Read in : English
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் மீது பொய் வழக்குத் தொடரப்பட்டு அதிலிருந்து மீண்ட உண்மைச் சம்பவங்களை வைத்து ராக்கெட்ரி: தி நம்பி விளைவு என்ற திரைப்படத்தைத் தந்திருக்கிறார் மாதவன். உண்மைச் சம்பவங்களைத் திரைப்படமாக எடுப்பது சுலபமான காரியமல்ல. ஏனென்றால், ஒரு நிகழ்வைப் பொறுத்தவரை தத்தமது குணாதிசயங்களுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் இருக்கும்.
அவற்றை ஒன்றிணைத்து, பறவைப் பார்வையில் ‘இதுதான் நிகழ்ந்தது’ என்று ஒரு வாழ்க்கையை முன்வைப்பது கடினம். அதுவும், நாட்டுக்கு துரோகம் செய்தவர் என்ற அவச்சொல்லுக்கு ஆளாகி மீண்டவரின் கதையைக் கூறுவதில் எத்தனை பிரச்சினைகள் இருக்கும்? அத்தனையையும் லாவகமாகத் தாண்டி ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’ திரைப்படத்தைத் தந்திருக்கிறார் மாதவன். ஆம், ‘அலைபாயுதே’ படத்தின் மூலமாக அறிமுகமாகி இன்னும் தமிழ் ரசிகர்கள் மனதில் ‘சாக்லேட் பாய்’ ஆகவே நீடித்துக் கொண்டிருக்கும் மேடியே இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர். இதுவே, இப்படத்தின் மீது கவனம் குவியக் காரணம்.
இன்னொரு புறமிருப்பது, இக்கதையின் மையப்பாத்திரமான விஞ்ஞானி நம்பி நாராயணன். 1994ஆம் ஆண்டு இஸ்ரோ ரகசியங்களை மாலத்தீவைச் சேர்ந்த பெண்ணிடம் கொடுத்து பாகிஸ்தானுக்கு கடத்தியவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது முன்வைக்கப்பட்டது. விரைவில் இஸ்ரோவின் தலைவர் ஆகக்கூடியவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்தவரின் வாழ்க்கையை, இந்தக் குற்றச்சாட்டு தலைகீழாகப் புரட்டிப்போட்டது.
அவரது அறிவியல் அர்ப்பணிப்பை மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரின் அன்றாட வாழ்வையும் அடியோடு சிதைத்தது. ஆனால், சில ஆண்டுகள் கழித்து நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். அப்போது, அவர் அடைந்த ஆத்திரமும் வேதனையும் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? ‘தி ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படம் அதனைச் சரியாகப் பிரதிபலித்திருக்கிறதா?
அலைபாயுதே’ படத்தின் மூலமாக அறிமுகமாகி இன்னும் தமிழ் ரசிகர்கள் மனதில் ‘சாக்லேட் பாய்’ ஆகவே நீடித்துக் கொண்டிருக்கும் மேடியே இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர்
திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் தும்பா ராக்கெட் ஏவுதள மையத்தில் பணியாற்றியவர் நம்பி. விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், ஏபிஜே அப்துல்கலாம் உட்பட முன்னணி விஞ்ஞானிகளோடு பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று படிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டுகிறது.
மேலும் படிக்க: விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்: கொண்டாடச் செய்யும் இளையராஜா இசை! 83: தமிழர்களாகிய நாங்கள் எல்லோரும் ஸ்ரீகாந்துகள்தான்!
திட எரிபொருள் குறித்த ஆய்வுக்காக அங்கு செல்லும் நம்பிக்கு திரவ எரிபொருள் மூலமாக ராக்கெட் இயக்க வேண்டுமென்பது ஒரே வேட்கை. அந்த ஆசையை நிறைவேற்றும்பொருட்டு, இத்தாலிய பேராசிரியரான பேரியின் வீட்டுக்கே சென்று மாணவராகச் சேர்கிறார். மூன்றாண்டு படிப்பை ஒரே ஆண்டில் முடிக்கிறார். உடனடியாக, நாசாவில் சேரும் வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுதலித்து இந்தியா திரும்புகிறார்.
அதன்பிறகு திரவ எரிபொருளைக் கொண்டு ராக்கெட் இயங்கும் விதத்தைக் கண்டறிவதற்காக, பிரான்ஸ் நாட்டுக்கு 52 இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் செல்கிறார். அவர்களது துணையுடன், அங்குள்ள விண்கலத்தை இயக்கும் முறையை அங்குலம் அங்குலமாக அறிந்துகொள்கிறார். அதன் தொடர்ச்சியாக இந்திய விண்கலத் துறையின் அடிநாதமாக விளங்கும் விகாஸ் என்ஜினை உருவாக்குகிறார். சோவியத் ரஷ்யாவில் இருந்து கிரையோஜெனிக் என்ஜின்கள் நான்கினை வாங்கி, அவற்றை அமெரிக்காவின் கண்காணிப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு கொண்டுவருகிறார். இந்தியாவின் இஸ்ரோவை ஒரு வர்த்தகமயமான செயற்கைக்கோள் ஏவும் நிலையமாக மாற்றுவதே அவரது நோக்கம். இவை எல்லாமே ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’ படத்தில் இடம்பெற்ற சம்பவங்கள்.
பணிக்காலம் முழுவதும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில சாகசங்களை மேற்கொண்ட ஒரு இந்திய விஞ்ஞானி எவ்வாறு சிலரது குயுக்திகளால் பொதுவெளியில் அவமானத்திற்கு உள்ளானார் என்பதே இத்திரைக்கதையின் மையம்
நம்பி நாராயணன் கேரள போலீசாரால் கைது செய்யப்படுவதும் இவற்றோடு சேர்வது, இப்படத்தின் திரைக்கதையை ஒரு வடிவத்திற்குள் அடக்குகிறது. ஆம், இது நம்பி நாராயணனின் முழுமையான வாழ்க்கை வரலாறோ அல்லது அவரது ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பினை குறித்த திரைப்படமோ அல்ல. பணிக்காலம் முழுவதும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில சாகசங்களை மேற்கொண்ட ஒரு இந்திய விஞ்ஞானி எவ்வாறு சிலரது குயுக்திகளால் பொதுவெளியில் அவமானத்திற்கு உள்ளானார் என்பதே இத்திரைக்கதையின் மையம்.
அப்படிப் பார்த்தால், பத்திரிகைகளில் நாம் படித்த, தெரிந்துகொண்ட செய்திகளை மீறி, இப்படத்தில் நமக்குத் தெரியாத பல விஷயங்களும் இடம்பிடித்திருக்கின்றன. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியது தொடங்கி தன் மீதான வழக்கு விசாரணையில் தீர்ப்பு வெளியானது வரை, அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தன்னைக் கண்காணித்து வருவதாக நம்பி உணர்வதும் அவற்றில் ஒன்று.
நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டபோதும், அவரை பாகிஸ்தான் ஒற்றர் என்று குற்றம்சாட்டி வழக்கு விசாரணை நடைபெற்றபோதும், இந்நிகழ்வுக்குப் பின்னால் அமெரிக்க உளவு அமைப்புகளின் சதி இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’ திரைப்படம் அதனை நேரடியான காட்சிகள் வழியாகவோ, வசனங்களாகவோ வெளிப்படுத்தாவிட்டாலும், அமெரிக்காவின் கை இதன் பின்னணியில் இருப்பதை ‘தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பாணி’யில் சொல்கிறது.
நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டு, கேரள போலீசாரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு, அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 50 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டார். மரியம் என்ற மாலத்தீவு பெண்ணுடன் அவருக்குத் தொடர்பிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இவையெல்லாம் அவரது புகழைக் கெடுத்தன என்று சொல்வதைவிட, அவர் மீது சமூகம் அவமானங்களை வாரியிறைக்க வழி அமைத்தன என்று சொல்வதே சரி. ‘ராக்கெட்ரி’ படத்தின் .பின்பாதியில் அதுவே மையப்படுத்தப்படுகிறது.
பாலில் கலந்த தண்ணீர்போல, மீட்கவே இயலாத நிலைக்கு அவரது வாழ்க்கை ஆளானதையும் சொல்கிறது. நம்பியும் அவரது குடும்பத்தினரும் இழந்த மரியாதையை எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது. ஆனால், இந்த நிலைமை இன்னொருவருக்கு வரக்கூடாது என்பதுடன் படம் முடிவடைகிறது. ராக்கெட்ரி படத்தை மாதவன் உருவாக்கியிருப்பதற்கான காரணமாகவும் அதுவே விளங்குகிறது.
