Read in : English
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கே. நந்தகுமார் இருந்தபோது சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் பள்ளியில் (தற்போது அரசு மாதிரிப் பள்ளி) படித்த, விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த, டெய்லர் வேலை செய்பவரின் மகள் பி.கோகிலா (23) மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டராகியுள்ளார். அவர் அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரியும்கூட. பிளஸ் டூ தேர்வு நேரத்தில் கோகிலாவுக்கு மணல்வாரி அம்மை ஏற்பட்டபோதும்கூட, தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுதி பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1119 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கோகிலா. அவரது அப்பா பொன்னழகு, டெய்லராக உள்ளார். அம்மா பஞ்சவர்ணம் வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். இவர்கள் இருவரும் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள். அண்ணன் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்; அக்கா பிளஸ் டூ படித்திருக்கிறார்.
சாமானிய ஏழைக் குடும்பத்தில் பிறந்த கோகிலா அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து டாக்டரான கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்:
பிளஸ் டூ தேர்வு நேரத்தில் எனக்கு மணல்வாரி அம்மை வந்துவிட்டது. எங்களது வீடு இருந்த தேவிபட்டினத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராமநாதபுரத்துக்கு அப்பாவுடன் பேருந்தில் சென்று தேர்வு எழுதினேன்.
நான் நான்காம் வகுப்பு வரை எங்களது பாட்டியின் ஊரான அத்தியூத்தில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். பிறகு 5ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை உப்பூர் அரசுப் பள்ளியில் படித்தேன். வீட்டிலிருந்து பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் தினமும் நடந்து போய் வருவேன். தையல் வேலை செய்த எங்களது அப்பாவின் வருமானத்தை நம்பியே குடும்பம் இருந்தது. மண் சுவரால் ஆன ஓட்டு வீட்டில்தான் எங்களது வாழ்க்கை. அதுவும் வாடகை வீடு.
வீட்டில் மின்சார வசதி கிடையாது. அதனால், வீட்டில் கொஞ்ச நேரம்தான் படிப்பேன். டியூஷன் சென்றதில்லை. அதற்கான வசதியும் எங்களுக்கு இல்லை. பெரும்பாலும் பள்ளியிலேயே எனது பாடங்களைப் படித்துவிடுவேன். நான் நன்றாகப் படிப்பதைப் பார்த்து, எதிர்காலத்தில் எம்பிபிஎஸ் படித்து டாக்டராக வேண்டும் என்று சொல்லி எனது பள்ளித் தலைமை ஆசிரியை லூர்து ஜோஸ்பின் ஊக்கமளித்தார்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 464 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே இரண்டாவது ரேங்க் பெற்றேன். அரசுப் பள்ளியில் படிக்கும் சிறந்த மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த எலைட் பள்ளி குறித்து எனக்குத் தெரிவித்து அதில் சேர வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர் பள்ளித் தலைமை ஆசிரியைதான்.
மேலும் படிக்க: டாக்டரான மீனவர் மகன்
எலைட் பள்ளி ஒருங்கிணைப்பாளரும் கணித ஆசிரியருமான நவநீதகிருஷ்ணனும் ஆசிரியர் ஆறுமுகமும் எங்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்திக் கவனித்தார்கள். நாங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து ஆசிரியர்களும் உளமாரப் பாடுபட்டனர். எப்போது கேட்டாலும், அவர்கள் மாணவர்களின் சந்தேகங்களைப் போக்குவார்கள். மாவட்ட ஆட்சிராக இருந்த நந்தகுமார் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் வந்து எங்களிடம் உற்சாகமாகப் பேசி ஊக்கமளித்தார்.
