Read in : English
நேர்மை என்பது நேர்வழியில் செயல்படும் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு சொல். ஒருவரின் உருவ அமைப்போ கல்வி அறிவோ தொழில் அல்லது பதவியைக் கொண்டோ இதை மதிப்பிட முடியாது. அன்றாட நடத்தை சார்ந்த குணயியல்பைப் பொறுத்தே நேர்மை வெளிப்படுகிறது. நேர்மைக்குத் தனித்துவ மதிப்பும் மரியாதையும் உண்டு. நேர்மையான குணயியல்பைக் கொண்ட போற்றத்தக்கப் பலர் தமிழகத்தில் உண்டு. காவல் துறை போன்ற விசாரணை அமைப்புகளில் நேர்மையைக் கடைப்பிடிப்பவர்களைக் காண்பது அரிது. மிகச் சிலரே இந்தப் பண்பைப் பற்றிக்கொண்டிருப்பர். அதில் ஒருவர் ஜம்புகுமரன்.
தமிழகக் காவல்துறையில், உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்து, பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி, எஸ்.பி., அந்தஸ்தில் ஓய்வுபெற்றவர். முக்கிய அரசியல் திருப்பங்களில் தொடர்புள்ளவர். அரசியல் தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகளையும் விசாரித்துள்ளார். தற்போது, 84 வயதாகிறது. போலீஸ் பணி நினைவுகளை, இன்மதி.காம் இணைய இதழுடன் பகிர்ந்து கொண்டார்.
கேள்வி: காவல்துறையில் பணியேற்ற தொடக்க நாள்கள் பற்றி…
ஜம்புகுமரன்: காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக, 1963இல் தேர்வானேன். விருதுநகரில் எனக்குப் பணியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே பொறுப்பாளராகப் பணியேற்றேன். அந்தக் காலத்தில் அது மிகவும் மதிப்பு மிக்கப் பணி. எங்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், போலீஸ் அதிகாரியிடமே இறுதி முடிவு எடுக்கக் கேட்டுக்கொள்வர். பெரும் பொறுப்பைச் சுமக்கும் நிலையில் இருந்தேன்.
அன்றாடம் என் பணியை மிகச் சரியாகச் செய்ய வேண்டுமே என்ற தீவிரம் மனதில் இருக்கும். பணியை முடித்தபின் இரவில், சரியாகச் செய்தேனா… யாருக்கும் சாய்வின்றி நடந்தேனா… நேர்மையைக் கடைப்பிடித்தேனா… எனக் கலங்கியபடி எண்ணிப் பார்ப்பேன். அது, உள்ளுணர்வாக இயங்கிக்கொண்டேயிருக்கும். அதைக் கேள்வியாக எனக்குள் வைத்திருப்பேன்.
மேலும் படிக்க:
ஜெய் பீம்: போலீஸ் அதிகாரி பார்வையில் போலீசாரின் அத்துமீறல்கள்!
போலீஸ் துறை சிலநேரம் பொய்சாட்சி தயாரிப்பது எதனால
கேள்வி: அப்போது, தமிழகத்தில் காங்கிரஸ் தானே ஆட்சியில் இருந்தது…
ஜம்புகுமரன்: ஆமாம். காமராஜர் முதல்வர் பதவியைத் துறந்து, டில்லி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குப் போயிருந்தார். அவரது சொந்த ஊரில் எனக்குப் பணி. ஆனால், அவரிடமிருந்தோ அவர் சார்பாகவோ எப்போதும், எந்த அழுத்தமும் வந்தது இல்லை.
பணியை முடித்தபின் இரவில், சரியாகச் செய்தேனா… யாருக்கும் சாய்வின்றி நடந்தேனா… நேர்மையைக் கடைப்பிடித்தேனா… எனக் கலங்கியபடி எண்ணிப் பார்ப்பேன். அது, உள்ளுணர்வாக இயங்கிக்கொண்டேயிருக்கும்
கேள்வி: அந்தக் காலத்தில் அன்றாடப் பணிகள் என்ன?
ஜம்புகுமரன்: தமிழகத்தில் பெரும் பஞ்சம் நிலவிய காலம் அது. உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவியது. அதை, பதுக்கியோரைக் கண்காணிப்பது முக்கியப் பணி. சட்டம் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து என எல்லாப் பணிகளையும் பார்க்க வேண்டும். என் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் கடைகளைக் கண்காணிக்க வேண்டும். உணவுப் பொருள்களின் இருப்பு நிலவரம் பற்றி அறிந்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி, உணவுப் பொருள்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அது முறையாக விநியோகம் செய்யப்படுவதைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.
கேள்வி: எந்த வகை வழக்குகளில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள்?
ஜம்புகுமரன்: அடிதடி, மோதல் வழக்குகளில் தான் தீவிரக் கவனம் செலுத்துவோம். அதிகாரிகளும் அதைத்தான் வலியுறுத்துவர். ஒரு சம்பவம் நடந்த உடன், குற்றவாளிகளைக் கைதுசெய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். அடிப்படையில் இது போன்ற குற்றங்களைச் சரியாக விசாரித்து, நடவடிக்கை எடுத்தாலே, மற்ற குற்றங்கள் நடக்காது. எனவே, இதில் அதிகக் கவனம் செலுத்துவோம்.
