Read in : English
‘என்னை மாதிரி பசங்களைப் பார்த்தா பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்’ என்று ‘படிக்காதவன்’ படத்தில் தனுஷ் வசனம் பேசியிருப்பார். அந்த வசனமே ரஹ்மானை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டதோ என்று பல நேரம் எண்ணியிருக்கிறேன். ஏனென்றால், ‘ஏ. ஆர். ரஹ்மான் இசைத்த பாடல்களைக் கேட்கக் கேட்கத்தான் பிடிக்கும்’ என்ற விமர்சனம் அவரது தொடக்கக் காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்துவருகிறது.
‘புதிய முகம்’, ‘உழவன்’ காலகட்டத்தில் இரவு நேரத்தில் மட்டுமே தனக்கான இசையைக் கோத்தவர், இன்று பெருவாரியான மக்களைப் போல் பகல் நேர உழைப்புக்கு மாறிவிட்டார். ஏ. ஆர். ரஹ்மான் இசையின் வீச்சும் உள்ளடக்கமும் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளன. ஆனாலும், அந்த விமர்சனத்தில் மட்டும் எள்ளளவும் மாற்றமில்லை.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 பாடல்களும் அந்த வகைப்பாட்டில் அடங்குமா? இதற்குப் பதில் சொல்வது கடினம். முதலாவது காரணம், எந்த மொழிப் படமானாலும் பழங்காலத்தை வெளிப்படுத்த வசன நடை தூய்மையாக இருக்க வேண்டுமென்பது போல் பாடல் வரிகளும் செம்மையானவையாக இருக்க வேண்டுமென்ற நியதிதான். அது எளிதில் மக்களைப் பற்றாது என்ற நம்பிக்கை என்றும் வணிக எதிர்பார்ப்புகளை விஞ்சி நிற்பது இன்னொரு காரணம்.
‘சோழச் சிலைதான் இவளோ சோளக் கதிராய் சிரிச்சா ஈழ மின்னல் உன்னாலே நானும் ரசிச்சிட ஆகாதா’ என்ற வரிகளை ரஹ்மான் பாடும்போது தமிழில் மிகக் குறைவாகப் பாடியிருக்கும் உதித் நாராயணனையோ, சுக்விந்தர் சிங்கையோ ‘மிமிக்ரி’ பண்ணுகிறார் என்றே தோன்றியது
ஆறு போதுமா?
‘பொன்னி நதி பார்க்கணுமே’ பாடல்தான் ரஹ்மான் ரசிகர்களுக்கு முதலில் விருந்தானது. ஒரு நிலத்தின், நதியின், மக்களின் சிறப்பைப் பார்த்து வியப்பதுதான் இப்பாடலின் அடிநாதம். அதற்கேற்ப ‘சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்’ என்றே தொடங்குகிறது. இந்தப் பாடலில் மொழி எப்படியெல்லாம் விளையாட வேண்டும் என்று பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனிடம் எப்படியெல்லாம் கேட்டுக் கேட்டு வரிகள் வாங்கியிருப்பார் ஏ.ஆர்.ரஹ்மான், ஆனால், அதனைப் பாடும்போது மட்டும் ஏன் உச்சரிப்பில் பிசகினார் என்பது கோடி ரூபாய் மர்மம். ‘காற்றைப் போல’ என்ற வார்த்தைகளை ’க்காத்த போல’ என்று உச்சரிப்பதைப் புறந்தள்ள வசதியாக, அதனைத் தொடர்ந்து வரும் இடையிசை ஊதல் வாத்தியம் கொண்டு நிரம்பியிருக்கிறது.
முன்னதே பரவாயில்லை எனும் அளவுக்கு ‘சோழச் சிலைதான் இவளோ சோளக் கதிராய் சிரிச்சா ஈழ மின்னல் உன்னாலே நானும் ரசிச்சிட ஆகாதா’ என்ற வரிகளை ரஹ்மான் பாடும்போது தமிழில் மிகக் குறைவாகப் பாடியிருக்கும் உதித் நாராயணனையோ, சுக்விந்தர் சிங்கையோ ‘மிமிக்ரி’ பண்ணுகிறார் என்றே தோன்றியது. தமிழே தெரியாதவர் போல அப்பாடலைப் பாட ரஹ்மான் முனைந்திருக்கிறார்.
