Read in : English

நீர் என்னும் நீலத்தங்கத்தை ஆகாஷ் கங்கா ட்ரஸ்ட் ஒரு லிட்டர் புட்டியில் அடைத்து உள்ளூர்க் கடைகள் மூலம் ரூ. 20-க்கு விற்கிறது. இலாப நோக்கற்ற இந்த அமைப்பு, சேகர் ராகவன் தலைமையில் மழைநீர் சேகரிப்பு சேகரிப்பதையும் சேமித்து வைப்பதையும் மக்களிடையே பரப்பும் பணியை பல வருடங்களாகவே செய்துவருகிறது. சென்னை அடையார் காந்தி நகரில் இருக்கும் அதன் மழை மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பெய்யும் மழையைச் சேகரித்துச் சேமிக்கும் உத்திகளை மக்கள் கற்றுக் கொள்கிறார்கள். கற்றதைப் பின்பற்றி மழைநீரை அறுவடை செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

மழைதரும் இலாபத்தை இரட்டிப்பாக்கும் வாய்ப்பைக் கொண்ட கூட்டு மழைநீர் சேகரிப்பு முறையை டாக்டர் ராகவனும் ஆகாஷ் கங்கா ட்ரஸ்டில் இருக்கும் அவரது சகாக்களும் நடைமுறைப் படுத்துவதில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள். மழைக்காலங்களில் வெள்ளம் சீறிப்பாயக்கூடிய பகுதிகளில் அவர்கள் 40 மழைநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், இதனால் ஏற்படும் பலன் இரண்டு விதமாக இருக்கும்: முதலில் வெள்ள அபாயம் தவிர்க்கப்படும்; இரண்டாவது நிலத்தடி நீர்மட்டம் உயரும்; அதனால் அந்தப் பகுதி மக்களுக்கு நீர்த்தட்டுப்பாடு ஏற்படாது.

மழைநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகள் சென்னையில் கோட்டூர் கார்டன்ஸ், எக்மோர், வள்ளுவர் கோட்டம் (புஷ்பா நகர் சேரி), மைலாப்பூர் பெலாத்தோப்பு (பலாத்தோப்பு) ஆகியவை உட்பட மொத்தம் 14 இடங்களில் உருவாக்கப்படுகின்றன என்று டாக்டர் ராகவன் இன்மதியிடம் கூறினார். ஒவ்வொரு கட்டமைப்புக்கும் ஆகும் செலவு ரூ.23,000. விப்ரோ நிறுவனமும், ரோட்டரி இயக்கமும் நிதியுதவி செய்திருக்கின்றன. மேலும் 14 இடங்களில் மழைச்சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கத் தேவைப்படும் நிதி கைவசம் இருக்கிறது என்றார் அவர்.

மிகத்தாழ்வான நிலத்தடி நீர்மட்டமும், வெள்ள அபாயமும் உள்ள ஏரியாக்களில் மழைநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்; 28 இடங்கள் தவிர, மேலும் 12 இடங்களில் மழைநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கத் தேவைப்படும் நிதியில் பாதி இருக்கிறது என்றார் டாக்டர் ராகவன். புதிதாக நன்கொடை கொடுப்பவர்கள் அல்லது மக்கள் மொத்த செலவில் 50 விழுக்காடு கொடுக்கலாம்.

மாநகரத்திலிருந்து வெள்ளநீரை வெளியேற்றி கடலுக்குள் கலக்கச் செய்வது அற்புதமான ஒரு வளத்தை வீணடிப்பதாகும். அதன் ஒருபாதியை நிலத்தடி நீர்க்கட்டமைப்பில் ஒழுகவிட்டுச் சேர்த்து விடலாம். மிச்ச நீரை செயற்கைச் சதுப்புநிலங்கள், ஏரிகள் போன்ற பூமியின் மேற்பரப்பில் சேமித்து வைக்கலாம்

நீர்வளம் புதுப்பிக்கக்கூடிய (ரீசார்ஜ்) கிணறுகள் மூன்றடி விட்டமும் (வட்டத்தின் குறுக்களவு), 15 அடி ஆழமும் கொண்டவை. வலுவூட்டப்பட்ட சிமிண்ட் கான்கிரீட்டில் (ஆர்சிசி) தயாரிக்கப்பட்ட துளைகள் கொண்ட மூடிகளால் மூடப்பட்டு அந்தக் கிணறுகள் வெறுமையாக விட்டு வைக்கப்படுகின்றன.

“மழைநீர்ச் சேகரிப்பு கட்டமைப்புகள் வேண்டும் என்றால் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பொதுவெளிகளை, மின்கம்பிகள், மெட்ரோவாட்டர், கழிவுநீர்க் குழாய்கள் பதிக்கப்படாத இடங்களைக் குடியிருப்புவாசிகள் சொல்லலாம்,” என்றொரு விதியை வைத்திருக்கிறது ஆகாஷ் கங்காத் திட்டம். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் உதவிப் பொறியாளர்களின் உதவியும் வேண்டும்.

