Read in : English
கிராமப்புற அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர் ஆர். கோவிந்தராஜன் (34), தற்போது ஜப்பானில் உள்ள ஒகினாவா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கிராஜுவேட் யுனிவர்சிட்டியில் போஸ்ட் டாக்டரல் ஸ்காலராக இருந்து வருகிறார். விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியும்கூட.
விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று அரசுப் பள்ளி மாணவர்களை 9ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை தங்களது வீட்டில் தங்களது குடும்பத்தில் ஒருவராகத் தங்க வைத்து, அவர்களை நன்றாகப் படிக்க வைத்து, அவர்கள் கல்லூரியில் சேரவும் வழிகாட்டி வந்தார்கள் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்]ஞானிகளாகப் பணிபுரிந்த ஸ்ரீதர், கலாவதி தம்பதி. (பணி ஓய்வுக்குப்பிறகு ஸ்ரீதர் கடந்த ஆண்டு மறைந்துவிட்டார்). அவர்களது வீட்டில் தங்கி இருந்து படித்த மாணவர்களில் ஒருவர்தான் ஆர். கோவிந்தராஜன்.
விளிம்பு நிலைக் குடும்பத்தில் பிறந்தாலும் தனது விடா முயற்சியால் தன்னம்பிக்கையுடன் படித்து வேதியியலில் பிஎச்டி பட்டம் பெற்று தற்போது ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வரும் கோவிந்தராஜன் தனது வாழ்க்கைக் கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் கிராமம்தான் எனது சொந்த ஊர். குடிசை வீடு. அப்பா ராமதாஸ் தினக்கூலி வேலை செய்பவர். லாரிகளில் சரக்கு ஏற்றி இறக்கும் வேலை. சில சமயங்களில் செக்யூரிட்டி வேலை பார்ப்பார். அம்மா ஜெயா, கட்டுமானப் பணிகளில் சித்தாள் வேலை பார்ப்பார். இந்த வருமானத்தை வைத்துக் கொண்டுதான் என்னையும் எனது தம்பி முரளியையும் படிக்க வைத்தார்கள்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஒகினாவா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னலாஜி கிராஜுவேட் யுனிவர்சிட்டியில் போஸ்ட் டாக்டரல் ஸ்காலராக பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது
வாயலூர் அரசுப் பள்ளியில் படிக்கும் போது அங்குள்ள மாணவர்களுக்கு ஸ்ரீதர் சாரும் கலாவதி மேடமும் மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்க வருவார்கள். நான் நான்காவது படிக்கும்போது அவரைப் பார்த்தேன். ஆறாவது படிக்கும்போது டியூஷனுக்கு வா என்று என்னை அனுப்பிவிட்டார். ஆறாவதிலிந்து எட்டாவது வரை [அவரிடம் பள்ளியில் டியூஷன் படித்தேன். 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை ஸ்ரீதர் சார், கலாவதி டீச்சர் வீட்டிலில் தங்கிப் படித்தேன். எங்களையும் அவர்களது வீட்டில் ஒருவராக அன்போடு நடத்தினார்கள். ஸ்ரீதர் சார் கணிதப் பாடத்தை நடத்துவார். கலாவதி டீச்சர் மற்ற பாடங்களை நடத்துவார்.
சதுரங்கப்பட்டினத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தேன். 9ஆம் வகுப்பில் முதலில் நடந்த மிட் டேர்ம் டெஸ்ட்டில் எல்லா பாடத்திலும் பாஸ் செய்துவிட்ட நான், ஆங்கிலத்தில் 33 மதிப்பெண்கள்தான் பெற்றேன். ஆனால் படிப்படியாக நன்றாகப் படித்து அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று படிப்பில் முன்னேறினேன். 2003இல் பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 434 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே இரண்டாவது ரேங்க் எடுத்தேன். இதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பர்கள் வீட்டுக்குப் போகச் சொல்லி சாக்லேட்டுடன் அனுப்பி வைத்தார். அந்த வீடுகளில் அவரது நண்பர்களும் எங்களுக்கு கிப்ட் கொடுத்தார்கள். எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
பிளஸ் ஒன் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் எடுத்துப் படித்தேன். பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 949 மதிப்பெண்கள் பெற்றேன். அப்போதும் பள்ளியில் இரண்டாவது இடம் எனக்கு. அவரது வீட்டில் தங்கிப் படிக்கும்போது, படிப்பு விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார். அதனால் நான் பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல பெண்கள் பெற்றேன். பிளஸ் ஒன் வகுப்பில் படிக்கும்போது, இனிமேல் நாமல்லெலாம் பிரண்ட்ஸ் போலதான்.