ஒருவேளை இதுதான் இன்றைய தலைமுறையை ஈர்க்கும் என்று நினைத்துவிட்டாரா? இப்பாடல் நிச்சயம் கார்த்தியின் வாயசைப்புக்குத்தான் என்ற எண்ணம் மனத்தில் நங்கூரமிடுவது மட்டும்தான் ஒரே ஆறுதல்.
மேலும் படிக்க: நினைத்து நினைத்து உருக வைத்த பின்னணி பாடகர் கேகே!
‘ராட்சச மாமனே’ பாடலில் வரும் ‘உன் ஆறாம் புத்தி தேறா புத்தி தான்’, ‘மீசை வச்ச மிருக மிருகனே’ என்று கபிலனின் வார்ப்பில் வார்த்தைகள் கோர்க்கப்பட்ட விதம் ஈர்த்தாலும் ‘காட்டு முள்ளு வேட்டி போல’ என்ற இடத்தில் வார்த்தைகள் தடுமாறியிருக்கின்றன. சோபிதா துலிபாலாவுக்கு ஷ்ரேயா கோஷல் குரல் பொருந்தியிருக்கிறதா என்பது திரையில் பார்க்கும்போதே தெரியும்.
ஆனால், இடையிலும் இறுதியிலும் ஒலிக்கும் பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் மகேஷ் விநாயக்ராமின் குரல்கள் ஜெயம் ரவியையும் ஜெயராம் அல்லது இன்னொருவரையும் திரையில் காட்ட உதவுவதாகத் தோன்றுகிறது.
‘பலே பாண்டியா’வில் ‘மாப்ள மாமா’ என்று எம்.ஆர்.ராதாவும் சிவாஜியும் பாடியதுதான் இப்பாடலுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கும் போல… இல்லையே, ‘புதிய முகம்’ படத்தில் வரும் ‘சம்போ சம்போ’ பாடல் என் நினைவுக்கு வருகிறது என்றால் உங்கள் வயது என்னவென்று ஆராய்ச்சி செய்யும் இன்றைய தலைமுறை.
‘டம்டம்டம்டமடமரே’ என்ற ஒலிக்குறிப்புடன் தொடங்கும் ‘தேவராளன் ஆட்டம்’ விருந்தினர்கள் ஏதோ சீரியசாகப் பேசிக்கொண்டிருக்க அவர்களுக்கு நடுவே ஒரு கும்பல் உற்சாகமூட்டும் விதமாக ஆடிப் பாடும் சூழலைப் பிரதிபலிக்கிறது. வீரம் பற்றிய பெருமையும் சதியை முறியடிக்கும் வேட்கையும் பாடல் வரிகளில் நிறைந்திருப்பது அக்கொண்டாட்டத்திற்கு எதிரான உரையாடல் காட்சியின் பின்னணியில் இடம்பெறுவதை எதிரொலிக்கிறது.
‘சோழா சோழா’ பாடல் வழக்கமான நாயக துதி. போர்க்களப் பின்னணியிலோ போர்த் தந்திரப் பயிற்சியிலோ இப்பாடல் ஒலிக்குமென்று கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். வேண்டுமானால், தேடித் தேடி பலரையும் நாயகனும் அவரைச் சார்ந்தவர்களும் பார்த்து ஆதரவு கேட்பதுகூட இப்பாடலுக்கான காட்சியில் இடம்பெறக் கூடும். படம் பார்த்தால் இது கணிப்பா கற்பனையா என்று தெரியவரும்.