மேலும் படிக்க:

தமிழகம் நீர்மிகை மாநிலமாகும் சாத்தியம் அதிகம்

சென்னை வெள்ளம்: நிபுணர் குழு பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை அரசின் செயற்பாட்டில் இருக்கிறதா?

நீரை வெளியேற்றாமல் ஏன் சேகரிக்கக்கூடாது?
நீரைச் சேகரித்துப் பூமிக்குள் ஓடவிட்டு நீலத்தடி நீரோட்டத்தைக் மேம்படுத்தும் இந்த ஆகாஷ் கங்கா மாடல் தற்போது பின்பற்றப்படும் வெள்ளநீரை வடியவிடும் அணுகுமுறையிலிருந்து வேறுபட்டது.

புஷ்பா நகர், நுங்கம்பாக்கம், சென்னை

மாநகரத்திலிருந்து வெள்ளநீரை வெளியேற்றி கடலுக்குள் கலக்கச் செய்வது அற்புதமான ஒரு வளத்தை வீணடிப்பதாகும் என்கிறார் டாக்டர் ராகவன். அதன் ஒருபாதியை நிலத்தடி நீர்க்கட்டமைப்பில் ஒழுகவிட்டுச் சேர்த்து விடலாம். மிச்ச நீரை செயற்கைச் சதுப்புநிலங்கள், ஏரிகள் போன்ற பூமியின் மேற்பரப்பில் சேமித்து வைக்கலாம். பின்பு எஞ்சும் மிச்ச நீரை வேண்டுமானால் வெளியேற்றலாம். சென்னையின் தட்டையான, கடல் மட்டத்து நிலப்பரப்பில் நீரைச் சேமிக்கும் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆண்டுக்கு 1,000 மிமீ பெய்யும் மழைநீர் (தற்காலத்தில் இது சுமார் 1,4000 மிமீ-யாக உயர்ந்திருக்கிறது) எங்கே போய்ச் சேரும் என்ற சிந்தனையே இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் நீர்ச்சேமிப்புக் கட்டமைப்புகள் அவை. 2021-ல் நடந்தது போன்று ஒருசில மணி நேரத்திலே 20 செமீ மழை பெய்யக்கூடிய அளவுக்குப் பருவகாலமுறை மாறியிருப்பதால், ஏராளமான நீரைச் சேமித்து வைப்பது ஆகப்பெரும் சவாலாகி விட்டது.

பெருநகரச் சென்னை மாநகராட்சி மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் கட்டியிருக்கும் புதிய வெள்ளநீர் வடிகால் பின்னல்கள் எவ்வளவு நீரைக் கையாளக்கூடிய திறன் கொண்டவை என்பது பற்றிய போதுமான தெளிவு இல்லை. இந்தப் பிரச்சினையைப் பற்றிய திருப்புகழ் குழுவின் அறிக்கையையும் மாநில அரசு இன்னும் வெளியிடவில்லை. பெருங்கொண்ட அளவிலான நீரை அரசு கால்வாய்களுக்குள்ளும், நதிகளுக்குள்ளும் இறக்கிவிட்டு முடிவில் கடலுக்குள் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுமா?

’சுயநலமாக’ இருந்து மழைநீரை அறுவடை செய்யுங்கள்
சமீப ஆண்டுகளாக ஈரத்தை உறிஞ்சியெடுக்கும் எல் நினோ விளைவு இந்தியாவில் இல்லை; மேலும் அபரிமிதமாகவே மழை பெய்கிறது. அதனால் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் மழைநீர்ச் சேகரிப்பில் மக்களின் ஆர்வம் கணிசமாகவே குறைந்து போனது. 2021-ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் சென்னையைப் பலமான மழை தாக்கியபோது, நிலத்தடி நீர்மட்டம் நன்றாகவே உயர்ந்தது. அதனால் பல அடுக்ககங்களில் தரைமட்டத்து குடியிருப்புகளில் பூமிக்கசிவு ஏற்பட்டது. குறிப்பாக நீர் கடந்து செல்வதற்கு ஏதுவான வழிப்பாதை இல்லாத பகுதிகளில் இப்படி நிகழ்ந்திருக்கிறது.

”கிடந்தால் பட்டினி; உண்டால் விருந்து” – இதுதான் சென்னையில் நீரின் நிலை. சில ஆண்டுகளில் அபரிமிதமாகக் கிட்டும் நீர் வறட்சிக் காலங்களில் சுத்தமாகக் கிட்டுவதில்லை. இதற்கு ஒரே தீர்வு, புதிய நகர்ப்புற சதுப்புநிலங்கள், ஏரிகள், திறந்தநிலைக் கிணறுகள் போன்ற மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு நல்ல ஆண்டுகளில் பெய்யும் அபரிமிதமான மழைநீரைச் சேகரித்துக் கொள்வதுதான். பருவகாலங்களில் நதிகள் பொங்கிவழியும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருக்கும் நீர்த்தேக்கங்களை உள்ளடக்கிய ஓர் ஊடாடுக் கட்டமைப்பில் சென்னையின் நீர்த்தேக்கங்களும், ஏரிகளும் பெரும் பங்கு வகிக்கின்றன.

