Read in : English
சில திரைப்படங்கள் வெறுமனே பொழுதுபோக்காக மட்டும் அமையாமல் சமூகத்தில், கலாசாரத்தில், மக்களின் வாழ்க்கையமைப்பில், அரசியல் செயல்பாடுகளில் தாக்கங்களை உருவாக்கும். அதற்காக அப்படங்களின் ஒவ்வொரு பிரேமிலும் புரட்சிக் கருத்துகள் பொங்கியாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் ஏதேனும் ஒரு சிரமத்தைத் திரையில் சொல்வதன் மூலமாகக் கூட அதனைச் சாதிக்க முடியும்.
அரசியல் கட்சிகளின், ஆட்சிகளின் அடிப்படையைக் கேள்விக்குட்படுத்த முடியும். அதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியாகியிருக்கும் மலையாளத் திரைப்படமான ‘ன்னா தான் கேஸ் கொடு’.
சூறையாடும் சிறுபொறி!
திருட்டு வழக்கொன்றில் கைதாவதைத் தவிர்க்க, வடகேரளப்பகுதியான செருவாத்தூரில் இருந்து சீமேனிக்குத் தப்பிச் செல்கிறார் கொழுமல் ராஜீவன் (குஞ்சாக்கோ போபன்). ஆற்றங்கரையில் தந்தையுடன் வசித்துவரும் தேவியைச் (காயத்ரி) சந்திக்கிறார். மெல்ல அவர்களது வீட்டில் ஒருவராகிறார்.
கணவன் மனைவியாக மாறுவதற்கு முன்னதாகவே, ராஜீவன் குழந்தை தேவியின் வயிற்றில் வளர்கிறது. இந்த நிலையில், அருகிலுள்ள கிராமமொன்றில் நடக்கும் கோயில் திருவிழாவைக் காணச் செல்லும் ராஜீவன், எம்.எல்.ஏ. வீட்டில் திருட முயன்றதாகக் கைதாகிறார். நீதிமன்ற விசாரணையின்போது, எம்.எல்.ஏ. வீட்டு காம்பவுண்ட் சுவர் அருகே சிறுநீர் கழிக்கச் சென்றபோது ஒரு ஆட்டோ மோத வந்ததால் சுவர் ஏறிக் குதித்ததாகச் சொல்கிறார் ராஜீவன்.
அதற்குச் சாலையில் இருந்த பள்ளமே காரணம் என்றும், அப்பள்ளம் ஏற்படுவதற்கு மாநிலப் பொதுப்பணித் துறை அமைச்சரே காரணம் என்றும் புதிதாக மனு போடுகிறார் ராஜீவன். வழக்கறிஞருக்குப் பதிலாக, தன் தரப்பு நியாயங்களைச் சொல்ல தானே முன்வருகிறார். இதன் தொடர்ச்சியாக, அவர் மீது எம்.எல்.ஏ. வீட்டில் சில பொருள்களைத் திருடியதாக வழக்கு தொடரப்படுகிறது.
அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் ஏதேனும் ஒரு சிரமத்தைத் திரையில் சொல்வதன் மூலமாகக் கூட அரசியல் கட்சிகளின், ஆட்சிகளின் அடிப்படையைக் கேள்விக்குட்படுத்த முடியும். அதனை நிரூபித்திருக்கிறது மலையாளத் திரைப்படமான ‘ன்னா தான் கேஸ் கொடு’
தான் திருடவில்லை என்பதை நிரூபிக்கும் ராஜீவன், எவ்வாறு ஒரு அமைச்சரை நீதிமன்றத்திற்கு வரவழைக்கிறார் என்பதாக நீள்கிறது ‘ன்னா தான் கேஸ் கொடு’.
பெருவனத்தைச் சூறையாடும் சிறுபொறி போல, அனைவருக்கும் நகைச்சுவையாகத் தென்படும் ராஜீவனின் வழக்கு எவ்வாறு ஓர் ஊழலை வெளிக்கொணர்கிறது என்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சம்.
கற்றுக்கொள்ள வேண்டியது!
‘சிவப்பு மல்லி’, ‘தண்ணீர் தண்ணீர்’ உட்பட எண்பதுகளில் எத்தனையோ தமிழ்த் திரைப்படங்கள் அரசியல் பேசியிருக்கின்றன. ஏன், அறுபதுகளில் கூட ‘பாதை தெரியுது பார்’ போன்ற அரிதாகச் சில படைப்புகள் தொழிலாளர் நலனை முன்வைத்திருக்கின்றன. அதற்கும் முன்னதாக, திராவிட அரசியலை முன்வைத்த ‘வேலைக்காரி’, ‘பராசக்தி’ போன்ற பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், சுதந்திரத்தை முன்னிருத்தி கணிசமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஏன், எம்ஜிஆர் நடித்த படங்களில் பல அன்றைய அரசியல் சூழலை ஏதோ ஒரு வகையில் விமர்சித்தவைதான்.
இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட தமிழ்த் திரையுலகம், தொண்ணூறுகளுக்குப் பிறகு அரசியல் சீர்திருத்தம் சார்ந்த கதைகளை ஹீரோயிசம் சார்ந்தே பார்க்கத் தொடங்கியது துரதிர்ஷ்டம். ஷங்கரின் இந்தியன், முதல்வன், பாலாஜி சக்திவேலின் சாமுராய், ஷரவண சுப்பையாவின் சிட்டிசன், ஏ.ஆர்.முருகதாஸின் ரமணா போன்றவை ஒரு வகை என்றால், மணிரத்னத்தின் இருவர் போன்ற நிஜத்தின் நிழல் போன்ற தோற்றம் கொண்ட பயோபிக்குகளும்கூட போலியான அரசியல் களத்தையே காட்டியிருக்கின்றன.
இன்று சாதி, மத வேறுபாடு சார்ந்து, காவல் துறை போன்ற அரசு இயந்திரத்தின் அங்கங்கள் சார்ந்து சில திரைப்படங்கள் சமீபத்தில் தமிழில் வருகின்றன. ஆனால், பொதுவான பிரச்சினைகளோ, அரசு மற்றும் கட்சிச் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களோ பெரிதாக முன்வைக்கப்படுவதில்லை. மீறி வெளியாகும் சிறு படங்களும் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. இந்த நிலையுடன் ‘ன்னா தான் கேஸ் கொடு’ படத்தின் உள்ளடக்கத்தையும் அதற்கு தியேட்டரில் கிடைக்கும் வரவேற்பையும் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. அது தமிழ்த் திரையுலகம் கற்றுக்கொள்ள வேண்டியதாகவும் இருக்கிறது.
மேலும் படிக்க:
பிரச்சாரம் இல்லாத சமகால அரசியல் திரைப்படம் ‘ஜன கண மன’!
செலுலாய்ட்: மலையாள சினிமாவின் தந்தை ஜே. சி. டானியல் நினைவாக ஒரு திரைப்படம்!
முடிந்தால் வழக்கு தொடு!
இன்றைய சூழலில் நீதிமன்றத்தில் பொதுப்பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடுப்பது மட்டுமல்ல; காவல் நிலையம் சென்று புகார் கொடுப்பதுகூடச் சாதாரண மனிதர்களுக்கு ஒவ்வாததாகவே உள்ளது. இந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே ‘ன்னா தான் கேஸ் கொடு’ படத்தின் திரைக்கதை நீள்கிறது. ‘அப்படியென்றால் நீ வழக்கு தொடு’ என்பதுதான் இந்த டைட்டிலுக்கான அர்த்தம். இந்த வார்த்தையைச் சொல்வது எளியோரா வலியோரா என்பதை நம்மால் மிக எளிதாக உணர முடியும்.
திருட்டுக் குற்றங்களைச் செய்தவர் மனம் திருந்தி வாழ்வதை ஏன் சமூகமும் அரசு இயந்திரமும் ஒப்புக்கொள்ள மறுக்கின்றன? சிறு குற்றங்கள் செய்தவர் மீது வெகுவிரைவில் தண்டனை சுமத்தப்படுவதைப் போல, பெரும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டம் பாயாமல் இருக்க என்ன காரணம்? என்னென்ன விஷயங்கள் வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்துகின்றன? சாலையில் பள்ளங்கள் இருப்பது உண்மையிலேயே சாதாரண விஷயம்தானா? அதற்கு மாநில அளவில் பொறுப்பாக இருக்கும் ஒரு மக்கள் பிரதிநிதி மீது குற்றம்சாட்ட முடியாதா என்பது உட்படப் பல கேள்விகளை எழுப்புகிறது இத்திரைப்படம்.
குஞ்சாக்கோ போபன் நன்றாக நடிக்க மெனக்கெட்டிருக்கிறார் என்பதை, இப்படத்தில் அவரது தோற்றமே வெளிக்காட்டுகிறது. ‘மாமனிதன்’ போலவே இதிலும் பாந்தமான பெண்ணாக வந்து போகிறார் காயத்ரி. மற்றனைவரும் மலையாளம் பேச, அவர் மட்டுமே தமிழ் பேசுகிறார். எம்.எல்.ஏ. வீட்டு நாய்கள் காதலரின் பின்பக்கத்தைக் குதறி வைத்ததைச் சொல்லி வருத்தப்படும்போது தன் வசனங்களால் சிரிப்பூட்டுபவர், ‘திருடாத ஆளை ஏன் அடிச்சாங்க’ என்று கேட்டு வழக்கைத் திரும்பப் பெறக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்குமிடத்தில் ‘அட’ சொல்ல வைக்கிறார்.