மிகச்சிறிய பாடலாக ஒலிக்கும் ‘காதோடு சொல்’ பாடல் ‘அலைபாயுதே’வில் இடம்பெற்ற ‘யாரோ யாரோடி உன்னோட புருஷன்’ பாடலின் மெலடி வெர்ஷன் போன்றிருக்கிறது. கிருத்திகா நெல்சனின் பாடல் வரிகள் ஒரு பெண்ணின் கனவுக் காதலனை ஓவியமாகத் தீட்டும் வகையில் அமைந்திருப்பது வசீகரிக்கிறது. அதையும் மீறி இசையின் வழியே அக்காட்சியும் கூட நமக்குள் விரிகிறது. நாயகியும் அவரது தோழியும் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டே காதல் வாசத்தை நினைவுகூர்வதாக அமைகிறது போல. நம் எதிர்பார்ப்பை வழக்கம்போல மணிரத்னம் பொய்த்துப் போக வைப்பார் என்ற நம்பிக்கையே, இப்பாடலுக்கான காட்சிகளைக் காணும் விருப்பத்தைப் பெருந்தீயாக வளர்க்கிறது.
ஆறு பாடல்கள் போதுமா என்று கேட்பது போல், தன்னிசை தந்திருக்கிறார் ரஹ்மான். ஆனால், ‘அலைகடல் ஆழம்’ பாடல் மட்டுமே பல நூறாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை நம் கற்பனையில் பெருக்கெடுக்கச் செய்கிறது
இந்த ஆல்பத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களில் ரசிகர்கள் மனத்தில் பெருவெள்ளமெனப் பாய்ந்து பாவுவது ‘அலைகடல் ஆழம் நெலவு அறியாதோ’ பாடல். ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாணியிலமைந்த இது ஒரு மீனவப் பெண்ணின் காதல் வெளிப்பாடாகத் தெரிகிறது. இதனைப் பாடியிருக்கும் அண்டரா நந்தியின் குரலைக் கேட்கையில் இன்னொரு ‘ஷ்ரேயா கோஷல்’ வந்துவிட்டார் என்றே எவருக்கும் தோன்றும். ஏன், இன்னொரு ‘சொர்ணலதா’வாக கூட எதிர்காலத்தில் நம்மை ஆசுவாசப்படுத்தலாம்.
மிகக் குறைவான வாத்தியங்களே இசைக்கப்பட்டிருப்பது இப்பாடலில் நிரம்பியிருக்கும் அபார எளிமையை இன்னும் கூட்டியிருக்கிறது. இப்பாடலை எழுதிய சிவா ஆனந்த் கவித்துவமான வார்த்தைகளைத் துணையாகக் கொண்டிருந்தாலும், இசைக்கேற்றவாறு பாடல் வரிகள் இன்னும் எளிமையாக இருந்திருக்கலாமே என்று எண்ண வைக்கிறது.
இந்த ஆறு பாடல்கள் போதுமா என்று கேட்பது போல தன்னிசை தந்திருக்கிறார் ரஹ்மான். ஆனால், ‘அலைகடல் ஆழம்’ பாடல் மட்டுமே பல நூறாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை நம் கற்பனையில் பெருக்கெடுக்கச் செய்கிறது.
மேலும் படிக்க: திரைப்பட நட்சத்திரங்கள் பாடல் எழுதுவது ‘வைரல்’ ஹிட் ஆவதற்கு மட்டும்தானா?
புத்தொளி பரவுமா?
இந்தோனேசியா உள்ளிட்ட சோழர்கள் கால் பதித்த நாடுகளில் உள்ள பழமையான கருவிகள் பற்றிய ஆய்வுகளை ரஹ்மான் குழு மேற்கொண்டிருக்கக்கூடும். பாடல் வரிகளில் எத்தகைய வார்த்தைகள் இடம்பெறலாம் என்று பெரும் விவாதம் கூட இந்த ஆல்பம் உருவாக்கத்தில் நிகழ்ந்திருக்கலாம். அவற்றை மீறி அரியதைக் கேட்ட, உணர்ந்த பிரமிப்பை ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ பாடல்கள் நிச்சயமாகத் தரவில்லை என்றே சொல்லலாம். கண் மூடி காதுகளை அகலமாகத் திறந்து வைக்கையில் மனதுக்குள் புத்தொளி பரவவில்லை. ஒருவேளை திரையரங்கில் பிரமாண்டமான காட்சியமைப்புகளுடன் பார்க்கும்போது, பாடல்களுக்கும் காட்சிகளுக்குமான இடைவெளியை பின்னணி இசையால் ரஹ்மான் நிரப்பும்போது இக்குறைபாடு காணாமல் போகலாம்.
