Read in : English

Share the Article

வாழ்வில் குறுக்கிடும் சிறு சம்பவம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். பலருக்கு அதுவே லட்சியமாக மாறி பெரும் சாதனைகள் புரியத் துாண்டிவிடுவதுண்டு. அந்த சம்பவம் ஊக்கப்படுத்துவதாகவோ, சிந்தனைக்குரியதாகவோ, எண்ணிப் பார்த்தால் மகிழ்ச்சியடைய வைப்பதாகவோ இருக்க வேண்டுமென்றில்லை. சில நேரங்களில் தடைகளும் இடையூறுகளும் கவனக்குறைவும் கூட அப்படியொன்றை நிகழ்த்தும்.

அப்படி ஒரு சிறு குறுக்கீடால், கண் தான விழிப்புணர்வு சேவையில் ஒருவர் பெரும் சாதனை புரிந்து வருகிறார் என்பது வியப்பூட்டும் ஆச்சர்யம். அவரது பெயர் ஜெகதீஸ்வரன்.

கோவை சிங்காநல்லூரில் வசிக்கிறார் ஜெகதீஸ்வரன். வயது 70க்கும் மேல். பார்சல் சர்வீஸ் தொழிலைச் செய்து வருகிறார். சிறு வயதில் ஏழ்மையை எதிர்கொண்டவர் இவர். ஆனாலும், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே விபத்துக்களில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். லேசான காயம் என்றாலும் கூட, அந்த மாணவரை சைக்கிளில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் ஜெகதீஸ்வரனிடம் இருந்திருக்கிறது. இது போன்ற தருணங்களில், உரிய நேரத்தில் வகுப்பறைக்குச் செல்லாத காரணத்தால் ஆசிரியர்களிடம் தண்டனையும் பெற்றுள்ளார்.

ஆறாம் வகுப்பில் தமிழ் ஆசிரியர் ராமசாமியின் பாராட்டு, இதுதான் சேவை என்பதை ஜெகதீஸ்வரனின் அடிமனதில் பதிய வைத்துவிட்டது

ஜெகதீஸ்வரன்

ஆறாம் வகுப்பு பயிலும்போது ஜெகதீஸ்வரனின் செயல்களை அங்கீகரித்து பாராட்டி ஊக்குவித்தவர் தமிழ் ஆசிரியர் ராமசாமி. அந்த ஆசிரியரின் பாராட்டு, இதுதான் சேவை என அவரது அடிமனதின் ஆழத்தில் பதிய வைத்துவிட்டது. தொடர்ந்து இது போன்ற சேவைகளில் சிறப்புக் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பத்து வயதில் விளைந்த விதை இன்று ஒரு விருட்சமாக மாறியிருக்கிறது. இந்த வயதிலும் ஜெகதீஸ்வரனின் சேவை தொடர்கிறது என்பது நிச்சயம் ஆச்சர்யம்தான்.

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், ஒருநாள் சலுானுக்கு சென்றிருக்கிறார் ஜெகதீஸ்வரன். கூட்டம் அதிகமிருந்ததால் காத்திருக்க வேண்டிய சூழல். அந்த நேரத்தில், அங்கிருந்த ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்திருக்கிறார். அதிலிருந்த பக்கங்களைப் புரட்டி வாசித்திருக்கிறார். அதில், கண் தானம் பற்றிய விழிப்புணர்வுத் தகவல்கள் இருந்த்தைக் கண்டதும் அவரிடத்தில் சிறு மாற்றம். அன்று முதல் கண் தானம் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாக அறியத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, அதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தியிருக்கிறார்.

மேலும் படிக்க: சைவ உணவுப் பழக்கம் கொண்ட இஸ்லாமிய வேட்டைக்காரர்

முதலில் தனது உறவினர்கள், நண்பர்களிடம் கண்களைத் தானம் செய்வதன் அவசியம் பற்றி பேசத் துவங்கியுள்ளார் ஜெகதீஸ்வரன். குடும்ப உறுப்பினர்களை அச்சேவையை ஏற்கத் தயார் செய்துள்ளார். அதன்பிறகு தன்னைச் சுற்றியிருந்தவர்களை நோக்கி அவரது பார்வை படர்ந்தது. அனைவரிடத்திலும் கண் தானத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை மிகச்சரியாக ஏற்படுத்தி, அதற்குத் தயாராகும் வகையில் அவர்களிடத்தில் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.

அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் தயார் செய்து, உரிய மருத்துவமனையில் உறுதிப்பத்திரம் அளிக்க வைத்து, அச்சேவையை முழுமையானதாக ஆக்கியிருக்கிறார். அப்படித் தொடங்கிய கண் தான விழிப்புணர்வு ஒருகட்டத்தில் தொடர்கதையானது.

அக்கம்பக்கத்தில் யாராவது இறந்தால் உடனே சென்று துக்கம் விசாரிப்பதுடன், இறந்தவரின் நெருங்கிய உறவினரைச் சந்தித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்களைத் தானம் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைப்பார். எதிரே இருப்பவர் தனது பேச்சுக்கு மதிப்பளிக்கிறார் என்று அறிந்தால், அவரே முன்நின்று கண் தானச் செயல்முறைகளை நிறைவு செய்வார்.

அக்கம்பக்கத்தில் யாராவது இறந்தால், உடனே சென்று துக்கம் விசாரிப்பதுடன் இறந்தவரின் நெருங்கிய உறவினரைச் சந்தித்து கண் தானம் அவசியம் பற்றி எடுத்துரைப்பார்

இதுவரை கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 7,386 கண்கள் தானமாகப் பெறப்படத் துாண்டுதலாக இருந்துள்ளார் ஜெகதீஸ்வரன். அவை முறைப்படி தேவையானோருக்குப் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல, கண்களைத் தானம் வழங்கும் குடும்பத்தினருக்கு தவறாமல் நன்றி சொல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் ஜெகதீஸ்வரன்; தற்போது உடல் தானம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இது தவிர ரத்த தான ஒருங்கிணைப்புப் பணியையும் செய்து வருகிறார்.

தன்னலம் கருதாமல் பிறர்நலனுக்காக மட்டுமே வாழ்வது மிக அரிது. ஜெகதீஸ்வரனை அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் புரிந்துகொண்டதாலேயே இது சாத்தியமாயிருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, நேரம் காலம் எதுவும் பார்க்காமல் சேவையையே தனது வாழ்வாக எண்ணிச் செய்து வருகிறார் என்று தெரிவித்தனர் ஜெகதீஸ்வரன் குடும்பத்தினர். 94432 63868 என்ற அலைபேசி எண்ணில் ஜெகதீஸ்வரனைத் தொடர்பு கொள்ளலாம்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles