Read in : English
தமிழ்நாட்டு ஊடகங்களில் சமீப நாள்களில் அதிகமாக இடம்பெறும் செய்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாவூர் தனியார் பள்ளி மாணவி, 17 வயது ஸ்ரீமதியின் மர்மமான மரணமே. ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் நிறைந்துள்ள சூழலில், அவருடைய பெற்றோர் ஸ்ரீமதியின் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் போராடினர். மாணவி படித்த பள்ளியருகே பெருந்திரளானோர் கூடி போராடினர். அதையொட்டி பெரிய வன்முறை வெடித்தது. இதனால் கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழ் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகத் தொடர்ந்தது.
ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முறையாக நடைபெறவில்லை, அதில் தங்களுக்குச் சந்தேகம் உள்ளது என்ற காரணத்தால் அவருடைய பெற்றோர் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினர். ஆகவே, ஸ்ரீமதியின் உடலை மறு பிரேத பரிசோதனைசெய்ய உத்தரவிடப்பட்டது. 3 வெவ்வேறு மருத்துவர்கள் இந்தப் பரிசோதனையில் ஈடுபடுவார்கள் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து, தங்கள் தரப்பு மருத்துவரும் பிரேத பரிசோதனையில் இடம்பெறக் கோரி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தை நாடினர். ஆனால், உச்சநீதிமன்றம் இது தொடர்பான உயர்நீதிமன்றத்தையே நாடும்படி பணித்தது. ஆகவே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஸ்ரீமதியின் சடலம் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஸ்ரீமதியின் பெற்றோர் தொடர்ந்து சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவந்தனர். ஆனாலும் உயர்நீதிமன்ற உத்தரவின் படி சடலத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்படிச் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் போராடுவது இது ஒன்றும் முதன்முறையல்ல. இது போல் சடலத்தைப் பெற மறுத்துப் போராடிய பல சம்பவங்கள் தமிழ்நாட்டு வரலாற்றில் உள்ளது.
மேலும் படிக்க:
கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையின் பின்னணியில் இருப்பது யார்?
முத்துநகர்ப் படுகொலை பற்றி முத்திரை பதித்த ஆவணப்படம்
2021 ஏப்ரல் 22 அன்று, முத்து மனோ என்னும் 27 வயது தலித் இளைஞன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைத்து கொல்லப்பட்டான். இது தொடர்பாக முத்து மனோவின் தந்தை பாபநாசம் உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரினார். மருத்துவமனையில் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர்கள் போராடினர்.

வழக்கறிஞர் ஜான்சன்
பின்னர் அவர் உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மனுத் தாக்கல் செய்தார். அதில், பணியில் உள்ள நீதிபதி ஒருவர் தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் சிறை அதிகாரிகளை குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் இறுதியாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கி 71 நாள்களுக்குப் பிறகு முத்து மனோவின் சடலத்தைப் பெற்றுக்கொண்டனர்.
இப்படியான மர்மமான முறையில் நிகழும் மரணங்களில் போதெல்லாம் குடும்பத்தினர் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் போராடுவது ஒரு தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.
மற்றொரு சம்பவம், 2016 ஜூலை ஒன்றாம் நாளில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரின் மர்மமான மரணம். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கொலை தொடர்பாகக் கைதான ராம்குமார், சென்னை புழல் சிறையில் மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டான் எனத் தெரிவிக்கப்பட்டது.
ராம்குமாரின் தந்தை பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். தன் மகன் கொலைசெய்யப்பட்டிருப்பதாகவும் முறையான விசாரணை நடத்தப்படாவிட்டால் சடலத்தைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலே கூறப்பட்ட முத்து மனோ வழக்கைக் கையாண்ட வழக்கறிஞர் ஜான்சனிடம் இது தொடர்பாகப் பேசினோம். அப்போது அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் போராடுவது ஒரு போராட்ட வடிவம் என்றார்.
சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் போராடியதில் அடுத்த முக்கியமான உதாரணம் தூக்குக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் சம்பவம். ஸ்டெர்லைட் போராட்டத்தின் நூறாம் நாளன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரின் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர் போராடினர். நீண்ட நாள் போராட்டத்தின் பின்னர், வேலை வாய்ப்பு, இழப்பீடு போன்ற உத்திரவாதத்தை அரசு வழங்கிய பிறகே சடலத்தைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். அதிலும் ஒரு குடும்பத்தினர் இறுதிவரை சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
இப்படி சடலத்தைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பதன் காரணம் என்ன?
மேலே கூறப்பட்ட முத்து மனோ வழக்கைக் கையாண்ட வழக்கறிஞர் ஜான்சனிடம் இது தொடர்பாகப் பேசினோம். அப்போது அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் போராடுவது ஒரு போராட்ட வடிவம் என்றார். மர்மமான முறையில் நிகழும் ஒரு மரணத்தின் மர்மம் விலகி, மரணமடைந்தவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே இப்படியான போராட்டத்தின் அடிப்படை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியபோது, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தங்கள் தரப்பு மருத்துவரும் மறு பிரேத பரிசோதனையில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை எனில் முத்து மனோ விஷயத்தில் அவரைச் சிறையில் அடைத்த சிறை அதிகாரிகளைக் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை என்றார்.
ஏழை எளியவர்களும் அதிகாரமற்றவர்களும் குரலற்றவர்களும், தங்களைச் சார்ந்த ஒருவருக்கு நிகழ்ந்த மரணத்தின் விசாரணை தொடர்பாகத் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் வாய்ப்பாகச் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். மேலும், நீதிக்கான போராட்டத்தில் அவர்கள் கைக்கு எட்டும் குறைந்தபட்ச வாய்ப்பும் அதுதானே?
Read in : English