Read in : English
கடந்த நவம்பர் 20 அன்று இசையமைப்பாளர் தேவாவின் 72 ஆம் பிறந்தநாள். அன்றுதான் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ’தேவா THE தேவா’ இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் இரண்டு நாட்களாக வலம் வருகின்றன.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் பங்களித்துவரும் தேவா, இசையமைப்பாளர் எனும் அந்தஸ்துடன் முதன்முதலில் நடத்திய இன்னிசை நிகழ்ச்சி அது. தேவாவின் இசையைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒரு தகவலைச் சொன்ன நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டு ஊடகங்கள் எவையும் அதைச் செய்தியாக்கவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் சேர்த்தே பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் முன்னாள் அதிபர் நாதன், தனது இறுதிச்சடங்கின்போது, ’தஞ்சாவூரு மண்ண எடுத்து’ என்னும் ’பொற்காலம்’ படப் பாடலை இசைக்க வேண்டும் எனக் கூறியிருந்தாராம்; அப்படியே அவரது இறுதிச் சடங்கில் அந்தப் பாடல் ஒலித்தது. அந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் தேவா என்பதை ரஜினி வழக்கமான தனது பாணியில் சொன்னபோது . பலத்த கரகோஷம் எழுந்தது. ரஜினிகாந்த் தேவாவைத் தோளோடு சேர்த்துக் கட்டிய படத்துடன் இன்னிசைக் கச்சேரியின் விளம்பரம் வெளிவந்திருந்தது.
கச்சேரிக்கு வைக்கப்பட்டிருந்த தலைப்பு ’தேவா THE தேவா’. ’ராஜா தி ராஜா’ என்பதுபோல் ஒலிக்கும்படியான தலைப்பு. தற்செயலான நிகழ்வாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், நடிகர் ரஜினிகாந்தின் ராஜாதிராஜா படத்துக்கு இசை இளையராஜா. அப்பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றவை.
30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் பங்களித்துவரும் தேவா, இசையமைப்பாளர் எனும் அந்தஸ்துடன் முதன்முதலில் நடத்திய இன்னிசை நிகழ்ச்சி அது
இளையராஜாவைத் தவிர்த்துப் பார்த்தால், ரஜினியின் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் என்றால் சந்திரபோஸைத்தான் சொல்ல வேண்டும். அந்த சந்திரபோஸ் உடன் கைகோர்த்து திரையுலகில் அறிமுகமாகியிருக்க வேண்டியவர் தேவா.
எண்பதுகளில் அந்த வாய்ப்பைத் தவறவிட்டவர் தொண்ணூறுகளில் ரஜினியின் படத்துக்கு இசை அமைக்கத் தேர்வானார்.
முதன்முதலில் ‘அண்ணாமலை’ படத்தில்தான் தேவாவை இசையமைப்பாளராகப் பயன்படுத்தினார் ரஜினிகாந்த் . அண்ணாமலைக்கு முன்னர் ரஜினி நடித்த படம் ‘மன்னன்’. அதற்கு இசை இளையராஜாதான். ‘ஜனனி ஜனனி’ சாயலில் அமைந்த ’அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல், தாய்க்குலங்கள் மத்தியில் ரஜினியின் மதிப்பை மேன்மேலும் உயர்த்தியது.
மேலும் படிக்க: நினைத்து நினைத்து உருக வைத்த பின்னணி பாடகர் கேகே!
அந்தப் படத்தின் இசை வெளியீட்டின்போதோ அல்லது ஏதோ ஒரு பொது நிகழ்ச்சியிலோ ரஜினிகாந்தும் இளையராஜாவும் கலந்துகொண்டார்கள். அப்போது ‘இளையராஜாவுக்குப் பிரச்சினை இல்லை காரில் ஏசி, வீட்டில் ஏசி, ரெக்கார்டிங் தியேட்டரில் ஏசி… ஆனால் நடிகர்கள் நிலைமை அப்படியல்ல…’ என்னும் ரீதியில் பேசிவிட்டார் ரஜினி. அதனால், இருவருக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்பட்டதா என்று உறுதியாகத் தெரியவில்லை.
கே. பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவுக்கு ரஜினி வழங்கிய கால்ஷீட்டில் தான் ’அண்ணாமலை’ தயாரானது. இயக்குநராக முதலில் தேர்வாகியிருந்தவர் வஸந்த். ஆனால், கதை தொடர்பான சமரசத்துக்குத் தயாராக இல்லை என்பதால் அவர் ஒதுங்கிக்கொண்டார் என்றார்கள். இயக்குநர் விசுவிடம் இந்தப் படத்தை இயக்கும்படி பாலசந்தர் கோரியதாகவும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இறுதியில் அந்த இடத்திற்கு வந்தவர் தான் சுரேஷ் கிருஷ்ணா.
ரஜினியைப் பொறுத்தவரையில் இயக்குநர் பிரச்சனைக்கு நடுவே இளையராஜா இல்லாமல் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதே நிலைமை. அந்த நேரத்தில் தன் பரிவாரங்களுடன் ரஜினிக்காகப் பாட வந்தவர் தேவா. படத்தின் பாடல்களோ பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றன. ரஜினி ரசிகர்களும் கொண்டாடினார்கள். அந்தக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியைத் தான் நேரு உள் விளையாட்டரங்கத்திலும் பார்க்க முடிந்தது.
