Read in : English
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் ஆகியோருக்கான பணி நியமனம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு புதிய விதிகளை அறநிலையத் துறை கொண்டுவந்தது.
அரசின் புதிய விதிகளில் சிலவற்றை எதிர்த்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கப் பொதுச்செயலாளர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் சிவாச்சாரியார், ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். கோயில்களில் அர்ச்சகர்கள் பணி நியமனம் தொடர்பான அரசின் புதிய விதிகளை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த வழக்கில் ஆகஸ்டு 22 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், கோயில்களில் அர்ச்சகர்கள் பணி நியமனம் தொடர்பான அறநிலையத் துறையின் புதிய விதிகள் செல்லும். அதேநேரம், ஆகம விதிகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். அதேபோல கோயில்களில் அர்ச்சகர்களையும், பூசாரிகளையும் நியமிக்கும் அதிகாரம் கோயில் அறங்காவலர்களுக்கும், தக்காருக்கும் மட்டுமே உள்ளது. அறநிலையத் துறைக்குக் கிடையாது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், தமிழகத்தில் எந்தெந்தக் கோயில்களில் ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில் மெட்ராஸ் சம்ஸ்கிருதக் கல்லூரி செயற்குழுத் தலைவர் என்.கோபாலசுவாமியை நாங்கள் நியமிக்கிறோம். மேலும், 2 பேரைக் குழுவின் தலைவராக உள்ள எம்.சொக்கலிங்கத்துடன் தமிழக அரசு கலந்தாலோசித்து ஒரு மாதத்துக்குள் நியமிக்க வேண்டும்.
ஆகம விதிகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், இக்குழுவின் அலுவல் சாரா 5ஆம் உறுப்பினராகச் செயல்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறை பணியாளர் நியமனம் தொடர்பான புதிய விதிகள் அனைத்து ஊழியர்களின் பணிநியமனம் தொடர்பானவை என்பதால் அவற்றை ரத்து செய்ய முடியாது. அந்த விதிகளை ரத்து செய்தால் நிர்வாகச் சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும். அதேநேரம் ஆகம விதிகளைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். அதேநேரத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றிக் கட்டப்படாத கோயில்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக நீண்ட நாள்களாகவே சர்ச்சை நீடித்துவருகிறது. பிறப்பால் பிராமணர்களாக இருப்பவர்களே நடைமுறையில் அர்ச்சகராகப் பணியாற்றிவருகிறார்கள். ஆனால், சமூக சீர்திருத்தம் என்ற அடிப்படையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று திமுக அரசாங்கங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றுத் தேர்ந்த மாணவர்கள் 24 பேரை அர்ச்சகராகவும் நியமித்துள்ளது. இதனிடையே இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க:
திராவிட இயக்க வரலாற்றில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இடைநிலை சாதியினருக்கும் நெகிழ்ந்து கொடுத்த மதுரை அழகர் கோயில்!
இந்தத் தீர்ப்பு தொடர்பாக, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவரான வா.ரங்கநாதனிடம் இன்மதி இணைய இதழின் ஆசிரியர் எம்.கல்யாணராமன் பேசினார்.அப்போது ரங்கநாதன், தமிழ்நாட்டில் சாதித் தீண்டாமை வழக்கம் இருந்துவந்தது; எல்லா சாதியினரும் படிக்கக் கூட உரிமை இல்லாத சூழல் இருந்தது; அதே போல் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாத நிலைமையே இருந்துவந்தது என்று குறிப்பிட்டார். மேலும், இந்து மக்கள் அனைவரும் இது ஏன் எனச் சிந்திக்க வேண்டும்; கோயில் கட்டுவதில் அனைத்து சமுதாயத்தினரும் இணையலாம், ஆனால், அர்ச்சகர் ஆக அனைத்து சாதியினருக்கும் உரிமை கிடையாதா? எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் பேசியபோது, இதை எதிர்த்து தந்தை பெரியார், கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் முயற்சிகளை முன்னெடுத்தனர். பெரியாருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும், நம்பிக்கை கொண்ட அனைவரும் கோயிலுக்குப் போக வேண்டும், அவர்கள் அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்று நினைத்தார். இந்த நினைப்புக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் கலைஞர் மு.கருணாநிதி 2006இல் முயற்சிகள் மேற்கொண்டார்.
அதன் பகுதியாக திருவண்ணாமலை, திருவல்லிக்கேணி போன்ற ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கினார். அங்கே பயிற்சி பெற்ற 240 மாணவர்களில் 207 பேர் பயிற்சியை நிறைவு செய்தனர். அவர்கள் அனைவருக்குமே அர்ச்சகராகும் தகுதி இருந்தது.
