Read in : English

தமிழகத்தில் வட மாவட்டங்களில் உள்ள கிராமப்புர கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து என்ற நிகழ்த்து கலை நிச்சயம் இருக்கும். தமிழக கிராமப்புற கோவில்களில் ஆனி, ஆடி மாதங்களில் திருவிழா வண்ணமயமாக நடக்கும். அப்போது சடங்குகளுடன் கலந்து ஆடும் கலைதான் தெருக்கூத்து. பெருங்குழுவாக இணைந்து இரவு முழுவதும், மகாபாரத கிளைக்கதைகளை, நாட்டிய நாடகம் போல் நிகழ்த்துவதை காண பிரமிப்பாக இருக்கும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து என்ற கலை நிகழ்வு பிரபலமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் களை கட்டும். இது தமிழர்களின் தொல்மரபு கலைவடிவம். இப்போது வழக்கத்தில் உள்ள கூத்து குறைந்தது 300 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து என்ற கலை நிகழ்வு பிரபலமாக நடந்து வருகிறது

தமிழக மக்களின் பொழுதுபோக்கில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது தெருக்கூத்து என்ற இந்தக் கலை வடிவம். கிராம தெய்வமாக வழிபடும் திரௌபதி அம்மன் கோயில் சடங்குகளில் தெருக்கூத்து முக்கிய இடம் பிடித்தள்ளது. கோயில் திருவிழாக்களில் சடங்குடன் தொன்றுதொட்டு மரபாக இந்த கலையும் தொடர் நிகழ்வாக அரங்கேறுகிறது.

தெருக்கூத்து என்பது நாட்டிய நாடகம் போன்ற கலைவடிவம். மகாபாரத கதைக்கு உட்பட்டது. அர்சுனன் தபசு, துரியோதனன் படுகளம், குறவஞ்சி, கர்ணமோட்சம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மகாபாரத கிளைக்கதைகள் இந்த தெருக்கூத்து வடிவத்தில் அரங்கேற்ற ப்படுகின்றன. பெரும்பாலும் மகாபாரத கிளைக் கதைகளே தெருக்கூத்துகளுக்கு அடிப்படையாக உள்ளன.

மேலும் படிக்க:

சூராதி சூரர்களின் ரகசியம் 

மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்களின் பாரம்பரிய பௌர்ணமி இரவு!

இந்த கலையின் உள்ளீடுகளான ஆட்டம், பாட்டு, வசனம் என முழுமையாக கற்றால் மட்டுமே, தெருக்கூத்து நிகழ்த்தும் கலைஞராக ஒருவர் அங்கீகாரம் பெற முடியும். அர்சுனன் வேடம் போடுபவர், 15 நாட்கள் கடும் விரதம் மேற்கொண்டு, தபசு மரம் ஏற வேண்டிய கடும் நிர்பந்தமும் உண்டு. இது தெருக்கூத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

தெருக்கூத்து கலை நிகழ்ச்சியில் முகவீணை, ஆர்மோனியம், மத்தளம், தாளம் ஆகிய இசை கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கலைநிகழ்வில் கிட்டத்தட்ட, 25 பேர் கொண்ட குழு பங்கேற்கிறது. ஆட்டம், பாட்டு, நகைச்சுவை எல்லாம் வட்டார மொழியிலே அரங்கேறுகிறது. இந்தக் கலை நிகழ்வில் பங்கேற்கும் கலைஞர்கள், புஜ கீர்த்தி, கிரீடம், மார்பு பதக்கம், கால் சலங்கை ஆகிய ஆபரணங்களை உடலில் 32 இடங்களில் முடிச்சு போட்டு அலங்கரிக்க வேண்டும்.

அவற்றை நேர்த்தியாக பயன்படுத்தி ஆடத்தில் பங்கேற்க வேண்டும். பொறுமை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி போன்ற பண்புள்ளவர்களால் மட்டுமே, திறன்மிக்க கலைஞர்களாக தெருக்கூத்து ஆட்டத்தில் மிளிர முடியும்.

