Read in : English
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் மேதகு என்னும் படத்தை இயக்கியிருந்தார் ராக்கோ யோகேந்திரன். அந்தப் படத்தின் அடுத்த பாகமும் தயாராகியுள்ளது. அந்த வரலாற்றின் சில துளிகளை அறிவோம்.
இதோ சில உண்மைகள்: ராஜீவ் காந்தியின் படுகொலைக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்தான் காரணம். மேலும், ஏராளமான சிங்களத் தலைவர்களையும், சந்தேகத்திற்கிடமற்ற அறிவும் ஞானமும் கொண்ட நீண்டதொரு புகழ்பெற்ற தமிழ்த்தலைவர்கள் உட்பட பல தமிழர்களையும் கொலைசெய்ய அவர் ஆணையிட்டார். தமிழீழத்திற்கான ஒற்றைநோக்குமிக்க தேடலில் தன்னுடன் ஒத்துப்போகாத கிட்டத்தட்ட எல்லாத் தமிழ்த்தலைவர்களையும் அவர் கொன்றார்.
பிரபாகரனின் உத்திகள் கொடுமையானவை. விடுதலைப் புலிகள் நிறைவேற்றிய பல தண்டனைகள் குரூரமானவை. தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்கு, குறிப்பாக யாழ்ப்பாணக் கோட்டை மீதான தாக்குதல்களுக்கு, பிரபாகரன் குழந்தைகளைப் பெரிதும் பயன்படுத்தினார். அடையவே முடியாத ஒரு கனவைத் துரத்திக் கொண்டோடிய அவர் தமிழீழப் பூமியைச் சுட்டெரித்தார்;
ஆயிரக்கணக்கானவர்களின் மரணங்களுக்கு அவர் ஒரு காரணகர்த்தா; பலியானவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். மேலும், பலரின் சொத்துகள் அழிந்துபோனதற்கும் அவர்தான் காரணம். விடுதலைப் புலிகள் கட்டமைத்திருந்த தற்கொலைக் கலாச்சாரத்திற்குப் பொருத்தமானதொரு கொடுமையான உச்சக்கட்டத்தில், இலங்கை இராணுவத்தினரோடு மோதிய இறுதிக்கட்டப் போரில் பிரபாகரன் தன்னுடைய சொந்த மக்களையே தனக்குக் கவசமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
இதோ மேலும் சில உண்மைகள்: ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய இராணுவம் இலங்கையின் தமிழ்க்குடிமைச் சமூகத்தினர் மீது வன்முறையை, அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. தமிழர்களின் பாதுகாவலர்களாய் இருந்து அமைதியை ஏற்படுத்துவோம் என்ற அளித்திருந்த உத்தரவாதத்தை உதறித் தள்ளிவிட்டு இந்திய இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பினர். இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த ராஜீவ் காந்தி ஈழத்தை விரும்பவில்லை. பல்வேறு தமிழ்த்தலைவர்கள் சமரசமாகி இலங்கை அதிகார மையத்துடன் ஒத்துழைக்கவும் தொடங்கினர்.
நீண்டகாலமாகவே இலங்கை, தமிழர்களுக்குச் சம உரிமை கொடுக்காத ஒரு தேசமாக இருந்து வந்திருக்கிறது. தமிழர்களை, அவர்களது கலாச்சாரத்தைக் கீழே போட்டு மிதிக்கும் செயற்பாட்டில் இறங்கி அவர்களை ஒருதலைப் பட்சமாக நடத்திப் பலவழிகளில் மட்டம் தட்டியது இலங்கை அரசமைப்பு.
ஆவணங்களிலும் நடைமுறையிலும் இலங்கை என்பது ஒரு சிங்கள தேசம்தான்; அங்கே சிறுபான்மையோர்க்குச் சட்டரீதியான அங்கீகாரமும், சம உரிமை கொண்ட குடிமக்கள் என்ற அந்தஸ்தும் ஒருபோதும் இருந்ததில்லை. கடந்தகாலத்தில் பேரினவாதச் சிங்கள வெறியர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அதிகாரிகள் மெளனமாக இருந்தார்கள். அல்லது வன்முறையாளர்களுக்கு மும்முரமாக உதவினர்.