படத்தில் வரும் சின்னச் சின்ன பாத்திரங்களும் தெளிவாகத் திரையில் உலா வந்தாலும், அனைவரையும் மீறி நம் மனத்தைக் கவர்கிறார் நீதிபதியாக நடித்திருக்கும் குஞ்சுண்ணி. மாத்திரை சாப்பிட்ட கையோடு பாதாம் பருப்பைச் சுவைத்துக்கொண்டே வழக்கை விசாரிப்பதாகட்டும், தன் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் புறாக்கள் மீது பாதாமை வீசுவதாகட்டும், போலீசார் செய்ய வேண்டியதை அயர்ச்சியுடன் குறிப்பிடுவதாகட்டும், இவை எவற்றோடும் பொருந்தாமல் எளியவரான நாயகன் மீது கரிசனை காட்டுவதாகட்டும்; அந்த நீதிபதி பாத்திரத்தின் தெளிவான வடிவமைப்புதான் ‘ன்னா தான் கேஸ் கொடு’ படத்தின் பலம்.
மாநில அமைச்சர் நீதிமன்றத்திற்கு வருவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நீதிபதி கண்டிப்பு காட்டுமிடம் தியேட்டரில் மக்களின் கைத்தட்டல்களை வாரிக் குவிக்கிறது. எழுத்தாக்கம் மட்டுமல்லாமல் இயக்கம் சார்ந்தும் ரதீஷ் பாலகிருஷ்ணன் மீது மரியாதை ஏற்படுத்தும் இடம் இது. மிக முக்கியமாக, போகிறபோக்கில் பல விஷயங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ கண்டுணர்கிற ஒரு வழிப்போக்கனின் பார்வையிலேயே மொத்த திரைக்கதையும் நகர்வது அழகு. இந்த திரைக்கதை ‘ட்ரீட்மெண்ட்’ அரசியல் பேசும் திரைப்படங்களுக்கு மிக அவசியமானது.
பிரமிப்பூட்டும் குஞ்சாக்கோ போபன்!
நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறும்போது, தான் ஏற்கும் பாத்திரங்கள் நடிப்பைக் கொட்டுவதாகவோ ஹீரோயிசத்தை வெளிப்படுத்துவதாகவோ இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். இல்லையென்றால், படத்தின் உள்ளடக்கம் லாபத்தைக் கொட்டுமா என்ற எதிர்பார்ப்பைச் சுமப்பார்கள். அவற்றில் இருந்து வேறுபட்டு, சமகாலப் பிரச்சினையொன்றைச் சொல்லும் திரைப்படத்தைத் தயாரிக்க நிச்சயம் தைரியம் வேண்டும். கூடவே, ‘நீங்கள் வரும் பாதையில் இருக்கும் பள்ளங்களைப் பொருட்படுத்தாமல் எங்கள் படம் ஓடும் தியேட்டருக்கு வர வேண்டும்’ என்று விளம்பரம் செய்ய பெருந்திடம் வேண்டும்.
இதனால், கேரளாவில் அரசியல்ரீதியாகவும் எதிர்ப்புகளைச் சம்பாதித்திருக்கிறது ‘ன்னா தான் கேஸ் கொடு’.
கடந்த மூன்றாண்டுகளாக குஞ்சாக்கோ போபன் நடித்த ‘அல்லு ராமேந்திரன்’, ‘வைரஸ்’, ‘அஞ்சாம் பதிரா’, ‘மோகன்குமார் பேன்ஸ்’, ‘நாயாட்டு’, ‘நிழல்’, ‘பீமண்ட வழி’, ‘படா’ என்று ஒவ்வொரு படமும் ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சினையைச் சார்ந்தே அமைந்திருப்பதைக் காண முடியும்.
இந்தப் படங்கள் எவையுமே தற்போதிருக்கும் சூழலைக் குத்திக் கிளறும் புரட்சியை முன்வைப்பவை அல்ல, அதேநேரத்தில் ஏற்கெனவே இருக்கும் புரைகளைக் களைவதற்கான சில தீர்வுகளை முன்வைப்பவை. அந்த வரிசையிலேயே, ‘ன்னா தான் கேஸ் கொடு’வும் அமைந்திருக்கிறது.
குஞ்சாக்கோ போபன் இது போன்ற கதைகளைத் தேர்ந்தெடுப்பது, நிச்சயம் அவரது சமகாலப் போட்டியாளர்களை விடுத்து பிறமொழி நாயகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் கூட ஒரு முன்னுதாரணம்தான். ‘ன்னா தான் கேஸ் கொடு’வில் இருக்கும் குறைகளையும் கமர்ஷியல் அற்ற அம்சங்களையும் மீறி அதனைக் கொண்டாடக் காரணமும் அதுவே!
Read in : English