Read in : English
அண்மையில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் ஒரு மாதத்துக்குள் சற்றேறக்குறைய ஐந்நூறு கோடி ரூபாய் வசூலைப் பெற்றுத் தந்துள்ளது என்ற தகவல் சமூக ஊடகங்களில் உலவுகிறது. அமெரிக்காவில் ஆறரை மில்லியன் டாலர் வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் இது என்கிறார்கள்.
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றி தமிழ்த் திரைப்படக்காரர்களைத் திகைக்க வைத்திருக்கிறது. கல்கியின் நாவல் இந்த அளவுக்கு வெற்றிபெறும் என எவருமே எதிர்பார்க்கவில்லை போலும்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் எதனால் பெருவெற்றி பெற்றது என்று யாருக்கும் தெரியாது. படத்தில் பணியாற்றியவர்கள்கூட ’அது வெற்றிபெற வேண்டும்’ என்றுதான் நினைத்திருப்பார்களே ஒழிய இப்படி வெற்றிபெறும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அண்மைக்காலத்தில் இப்படியொரு எதிர்பாராத வெற்றியைப் பெற்ற மற்றொரு திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’. அது மிகச் சாதாரண பொழுதுபோக்குப் படம். அதில் குறிப்பிட்ட பாணி என்று சொல்ல எதுவும் இல்லை. ஆனால், பொன்னியின் செல்வன் கதை வேறு. இது ஒரு வரலாற்றுப் புனைவுப் படம். ஆகவே, இதன் வெற்றி இப்போது வரலாற்றுப் படங்களின் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் எதனால் பெருவெற்றி பெற்றது என்று யாருக்கும் தெரியாது. படத்தில் பணியாற்றியவர்கள்கூட ’அது வெற்றிபெற வேண்டும்’ என்றுதான் நினைத்திருப்பார்களே ஒழிய இப்படி வெற்றிபெறும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்
திரைப்படங்களின் போக்கு!
பொதுவாகவே தமிழில் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் போதும், அதே சாயலில் தொடர்ந்து படங்களை எடுத்துக் குவிப்பார்கள். ஒரு மொழிமாற்றுப் படம் பெரிய வெற்றிபெற்றால் தொடர்ந்து அந்த நடிகர் நடித்த எல்லாப் படங்களையும் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடுவார்கள். டாக்டர் ராஜசேகர் நடித்த ’இதுதான்டா போலீஸ்’ படம் எண்பதுகளின் இறுதியில் மாபெரும் வெற்றிபெற்றது.
அதைத் தொடர்ந்து அவர் நடித்த பல தெலுங்குப் படங்கள் தமிழில் மொழிமாற்றமாயின. எல்லாப் படங்களும் வெற்றிபெற்றன எனச் சொல்ல முடியாது. ஆனாலும் அந்தப் போக்கு சில காலம் நீடித்தது. இப்படிக் காதல் படங்கள், காமெடிப் படங்கள், அரசியல் படங்கள் என ஒவ்வொன்றையும் சொல்லலாம்.
மேலும் படிக்க: சோழர் திரைப்படங்கள் வெற்றிபெறுமா?
ஆனால், இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுவரையான நிலைமைதான். அதற்குப் பின்னர் இப்படி ஒரு குறிப்பிடத்தக்க வகைப் படங்கள் வெற்றிபெற்றன என்று சொல்ல இயலாது. ஆகவே, அந்தப் போக்கு பெரிதாகத் தலையெடுக்கவில்லை. ஆனால், இப்போது பொ.செ. படத்தின் வெற்றியால் சுந்தர்.சியின் சங்கமித்ரா போன்ற நின்றுபோன பல வரலாற்றுப் படங்கள் தூசி தட்டப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. இந்தப் பின்னணியில் ஒரு வெற்றிகரமான நாவல் என்று பொன்னியின் செல்வனை யாரும் எண்ணவில்லையா என்ற அய்யம் தோன்றுகிறது.
தமிழில் தொடக்கத்தில் உருவான திரைப்படங்களில் பெரும்பாலானவை புராணப் படங்கள். புராணம் சலித்தபோது, வரலாறு தலையெடுத்தது. வரலாற்று மோகத்திலிருந்து தமிழ்ப் படங்கள் விடுபட்டுச் சமூகப் படங்கள் அந்த இடத்தின் ஆட்சியை எடுத்துக்கொள்ளச் சிலகாலம் ஆனது. அதேநேரத்தில், தமிழ் திரையுலகின் தொடக்க காலம் முதலே சமூகப் படங்கள் உருவாக்கப்பட்டிருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமிழில் முதலில் வெளியான சமூகப் படம் ’கௌசல்யா’ என்று ’பாம்பின் கண்’ நூலில் குறிப்பிடுகிறார் தியோடர் பாஸ்கரன். இந்தப் படம் வெளியானது 1935ஆம் ஆண்டில். படத்தை இயக்கியவர் பி.எஸ்.வி.அய்யர்.
தமிழ்த் திரைக்கு சோழமும் புதிதன்று. சோழ மன்னனைப் பற்றிய திரைப்படம் ஒன்று 1942இல் வெளியாகியிருக்கிறது. படத்தின் பெயர் ’ஆராய்ச்சி மணி’. ராஜா சாண்டோ இயக்கிய திரைப்படம். பசுவுக்கு நீதி வழங்க தேர்க்காலில் மகனை நசுக்கிக் கொன்ற மனுநீதிச் சோழன் கதை படத்தில் இடம்பெற்றிருந்தது. இராஜராஜ சோழன், பார்த்திபன் கனவு, சிவகங்கைச் சீமை எனத் தமிழில் வரலாற்றுக் கதைகள் படமாக்கப்படுவது தொடக்கத்திலிருந்தே தொடர்ந்துவரும் ஒரு வழக்கமே. ஏதோ இன்றுதான் வரலாற்றுப் படம் உருவாக்கப்பட்டிருப்பது போல் ஒரு பேச்சு உலவிவருவது நகைப்பையே தருகிறது.
தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும் கூட திரைப்படமாக்கப்பட்டுள்ளன. கம்பர் மகன் அம்பிகாபதியின் கதை தனியே படமாகியுள்ளது. மனோன்மணீயம் நாடகம் ’மனோன்மணி’ என்னும் பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படித் தமிழ் இலக்கியப் படைப்புகளின் உச்சம் என 1953இல் வெளியாகியுள்ள ஜெமினி தயாரித்த ’ஔவையார்’ திரைப்படத்தை தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார். இந்தப் படத்தை ராஜாஜியைப் பார்க்க வைத்திருக்கிறார் ஜெமினி வாசன். படத்தைப் பார்த்த பின்னர், ’வாசனின் ஔவையார் ஓர் அற்புதம்’ என்ற ரீதியில் ஒரு கட்டுரை வேறு எழுதினாராம் ராஜாஜி.
ஆனால், 10.08.1953 தேதியிட்ட அவரது நாட்குறிப்பில் இதற்கு நேரெதிரான வகையில் படத்தைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்: ”படம் ரொம்பச் சாதாரணமானது. ஆனால், இவ்வளவு பணம் செலவழித்துத் துணிச்சலாக எடுத்திருக்கும்போது ஒருவரால் எப்படி அதைக் கண்டனம் செய்ய முடியும்? சகிக்க முடியாத இசையமைப்பு!”
இவற்றைத் தனது ’ராஜாஜி சினிமாவுக்குப் போனார்’ என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் அசோகமித்திரன். இன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பிரமுகர்கள் வியந்துள்ளார்கள். உண்மையில் அவர்கள் படத்தைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருந்தார்கள்? அவர்களது டைரிக் குறிப்பில்தான் தேட வேண்டுமோ?
அந்தக் கால மன்னர்களைப் பற்றிய படங்கள் சமுதாயத்தின் தேவையன்று. அந்தக் கால மக்கள் எப்படி இருந்தார்கள், மக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது, மன்னராட்சியில் என்னென்ன தவறுகள் இருந்தன என்பவற்றை இப்போதைய பார்வையில் உருவாக்கினால் அது பயனுள்ளதாக இருக்கும்
தோல்வி பயம்!
அவ்வப்போது தமிழில் ஓரிரு வரலாற்றுப் படங்கள் உருவாக்கப்படுவது உண்டு. ஆனால், ’பொன்னியின் செல்வன்’ போல அத்தகைய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கவில்லை. 1997இல் நடிகர் கமல்ஹாசன் உருவாக்கிய ’மருதநாயகம்’ அப்படியொரு வரலாற்று முயற்சியாகக் கருதப்பட்டது. ஆனால், படம் உருவாகாமலே போயிற்று. படம் கைவிடப்பட்டதற்குச் செலவு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது.
