Read in : English
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) அமரரான பின்பு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறுவப்பட்ட சிலைகள் ஒரே மாதிரியான பாவனையோடு உருவாக்கப்பட்டவை. ஒரேமாதிரியான பிரதிமையை நகலெடுக்கும் சிற்பிகள் நாளடைவில் அந்தச் சித்திரத்தின் முகமாகவே மாறிவிடுகிறார்கள். இந்த அனுபவம் பல கலைஞர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது.
புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் சந்ரு என்று அழைக்கப்படும் ஜி.சந்திரசேகரனிடம், ஆறடி உயர பாரதியார் சிலையை வடிவமைக்கும்படி கேட்டுக்கொண்டபோது, முதலில் அவர் செய்ய விரும்பியது வழிவழியாக உருவாக்கி வைத்திருந்த வழமையான பாரதியார் படிமத்தை உடைக்க வேண்டும் என்பதுதான். இன்னும் ஒருசில மாதங்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்படவிருக்கின்ற பாரதியார் சிலையை வடித்தெடுக்க சந்ருவுக்கு கிட்டத்தட்ட ஓராண்டானது.
அந்தக் காலதாமதத்திற்குக் காரணம் இருந்தது. ”சிலையாகவும் சித்திரமாகவும் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெரும்புகழ் பெற்றதோர் ஆளுமையின் பாரம்பரிய படிமத்தை மாற்றுவது எளிதானது அல்ல. அப்படி மாற்றுவதற்கான காரணத்தைத் தர்க்கரீதியாகவும் அழகியல்ரீதியாகவும் நியாயப்படுத்தியாக வேண்டும். அதேசமயம் அது என் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடாது. பாரதியை ஒரு கவிஞனாக, ஒரு சுதந்திரப் போராளியாக, ஒரு சமூக செயற்பாட்டாளராக, ஒரு மனிதனாக நான் ஆழமாகவே ஆராய்ந்திருக்கிறேன்,” என்றார் சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்ரு.
கவிஞர் பாரதியார், சமூகப் போராளி பாரதியிடமிருந்து வேறுபட்டவர். ஒரு மனிதனாக இன்னொரு பாரதியைப் பார்க்கலாம். இந்த மூன்று அம்சங்களும் நான் வடிக்கப் போகும் பாரதியார் சிலையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்
மேலும் படிக்க:
இந்தியாவின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளரான பள்ளி ஆசிரியர்!
உலகிலேயே மிகப் பெரிய 21 அடி உயர சுடுமண் சிற்பத்தை உருவாக்கிய கிராமியக் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது!
பாரதி உலகத்திற்குள் ஆழமாக செல்ல செல்ல அந்தக் கவிஞன் சம்பந்தப்பட்ட நிஜங்கள் சந்துருவுக்குப் புரிந்தது. “ஒரு மனிதனின் புகைப்படத்தை என்னிடம் கொடுத்து ஒரு சிற்பம் வடிக்கச் சொன்னால், நான் எளிதாக அதைச் செய்துவிடுவேன். ஆனால் பாரதியார் விசயம் வேறு. கவிஞர் பாரதியார், சமூகப் போராளி பாரதியிடமிருந்து வேறுபட்டவர். ஒரு மனிதனாக இன்னொரு பாரதியைப் பார்க்கலாம். இந்த மூன்று அம்சங்களும் நான் வடிக்கப் போகும் சுப்பிரமணிய பாரதி சிலையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்,” என்றார் அவர்.
பாரதியின் கவிதைகளைக் கேட்டு வளர்ந்தவர்தான் சந்ரு. ஆனால் பாரதியின் வழமையான சிலை மரபை மீறி புதியதொரு சிலையை வடித்தெடுக்க அது போதாது என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால் நூலகங்களிலிருந்தும் பழைய ஸ்டூடியோக்களிலிருந்தும் அவர் பாரதியார் உருவச் சித்திரங்களையும் புகைப்படங்களையும் சேகரிக்க ஆரம்பித்தார். “பாரதியார் மெல்லிய ஒடிசலான தேகம் கொண்டவர். கால்கள் மெலிவானவை.
ஒரு திரைப்படத்தில் பாரதி வேடமேற்று நடிப்பதற்காக, உடல் எடையைக் குறைக்கும்படி சிவாஜி கணேசனை கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அவர் அந்த நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், அவரால் முடியவில்லை. எந்த அடைமொழிகளுக்கும் மிகைக்கூற்றுகளுக்கும் அடங்காத ஒரு நிஜமான பாரதியார் உருவத்தை உருவாக்குவதுதான் என் திட்டமாக இருந்தது,” என்றார் சந்ரு.
மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகிய அமரத்துவம் பெற்ற தலைவர்களின் சிலைகளை வடித்தவர் அவர். அவரால் உருவாக்கப்பட்டு திருநெல்வேலியில் நிறுவப்பட்ட ரஷ்யாவின் புரட்சித் தலைவர் விளாடிமிர் லெனினின் உயிர்த்துடிப்பான சிலை ஓர் அற்புதக் கலைப்படைப்பு.
2019-இல் தொல்லியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவனின் (1930-2018) மார்பளவுச் சிலையை வெண்கலத்தில் வடித்தார் சந்ரு. தமிழ்-பிராமி எழுத்துகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு விளக்கம் தந்ததற்காகவும், சிந்துசமவெளி நாகரிகத்தின் முத்திரைகளுக்கும் குறியீடுகளுக்கும் வியாக்கியானம் கொடுத்ததற்காகவும் ஐராவதம் மகாதேவன் மீது சந்துரு பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அந்த மரியாதையின் வெளிப்பாடுதான் அந்தக் கல்வெட்டு ஆராய்ச்சியாளரின் சிலை.
சில ஆரம்பகால சிலைகளில் பாரதியின் கையில் கோலொன்று இருப்பதைக் கண்டேன். ஆனால் நிஜத்தில் பாரதியார் கம்பு பயன்படுத்தியதில்லை. கம்பேந்தி நிற்கும் பாரதியார் ஃபோட்டோ தற்செயலானது
பல வருடங்களில் மற்ற சிற்பிகள் வடித்த பாரதியின் சிலைகளையும் சந்ரு ஆராய்ச்சி செய்தார். ”சில ஆரம்பகால சிலைகளில் பாரதியின் கையில் கோலொன்று இருப்பதைக் கண்டேன். ஆனால் நிஜத்தில் பாரதியார் கம்பு பயன்படுத்தியதில்லை. கம்பேந்தி நிற்கும் பாரதியார் ஃபோட்டோ தற்செயலானது. ஒருநாள் ஸ்டூடியோவுக்குள் நுழைந்த பாரதியார் மூலையில் கிடந்த கம்பை எடுத்து கையில் வைத்தவண்ணம் போஸ் கொடுத்திருக்கிறார்,” என்றார் சந்ரு. என்றாலும் தான் வடித்த பாரதியார் சிலையில் அந்தக் கம்பை வைக்க விரும்பினார் அவர். “பாரதியாரின் ஆளுமைக்கு ஒரு புதிய பரிமாணம் தரவே நான் கம்பைப் பயன்படுத்தினேன்.
கவிஞன் என்ற அம்சத்தையும், சமூகப் போராளி என்ற அம்சத்தையும் சிலையில் வடித்துவிட்டு, பாரதியார் ஆளுமையின் இன்னொரு அம்சத்தை வெளிப்படுத்த விரும்பினேன். கையில் கோலேந்தி அவர் நம்மைக் காப்பது போன்ற ஓர் அம்சம் அது. மொத்தத்தில் இதுதான் முழுமையான பாரதியார் நமக்கு,” என்றார் அவர்.
முதலில் மினியேச்சர் வடிவத்தை சந்ரு உருவாக்கிய போது, கம்பு சரியாகத் தெரியவில்லை. “ உடனே கம்பை பாரதி ஏந்திய கோணத்தை நான் மாற்றினேன். இல்லாவிட்டால் நிஜ உருவம் போன்ற அந்தச் சிலையில் கம்பு கண்ணுக்குத் தென்படாமல் போய்விடும்,” என்றார் அவர்.
தமிழர்களின் சமூக, கலாச்சார வாழ்க்கையை மேம்படுத்திய 600 சமூக சீர்திருத்தத் தலைவர்கள், அறிஞர்கள், சமூகப்போராளிகள் ஆகியோர்களின் மார்பளவுச் சிலைகளைக் கொண்ட ஒரு திறந்தவெளி அருங்காட்சியகத்தை உருவாக்கும் பணியில் 2020-லிருந்து சந்ரு ஈடுபட்டிருக்கிறார். ”குருவனம்” என்றழைக்கப்படும் அந்த அருங்காட்சியகம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் நான்கரை ஏக்கர் நிலத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
Read in : English