Read in : English
நகரமயமாதல் தொடர்பான குழப்பங்களைச் சரிசெய்யவும், வானிலை மாற்றம் தரும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சுற்றுப்புறச் சூழல் சீரழிவைத் தடுக்கவும், வாடகை குறித்த குறைகளைக் களையும் கட்டமைப்பை உருவாக்கவும் நகர, ஊரமைப்புத் திட்டமிடல் சட்டம் மேம்படுத்தப்படவிருக்கிறது. திமுக அரசு அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது.
சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையமும் (சிஎம்டிஏ), நகர, ஊரமைப்புத் திட்டமிடல் இயக்ககமும் (டிடிசிபி) புதிய திட்ட அணுகுமுறைக்கான முன்னுரிமை அம்சங்களைத் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளிடமும், மக்கள்நல அமைப்புகளிடமும் சில நாள்களுக்கு முன்பு கேட்டிருக்கிறது. அகமதாபாத்தின் செப்ட் பல்கலைக்கழகம் இது தொடர்பான விவாதக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
சீர்திருத்தத்திற்கான தொடக்கநிலை கருத்துகள் முன்வைக்கப்படும். பின்பு எல்லாச் சாத்தியங்களையும் உற்றுநோக்கும் வகையில் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். அநேகமாக செப்டம்பருக்குள் வரைவுச் சட்டம் உருவாகிவிடலாம். இந்த ஆலோசனைகளில் உலக வங்கி, சிட்டிசன் அண்ட் கன்ஸ்யூமர் சிவிக் ஆக்ஷன் குரூப் (சிஏஜி), ஜெர்மன் வளர்ச்சி முகமையான ஜிஐஇஜட், உலக வளங்கள் கழகம், மீசி (MEASI) கட்டடக் கலைக் கழகம், ஐடிடிபி ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். நகரமயமாதல் என்னும் அம்சத்தில் முன்னணியில் நிற்கும் தமிழகம் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதற்குப் பரவலாக்கப்பட்ட ஓர் அணுகுமுறையைச் சமீபத்தில் அறிவித்தது.
1971 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு இன்னும் நடைமுறையில் இருக்கும் நகர, ஊரமைப்புத் திட்டமிடல் தொடர்பான பழைய சட்டத்தில் சுற்றுப்புறச்சூழல் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை
மாநில அளவிலான ஒரு ஒட்டுமொத்தத் திட்டத்தின் கீழ் மாவட்ட வானிலைத் திட்டங்களின் மூலமாகக் கொள்கைகளை நிறைவேற்றும் பொறுப்பு அதிகாரிகளாக மாவட்ட ஆட்சியாளர்கள் இருப்பார்கள். ஆனால், 1971 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு இன்னும் நடைமுறையில் இருக்கும் நகர, ஊரமைப்புத் திட்டமிடல் தொடர்பான பழைய சட்டத்தில் சுற்றுப்புறச் சூழல் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அதைப் போல் கழிவு மேலாண்மையைப் பற்றியும், எரிபொருள் ஆற்றலைப் பற்றியும் அந்தச் சட்டம் ஒன்றும் சொல்லவில்லை.மாறாக, அதிக பலன்தரும் இலக்குகளை அடைய அந்தச் சட்டத்தின் நோக்கம் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டது. விதிமீறல்களோடு கட்டப்பட்ட கட்டிடங்களை ஒழுங்குபடுத்த ஒரு ஷரத்தும் அறிமுகப்படுத்தப் பட்டது.