வெறுமனே நம்பி நாராயணன் என்ற மனிதனின் நாயகத்தனத்தை மெச்சாமல், அவரை சக பணியாளர்கள் எப்படிப் பார்க்கின்றனர் என்பதையும் காண்பித்திருக்கிறார் மாதவன். வெளிநாட்டில் தன்னை நோக்கி வரும் பெண்ணிடம் தனக்குத் திருமணமாகிவிட்டதை உணர்த்துகிறார்.’நான் தான் உங்களது இந்தியக் கணவன்’ என்று சொல்லி நோய்வாய்ப்பாட்டிருக்கும் பேராசிரியரின் மனைவியைச் சிரிக்க வைக்கிறார். மகன், மகள், மருமகன் முன்பாகவே ‘இந்த வயசுலயும் நடுவீட்டுல இருந்து ராக்கெட் விடுவண்டா’ என்று ‘அசைவ’ ஜோக் அடிக்கிறார்.
1998 பொக்ரான் அணுகுண்டு சோதனை போலவே, 1991இல் அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு கிரையோஜெனிக் என்ஜின் உபகரணங்களை கொண்டு வருகிறார் நம்பி. தன்னை நம்பி வந்த ஒரு பணியாளரிடம், அவரது 3 வயது குழந்தை மரணமடைந்த விஷயத்தைச் சொல்லாமல் மறைக்கிறார். இவ்வளவு ஏன், ராக்கெட் தந்திரங்களை கற்றுக்கொள்வதற்காக 52 விஞ்ஞானிகள் குழுவுடன் ரகசிய ஆபரேஷனில் நம்பி இறங்குவதும் கூட ஒருவகை குயுக்திதான்.
இவையனைத்துமே நம்பியை வெறுமனே புத்திசாலியாகவோ, அறிவாளியாகவோ, தன் வேலையைச் செய்யும் அசட்டு விஞ்ஞானியாகவோ காட்டாமல், ஜேம்ஸ்பாண்ட் ரக சாகசக்காரராகவே காட்டுகின்றன. ஆனாலும், ‘திறமைக்குதான் சார் சம்பளம். திமிர் ப்ரீ’ என்று இஸ்ரோ தலைவர் விக்ரம் சாராபாயிடம் தெனாவெட்டாக சொன்னவர், பின்னாளில் தன்னைச் சுற்றியிருக்கும் மக்களின் அருவெருப்பான பார்வைகளுக்கு இலக்காகிறார். இவையனைத்தையும் பிரதிபலிக்கும் வாய்ப்பு மாதவனுக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு நடிகராகப் பார்த்தால், ‘இறுதிச்சுற்று’க்கு பிறகு இது பெயர் சொல்லும் படம் தான். போலவே, ‘நான் ஒரு நல்ல கணவனாகவோ அப்பாவாகவோ இருக்கவில்லை’ என்று சிம்ரனிடம் மாதவன் மன்னிப்பு கேட்குமிடம், நம்பியின் குணாதிசயத்தில் இன்னும் எத்தனை அடுக்குகள் இருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பும்.
ஒரு இயக்குநராகப் பார்த்தால், தான் பணியாற்றிய பல ‘கிளாசிக்’ படைப்புகளில் பெற்ற அனுபவத்தை இப்படத்தில் கொட்டியிருக்கிறார் மாதவன். அதுவே, திரைக்கதையில் மிகசுவாரஸ்யமான சம்பவங்களை மட்டும் இடம்பெறச் செய்திருக்கிறது. முன்பாதி முழுக்க நம்பியின் தந்திரங்களை அடுக்கிவிட்டு, இரண்டாம் பாதியில் அதற்காக அவர் மீது திணிக்கப்படும் குற்றச்சாட்டு நிரப்பப்பட்டிருக்கிறது.
‘விகாஸ்’ என்ஜினின் இயக்கம் எத்தனை நொடிகளுக்கு நீடிக்கிறது என்பதை பிரான்ஸுக்கு சென்று சோதித்துப் பார்க்கும் காட்சி, ரசிகர்களை நகம் கடிக்க வைக்கும். இதுபோல பரபரப்புக்குப் பஞ்சமில்லாத காட்சியமைப்புகள் சாதாரண மக்களுக்கான கமர்ஷியல் அம்சங்கள். கொஞ்சமாக அறிவியலையும் இந்திய விண்வெளி ஆய்வு குறித்த தகவல்களையும் அறிந்தவர்களுக்கு, ராக்கெட் எரிபொருள் திடபொருளாக இருக்க வேண்டுமா, திரவ எரிபொருளாக இருக்க வேண்டுமா என்பது போன்ற கேள்விகள் அந்நியமாகத் தெரியாது. ஆனாலும், அதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதுபோல திரைக்கதையை வடிவமைத்திருப்பது மாதவனின் புத்திசாலித்தனம்.