இயக்குநர் செல்வராகவனின் ’ஆயிரத்தில் ஒருவன்’, வசந்தபாலனின் ’அரவான்’ போன்ற படங்களின் தோல்வி வரலாற்றுப் படங்கள் பக்கம் திரைத்துறையினரை வராமல் பார்த்துக்கொண்டது. ஆனால், நிலைமை இப்போது மாறியுள்ளது. செலவும் தொழில்நுட்பமும் வரலாற்றுப் படங்களை உருவாக்க கைகொடுக்கின்றன. மேலும், ஆறு மணி நேரம் உருவாக்கினால்கூட இரண்டு பாகங்களாக வெளியிட முடியும் என்ற நம்பிக்கை முளைத்துள்ளது.
’பாகுபலி’ படத்தின் வெற்றிதான் இத்தகைய படங்களை உருவாக்கலாம் என்ற எண்ணத்தை முதலில் ஏற்படுத்தியது. இப்போது அந்த எண்ணத்துக்கு ’பொ.செ.’ வலுச்சேர்த்துள்ளது. திரைப்படம் வணிகத்தை நோக்கமாகக் கொண்டது என்றபோதும், அது இன்னமும்கூட சமூகத்தின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடகம் என்பதை மறுக்கவியலாது.
எனவேதான் மன்னர் பெருமை பேசும் வரலாற்றுப் படங்கள் உருவாக்கப்படுவது பற்றிய அச்சம் இயல்பாகவே எழுகிறது.
இராஜராஜ சோழன் பற்றிய பெருமித எண்ணங்கள் இப்போது கரைபுரண்டு ஓடுகின்றன. இந்தப் பெருமித வெள்ளம் ஆபத்தானது. அண்மையில் தஞ்சைக் கோயிலை வெளியிலிருந்து எட்டிப் பார்க்கும் மனிதர்களைத் தாங்கிய புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. இதுதான் அப்போதைய சமுதாய யதார்த்தம். மக்களைப் பிளவுபடுத்திய எந்தப் பெருமைக்கும் உயிர் கொடுப்பது வேறுபாடற்ற சமுதாய உருவாக்கத்தில் ஒரு பின்னடைவாகவே இருக்கும்.
மேலும் படிக்க: கமல் ஹாசன் கட்சித் தலைவரா, ஆக்ஷன் ஹீரோவா?: விக்ரம் எழுப்பும் கேள்வி!
மக்களின் பார்வையில் வரலாறு!
இயக்குநர் மகேந்திரன் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு வெற்றிகரமான பல படங்களை உருவாக்கியுள்ளார். உதிரிப் பூக்கள், முள்ளும் மலரும், நண்டு, சாசனம் எனப் பல உதாரணங்களைக் குறிப்பிட முடியும். அண்மைக் காலத்தில், இயக்குநர் வெற்றிமாறனின் ’விசாரணை’, ’அசுரன்’ இரண்டு படங்களுமே நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. ’விசாரணை’ பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் ’அசுரன்’ பெரியளவில் வெற்றியைப் பெற்றது. அது போன்ற முயற்சிகளை இன்னும் தீவிரமாக முன்னெடுக்கலாம்.
புராணம், வரலாறு என்று திரிந்து கொண்டிருந்த தமிழ்ப் படங்களைச் சமூகத்தின் திசையில் திருப்பியதில் ’பராசக்தி’ உள்ளிட்ட திராவிட சினிமாக்களுக்கும் பெரிய பங்குண்டு. மீண்டும் வரலாறு என்னும் பழைய தடத்தில் பயணிப்பது வந்த திசையிலேயே திரும்பிப்போவது போலாகிவிடும்.
அந்தக் கால மன்னர்களைப் பற்றிய படங்கள் சமுதாயத்தின் தேவையன்று. அந்தக் கால மக்கள் எப்படி இருந்தார்கள், மக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது, மன்னராட்சியில் என்னென்ன தவறுகள் இருந்தன என்பவற்றை இப்போதைய பார்வையில் உருவாக்கினால் அது பயனுள்ளதாக இருக்கும்.
அதைவிடுத்து, புராண பெருமை, மன்னர் பெருமை எனப் பழைய தடத்தில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது. ஆகவே, தமிழில் வெளியான நாவல்களைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபடுவது இலக்கியத்துக்கும் நல்லது; திரைத்துறைக்கும் நல்லது.
Read in : English