நகர, ஊரமைப்புத் திட்டமிடல் தொடர்பான அந்தச் சட்டத்தின் பிரிவு 113-ஏ இப்படிச் சொல்கிறது: ஒருசில நிலங்களை அல்லது கட்டிடங்களை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் பின்வரும் விதிவிலக்குகள் அளிக்கப்படுகின்றன: (1) இந்தச் சட்டத்திலோ அல்லது வேறெந்தச் சட்டத்திலோ என்ன சொல்லப்பட்டிருந்தாலும், விண்ணப்பதாரர் மனு அளித்திருந்தால், சென்னைப் பெருநகரத் திட்டமிடல் பகுதியில் மார்ச் 31, 2002- அன்றோ அதற்கு முன்போ கட்டப்பட்ட கட்டிடங்களுக்கோ உருவாக்கப்பட்ட நிலங்களுக்கோ ஓர் உத்தரவு மூலம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அதிகாரி சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கலாம்; அதற்காக ஒரு சதுர மீட்டருக்கு ரூ.20,000-க்கு மேல் அல்லாத கட்டணம் வசூலிக்கலாம். சென்னைப் பெருநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தர அளவுகோல்கள் படி வெவ்வேறு கட்டணங்கள் வசூலித்துக்கொள்ளலலாம்.
மேலும் படிக்க:
புவியியல் ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் சென்னையில் என்ன திட்டமிடல் தேவை?
ஜி ஸ்கொயர், அண்ணாமலை: மனை அனுமதி சம்பந்தமான களப் பரிசோதனை
சர்ச்சைக்குரிய இந்த ஒட்டுமொத்த ஷரத்தை எதிர்த்து பல ஆண்டுகளாக நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த ஷரத்தின்படி 1999-ல் கட்டிடங்களை ஒழுங்குபடுத்தும் முதல் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது முற்றுப்பெறவில்லை. ஏனென்றால், பல விண்ணப்பங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இந்த ஷரத்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. பிப்ரவரி 28, 1999-க்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களையும் ஒழுங்குபடுத்தும் செயற்பாட்டுக்கு உட்படுத்தலாம் என்று 2018-ல் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் அரசின் திட்டம் கட்டிட விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் சொன்னது.
திட்டமிடலில் டயர்-2, டயர்-3 மாநகரங்களின் மீது கவனம் குவிக்கப்படுவதில்லை. சென்னையின் பாதசாரிமயமான கொள்கையும், மோட்டார் அல்லாத போக்குவரத்துக் கொள்கையும் நடைமுறைப்படுத்தப்படவே இல்லை
2016-21 காலகட்டத்து அஇஅதிமுக ஆட்சியின்போது, 2018-ல் அரசு தளப் பரப்பளவுக் குறியீட்டை (எஃப்எஸ்ஐ) மாற்றியது. குடியிருப்புக் கட்டிடங்களுக்கும் வணிகக் கட்டிடங்களுக்கும் அந்தக் குறியிடு 2 என்று நிர்ணயம் செய்தது அரசு. பலமாடிக் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு எஃப்எஸ்ஐ 3.5-ஆக உயர்ந்தது; சிறப்புக்கட்டணம் கட்டினால் 3.62-ஆக இருக்கலாம் என்று அரசு சொன்னது.
பிளவுபட்ட கொள்கை
அநேக முகமைகள் இருப்பதாலும், அவற்றை ஒன்றிணைக்க ஒரு கட்டமைப்பு இல்லை என்பதாலும் ஓர் ஒழுங்குமுறையான திட்டமிடல் சாத்தியப்படாமல் போயிற்று.
உலக வங்கி உட்படப் பல பன்னாட்டு நிறுவனங்கள் குடியிருப்பு போன்ற கட்டுமானங்களுக்கு நிதி உதவி செய்யத் தயாராக இருக்கின்றன. சென்னையில் போக்குவரத்துத் துறைக்கு ஜெர்மன் வளர்ச்சி முகமையான ஜிஐஇஜட் உதவிவருகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் நகர, ஊரமைப்புத் திட்டமிடல் சட்டத்தில் இருக்கும் போதாமைகள் வெளிவந்திருக்கின்றன. இந்தச் சட்டத்தில் பருவநிலை மாற்றம், சுற்றுப்புறச்சூழல் தொடர்பான ஷரத்துகள் இல்லை என்பதை அரசுத் துறைகள் சுட்டிக்காட்டியுள்ளன. இப்படியான ஷரத்துகள் இல்லாததால் புதிய திட்டங்களைக் கொண்டுவர முடியவில்லை.