அண்மையில் தேவா பேசிய ஒரு வீடியோ துணுக்கை டிவிட்டரில் காண முடிந்தது. அதில் , பாட்ஷா படத்தின் பாடலுக்காக ஜூலியஸ் சீசர் வேடத்தில் ரஜினி நடிக்கும்படிஇயக்குநர் முடிவு செய்திருந்ததாகவும், ஜூலியஸ் சீசருக்கு மீசை இருக்காது என்பதால் அவரது உருவ அமைப்புக்கும் தனது உருவ அமைப்புக்கும் ஒத்துவராது என்றும் கூறிய ரஜினி, ஜீலியஸ் சீசராகத் தான் நடிப்பது நன்றாக இருக்காது என மறுத்துவிட்டதைப் பெருமையுடன் தேவா கூறியிருந்தார்.
‘வைகாசி பொறந்தாச்சு’ பாடல்கள் அடைந்த வெற்றியை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது; மிகச்சாதாரணமான வரிகளைத் தேவாவின் மெட்டுகள் மெருகேற்றியிருந்தன
ரஜினிகாந்த் அந்த அளவுக்குப் பெருந்தன்மையானவர் என்பதைச் சுட்டவே தேவா அப்படிக் கூறியிருந்தார். அதற்கு முன்னரே, ப்ரியா என்னும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மீசையுடன் ஜூலியஸ் சீசராக நடித்திருக்கிறார் என்பதே உண்மை.
‘மனசுக்கேத்த மகராசா’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா 400 படங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்துள்ளார். இளையராஜாவுக்கும் ஏ. ஆர். ரஹ்மானுக்கும் இடையிலான ஓர் இடைவெளியை நிரப்பியதில் தேவாவின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் பாடல்கள் அடைந்த வெற்றியை இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. மிகச்சாதாரணமான வரிகளைத் தேவாவின் மெட்டுகள் மெருகேற்றியிருந்தன.
மேலும் படிக்க: திரை இசையில் ரசிகர்களை மூழ்க வைத்த `’டிஸ்கோ கிங்’ பப்பி லஹரி!
’பம்மல் கே சம்பந்தம்’ படத்தின் ’ஏண்டி சூடாமணி’ பாடல், ’ஹலோ’ படத்தின் ’இந்த நிமிஷம்’ பாடல், ’கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தின் ’சலோமியா’ பாடல்… எனப் பலவற்றைப் பட்டியலிடலாம் தேவாவின் மீதான் அபிமானத்தைச் சொல்வதற்கு.
எம்.எஸ். விஸ்வநாதன் அவரைத் தேனிசைத் தென்றல் எனச் சொன்னது மிகச் சரியானது என்பதை உணர்த்தும் வகையில் பல மெலடி மெட்டுகளைத் தந்துள்ளார் தேவா. ஒருமுறை வணிக இதழொன்றின் கேள்வி பதில் பகுதியில் வாசகர் ஒருவர், ’இசையமைக்க வராவிட்டால் தேவா என்ன செய்திருப்பார்’ எனக் கேட்டிருந்தார். ’ஜெராக்ஸ் கடை வைத்திருப்பார்’ என அந்த இதழ் பதிலளித்திருந்தது.
இத்தகைய மலினமான விமர்சனங்களைக் கடந்தும், மக்களால் வெகுவாக நேசிக்கப்படுகிறார். அதற்கு உதாரணம் தேவா THE தேவா இன்னிசைக் கச்சேரி.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் அரங்கில் நுழைந்தபோது, பின்னணியில் ’பாட்ஷா’ படத்தின் தீம் இசை ஒலித்தது. அந்தத் தருணத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டனர். அந்த மகிழ்ச்சிக்குக் காரணம், ரஜினியின் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் பாட்ஷா. அதனாலேயே, 25 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நினைத்துப் பார்க்க வைத்தது அந்த இசைக் கச்சேரி.
தேனிசைத் தென்றல் என எம்.எஸ். விஸ்வநாதன் சொன்னது மிகச்சரியானது என்பதை உணர்த்தும் வகையில் பல மெலடி மெட்டுகளைத் தந்துள்ளார் தேவா
ஹாலிவுட் படங்கள் போல் அட்டகாசமான பின்னணி இசையுடன், சூப்பர்ஸ்டார் ரஜினி என்று ஒவ்வோர் எழுத்தாக டைட்டில் போடும் பழக்கம் ’அண்ணாமலை’யில் இருந்தே தொடங்கியது. அதன் பிறகு வெளியான ரஜினி படங்களில் கூட இதையே பின்பற்றினார்கள். ஆனாலும், அடுத்த படத்தில் தேவாவைப் பயன்படுத்தவில்லை ரஜினி .
எஸ்.பி.முத்துராமனுக்காக ரஜினி கால்ஷீட் கொடுத்த ’பாண்டியன்’ படத்துக்கு இசை இளையராஜா. ஆனால், அண்ணாமலை போல் அனைத்து பாடல்களும் வெற்றி பெறவில்லை, படமும் வெற்றி பெறவில்லை.
அடுத்து பாட்ஷா, அருணாசலம் படங்களில் தேவாவுக்கு ரஜினி வாய்ப்பு கொடுத்தார். அவ்வளவுதான், அதன் பிறகு தேவா பக்கமே அவர் திரும்பவில்லை. சுமார் ரகமான அருணாசலம் படத்தையும் சேர்த்தால் ரஜினியின் மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, கமல் ஹாசன், அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் சொல்லிக் கொள்ளும்படியான பாடல்களைக் கொடுத்துள்ளார்.
அப்படிப்பட்ட மகத்துவம் கொண்ட தேவாவின் இசையை ரஜினிகாந்த் மீண்டும் பயன்படுத்துவாரா எனத் தெரியவில்லை. அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. ஒருவேளை ஆண்டவன் சொன்னால் அவர் கேட்கலாம். அது நடந்தாலும் நடக்காவிட்டாலும், ரஜினி ரசிகர்களின் மனதில் தேவா ஆக்கிய ‘சூப்பர்ஸ்டார்’ தீம் இசை நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும்!
Read in : English