Read in : English
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (சிஎம்டிஏ) சார்பாக சென்னைக்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிப்பு ஆயத்தப் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. ஆதலால் இந்தப் பெருநகரம் ஜீவத்துடிப்புள்ள மாநகரமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
கனடா-அமெரிக்கப் பொருளாதார மேதையும், 1960-களின் ஆரம்பத்தில் இந்தியாவில் தூதராகப் பணியாற்றியவருமான ஜான் கென்னத் கால்பிரைய்த் இந்தியாவில் நிலவியதாகச் சொன்ன ”ஒழுங்கற்ற இயக்கம்” எதிர்காலச் சென்னை மாநகரத்தில் இருக்காது என்ற எதிர்பார்ப்பு இப்போது உருவாகியிருக்கிறது.
மூன்றாவது மாஸ்டர் பிளானைத் தயாரிக்கும் முகாந்திரமாக அண்ணா சாலையில் ஒரு நட்சத்திர உணவகத்தில் பொதுக் கலந்தாலோசனை ஒன்று செப்டம்பர் மாத மத்தியில் நிகழ்ந்தது (இது போன்ற கலந்தாலோசனைகள் தொடரும் என்று சொல்கிறது சிஎம்டிஏ). ஆனால் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்த விசயம் சென்னைப் பெருநகரப் பரப்பை (சிஎம்ஏ) 5,904 ச.கி.மீ. ஆக விரிவாக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்திருப்பதுதான்.
முன்பு 8,800-க்கும் மேலான ச.கி.மீ. சிஎம்ஏ-ஐ உருவாக்கத் திட்டமிட்டது அஇதிமுக அரசு. இப்போது திமுக அரசு திட்டமிட்டிருக்கும் சிஎம்ஏ சுமார் 6,000 ச.கி.மீ பரப்பைக் கொண்டது. இந்த முப்பிரிவுத் திட்டத்தில் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தச் சென்னைப் பெருநகரப் பரப்பு (சிஎம்ஏ) மலைக்க வைக்கிறது. ஏனென்றால், இப்போதுகூட சென்னையின் விளிம்புப் பகுதிகளில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் பெரும்பாலானவற்றில் உட்கட்டமைப்பும் ஊழியர் பலமும் இல்லை.
மூன்றாவது மாஸ்டர் பிளானைத் தயாரிக்கும் முகாந்திரமாக அண்ணா சாலையில் ஒரு நட்சத்திர உணவகத்தில் பொதுக் கலந்தாலோசனை ஒன்று செப்டம்பர் மத்தியில் நிகழ்ந்தது
விரிவான சென்னைப் பெருநகரப் பரப்பில் வசிப்பதற்கு ஏற்றவண்ணம் சுற்றுப்புறச்சுழல் ரீதியான பலமிக்க வசதிகளை உருவாக்குவது என்பது பகீரத முயற்சிதான். ஆரம்பத்தில் இந்த மூன்றாவது மாஸ்டர் பிளான் 1,189 ச.கி.மீ பரப்பளவு கொண்ட சிஎம்ஏ-ஐ நோக்கமாகக் கொண்டிருந்தது.
இப்போது அதை சுமார் 6,000 ச.கி.மீ பரப்பாக உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. அதனால் இப்போது சென்னைப் பெருநகரப் பரப்பின் வீச்சும் அநிச்சயமான போக்கும் அதிகரித்திருக்கின்றன.
மேலும் படிக்க: நகரமயமாதல் பிரச்சினைகளைத் தீர்க்குமா தமிழகத்தின் புதிய சட்டம்?
முந்தைய பிரச்சினைகளின் மிச்சங்கள்
மூன்றாவது மாஸ்டர் பிளானில் இருக்கும் சவால்களில் பெரும்பாலானவை இரண்டாவது மாஸ்டர் பிளான் சந்தித்தவற்றின் தொடர்ச்சிதான்.
அவற்றில் சில பின்வருமாறு:
· ரியல் எஸ்டேட்டின் பிடியிலிருந்து விலக்கி வீட்டுவசதித் துறையைக் கட்டமைத்தல்
· கரியமிலவாயுவின் வெளிப்பாடு அதிமில்லாத வகையில் போக்குவரத்துக் கட்டமைப்பை விரிவாக்குதல்
· மறுசுழற்சிப் பொருளாதாரத்தின் படி திடக்கழிவு மேலாண்மையைத் திட்டமிடல்
· நீர், வெள்ளம், வறட்சி ஆகியவற்றின் வானிலைத் தாக்கங்களை ஆய்வு செய்தல்
· கூரைமேல் சூரியவொளி மின்சாரத் தயாரிப்புக் கட்டமைப்பிற்கான கொள்கை மாற்றங்கள்
· இயற்கையின் திறந்தவெளிப் பகுதிகள், பொழுதுபோக்கு வனங்கள், பூங்காக்கள் ஆகியவற்றுக்கான சமூக உட்கட்டமைப்பை உருவாக்குதல்
· மின்னேற்ற நிலையங்கள் உட்பட மின்வாகனங்களுக்கான உட்கட்டமைப்பை நிறுவுதல்
· உள்ளாட்சி அமைப்புகளில் ஊழியர் எண்ணிக்கையை அதிகரித்தல்
· தெருவியாபாரம் மற்றும் நிலங்களின் வணிகப் பயன்பாடு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தல்
· பொதுவெளிகளை மீளுருவாக்கம் செய்து பாதசாரிகளுக்கான வசதியை மேம்படுத்தல்
· உடல் ஊனமுற்றவர்களுக்கான பொதுப் புழங்குவெளியை அதிகரித்தலும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தலும்; . அது சம்பந்தமான சட்டவிதிகளுக்கு எல்லோரையும் கட்டுப்படச் செய்தலும்.
· வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களைச் சமாளிக்க சுற்றுப்புறச் சூழலை ஆய்வு செய்யும் திட்டத்தைக் கொண்டுவருதல்
· சென்னை பெருநகரப் பரப்பிற்கான நீர்வழிகள் மற்றும் வடிகால் வரைபடத்தை வெளியிடுதல்
· மக்கள்தொகை அடத்தியையும் அதற்கேற்றாற்போல உட்கட்டமைப்பு இருக்கிறதா என்பதையும் அவ்வப்போது அவதானித்தல்.
· மாற்றுப்பாலினத்தார்களுக்கான பொதுவெளி உட்பட பாலினம் சார்ந்த அம்சங்களை நகர்ப்புற முன்னேற்றத்தில் இடம்பெறச் செய்தல்
· போக்குவரத்து, கட்டிடங்கள், நடைபாதைகள் உட்பட அனைத்து பொதுவெளி இடங்களிலும் எல்லோருக்குமான வசதி என்பதை அடிப்படைக் கொள்கையாக்கல்
இரண்டாவது மாஸ்டர் பிளானுக்குப் பின்பு இந்த மூன்றாவது மாஸ்டர் பிளான் 2025-க்குள் அல்லது 2026-ம் ஆரம்பத்தில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கிடையில் பழைய நிலைமைகளிலிருந்து விடுபட முடியாத ஒரு சூழல் சென்னைப் பெருநகரப் பரப்பு முழுவதும் நிலவலாம்.
சென்னைப் பெருநகரப் பரப்பை 5,904 ச.கி.மீ ஆக விரிவாக்கம் செய்ய தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்திருக்கிறார்
பொதுப்போக்குவரத்து என்பது ஒரு மிகப்பெரிய விசயம். மொத்தமாக 119 கிமீ தூரம் செல்லும் மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்ட வேலைகள் படுவேகமாக நடைபெறுகின்றன. இதனால் நிலப்பயன்பாட்டின் மீது ஏற்படும் தாக்கம் பெரிதாக இருக்கிறது. இந்தப் பாதையில் பல பொதுவாசல் குடியிருப்புப் பகுதிகள் (கேட்டட் கம்யூனிட்டிஸ்) ஏராளமாக உருவாகி வருகின்றன.
அவை மாதவரம், பூந்தமல்லி, சிறுசேரி சிப்காட் இறுதி நிலையங்கள் தாண்டியும் உருவாகின்றன. அதனால் தரைத்தளக் குறியீடு (எஃப்எஸ்ஐ), மாற்றத்தகுந்த வளர்ச்சி உரிமைகள் ஆகியவற்றைப் பற்றி வெகுவிரைவில் முடிவெடுக்க வேண்டிவரும்.
கோவிட்-19 பாதிப்பால் புறநகர் வீட்டுவசதித்துறை வளர்ச்சிக்கு கனத்த அடி விழுந்திருக்கிறது. ஓஎம்ஆர் உட்பட சில பகுதிகளில் விற்கப்படாமல் இருக்கும் வீடுகள் நிறையவே இருக்கின்றன. மெட்ரோ ரயிலின் விரிவாக்கத்தை நம்பியே அவை காத்துக் கொண்டிருக்கின்றன.
மேலும் படிக்க: கழிவு மேலாண்மை: தமிழ்நாடு ஏன் விருது பெறவில்லை?
2015, 2021 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்மழை என்பது உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் வெப்பமயமாதலின் விளைவு என்பதும், கடுமையான வானிலை மாற்றங்கள் இனிமேலும் தொடரும் என்பதும் நிச்சயம் ஆகிவிட்டபடியால், மூன்றாவது மாஸ்டர் பிளானில் முன்னுரிமை தரப்படும் விசயமாக நீர் மேலாண்மை இருக்கும்.