மந்தைவெளி திருவீதி அம்மன் கோயில் தெருவில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு

கோவிட்-19 பெருந்தொற்று வருவதற்கு முன்புவரை நீரை நிலத்தில் விடுவதற்கும், சேமிப்புக்குமான செயற்பாடுகள் மும்முரமாகவே இருந்தன. நிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம் கிட்டிய நிதிகளைப் பயன்படுத்தி ஆகாஷ் கங்கா ட்ரஸ்ட் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், சில மருத்துவமனைகளிலும் சுமார் 60 மழைநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளைக் கட்டியிருக்கிறது. ஏசியன் பெயிண்ட்ஸ், காம்ஸ், கிராம்ப்டன், டைட்டன், விஏ டெக் வாபாக் மற்றும் ரோட்டரி சங்கம் ஆகிய அமைப்புகள் நிதியுதவி செய்தன.

2021 வெள்ளத்திற்குப் பின்பு, அவசர அவசரமாகப் பல ஏரியாக்களில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய வடிகால்களின் கட்டுமான வேலைகளால், குடிநீரைக் கொண்டுவரவும், கழிவுநீரைக் கடத்திச் செல்லவும் ஏற்கனவே பதித்திருந்த மெட்ரோ வாட்டர்க் குழாய்கள் சேதப்பட்டுப் போனதை அந்த ஏரியாக்களில் வசிப்பவர்கள் கண்டிருக்கின்றனர். கட்டுமான நிலையில் இருக்கும் சில வடிகால் குழாய்களில் கழிவுநீர் நிறைந்து வழியும் அவலத்தைச் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

”கிடந்தால் பட்டினி; உண்டால் விருந்து” – இதுதான் சென்னையில் நீரின் நிலை. சில ஆண்டுகளில் அபரிமிதமாகக் கிட்டும் நீர் வறட்சிக் காலங்களில் சுத்தமாகக் கிட்டுவதில்லை

கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் சாதகமான மண்வளத்தால் இயற்கையாகவே நீர் ஒழுகி நிலத்தடியில் போய்ச் சேருகிறது. அந்தப் பகுதிகளில் தேவையில்லாமல் வடிகால் கட்டமைப்பிற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால் நன்னீர் நிலத்தடியில் போய்ச் சேர்வது தடுக்கப்படுகிறது. மேலும் பலபேர் தங்கள் வசிப்பிடங்களைச் சுற்றி காங்கிரீட்டுகளால் நிரப்பியிருக்கிறார்கள். அதனால் கூரைகளில் விழும் மழைநீர் கீழே ஒழுகுவது தடுக்கப்படுகிறது. அந்த மாதிரியான காங்கிரீட் பகுதிகளில் நீர் ஒழுகி நிலத்தடிக்குப் போகும் வண்ணம் குழிகள் தோண்டலாம்.

வெள்ளவடிகால் கட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்கிய பெருநகரச் சென்னை மாநகராட்சி மாநகரத்தில் 50 பூங்காக்களை “நீருறிஞ்சிப் பூங்காக்களாக” மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறது. மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குள் கொண்டு செல்லும் பூங்காக்கள் அவை. ஆனால் அதே சமயம், வெள்ளவடிகால் குழாய்களிலிருந்து கழிவுநீர் வெளியேறி நிலத்தடிநீர்க் கட்டமைப்பைக்குள் போய்ச் சேர்வதை உள்ளாட்சி அமைப்பு தடுக்க வேண்டும் என்று குடியிருப்போர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

இனி எதிர்காலத்தில் என்ன நடக்கும்? வறட்சியான ஆண்டு வருவது தவிர்க்க முடியாதது. அப்போது வெள்ளவடிகால்கள் மீதிருந்த கவனம், நீரை நிலத்தடிக்கு அனுப்பவதிலும், நிலப்பரப்பு நீரைச் சேகரிப்பதிலும் மடைமாற்றம் செய்யப்படும். உலக நீர் உரிமைகளின் ஆதரவாளர் மெளடே பார்லோ தனது புத்தகத்தில் (நீலத் தங்கமும் நீல ஒப்பந்தமும்) சொன்னது போல, நவீன சுத்திகரிப்புத் தொழில்நுட்பங்களை விட, பாரம்பரிய நீர்ச்சேகரிப்பு கட்டமைப்புகள் மிகவும் சிறந்தவை. இயற்கையான மழைநீரைப் பேணிக் காத்துச் சேகரித்துக் கொண்டால் மக்கள் நலமாக இருப்பார்கள். அப்படிச் செய்வது நீர் மீதான மக்களின் உரிமைகளைப் பேணிக் காப்பதாகும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival