Read in : English
இன்றைய தமிழ் திரைப்பட நட்சத்திரங்களில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய், அஜித் படங்களைப் போலவே இவரது படங்களும் அதிக முன்பதிவைப் பெற்று சாதனை படைத்து வருகின்றன. கோவிட்-19க்கு பிறகான காலகட்டத்தில் வெளியான ’டாக்டர்’ மற்றும் கடந்த மே மாதம் வெளியான ‘டான்’ இரண்டுமே நூறு கோடிக்கும் மேல் வசூலித்து அவருக்கான சந்தை மதிப்பை அதிகரித்தன.
அது மட்டுமல்ல, நாளுக்குநாள் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை பெருகி வருவதை சமூகவலைதளங்களில் நிலவும் திரைப்பட விவாதங்களின் வழியே அறிய முடியும். இத்தகைய சூழலில் சிவகார்த்திகேயனின் முதலாவது தீபாவளி வெளியீடாக வந்திருக்கிறது ‘பிரின்ஸ்’.
‘ஜதி ரத்னாலு’ என்ற தெலுங்குப் படம் வழியே நகைச்சுவையில் புதுவித அலைகளைப் பாய்ச்சிய அனுதீப் கேவி தான் இப்படத்தின் இயக்குனர். அதனாலேயே சிவகார்த்திகேயன், அனுதீப் இருவரும் ஒன்றிணையும்போது நகைச்சுவை அபாரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. திரையில் பார்க்கையில் ‘பிரின்ஸ்’ அதற்கேற்ற திருப்தியைத் தந்திருக்கிறதா?
நாடு தாண்டிய காதல்!
ஒரு காதலுக்கு குறுக்கே சாதி, மதம், மொழி பாகுபாடுகள் வரக்கூடும். ஆனால், ‘பிரின்ஸ்’ படம் நாடுகளைக் கடந்த காதலைப் பேசுகிறது. கடலூர் மாவட்டம் தேவனகோட்டையைச் சேர்ந்த உலகநாதன் (சத்யராஜ்) சாதி மத பேதமற்ற காதலை ஆதரிக்கும் மனப்பாங்கு கொண்டவர். ஆனால், அவரது மகளோ அத்தை மகனை கட்டிக்கொள்கிறார்.
இதனால், மகன் அன்பு (சிவகார்த்திகேயன்) கண்டிப்பாக காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் உலகநாதன். அப்பாவுக்கு எதிர்ப்பதமாக பிள்ளை இருந்தால்தானே சுவாரஸ்யம். இக்கதையிலோ, அதனை வழிமொழியும் மகனாகவே இருக்கிறார் அன்பு.
’பிரின்ஸ்’ பொறுத்தவரை நகைச்சுவையற்ற நகைச்சுவை என்ற அம்சத்தையே நம்மால் காண முடிகிறது. அது, லகானுக்கு கட்டுப்படாத குதிரை தாறுமாறாக ஓடி முடிவில் இலக்கை அடைவதற்கு ஒப்பானது
பள்ளியொன்றில் பணியாற்றும் அன்பு, ஆங்கில ஆசிரியையாக வந்து சேரும் ஜெஸிகாவை (மரியா ரிபோஷப்கா) பார்த்தவுடன் காதலில் விழுகிறார். ஒருவழியாக அது இருதலைக் காதலாக மாறும்போது, ஆங்கிலேயப் பெண்ணைத் திருமணம் செய்வதா என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார் உலகநாதன். அதோடு ஊராரின் எதிர்ப்பும் ஒன்று சேர்கிறது. முடிவில், ஜெஸிகா-அன்புவின் நாடு கடந்த காதல் ஒன்றிணைந்ததா என்பதைச் சொல்கிறது ‘பிரின்ஸ்’.
பெரிதாகத் திருப்பங்கள் இல்லாத இக்கதையை முழுக்க காதலில் நனைத்து இடையிடையே கொஞ்சமாக நகைச்சுவையைப் புகுத்தியிருக்கலாம். ஆனால், முழுநீள காமெடிக்கு நடுவே ரொமான்ஸை வெளிக்காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். அதன் பலன் இதுதான். வசனங்கள், சூழல், நடிப்பு என்று எல்லாவற்றிலும் ‘டைமிங்’ தொலைந்துபோய் ‘எங்கே நகைச்சுவை’ என்று தேடும் நமது நிலைமையை எண்ணியே சிரிக்க வேண்டியதாகிப் போகிறது.
மேலும் படிக்க: திரைப்பட நட்சத்திரங்கள் பாடல் எழுதுவது ‘வைரல்’ ஹிட் ஆவதற்கு மட்டும்தானா?
உள்வாங்கிய கடல்!
நன்றாக மூழ்கிக் குளிக்க வேண்டுமென்ற விருப்பத்தோடு கடற்கரையில் வந்து நிற்கும்போது, கடல் உள்வாங்கியிருந்தால் எப்படியிருக்கும்? ‘பிரின்ஸ்’ அனுபவமும் அப்படித்தான் இருக்கிறது.
‘கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்’ என்பது போலவே சிவகார்த்திகேயனின் டான்ஸும் பெர்பார்மன்ஸும் உள்ளது. என்னதான் மரியா ரிபோஷப்கா நாயகியாக நடித்திருந்தாலும், ஒரு துணை நடிகை என்றளவிற்கே அவரது இருப்பு அமைந்திருக்கிறது. மதில் மேல் நிற்பது போன்ற அபாயத்துடன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் லாவகமாக நடித்திருப்பார் சத்யராஜ். இதில் அத்தகைய வெற்றி கிடைக்கவில்லை. பிரேம்ஜியின் பாத்திரம் அவருக்குப் புதிதாக இருந்தாலும், ரசிகர்களுக்கு அத்தகைய அனுபவத்தைத் தரவில்லை.
