Read in : English
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) மாநகரைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் சாலைகளை அகலப்படுத்த இருக்கிறது. பெரிய வணிக ஆக்கிரமிப்புகளால் தற்போது கிராமத்துச் சாலைகளாக காட்சி தரும் சாலைகள் புத்துயிர் பெறப் போகின்றன.
அனகாபுத்தூர், குன்றத்தூர், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், மாங்காடு, மீஞ்சூர், புழல், சோழாவரம் மற்றும் தாம்பரத்தின் உள்ளார்ந்த பகுதிகள் உள்ளிட்டவற்றில் புறநகர்ப்பகுதி சாலைகள் தேய்ந்து கிடக்கின்றன. தாறுமாறாகக் கட்டப்பட்ட வீடுகள், தறிகெட்டு புயலடிக்கும் புழுதிப் படலங்கள், இடிந்துவிழும் நிலையில் எண்ணற்ற கட்டிடங்கள், சாலைகளில் சிந்திக் கிடக்கும் குப்பைகள், இடிபாடு மிச்சங்கள் – இவைதான் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கும் சிங்காரச் சென்னையின் புறத்தோற்றங்கள்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 11 அன்று 422 சாலைப் பகுதிகளை அகலப்படுத்தப் போவதாக சிஎம்டிஏ ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ஆட்சேபனைகள் இருந்தால் 21 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று சொல்லியிருக்கிறது.
ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சனிக்கிழமையிலும் வெளியாகும் பளபளப்பான முழுப்பக்க நாளேட்டு விளம்பரங்கள், புறநகர்ப்பகுதிகளில் பசுமைச் சூழலின் மத்தியில் கட்டப்பட்ட ’கேட்டட் கம்யூனிட்டி’ அடுக்ககங்களும் வில்லாக்களும் விற்பனைக்குத் தயார் என்று பறைசாற்றுகின்றன. குடியேறும் மக்களுக்கு அமைதியும், பாதசாரிகளுக்கான வசதிகளும், பச்சைப்பசேலென்ற சோலைகளும், விளையாட்டு வசதிகளும், நீச்சல் குளங்களும் சங்கங்களும் அங்கே உண்டு என்று அந்த விளம்பரங்கள் விளக்கிக் கூவி அழைக்கின்றன.
சென்னை மெட்ரோ நிறுவனம் போரூரிலிருந்து பூந்தமல்லிக்கு உயரடுக்கு ரயில் பாதை அமைக்கும் பணியைத் துரிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சாதகமான விளம்பரமாகி விட்டது
இந்த எழுத்தாளர் பரணிபுத்தூரில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ’கேட்டட் கம்யூனிட்டி’ அடுக்கக வளாகத்திற்கு ஒருதடவை சென்றிருக்கிறார். நான்கு படுக்கையறை அபார்ட்மெண்ட் விலை ரூ. 1.46 கோடி. இரண்டு படுக்கையறை அபார்ட்மெண்ட்டின் விலை ரூ. 68 இலட்சம். 2024 டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மாங்காடு, போரூர், அய்யப்பன்தாங்கல் ஆகியவற்றிற்குப் பின்பக்கம் இருக்கும் ஒரு தூசு மண்டலம் பரணிபுத்தூர். போரூர் சாலை சந்திப்பிலிருந்து ஆறு கி.மீ தூரம் பயணித்து பின்னர் முட்டிமோதி மாங்காடு சாலை வழியாக அம்மன் கோயில் இருக்கும் திசை நோக்கிச் சென்றால் பரணிபுத்தூரை அடைந்துவிடலாம்.
மேலும் படிக்க: நகரமயமாதல் பிரச்சினைகளைத் தீர்க்குமா தமிழகத்தின் புதிய சட்டம்?
சிஎம்டிஏவின் திட்டப்படி, பரணிபுத்தூரில் இருக்கும் சில சிறிய சாலைகளுடன் மாங்காடு, குன்றத்தூர் சாலைகளும் அகலப்படுத்தப்பட இருக்கின்றன. பெரிய சாலைகள் 60 மீட்டருக்கும், சிறிய சாலைகள் 7.2 மீட்டருக்கும் அகலப்படுத்தப்படும் என்று அறிவிப்பு சொல்கிறது.
மாற்றம் தரும் கேட்டட் கம்யூனிட்டிஸ்
சிஎம்டிஏ சுமார் இரண்டு தசாப்தங்களாக புறநகர்ப்பகுதிகளில் தனியான நில வரைபடங்களுக்கு ஒப்புதல் அளித்துக் கொண்டிருக்கிறது. ஊகங்களின் அடிப்படையிலான இந்த குடியிருப்பு வளர்ச்சி செயல்பாடு 2004ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியது. ஆனால் இந்த வரைபடங்கள் விவரிக்க முடியாத பகுதிகளாக காணாமல் போயின. ஏனென்றால் சிஎம்டிஏவும், பணத்தட்டுப்பாடு மிக்க உள்ளாட்சி அமைப்புகளும் அந்த பகுதிகளில் வீடு கட்டுபவர்களுக்கு எந்த வசதிகளையும் செய்து தரவில்லை; நல்ல சாலைகள் இல்லை; வடிகால் வசதி இல்லை; நீர் வழங்கல் இல்லை; கழிவுநீர் கால்வாய்கள் இல்லை; தெருவிளக்குகள் இல்லை; பூங்கா, விளையாட்டு மைதானம், பசுஞ்சோலை போன்ற அழகியல் அம்சங்கள் ஏதும் இல்லை.
இந்திய சாலைகள் காங்கிரஸ் (ஐஆர்சி), “நகர்ப்புற சாலைகள் மற்றும் தெருக்கள் மேம்பாட்டுக்கும் திட்டமிடுதலுக்குமான 2018ஆம் ஆண்டு கையேடு” என்பதனை வெளியிட்டிருக்கிறது. அதை சிஎம்டிஏ வாசித்துப் பார்த்தால் நல்லது.

மாங்காடு பகுதியில் சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ள இந்த வரைபடம் ஆரம்பக்கட்ட வளர்ச்சியின் போது சாலை உட்கட்டமைப்பு குறைபாடு இருந்ததை காட்டுகிறது; பின்னர் அங்குள்ள குடியிருப்புவாசிகளின் சொந்த நிதியில் சரி செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பருவகாலத்தில் ஏற்படும் வெள்ளமும் அந்த வரைபடத்தில் இடம்பெறுகிறது
தெருக் கட்டமைப்பு வடிவம்: எந்தப் பாதையிலிருந்தும் அணுகக்கூடிய குறுகிய தெருக்களைக் கட்டமைக்க வேண்டும். அதனால் குழந்தைகள் நடந்தோ அல்லது சைக்கிளிலோ பள்ளிக்கு எளிதாகச் செல்ல முடியும். மேலும் போக்குவரத்து நெருக்கடியும் இருப்பதில்லை.
தனிப்பட்ட வழிப்பாதை உரிமை: மோட்டார் வாகனங்களில் செல்வோருக்கும், மோட்டார் வண்டியைப் பயன்படுத்தாமல் செல்வோருக்கும் கடந்து செல்லும் உரிமையைத் தரும் தெருக்கள் உருவாக்கப்பட்டால் எல்லோருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
ரிக்ஷாக்களும், கூட்டம் நிரம்பி வழியும் மோசமான எம்டிசி பேருந்துகளும் மட்டுமே போக்குவரத்து வாகனங்களாக உலாவந்த புறநகர்ப் பகுதிகளைச் சுத்தமாக்கி நவநாகரிமாக்க வருகிறது மெட்ரோ ரயில்
தெருக்காட்சியின் பெளதீக அம்சங்கள்: ‘முழுமையான தெருக்களை’ உருவாக்கத் தேவையான சாலையின் சொத்துக்கள், மரங்கள், நடைபாதைகள், வண்டிப்பாதைகள் போன்றவற்றின் இன்றைய மற்றும் நாளைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் தெருக்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
இந்த அம்சங்கள் எல்லாம் பொதுவழிச் சாலைகளில் காணப்படுவதில்லை; ஆனால் அவை ‘கேட்டட் கம்யூனிட்டிஸ்’ வசிக்கும் அடுக்ககத் தொகுப்புகளின் தனியார் சாலைகளில் காணப்படுகின்றன என்பது நகைமுரண். அபார்ட்மெண்ட் திட்டங்களைக் கொண்டுவரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடு வாங்குபவர்களுக்கு ஒரு பாலைவனச் சோலையை உருவாக்கித் தருவதாக பளபளப்பான போஸ்டர்களில் பல்வேறு வண்ணங்களில் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கின்றன.