’ராக்கெட்ரி’ பார்த்தபிறகு, மாதவனின் சர்ச்சை பேச்சும் கூட விளம்பரத்திற்காகத்தானா என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாக, கிளைமேக்ஸில் மாதவன் இருந்த இடத்தில் உண்மையான நம்பி நாராயணனை காண்பித்திருப்பது அற்புதமான உத்தி. அதுவே, அவரது இழப்பு எத்தகையது என்பதைச் சொல்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் வாழ்நாள் முழுவதும் நம்பியைப் பின்தொடர்வதாக திரைக்கதையில் காட்டினாலும், அந்த நாடு குறித்தோ, அதன் உளவு அமைப்புகள் குறித்தோ வெளிப்படையாக இப்படம் பேசாமல் தவிர்த்திருப்பதைச் சாதுர்யம் என்று சொல்வதா அல்லது எதற்கு சங்கடம் என்று நழுவியதாகச் சொல்வதா? தெரியவில்லை.
சிம்ரன், மிஷா கோஷல், ரவி ராகவேந்தர் தொடங்கி படத்தில் வரும் அத்தனை நடிகர்களும் திறமையாக நடித்திருக்கின்றனர் என்று சொல்வது க்ளிஷேவான வார்த்தைகளாகிவிடும். ஷிர்ஷா ரேயின் ஒளிப்பதிவும் பிஜித் பாலாவின் படத்தொகுப்பும் இணைந்து பல்வேறு காலகட்டத்தில் பல இடங்களில் நடைபெறும் இக்கதையைச் சுவாரஸ்யமான ‘கமர்ஷியல் சினிமா’ ஆக்கியிருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக, சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை மொத்த திரைக்கதைக்கும் உயிர் கொடுத்து ஒரு மறக்கப்பட்ட சாதனையாளன் மீது மதிப்பை ஏற்படுத்துகிறது.
‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’ பார்ப்பவர்களுக்கு நம்பி நாராயணன் ஒரு பகுத்தறிவாளரா அல்லது இறை நம்பிக்கை உடையவரா என்ற கேள்வி எழவே எழாது. ஏனென்றால், இத்திரைக்கதையின் மையம் அதுவல்ல. இவ்வளவு ஏன், விகாஸ் என்ஜினை இயக்குவதற்கு முன்பும் கூட அவர் பஞ்சாங்கம் ஏதும் பார்ப்பதாக காட்சியமைப்பு இல்லை. சில காட்சிகளில் நெற்றியில் குங்குமத்துடன் தோன்றுகிறார். அவ்வளவுதான். ஆனால், சில நாட்களுக்கு முன்பாக ‘பஞ்சாங்கம்’ பார்த்துவிட்டு ராக்கெட் ஏவுவார்கள் என்று பேட்டியளித்து சர்ச்சையில் சிக்கினார் மாதவன். அதன்பின், அல்மனாக் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்துகொண்டதாக விளக்கமளித்தார். அதற்கும் முன்னதாக, கேன்ஸ் பட விழாவில் கலந்துகொண்டபிறகு, பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசினார். வழக்கமாக, இது போன்று அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
பொதுவாகவே, மாதவனின் பேட்டிகளைப் படிக்கும்போது அவரது பேச்சில் பக்குவமும் புத்திசாலித்தனமும் நிரம்பியிருப்பதைக் காண முடியும். ’ராக்கெட்ரி’ பார்த்தபிறகு, இந்த சர்ச்சை பேச்சும் கூட விளம்பரத்திற்காகத்தானா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், படத்திற்கும் அதற்கும் துளி கூட சம்பந்தமில்லை. வெறுமனே நடிகராக இருந்து இயக்குனராக மாறியவருக்கு, தன் படத்தின் மீது எவ்வாறு மக்களின் கவனத்தைக் குவிக்க வேண்டுமென்று தெரியாதா?
Read in : English