கேள்வி: காவல் துறைக்கு அப்போது மரியாதை எப்படி இருந்தது?
ஜம்புகுமரன்: ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். தினமும் மாலையில் விருதுநகரில் நெரிசல் மிக்க கடைத்தெரு வழியாக சைக்கிளில் ரோந்து போவேன். கடைகளின் முன்னால் சிறிய வண்டிகளை நிறுத்தியிருப்பர். அவை, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும். என்னைக் கண்டவுன், வண்டிகள் எல்லாம், கடை பின்புறம் போய்விடும். வியாபாரிகளுக்கு மட்டுமல்ல… அனைவருக்கும் உள்ள உரிமைகள் முறைப்படி பின்பற்றப்படுகின்றவா என்பதைக் கண்காணித்து, ஒழுங்கு படுத்துவதுதான் என் வேலை. அதைப் பாகுபாடின்றிச் செய்துள்ளேன். அதனால் மரியாதை ஏற்பட்டு இருந்தது.
கேள்வி: காவல் நிலையங்களைப் பொதுமக்கள் எளிதில் அணுகும்நிலை இருந்ததா?
ஜம்புகுமரன்: ஒருநாள் மாலை காவல் நிலையத்தில் இருந்தேன். மாணவன் ஒருவன், ஊருக்குச் செல்ல பஸ்சுக்குக் காசு இல்லை என்றான். கொடுத்து அனுப்பினேன். இரண்டு நாள்களுக்குப் பின், அதே சிறுவன் மீண்டும் வந்தான். பஸ்சுக்காக வாங்கிச் சென்ற காசைத் திருப்பித் தந்தான். இது போல், தினமும் ஏதாவது நிகழ்வுகள் நடக்கும். காவல்துறையின் கண்ணியம், அணுகுமுறைக்கு இது எடுத்துக்காட்டு.
மொரார்ஜி தேசாய் அலுவலகத்தில் இருந்து பேசினர். விருதுநகர் தொகுதி நிலவரம் பற்றிக் கேட்டனர். மாவட்ட எஸ்.பி.யிடம் கேளுங்கள் என்றேன். உண்மை நிலவரம் உங்களுக்குத் தான் தெரியும், அதைச் சொல்லுங்கள் என்றனர். காமராஜர் தோற்றதை உறுதி செய்தேன்
கேள்வி: விருதுநகரில் காமாராஜர் போட்டியிட்ட போது, அங்கு பணியில் இருந்தீர்களா?
ஜம்புகுமரன்: அது முக்கிய அரசியல் நிகழ்வு. அந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விருதுநகரில் போட்டியிட்டார் காமராஜர். தேர்தல் முடிந்து, அந்தத் தொகுதியின் முடிவு மட்டும் அறிவிக்கப்படவில்லை. தகவல் தொடர்பு மிகவும் குறைந்த காலம் அது. போலீஸ் நிலைய தொலைபேசி எண் 91க்கு டில்லியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. மொரார்ஜி தேசாய் அலுவலகத்தில் இருந்து பேசினர். விருதுநகர் தொகுதி நிலவரம் பற்றிக் கேட்டனர். மாவட்ட எஸ்.பி.யிடம் கேளுங்கள் என்றேன். உண்மை நிலவரம் உங்களுக்குத் தான் தெரியும், அதைச் சொல்லுங்கள் என்றனர். காமராஜர் தோற்றதை உறுதி செய்தேன்.
கேள்வி: தொடக்கக் காலப் பணியை நினைவுபடுத்தும் சம்பவம் ஏதாவது உண்டா?
ஜம்புகுமரன்: இரண்டு மாதங்களுக்கு முன், என் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘ஜம்புகுமரன் உங்களுடன் பேச விரும்புகிறார்’ என்று அழைத்தவர் கூறினார். ‘என்ன விளையாடுறீங்களா…’ எனக் குழப்பத்துடன் கேட்டேன். தொடர்ந்து, விருதுநகரில் இருந்து, ஒருவர் பேசினார். தன் பெயரை வழக்கறிஞர் ஜம்புகுமரன் என அறிமுகம் செய்தார். விருதுநகரில் நான் பணியாற்றியபோது பிறந்த அவருக்கு, அவரது தந்தை என் பெயரைச் சூட்டியிருப்பதாகக் குறிப்பிட்டார். மிக நெகிழ்ச்சியாக இருந்தது. போலீஸ் பணியை முறையாக செய்த நிறைவும் திருப்தியும் ஏற்பட்டன.
மிகுந்த எளிமை, நம்பிக்கையுடன் வாழ்ந்துவரும் ஜம்புகுமரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி நில பேர ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றியவர். குறிப்பிடத்தக்க சேவைப் பணிக்காக, நான்கு முறை பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read in : English