இதற்கு முன்னர் ‘இருவர்’, ‘இந்தியன்’, ‘எர்த்’, ‘ஜுபைதா’, ‘லகான்’, ‘மீனாக்ஷி’, ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’, ‘மங்கள் பாண்டே’, ‘கிஸ்னா’, ‘ஜோதா அக்பர்’, ‘காவியத் தலைவன்’, ‘மொகஞ்சதாரோ’ உட்பட ரஹ்மான் இசையமைத்தவற்றில் கணிசமானவை பழைய காலகட்டத்தைப் பிரதிபலித்திருக்கின்றன. அவற்றில் ரஹ்மான் இசையும் நுட்பமாகக் கவனிக்கப்பட்டிருக்கிறது. அவற்றுடன் ஒப்பிடுகையில் ‘பொன்னியின் செல்வன்’ பாடல்கள் பெரிய ஆச்சர்யத்தை வழங்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அதிகமாய் ஒலிக்கும் கோரஸ் குரல்களும் வீர முழக்கங்களும் அப்படியொரு முடிவுக்கு வரவழைத்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. செழுந்தமிழ்ச் சொற்களை அவரது இசை அமுக்கிவிட்டது என்ற குரல்கள் கூடப் பெருக வாய்ப்பிருக்கிறது. இசையில் ஆழந்த புலமை கொண்ட நிபுணர்கள் இதற்கு மாறான கருத்தைக் கொண்டிருக்கலாம். யார் கண்டது?
இசையில் ஊறலாமா?
சிறுவயதில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் போனால், அதிலுள்ள ஹீரோயிசக் காட்சிகள் மனத்தோடு ஒட்டிக்கொள்ளும். இரண்டு மூன்று நாள்கள் கூட அந்தரத்தில் பறக்கும் மாயைக்குள் நம்மை நிறைக்கும். பால்யம் கடந்த பருவத்தில், காதல் சார்ந்த பாடல்கள் நமக்குள் சிறகை வளர்க்கும். இப்போதெல்லாம் ஒரு படம் பார்க்கச் செல்லும் முன்னர் அதற்கேற்ற மனநிலையைத் திட்டமிட்டு வார்க்க வேண்டியிருக்கிறது. மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று மிகக் குறைவாக அறிந்த மொழிகளில் படம் பார்க்கும்போது ‘சப்டைட்டில்’ தேவையில்லை என்று முடிவெடுக்க அப்படியொரு மனநிலையே வேண்டியிருக்கிறது.
போலவே, ‘பொன்னியில் செல்வன் பாகம் 1’ பார்க்கும் முன்னதாக கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை முழுதாக நாம் படித்தாக வேண்டும். கூடவே, ரஹ்மானின் இசையில் வெளியாகியிருக்கும் ஆறு பாடல்களையும் தொடர்ச்சியாகக் கேட்பதும் கூட ஒரு பயிற்சியாக அமையலாம். அதுவே மணிரத்னம் உருவாக்கியிருக்கும் சோழ பூமியினுள் நாம் கால் பதிப்பதற்கான நுழைவுச்சீட்டாகவும் இருக்கக்கூடும்.
எனக்கென்னவோ இப்பாடல்களைக் கேட்பதற்கே தனியாக ஒரு மனநிலை வாய்க்கப் பெற வேண்டுமென்று தோன்றுகிறது.
Read in : English