அப்படித்தான் உங்களை நடத்துவேன்; கண்டிப்புடன் நடந்து கொள்ளமாட்டேன் என்றார். பிளஸ் டூ வகுப்புத் தேர்வில் பள்ளியில் இரண்டாவது ரேங்க் எடுத்தாலும்கூட, எனது மதிப்பெண்கள் குறைந்துவிட்டன. சார் நீங்கள் தொடர்ந்து எங்களிடம் கண்டிப்புக் காட்டியிருந்தால் இன்னமும் கூடுதலாக மார்க் வாங்கி இருப்பேனே சார் என்றேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார்.
பள்ளியில் படிக்கும்போது அரசி டீச்சர்தான், எனக்கு வேதியியல் பாடத்தில் ஆர்வம் வருவதற்கு முக்கிய காரணம். பிளஸ் டூ படித்து முடித்ததும் கெமிக்கல் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கேற்ற பொருளாதார வசதி இல்லை. வங்கிகளில் கடன் வாங்கலாம் என்றால் அதற்கேற்ற சொத்து எதுவும் எங்களுக்கு இல்லை.
எனவே, சென்னை லயோலா கல்லூரியில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி பட்டப் படிப்பில் சேர்ந்தேன். ஸ்ரீதர் சார் தான் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு உதவினார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிப்பதற்கு ஆஷா பவுண்டேஷன் கல்வி உதவித் தொகை கிடைத்தது. கல்லூரியில் படிக்கும் போது காலையில் வகுப்பறைகளைத் தூய்மைப்படுத்தம் தன்னார்வலர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 40 ரூபாய் வீதம் கொடுப்பார்கள். அத்துடன் காலையில் டீ வேறு கொடுப்பார்கள். ஒரு மாதம் வேலை செய்தால் 400 ரூபாய் அளவுக்குப் பணம் கிடைக்கும். அந்தப் பணம் எங்களது வேறு செலவுகளுக்கு உதவியாக இருக்கும்.
பள்ளி வரை தமிழ் வழியில் படித்ததால், கல்லூரியில் பிஎஸ்சி படிப்பில் சேர்ந்ததும் ஆங்கிலத்தில் பாடங்களைப் புரிந்து கொள்வதற்கு தடுமாற்றமாக இருந்தது. ஆங்கிலத்தில் பாடங்களை நடத்துவார்கள். நோட்ஸ் எழுதும்போது புரியாத இடங்களில் ஆங்கில வார்த்தைகளைத் தமிழில் எழுதிக் கொள்வேன். அப்புறம் விடுபட்ட ஆங்கில வார்த்தைகளை அந்த இடங்களில் கேட்டு எழுதிக் கொள்வேன். பின்னர் சக மாணவர்களிடம் கேட்டு பாடங்களைப் புரிந்து கொள்வேன்.
மேலும் படிக்க:
தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவர், மறவாய்க்குடி கிராமத்தின் முதல் டாக்டர்!
ஆசிரியர்களிடமும் சந்தேகங்களைக் கேட்பேன். ஆங்கிலம் கற்றுக் கொள்ள கதைப் புத்தகங்களைப்படி என்று ஸ்ரீதர் சார் சொல்வார். நான் கெமிஸ்ட்ரி பாடப்புத்தங்களையே எடுத்துப் படிப்பேன். ஒரே பாடத்துக்கு வெவ்வேறு ஆசிரியர்கள் எழுதியதைப் படித்துப் பார்ப்பேன். இப்படித்தான் எனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன். லயோலா கல்லூரி ஆசிரியர்களும் எங்கள் மீது அக்கறை கொண்டு பாடம் நடத்துவார்கள். கல்லூரி ஆசிரியர்கள் ஜூடித் விஜயா, ஜான் மரிய சேவியர் ஆகியோர் எனக்கு அளித்த ஊக்கத்தை என்றைக்கும் மறக்க முடியாது.
