் பகுதி பங்களிப்போடு நடைபெறும் சென்னையின் கழிவு மேலாண்மைக் கட்டமைப்பானது சட்ட விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. அந்தத் தனியார் முகமை ஊழியர்களிடம் பிரித்தெடுத்த கழிவு ஒப்படைக்கப்பட்டாலும், அதிலிருந்து பணமதிப்பு கொண்ட பொருட்களை பிரித்தெடுத்து உள்ளூர் மறுசுழற்சி வியாபாரிகளிடம் விற்றுவிட்டு மிச்சமிருக்கும் கழிவை நீர் கலந்து பெரிய டப்பாக்களில் அவர்கள் அடைத்து கொள்கின்றனர்.
நகராட்சி குப்பையிலிருந்து உருவாக்கப்படும் உரத்தை அர்பேசர் ஊழியர்கள் மூலமாகவும், சென்னை மாநகராட்சி வார்டு அலுவலகத்திலும் விற்றுப் பணமாக்கலாம் என்று பொதுமக்கள் கூறும் யோசனைகளுக்கு இதுவரை எந்த எதிர்வினையும் வரவில்லை.
இந்தியாவில் வெளியிடப்படும் பசுமையில்லா வாயுக்களில் 14 சதவீதம் 409 மில்லியன் டன் கரியமில வாயுக்கு இணையானது என்று வானிலை மாற்றம் சம்பந்தமான ஐநா கட்டமைப்பு மன்றத்திற்கு இந்தியா 2021ல் சமர்ப்பித்த அறிக்கை மதிப்பீடு செய்திருக்கிறது (ஈராண்டுக்கு ஒருமுறை இந்த அறிக்கை தர வேண்டும் என்பது விதி). இந்தியாவில் வேளாண்மையினால் வெளிப்படும் வாயுக்கள் அளவுதான் உலகில் மிக அதிகமானது என்றும், உலகின் மொத்த வாயு வெளிப்பாடுகளில் 13 சதவீதம் இந்தியாவில் உருவாகிறது என்றும் உலக மதிப்பீடுகள் சொல்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் இருக்கும் ஏராளமான கால்நடைகள் என்றும் அவை கூறுகின்றன.
மேலும் படிக்க: ஸ்வத்சித் சர்வேக்ஷன் அறிக்கை: கழிவு மேலாண்மையில் பின்தங்கியுள்ளதா தமிழ்நாடு?
சென்னை போன்ற பெரிய மாநகரங்களில் நகராட்சிக் குப்பைகளிலிருந்து வெளிப்படும் மீத்தேன் வாயுவைக் குறைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதைத்தான் மேலே சொன்ன புள்ளிவிவரங்கள் வலியுறுத்துகின்றன. பேருந்துகள் வெளியேற்றும் வாயுவைக் கட்டுப்படுத்த அவற்றை மின்மயமாக்க வேண்டும்.
கழிவு மேலாண்மைக்கு அரசாங்கம் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், உயிரிவாயு எரிசக்தி உற்பத்தியை முன்னெடுத்துச் சென்றாலும், அவற்றின் பலன்கள் பல ஆண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கும். மோசமான தரமற்ற பேருந்துகளை வாங்கி அவற்றை டீசலில் ஓட்டி சரியாகப் பேணிக் காக்காமல் இருந்தால் அவற்றின் மோசமான விளைவுகள் குறைந்தபட்சம் ஒன்பது ஆண்டுகளுக்குத் தொடரும். ஏனென்றால் புதிய பேருந்துகளை வாங்கும் திட்டம் அப்படியொரு காலக்கெடுவை விதித்திருக்கிறது.
ஈரக்கழிவை விரிவான முறையில் உரமாக்கும் நகர்ப்புறச் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் பசுமை அணுகுமுறை சென்னையிலும் புறநகர்களிலும் பசுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஈரநிலங்களைக் குடியிருப்பு மனைகளாக மாற்றும் சர்வவல்லமை கொண்ட ரியல் எஸ்டேட் முதலாளிகள் அப்படி மாற்றியமைத்ததைச் சென்னை மாநகரில் சமீபத்தில் பல நிகழ்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. பசுமை அணுகுமுறை கொண்ட அரசுக் கொள்கை அவர்களைத் தடுத்து நிறுத்தட்டும்!
Read in : English