மேலும் படிக்க:
உச்சநீதிமன்றம் தீர்ப்பு: பேரறிவாளன் விடுதலை, மற்றவர்கள் விடுதலை எப்போது?
கோத்தபயவுக்கு எதிரான போராட்டம்: இலங்கைத் தமிழர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?
உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்றுகுவித்தபோது, விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இலங்கைக்கு உதவியது இந்தியாதான் என்று மகிந்த ராஜபக்ச அதிகாரப்பூர்வமாகவே சொல்லியிருக்கிறார். ஒருபாவமும் அறியாத அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் தங்களின் பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தினர் என்றால், இனப்படுகொலை என்று சொல்லும் அளவுக்கு அதே அப்பாவித் தமிழர்களைக் கொன்ற குற்றத்தை இலங்கை அரசு செய்திருக்கிறது.
ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய இராணுவம், இலங்கையின் தமிழ்க்குடிமைச் சமூகத்தினர் மீது வன்முறையை, அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டது
பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத் தொடரான ‘மேதகு’வின் இயக்குநர் ராக்கோ யோகேந்திரன் இரண்டாவது வரிசை உண்மைகளையே பார்க்க விரும்புகிறார். ஏனெனில், அவரைப் பொறுத்தவரை, அவைதான் முதல்வரிசை உண்மைகளை விளக்குகின்றன. தனது திரைப்படங்கள் குரலற்றவர்களின் குரலின் கோணத்திலிருந்து படம்பிடிக்கப்பட்டவை என்று அவர் கம்பீரமாகச் சொல்கிறார்.ஈழ நம்பிக்கையாளர் யோகேந்திரன். பிரபாகரனைப் போல ஈழம்தான் இலங்கைத் தமிழர்களின் ஒரே தீர்வு என்று அவர் நம்புகிறார். அதை அடைவது சாத்தியம் என்றும் கூட அவர் நம்புகிறார். நம்பிக்கை அவரது ஆயுதம்.
பிரபாகரன் பல இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தனக்கும்தான் கடவுள் என்று யோகேந்திரன் சொல்கிறார். இரண்டாவது வரிசை உண்மைகளின் கோணத்திலிருந்து அவர் பிரபாகரனின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். தான் விவரித்திருக்கும் அந்த உண்மைகளுக்குச் சான்றாக அவர் பல்வேறு சிங்களத் தகவல் மூலங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
மேதகு-1 படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால் பொது அரங்குகளில் அதைத் திரையிட முடியவில்லை. தணிக்கைக் குழு பெண் அதிகாரி ஒருவர் தன்னால் உதவ முடியவில்லை என்றார். இலங்கையை வெறுப்பேற்றும் ஒரு திரைப்படம் வெளிவருவதை இந்தியா விரும்பவில்லை என்றார் அந்த அதிகாரி.
மேதகு-1 படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால் பொது அரங்குகளில் அதைத் திரையிட முடியவில்லை
மேதகு-2 1987-வரையிலான பிரபாகரனின் வாழ்க்கையைப் பதிவுசெய்திருக்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிய தனது அச்சத்தை பிரபாகரன் 1987ஆம் ஆண்டு சுடுமலை அறிவிப்பில் வெளிப்படுத்திருந்தார். திரைப்படம் அதுவரையிலான சம்பவங்களைப் பதிவுசெய்திருக்கிறது.
மேதகு – 2 படத்தை வெளியிடுவதற்காகத் தான் தணிக்கைக் குழுவை அணுகவிருப்பதாக யோகேந்திரன் சொல்கிறார். என்றாலும், புலம்பெயர் தமிழர்களைப் பார்க்க வைக்கும் நோக்குடன் உலகம் முழுக்கத் திரைப்படத்தை வெளியிடும் சாத்தியமும், ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடும் சாத்தியமும் அவரை உற்சாகத்தில் வைத்திருக்கிறது.
Read in : English