ஆதலால் அரை பில்லியன் டாலர் (சுமார் 4,000 கோடி ரூபாய்) மதிப்புள்ள வெள்ளவடிகால் திட்டத்தைத் திமுக அரசு உடனடியாகக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் பல்வேறு புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் நவநாகரிகமான பொதுவாசல் குடியிருப்புகளில் இணையான நீர்வழங்கலும், கழிவுநீர்க் கட்டமைப்புகளும் இல்லை என்ற தூய்மைச் சீர்கேட்டை இந்தத் திட்டம் மறைத்திருக்கிறது.
கடந்த ஆகஸ்டில் தமிழக அரசு சென்னைப் பெருநகரப் பரப்பில் இருக்கும் பல ஊராட்சிகளை நகராட்சிகளாக மேம்படுத்தியுள்ளது. தாம்பரமும், காஞ்சிபுரமும் மாநகராட்சிகளாக உயர்ந்திருக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மாஸ்டர் பிளான் பற்றி பேசுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள்; அதிலொன்றும் குறையில்லை.
ஆனால் இத்திட்டத்தின் அம்சங்களையும், முன்னுரிமை விசயங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்க்கமும் உறுதியும் அவர்களிடம் இருக்கிறதா என்பதுதான் மக்களுக்குப் புதிராக இருக்கிறது. சிஎம்டிஏ-வால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பொதுவாசல் அடுக்கக மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பல உள்ளாட்சி அமைப்புகளில் போதுமான பொறி்யியலாளர்களும் எந்திரங்களும் இல்லை.
எம்ஆர்டிஎஸ் ரயில் வேளச்சேரியிலிருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் நிலையம் வரை விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய திட்டம் இரண்டாவது மாஸ்டர் பிளானில் இன்னும் முற்றுப்பெறவில்லை
இரண்டாவது மாஸ்டர் பிளானின் சில அம்சங்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை. குறிப்பாக, எம்ஆர்டிஎஸ் ரயில் வேளச்சேரியிலிருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் நிலையம் வரை விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய திட்டம் இன்னும் முடியவில்லை. இரண்டாவது மாஸ்டர் பிளானில் 80 பாதசாரி சுரங்கப்பாதைகள் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தன. (அவற்றில் சைக்கிள் மற்றும் நடைகளின் பங்கு 45 சதவீதத்திற்கும் மேலானவை; பாதசாரிகள் மட்டும் 28 சதவீதம்).
இரண்டாவது மாஸ்டர் பிளான் மோட்டாரல்லாத போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் அதன் முன்மொழிவுகள் எல்லாம் வெறும் காகிதங்களிலே சிறைப்பட்டுவிட்டன. பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி தி.நகரில் உயரடுக்கு நடைபாதை உருவாக்கும் வேலை தொடங்கப்பட்டது.
அது இரண்டாவது மாஸ்டர் பிளானில் இல்லாத திட்டம். ஆனால் அந்தப்பணி அரைகுறையாக நிற்கிறது. மூன்றாவது மாஸ்டர் பிளானிற்குப் பெரிய காரணிகளாக இருக்கப்போவது அரசியல் கடமையும், தொடர்ந்து வரப்போகும் அரசுகளால் உருவாகும் தொடர்சியும்தான்.
இது மூன்றாவது மாஸ்டர் பிளானின் ஆரம்பகட்டம் மட்டுமே. பொதுமக்களோடும், அவர்களின் பிரதிநிதிகளோடும் தொடர்ந்து கலந்தாலோசனைகள் நடத்தப்படும் என்று சிஎம்டிஏ வாக்களித்துக் கொண்டிருக்கிறது. பின்புதான் அது இறுதிவடிவம் பெறும்.
பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்கும் முயற்சியாக சிஎம்டிஏ இணையவழி குடிமக்கள் ஆய்வைத் தொடங்கியிருக்கிறது.
மூன்றாவது மாஸ்டர் பிளானுக்கு முதல் எதிர்வினை ஆற்றியவர்கள் மாற்றுத்திறனாளிகள்தான். பொதுவெளியிலும் போக்குவரத்திலும் தங்களுக்கான வசதிகள் கிட்டத்தட்ட 1990-லிருந்து பெரிதாக இல்லை என்ற கருத்தை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். முதல் கலந்தாலோசனையில் தங்கள் தேவைகளையும் கோரிக்கைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மாற்றுப் பாலித்தனவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
இனிவரும் மாதங்களில் இந்த மூன்றாவது மாஸ்டர் பிளான் அதிகம் பேசப்படும் விசயமாக மையம் கொள்ளும். சென்னை இளம் குடிமக்களின் வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஆக கடும் வானிலை மாற்ற நிகழ்வுகள் இருக்கும்; புதிய யுகத்திற்குத் தகுந்தமாதிரி எதிர்காலக் கொள்கைகள் உருவாக வேண்டும் என்று புத்தாயிரத்துச் செயற்பாட்டாளர்கள் உரத்துப் பேசப் போகிறார்கள்.
Read in : English