Read in : English
‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்’ என்பது ‘வேட்டைக்காரன்’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள். இதைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களும்கூட வெளியாகியிருக்கின்றன. ஆனால், தமிழில் இவ்வகைப் படங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். தற்போது வெளியாகியிருக்கும் ‘கணம்’ அவ்வகையில் சேர்ந்திருக்கிறது.
ரீவைண்ட்’ பட்டன்!
கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகள் என்னவென்பதும், அதை எப்படியெல்லாம் சரி செய்திருக்கலாம் என்பதும் நிகழ்காலத்தின் கணங்களைத் தின்றுகொண்டிருக்கும். அதைத் தவிர்க்க விட்டேத்தியான ‘சந்நியாசி’ மனோபாவமோ அதற்கு நேரெதிரான மூர்க்கம், ஆணவம், அலட்சியம் உள்ளிட்ட அம்சங்களோ நிறைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் விதிவிலக்குகளாகக் கருதப்படுவார்கள். மற்ற அனைவரிடத்திலும் அந்த வருத்தம் இருக்கும். ‘முதல்வன்’ படத்தில் சுஜாதா எழுதிய ‘டேப் ரிக்கார்டர்ல இருக்குற மாதிரி நம்ம வாழ்க்கையிலயும் ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்’ வசனத்திற்குக் கிடைத்த கைதட்டல்கள் அதையே காட்டியது.
‘கணம்’ படத்தில் அப்படிப்பட்ட வருத்தம்தான் திரைக்கதையின் அடிநாதமாக இருக்கிறது. சிறுவயதில் விபத்தில் பலியான தாய் (அமலா) உயிருடன் இருந்திருந்தால் தன் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்ற வருத்தத்தில் உழல்கிறார் நாயகன் ஆதி (சர்வானந்த்). அதுவே, தன்னுடன் இருக்கும் தந்தை மீது பாசம் காட்ட முடியாமல் அவரைத் தடுக்கிறது. இசையே தனது வாழ்வென்று இருக்கும் ஆதி மேடை ஏறி அதனை வெளிக்காட்ட முடியாத அளவுக்குப் பெரும்பயமாய் அம்மாவின் பிரிவு மாறிவிடுகிறது.
ஆதியின் நண்பர்களான கதிருக்கும் (சதீஷ்) பாண்டிக்கும் (ரமேஷ் திலக்) கூட வாழ்வில் பெரிதாக மகிழ்ச்சியில்லை. கை நிறையச் சம்பாதிக்கும் கதிர் தனக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேட முடியாமல் திணறுகிறார். அந்த நேரத்தில், பதின்பருவத்தில் தன் மீது அன்பைப் பொழிந்த தோழிக்குத் தனக்குத் தெரிந்த வேறொருவருடன் திருமணமாவதை அறிந்து துடிக்கிறார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத பாண்டிக்கோ, சிறு வயதில் ஒழுங்காகப் படித்திருந்தால் ‘இப்போதிருக்கும் வீட்டு வாடகை புரோக்கர் தொழிலைவிட நல்ல பணிக்குப் போயிருக்கலாமே’என்ற வருத்தம் இருக்கிறது.
டைம் மெஷின் கதைகளில் நாமே நம்மைப் பார்த்துவிட்டால் அந்தப் பயணம் செயற்றுப் போய்விடுமே என்று இதுவரை கேள்விப்பட்ட ‘லாஜிக்’குகளைப் புறந்தள்ளிவிட்டால், ‘கணம்’ பார்ப்பதில் இடையூறு இருக்காது
தற்செயலாக இவர்கள் மூவரையும் சந்திக்கும் விஞ்ஞானி ரங்கி குட்டபால் (நாசர்), தான் கண்டறிந்த ‘டைம் மெஷின்’அப்பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் என்கிறார். அதேபோல, மூவருமே 2019இல் இருந்து 1998க்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு வேறொரு பிரச்சினை முளைக்கிறது. அதே டைம் மெஷினைப் பயன்படுத்தி சிறுவர்களாக இருக்கும் ஆதி, கதிர், பாண்டி மூவரும் 2019க்கு வந்துவிடுகின்றனர். அதன்பின் இயல்பு திரும்பியதா இல்லையா என்பதை மிகச் சில திருப்பங்களுடன் சொல்கிறது ‘கணம்’.