பிளஸ் டூ தேர்வு நேரத்தில் எனக்கு மணல்வாரி அம்மை வந்துவிட்டது. அதனால், பள்ளி விடுதியிலிருந்து தேவிப்பட்டினத்திலிருந்த எங்களது வீட்டுக்கு வந்து விட்டேன். எனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், எப்படியாவது தேர்வு எழுதிவிட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். எங்களது வீடு இருந்த தேவிபட்டினத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராமநாதபுரத்துக்குப் பேருந்தில் அப்பாவுடன் சென்று தேர்வு எழுதினேன். அப்போது, உடல்நலம் சரியில்லாததால் தேர்வை வேகமாக எழுத முடியாது. உடல் அசதியாக இருக்கும். ஆனாலும், எல்லாப் பாடங்களையும் ஏற்கெனவே நன்றாகப் படித்திருந்ததால், நம்பிக்கையோடு தேர்வு எழுதினேன்.
கணிதப்பாடத்தில் எப்போதும் நூற்றுக்கு நூறு எடுக்கும் நான், பிளஸ் டூ தேர்வில் 186 மதிப்பெண்கள்தான் எடுக்க முடிந்தது. இவ்வளவுக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரியும். உடல்நிலை காரணமாக மெதுவாக எழுதியதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை எழுத நேரமில்லை. இரண்டு கேள்விகளுக்கு விடை எழுதாமல் விட்டுவிட்டேன். அதனால், அந்தப் பாடத்தில் மதிப்பெண் குறைந்துவிட்டது.
எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 195.75. அப்போது நீட் தேர்வு கிடையாது. பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் என்பதால், எனக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைத்தது.
தேர்வில் இரண்டு கேள்விகளை விட்டுவிட்டது குறித்து எனது ஆசிரியர்களிடம் சொல்லி அழுதேன். நீ டாக்டருக்குத்தானே படிக்கப் போகிறாய். அதனால் கவலைப்படாதே. மற்ற பாடங்களில் கவனம் செலுத்து என்று ஆசிரியர்கள் உற்சாகமூட்டினார்கள். நான் பட்ட கஷ்டம் வீண்போகவில்லை. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1119 மதிப்பெண்கள் பெற்றேன். உயிரியல் பாடத்தில் 198 மதிப்பெண்களும் இயற்பியல் பாடத்தில் 191 மதிப்பெண்களும் வேதியியல் பாடத்தில் 196 மதிப்பெண்களும் பெற்றேன். எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 195.75. அப்போது நீட் தேர்வு கிடையாது. பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் என்பதால், எனக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைத்தது. ஆனால், படிப்பதற்குப் பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருந்தோம். அப்போது, அரசு மூலம் கிடைத்த உதவியால், முதலாண்டில் படிப்பது சிரமம் இல்லாமல் போய்விட்டது.
ஆனாலும், பள்ளியில் தமிழ் வழியில் படித்ததால், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததும் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் நடத்திய பாடங்களைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது. தொடக்கத்தில் ஆங்கிலம் அறிந்த சக மாணவர்கள் உதவியுடன் சிறிது சிறிதாகப் பாடங்களைக் கற்றுக்கொண்டேன். நாளாக நாளாகப் படிப்படியாகப் பாடங்களை நானே புரிந்து படிக்கத் தொடங்கினேன்.
மேலும் படிக்க: ஒரு கிராமத்தின் முதல் பட்டதாரி சௌமியா!
இரண்டாம் ஆண்டில் அரசு மூலம் கிடைத்த உதவி கிடைக்கவில்லை. அதனால், கல்லூரியில் படிக்க கடன் வாங்க வேண்டியதிருந்தது. மூன்றாம் ஆண்டிலும் நான்காம் ஆண்டிலும் மீண்டும் அரசு உதவி கிடைத்தது. ஐந்தாம் ஆண்டில் மருத்துவப் பயிற்சிக் காலத்தில் அரசு கொடுத்த உதவித்தொகை கிடைத்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தேன்.
சர்ஜரியில் முதுநிலை மருத்துவப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக வீட்டிலிருந்து முதுநிலை நீட் தேர்வு எழுதுவதற்காகத் தயாராகி வருகிறேன் என்கிறார் விளிம்பு நிலைக் குடும்பத்தில் பிறந்து தனது விடா முயற்சியால் டாக்டராகியுள்ள டெய்லர் மகள் கோகிலா.
Read in : English