ஸ்ரீதர் சார் மாதிரியும் கலாவதி டீச்சர் மாதிரியும் அற்புதமான, அன்பான மனிதர்களைப் பார்க்க முடியாது. அவர்கள் வீட்டில் தங்களது குழந்தைகள் போல என்னையும் அக்கறையுடன் கவனித்துப் படிக்க வைத்திருக்காவிட்டால், இன்றைய நிலையை நான் எட்டியிருக்க முடியாது
பிஎஸ்சி பட்டப் படிப்பில் 70 சதவீத மதிப்பெண் பெற்ற நான், அங்கேயே எம்எஸ்சி வேதியியல் படித்தேன். 2010ஆம் ஆண்டில் எம்எஸ்சி தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். அத்துடன் மூன்றாவது செமஸ்டர் படிக்கும்போதே சிஎஸ்ஐஆர் நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் பிஎச்டி படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மீண்டும் தேர்வு எழுதி, சிஎஸ்ஐஆர் ஜேஆர்எப் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும்கூட, என்ன காரணத்திலோ எனக்கு அங்கு இடம் கிடைக்கவில்லை.
நான் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பிஎச்டி படிக்கச் சேர்ந்தேன். “Organometallics and Supramolecular Chemistry’ என்ற தலைப்பில் பேராசிரியர் பாலா. மணிமாறன் மேற்பார்வையில் பிஎச்டி ஆய்வைச் செய்தேன். எனக்கு ஸ்கலார்ஷிப் கிடைத்ததால் அப்போது படிப்பதில் பிரச்சினை இல்லை. 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் பிஎச்டி பட்டம் பெற்றேன். ஆனால், அதற்கு முன்னதாகவே 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் கொல்கத்தாவில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் (IISER) கல்வி நிறுவத்தில் நேஷனல் போஸ்ட் டாக்டரல் ஃபெல்லோவாக ஆய்வு செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு பேராசிரியர் ஸ்வாதின் கே. மண்டல் மேற்பார்வையில் “Transition Metal Free Catalysis for organic transformation’ என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டேன். அங்கு இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஒகினாவா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னலாஜி கிராஜுவேட் யுனிவர்சிட்டியில் போஸ்ட் டாக்டரல் ஸ்காலராக பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது.
அங்கு பேராசிரியர் ஜூலியா ஆர். குஸ்னுடினோவா மேற்பார்வையில் “Development of Multimetallic Complexes for Metal-Metal Cooperative Reactions’ என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். இந்தப் பல்கலைக்கழகத்தில் இன்னும் ஓராண்டுக்குப் பணிபுரிவேன். அதையடுத்து, வேறு நாடுகளில் உள்ள ஆய்வகத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள ஆய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஸ்ரீதர் சார் சொல்வார். அது இன்றைக்கும் எனது மனதில் நிற்கிறது.
எனது தம்பி முரளியும் ஸ்ரீதர் சார், கலாவதி டீச்சர் வீட்டில் தான் தங்கிப் படித்தார். அவர் தற்போது எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் டிப்ளமோ படித்துவிட்டு கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஒப்பந்தப் பணியில் வேலை செய்கிறார்.
எந்தப் பிரச்சினை என்றாலும் ஸ்ரீதர் சாரிடம் கொஞ்ச நேரம் பேசினால் போதும். நமக்கு தன்னம்பிக்கை வந்துவிடும். தீர்வைச் சொல்ல மாட்டார். எங்களை யோசிக்க வைப்பார். எங்களது வாழ்க்கையில் ஏற்படும் சின்ன முன்னேற்றத்தைப் பார்த்துக்கூட, எனது பெற்றோர்களைவிட அதிகமாக மகிழ்ச்சி கொள்வார். ஸ்ரீதர் சார் மாதிரியும் கலாவதி டீச்சர் மாதிரியும் அற்புதமான, அன்பான மனிதர்களைப் பார்க்க முடியாது. அவர்கள் வீட்டில் தங்களது குழந்தைகள் போல என்னையும் அக்கறையுடன் கவனித்துப் படிக்க வைத்திருக்காவிட்டால், இன்றைய நிலையை நான் எட்டியிருக்க முடியாது என்று நெஞ்சம் நெகிழ்கிறார் கோவிந்தராஜன்.
Read in : English