சென்னை மெட்ரோ நிறுவனம் போரூரிலிருந்து பூந்தமல்லிக்கு உயரடுக்கு ரயில் பாதை அமைக்கும் பணியைத் துரிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகி விட்டது. போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி, அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி மற்றும் பூந்தமல்லிக்குப் போகும் பாதை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் வரவிருக்கின்றன என்பதைக் காட்டும் போஸ்டர்கள் பலவிடங்களில் ஒட்டப்பட்டுவிட்டன.
மேலும் படிக்க: மூன்றாவது மாஸ்டர் பிளான்: சிங்காரச் சென்னை கனவு பலிக்குமா?
ஒருகாலத்தில் புழுதியும் பூச்சிகளும் மண்டிக் கிடந்த, ரிக்ஷாக்களும் கூட்டம் நிரம்பி வழியும் மோசமான எம்டிசி பேருந்துகளும் மட்டுமே உலா வந்த அந்தப் புறநகர்ப் பகுதிகளைச் சுத்தமாக்கி நவநாகரிகமாக்க வருகிறது மெட்ரோ ரயில்.
பூந்தமல்லி, திருமழிசை, ஆவடி, வண்டலூருக்கும் கேளம்பாக்கத்திற்கும் செல்லும் ஜிஎஸ்டி சாலை ஆகிய பகுதிகளில் வரவிருக்கும் மெட்ரோ ரயில் வசதியால் ஏராளமான மக்கள் புறநகர்ப் பகுதிகளில் குடியேறி விடுவார்கள். அருகேயிருக்கும் ஒரு புகழ்பெற்ற பள்ளியைத் தங்கள் வீடுகளின் விற்பனைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்.
சிஎம்டிஏ ஒப்புதல் பெற்றும் ஒதுக்கப்பட்ட காட்டுப்பாக்கம் அருகிருக்கும் ஜீவா நகர் போன்ற பழைய பகுதிகளின் மதிப்பு இனி உயரக்கூடும். இவ்வளவுக்கும் வடிகால் வசதி இல்லாததால், பருவகாலங்களில் மழை வெள்ளம் உருவாகும் அபாயம் கொண்டவை அந்த இடங்கள்.
அசுரத்தனமாக ஏறும் நிலமதிப்பு, விரிவாக்கம் செய்யப்படும் மெட்ரோ ரயில் ஆகிய முக்கியக் காரணிகளால் இதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த புறநகர்ப் பகுதிகளில் வீடு கட்டிக் குடியேற மக்கள் இனி விரும்புவார்கள்.
ஆனால் அதற்கு மெட்ரோ ரயில் இருந்தால் மட்டும் போதாது. நடைபாதைகள் வேண்டும், நடப்பதற்கு; பேருந்துகள் வேண்டும் வீடு திரும்பவும் வேலைக்குச் செல்லவும்; சுத்தமான காற்று வேண்டும், சுவாசிப்பதற்கு; நல்ல நீர் வேண்டும், குடிப்பதற்கு; வெள்ளத் தடுப்புகள் வேண்டும், பாதுகாப்பாய் வாழ்வதற்கு. ஊழலற்ற தோழமையான காவல்துறையும் உள்ளாட்சி அமைப்புகளும் வேண்டும், அச்சமின்றி வாழ்க்கை நடத்த..!
Read in : English