நகர, ஊரமைப்புத் திட்டமிடல் வாரிய உறுப்பினர்களாகப் பெரிய பதவியில் உள்ளவர்களைக் கொண்டுவரும் விஷயத்தில், சுற்றுப்புறச்சூழல், பருவநிலை மாற்றம், வனம் ஆகிய துறைகளுக்கான செயலரை நியமிக்கலாம் என்று தெளிவாகச் சொல்லும் ஷரத்து சட்டத்தில் இல்லை. ஆனால் நுட்பமாகப் பார்த்தால், யாரையும் திட்டமிடும் நோக்கத்திற்காக வாரியத்திற்குள் கொண்டுவரலாம் என்று சட்டம் சொல்கிறது.
சிஎம்டிஏ-டிடிசிபி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிபுணர்கள் சிலர் திட்டமிடல் நடைமுறையில் பொதுமக்கள் ஆலோசனைக்கு இடமில்லை என்பதைச் சுட்டிக்காட்டினர். சொல்லப்போனால், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள் எல்லாம் முடிந்து மக்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் திட்டமிடும் விசயத்தில் ஜனநாயக அணுகுமுறை என்பது மிகவும் அவசியம்.
தனிமனிதர்களாலும், வணிக நிறுவனங்களாலும், அரசியல் செல்வாக்கு மிக்க மதவாதிகளாலும் பொதுவெளியில் உருவாகும் ஆக்ரமிப்புகளைத் தடுக்கும் சட்டங்கள் இருக்கின்றன; ஆனால், அவை கடுமையான முறையில் அமல்படுத்தப்படுவதில்லை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெருநகரத் திட்டமிடல் குழுவில் மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கத் தவறிய மாநில அரசை சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்தது. பிளவுபட்ட கொள்கைகளுக்கும், தீர்மானங்களுக்கும் நடுவில் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்து அவற்றை ஒன்றிணைத்து ஓர் ஒழுங்கைக் கொண்டுவரலாம். சட்டங்கள் இருக்கின்றன. ஆனால்; அவை அமல்படுத்தப்படுகின்றனவா என்பதுதான் கேள்வி.
மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த முறையிலான பொதுப்போக்குவரத்து, பொதுக் கட்டிடங்கள் மற்றும் பொதுவிடங்கள் ஆகியவற்றைப் பற்றிய சட்டம் இருக்கிறது; ஆனால் அது அமல்படுத்தப்படுவதில்லை. கட்டிடங்களில் எரிபொருள் ஆற்றல் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன; ஆனால் அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.கழிவு மேலாண்மை பற்றிய சட்டம் இயங்குவதே இல்லை. கட்டிட விதிமுறை மீறல்களால் தாறுமாறான வளர்ச்சியும், மாசும், நெரிசல்களும் உருவாகியிருக்கின்றன.
இப்போது இருக்கும் நகர, ஊரமைப்புத் திட்டமிடல் சட்டம் மாஸ்டர் பிளான்களையும், நகர வளர்ச்சித் திட்டங்களையும், வெவ்வேறு அளவிலான விவரணைத் திட்டங்களையும் உருவாக்க வேண்டுமென்று சொல்கிறது. ஓர் ஒழுங்கமைப்பிலான வளர்ச்சியை அந்தச் சட்டம் இலக்காகக் கொண்டிருக்கிறது. இப்போது மாநில அரசு இயற்றப்போகும் சட்டம் ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் பிடிக்குள் வராமலிருக்கும் ஓர் ஒழுங்கைச் சாதிக்குமா என்பதுதான் கேள்வி.
Read in : English