டைம் மெஷின் கதைகளில் நாமே நம்மைப் பார்த்துவிட்டால் அந்தப் பயணம் செயற்றுப் போய்விடுமே என்று இதுவரை கேள்விப்பட்ட ‘லாஜிக்’குகளைப் புறந்தள்ளிவிட்டால், ‘கணம்’ பார்ப்பதில் இடையூறு இருக்காது. ஆனால், திருப்பங்கள் பெரிதாக இல்லாத காரணத்தால் திரைக்கதை மிகமெதுவாக நகர்வது நிச்சயம் நம்மை நெளியவைக்கும். ஆனால், அதுவே தன்னை அறிதலை நோக்கிச் சம்பந்தப்பட்ட பாத்திரங்களை நகர்த்துகின்றன என்பதையும் சொல்லியாக வேண்டும். அதனாலேயே, கவனிக்கத்தக்கவராக மாறியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகார்த்திக்.
சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக், நாசர் மூவரும் இயல்பாக நடித்திருக்கின்றனர். ரீது வர்மா, ரவி ராகவேந்தர், எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி மற்றும் சிறுவர்களாக வரும் ஜெய் ஆதித்யா, ஹிதேஷ், நித்யராஜ் உட்பட அனைவருமே நம் கவனம் ஈர்க்கும் வண்ணம் திரையில் வந்து போயிருக்கின்றனர். சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு, ஜேக்ஸ் பிஜோயின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உட்பட ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சமும் திரைக்கதைக்கும் நடிப்புக்கும் பலம் சேர்த்திருக்கின்றன. கலை இயக்குநர் என்.சதீஷ்குமார் ரொம்பவே மெனக்கெட்டிருந்தாலும், இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாமோ என்று எண்ண வைத்திருக்கிறார்.
மேலும் படிக்க: விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்: கொண்டாடச் செய்யும் இளையராஜா இசை!
2000யைக் காட்ட வெறுமனே ரேடியோவையும் சைக்கிளையும் மட்டுமே பயன்படுத்தியிருப்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. பெயரளவுக்கு பேஜர் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கிறது. அந்த இடங்களில் இயக்குநர் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார் அமலா. ஒருகாலத்தில் பலரது ஆதர்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர். முதுமையால் பொலிவிழந்த இவரது முகத்தைப் பார்த்தல் சிறிது சங்கடம் தான். ஆனாலும், அதை ஏற்றுக்கொள்வதுதான் இப்படம் சொல்லும் கருத்துக்கு மதிப்பளிப்பதாக இருக்கும்.
தன்னையறியும் பயணம்!
டாம் ஹேங்ஸ் நடித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படம்தான், சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் ‘லால்சிங் சத்தா’ என்ற பெயரில் வெளிவந்தது. அது போலவே டாம் ஹேங்ஸின் ‘காஸ்ட் அவே’, வில் ஸ்மித் நடித்த ‘பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்’, பால் கியாமட்டியின் ‘சைடவேஸ்’ உட்படப் பல ஹாலிவுட் படங்கள் தன்னையறிதலை நோக்கிச் செல்லும் பயணத்தைக் கருவாகக் கொண்டவை. தமிழிலும் இது போன்ற படங்கள் உண்டு.
இயக்குநர் ஸ்ரீதரின் ‘சுமைதாங்கி’ படத்தில் காதலில் தோல்வியுற்றுச் சொல்லில் அடங்காத துன்பங்களுக்கு ஆளாகும் ஒரு மனிதனின் வாழ்க்கை இடம்பெற்றிருக்கும். கே.பாலச்சந்தரின் ‘எதிர்நீச்சல்’ படமோ ஒரு ரசிகனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும். கமல்ஹாசன் நடித்த ‘உயர்ந்த உள்ளம்’ படத்தில் கூட நண்பனின் வஞ்சத்தால் வறுமைக்கு தள்ளப்பட்ட ஒரு பணக்கார வாலிபர் அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதாகக் கதை அமைந்திருக்கும். இக்கதைகளில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் கதாபாத்திரங்களின் அந்தஸ்தோ, வாழ்க்கை நிலைமையோ ஓரளவுக்கு மாறியிருக்கும்.
2000யைக் காட்ட வெறுமனே ரேடியோவையும் சைக்கிளையும் மட்டுமே பயன்படுத்தியிருப்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. பெயரளவுக்கு பேஜர் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கிறது. அந்த இடங்களில் இயக்குநர் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம்
இவற்றில் இருந்து விலகி, தொடக்கம் முதல் முடிவு வரை பெரிதாக மாற்றங்கள் இல்லாதபோதும் அவ்வாழ்க்கையில் நிறைந்திருக்கும் நல்லவற்றை உணர்ந்து மகிழ்ச்சியோடு வாழ்வதாகச் சொன்னவை மிக அரிது. வி.இசட். துரை இயக்கிய ‘முகவரி’ படம் கொஞ்சமாய் இதன் மகத்துவம் சொல்லும்.
பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் பெரிதாக நோக்கம் ஏதுமில்லாமல் உலகம் சுற்றக் கிளம்பும் இரு வாலிபர்களின் பயணம் காட்டப்பட்டிருக்கும். வழியில் சந்திக்கும் மனிதர்கள் மூலமாக வாழ்க்கை குறித்த சில பாடங்கள் சொல்லப்படும். அதற்காகத் தத்துவார்த்தரீதியாக விளக்கம் சொல்லும் படங்கள் மட்டுமே இவ்வகையில் இடம்பெறும் என்று கருதிவிடக் கூடாது.
சில மாதங்களுக்கு முன் வெளியான விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’, தற்போது ஓடிக் கொண்டிருக்கும் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ என்று கமர்ஷியல் படங்களும் இவ்வகையில் இடம்பெறும். அந்த வரிசையிலேயே, ‘சயின்ஸ் பிக்ஷன்’ பாணியில் அமைந்த ‘கணம்’ படமும் தன்னை அறிதலின் முக்கியத்துவம் சொல்கிறது. முழுக் கதையையும் இங்கே சொல்ல முடியாது என்றாலும், சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் எந்தவொரு பிரச்சினையும் தீர்வைக் காணாமலேயே முடிவுறுகின்றன என்பதைச் சொல்லியாக வேண்டும்.
மேலும் படிக்க:குஞ்சாக்கோ போபன் ஒரு முன்னுதாரணம்
அது எப்படி, பிரச்சினை என்ற ஒன்று இருந்தால் அதற்குத் தீர்வும் இருக்கத்தானே வேண்டுமென்று கேள்வி எழுப்பலாம். ஒருவேளை அந்தத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், சோம்பி முடங்குவதுதான் ஒரே வழியா? போராடி ஒரு தீர்வைக் கண்டறிபவர்கள் மட்டுமே நாயகர்கள் என்றால் மற்றவர்களது வாழ்வெல்லாம் ஒன்றுக்கும் உதவாத கசடுகளா? அதற்காகவே ‘இருப்பதை ஏற்றுக்கொள்’ என்ற சித்தாந்தத்தை விட்டுச் சென்றிருக்கின்றனர் நம் முன்னோர்.
காதல் மட்டுமன்று, வாழ்வின் எந்தவொரு பெரிய பிரச்சினையிலும் ‘இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளத் துணிந்துவிட்டால்’ வருத்தங்கள் மறைந்துவிடும். அதற்காக, வாழ்வில் முன்னேற்றம் ஏதும் காணாமல் கடமைகளை மறந்து விட்டத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்க வேண்டுமென்று அர்த்தமில்லை. ’இழந்ததை எண்ணி இப்போது உன்னிடம் இருப்பவற்றின் மகத்துவத்தைக் கவனிக்காமல் இராதே’ எனும் அறிவுரை இவ்வார்த்தைகளின் பின்னிருக்கிறது. அதனைப் பற்றிக்கொண்டால் வாழ்க்கை வசந்தமாகும்.
‘சயின்ஸ் பிக்ஷன்’ பாணியில் அமைந்த ‘கணம்’ படமும் தன்னை அறிதலின் முக்கியத்துவம் சொல்கிறது.
வெறுமனே ஏதேனும் ஒரு மதம் சார்ந்த கருத்துகளைத் தாங்கிய படங்களிலும் இது போன்ற கருத்துகள் ஆன்மிகம் என்ற பெயரில் முன்வைக்கப்படும். அவற்றில் இருந்து பேரளவு வேறுபட்டு சுயத்திற்கு மதிப்பளிப்பவை இவ்வகைப் படங்கள். ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று ஓடியாடிக் கொண்டிருக்கும் ஓர் உலகத்தில் ‘இருப்பதில் நிறைவுகொள்’ என்று சொல்வது கேலிக்குள்ளாவது சாதாரணம்.
ஆனால், அது மட்டுமே நம் மீது நாம் மதிப்பு கொள்வதற்கான ஒரே வழி. கடந்த காலத்தில் ஒருகால் எதிர்காலத்தில் ஒரு கால் என்றிருந்தால் நிகழ்காலத்தில் வீழ்ந்துபோவோம். அப்படி நடவாமல் தவிர்க்க நிகழ்காலத்தின் ஒவ்வொரு கணத்திலும் கால் ஊன்றுங்கள் என்று சொல்லும் ‘கணம்’ இயக்குநர் ஸ்ரீகார்த்திக் நிச்சயம் பாராட்டுக்குரியவர்!
Read in : English