ஆனால், இவர்கள் அர்ச்சகரானால் கோயில் தீட்டுப் பட்டுவிடும் என பக்தர்கள் கூறுகிறார்கள் என்று தெரிவித்து உச்சநீதிமன்றம் போய் தடை வாங்கிவிட்டார்கள். ஆகவே, மாணவர்கள் அனைவரும் 15 ஆண்டுகளாகப் போராடிவருகிறோம் என்கிறார் ரங்கநாதன். இந்த நிலையில் 2021 ஆகஸ்டு 14 அன்று அனைவரும் அர்ச்சகராகலாம் என்பதற்கேற்ப 24 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.
இதனிடையே நேற்றை தீர்ப்பு வந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பில் தமிழக அரசின் 2020ஆம் ஆண்டின் விதிகளை ரத்துசெய்ய இயலாது என்று குறிப்பிட்டிருப்பதைச் சாதகமான அம்சம் என்கிறார் ரங்கநாதன். ஏனெனில், இதன் மூலம் வயலூர் முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 24 கோயில்களில் 24 மாணவர்கள் அர்ச்கராக நியமிக்கப்பட்டது செல்லும் என்றாகிறது. அதே நேரத்தில் இந்தத் தீர்ப்பு மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அர்ச்சகர் நியமனம் என்பது ஆகம விதிகளின் படிதான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தவறான ஒன்று என்று தெரிவிக்கும் அவர் இதனால் இனி மாணவர்களின் பணி நியமனம் என்பது கேள்விக்குள்ளாகலாம் என்றும் கூறுகிறார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் அம்சத்தை மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டுபோய்விட்டிருக்கும் பழமைவாதத் தீர்ப்பு
ஆகமம் என்பது கோயில் வழிபாட்டு முறையே தவிர ஆகமத்தில் குறிப்பிட்ட சாதியினர்தான் அர்ச்சகராகலாம் என்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் ரங்கநாதன், ரிஷிகள், மரபுகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு மீண்டும் மனுதர்மம் நிலைநாட்டப்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறார். தாங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் சேர்த்துப் போராடுவதாகக் கூறும் ரங்கநாதன், இந்த ஐவர் குழுவும் மிகத் தவறானது என்கிறார். ஏற்கெனவே, ஏ.கே.ராஜன், மகாராசன் ஆகியோர் ஆகமங்கள் தொடர்பாக தெளிவான அறிக்கை கொடுத்திருக்கிறார்கள் எனும்போது, இந்த ஐவர் குழு என்பது ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலுக்கு வழிவகுக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறார் ரங்கநாதன்.
இதுவரை பணிநியமனம் பெற்றவர்களின் நிலைமை குறித்துக் கேட்டபோது, பணிநியமனம் பெற்றவர்களின் பலர் இன்னும் கோயிலுக்குள் போய் அர்ச்சனை செய்ய இயலாத நிலையில் இருப்பதை ரங்கநாதன் சுட்டிக்காட்டினார். முதல்வர் உள்ளிட்ட பலரது தலையீடும் போராட்டமும் இருந்ததால் சில கோயில்களில் சில நாள்கள் கருவறைக்குள் போக முடிந்ததே ஒழிய இன்னும் பணிநியமன பெற்ற அர்ச்சகர்கள் அனைவரும் கருவறைக்குள் போகும் சூழல் வாய்க்கவில்லை என்னும் யதார்த்த நிலையை அவர் எடுத்துக்காட்டினார்.
கோயில்களின் இன்னும் சாதி ஆதிக்கமே உள்ளது. அவர்களுக்கு ஆளும் மத்திய அரசின் ஆதரவு உள்ளது என்பதையெல்லாம் ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார் ரங்கநாதன். அர்ச்சகர்களைக் கருவறைக்குள் விடாமலும் சில கோயில்களில் அர்ச்சகர்களைக் கொத்தடிமை போல் நடத்துவதாகவும், அர்ச்சகர்களை மிரட்டுவதாகவும் அவர் வருத்தம் தொனிக்கக் கூறுகிறார்.
கோயில்களை ஆகமம் என்ற அடிப்படையில் பிரிப்பதைப் போல் காட்டினாலும், அவர்கள் வருமானம் அடிப்படையிலேயே கோயில்களைப் பிரிக்கிறார்கள். அதிக வருமானம் வரும் கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க அவர்கள் விரும்புவதில்லை.
இந்த நிலையில் இந்தத் தீர்ப்பு என்பது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் அம்சத்தை மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டுபோய்விட்டிருக்கும் பழமைவாதத் தீர்ப்பு என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் ரங்கநாதன். அனைவரும் இந்துக்கள் என்றுதானே சொல்கிறார்கள். ஆனால், ஏன் அனைவரும் அர்ச்சகராக முடியவில்லை? இதையெல்லாம் தமிழக மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும், கோயில்கள் இன்னும் நிலவும் தீண்டாமைக்கு எதிராகப் போராட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ரங்கநாதன். அத்துடன் இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.
அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலும் இன்னும் மனிதர் அனைவரையும் சமமாகப் பார்க்கும் மனநிலையை மனிதருக்குக் கடவுள் தரவில்லையோ என்று எண்ணும்போது வருத்தமே எஞ்சுகிறது.
Read in : English