இவர்களையெல்லாம் விட மரியாவின் தந்தையாக வெளிநாட்டவர் ஒருவர் நடித்திருக்கிறாரே, அவரது நடிப்புதான் இருக்கையில் உட்காரவிடாமல் நம்மை அதிகமும் நெளிய வைத்திருக்கிறது.
சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வரும் சதீஷ் கிருஷ்ணன், பிராங்ஸ்டர் ராகுல், பரத் உட்பட படத்தில் வரும் பலரும் ’டிசைனர் கலெக்ஷன்’ உடைகளை அணிந்தே நடமாடுகின்றனர். அவர்களைப் பார்த்தவுடன் ‘தீபாவளி ரிலீஸ்’ என்ற நினைப்புடனே தினமும் படப்பிடிப்புக்கு வந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. காஸ்ட்யூம் டிசைனர் யாரோ?
நன்றாக மூழ்கிக் குளிக்க வேண்டுமென்ற விருப்பத்தோடு கடற்கரையில் வந்து நிற்கும்போது, கடல் உள்வாங்கியிருந்தால் எப்படியிருக்கும்? ‘பிரின்ஸ்’ அனுபவமும் அப்படித்தான் இருக்கிறது
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, பிரவீன் கேஎல் படத்தொகுப்பு என்று தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இருந்தும் கூட, மிகச்சில காட்சிகள் மட்டுமே நமக்குத் திருப்தியளிக்கின்றன. பல இடங்களில் தமனின் பின்னணி இசை காட்சிகளின் தன்மையைத் தாங்கிப் பிடிக்கிறது.
மொத்தப்படமும் நமக்கு திருப்தியைத் தராமல் போனதற்கு முழுமுதற் காரணம், திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள அனுதீப் கே.வி. படம் பார்த்து முடித்தபிறகு, நிச்சயமாக நட்சத்திரங்களை வைத்து இயக்க அவர் சரிப்படமாட்டார் என்ற எண்ணமே வலுப்பெறுகிறது.
மேலும் படிக்க: திரைப்பட வெளியீடு எந்த நாளில் நடக்கிறது?
நகைச்சுவையற்ற நகைச்சுவை!
’பிரின்ஸ்’ பொறுத்தவரை நகைச்சுவையற்ற நகைச்சுவை என்ற அம்சத்தையே நம்மால் காண முடிகிறது. அது, லகானுக்கு கட்டுப்படாத குதிரை தாறுமாறாக ஓடி முடிவில் இலக்கை அடைவதற்கு ஒப்பானது. அதாகப்பட்டது, அறுவை ஜோக் அல்லது மொக்கை நகைச்சுவை என்று சொல்லத்தக்க வசனங்கள் முற்றிலும் தீவிரமான சூழ்நிலையில் சொல்லப்படும்போது சிரிப்பை உருவாக்கும். கதை ரொம்பவும் மேலோட்டமானதாக இருப்பதால், அந்த முயற்சி எடுபடவில்லை.
உதாரணமாக, போலீஸ் ஸ்டேஷனில் சிவகார்த்திகேயனையும் அவரது நண்பர்களையும் இன்ஸ்பெக்டராக வரும் ஆனந்தராஜ் விசாரணை செய்யும் காட்சி. இதன் தொடக்கத்தில், நால்வரையும் சுற்றி வந்து டயலாக் பேசுவார் ஆனந்தராஜ். அக்காட்சியின் முடிவில், அவர் தங்களைச் சுற்றிவந்து தான் பேசுவார் என்ற எண்ணத்தில் நால்வருமே எதிர்த்திசையில் திரும்பி நிற்பார்கள். ஆனந்தராஜோ அதே இடத்திலேயே நின்று கொண்டிருப்பார். இது போன்று ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
வசனங்கள், சூழல், நடிப்பு என்று எல்லாவற்றிலும் ‘டைமிங்’ தொலைந்துபோய் ‘எங்கே நகைச்சுவை’ என்று தேடும் நமது நிலைமையை எண்ணியே சிரிக்க வேண்டியதாகிப் போகிறது
அதேபோல, நாட்டுப்பற்று என்றால் என்னவென்றும் மனிதநேயம்தான் உலக மக்களை ஒன்றிணைக்குமென்றும் விளக்குவது போல ஒரு காட்சி உண்டு. சிவகார்த்திகேயன் – மரியா காதல் காட்சிகள் வலுவாக அமைக்கப்பட்டிருந்தால், அக்காட்சிக்கு விழுந்து விழுந்து சிரித்திருப்போம். படம் முழுக்க காமெடி வொர்க் அவுட் ஆகாத காரணத்தால் அந்த மெசெஜூம் சரியாக கைவரப் பெறவில்லை. அதனால், ஆச்சர்யங்களை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது.
வேலைக்காரன், டாக்டர், இனி வரவிருக்கும் அயலான் உட்பட சில பரீட்சார்த்த முயற்சிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் நடித்த ‘ஹீரோ’வும் கூட அவ்வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் அப்படத்தைப் போலவே பிரின்ஸும் கூட ரசிகர்களுக்கு உவப்பானதாக இல்லை. சம்பந்தப்பட்ட படக்குழுவினரைக் கேட்டால் ‘சரியாக அமையவில்லை’ என்பதைப் பதிலாகச் சொல்வார்கள். ரசிகர்களோ பதிலேதும் சொல்லாமல் கைவிட்டுவிடுவார்கள்.
Read in : English