தெருக்கூத்தை நம்பி வாழ்ந்த கலைஞர்கள், பஞ்சம் பிழைக்க கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு செல்கின்றனர்

போதிய வருமானம், சமூக அந்தஸ்து இன்மையால் இந்த கலை நசிந்து வருகிறது. கலையை கற்க இளைஞர்களின் ஈடுபாடு குறைந்து வருகிறது. மக்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கம் போன்ற எல்லா நிகழ்விலும் ஒன்றியுள்ள தெருக்கூத்து கலை அழிவின் விளிம்பில் நிற்கிறது. தெருக்கூத்தை நம்பி வாழ்ந்த கலைஞர்கள், பஞ்சம் பிழைக்க கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு செல்கின்றனர். கலையை மறந்து கூலியாக வாழ்கின்றனர்.

புதிய கலைஞர்கள் உருவாவதும் குறைந்து வருகிறது. அரசின் கலை பண்பாட்டுத்துறை நடத்தும் பொது நிகழ்வுகளில் கூட, தெருகூத்து கலைக்கு இடமில்லாத நிலை உள்ளது. அரசின் ஆதரவு கரம் நீளுமா என தெருக்கூத்து கலைஞர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தெருக்கூத்து

புதிதாக பயிற்சி பெற்று கட்டைக்கூத்து ஆடும் பெண்கள்

தெருக்கூத்தின் மற்றொரு வடிவம் கட்டைக்கூத்துக் கலை. மிகக் கடுமையான பயிற்சி மேற்கொள்வோரால் மட்டுமே, இதை ஆட முடியும். பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே உரித்தான கலையாக கருதப்படுகிறது. பெண் கதா பாத்திரங்களையும் ஆண்களே வேடம் அணிந்து ஆடுவர்.

காஞ்சிபுரம் கட்டைக்கூத்து கலைஞர் ராஜகோபால் முயற்சியால், கட்டைக்கூத்து ஆடும் முயற்சியில் பெண்களும் இந்த கலையில் பயிற்சி பெற்றுள்ளனர். இவர் நடத்திய கட்டைக்கூத்து பயிற்சி பள்ளியில் பயின்றவர் திலகவதி. ராணிப்பேட்டை மாவட்டம், மேட்டுமுல்லுவாடி கிராமத்தை சேர்ந்தவர். இவரே முதல் கட்டைக்கூத்து ஆடும் பெண் எனப் புகழ் பெற்றுள்ளார்.

தனியாகக் கட்டைக்கூத்துக் குழுவை நிறுவி நிர்வகித்து வரும் திலகவதி, இந்தக் கலையைக் கற்றுக் கொண்டது பற்றி வியப்பு தரும் தகவல்களைத் தெரிவித்தார். துவக்கத்தில் கூத்து ஆட வந்தது குறித்து, ‘என் தந்தை கூத்துக்கலைஞர். எங்கள் குடும்பத்தினர், தென்னாட்டு நாரையூர் கூத்து என்ற புராணக் கதையை இரவு முழுதும் நடத்துவர். என் சித்தப்பா முனுசாமி கட்டையை உடலில் கட்டிக் கொண்டு கூத்து ஆடுவார். அவரிடம் சிறிது காலம் கட்டைக்கூத்து கற்றேன்.

பின் அரங்கேற்றம் நடந்தது. ஆரம்பத்தில், என்னுடன் சேர்ந்து இரண்டு பெண்கள் ஆடினர். எனக்குக் கேள்வி ஞானம் அதிகம். எவ்வளவு பெரிய கதையையும் எளிதாக மனப்பாடம் செய்துவிடுவேன்’ என்று ஆரம்ப கால நிகழ்வுகளை அசை போட்டார். ‘என்னுடன் ஆடிய சிறுமியர் பருவமடைந்ததும் கலையைக் கைவிட்டனர். என் பெற்றோரும் இந்தக் கலையில் நான் ஈடுபடுவதை முதலில் விரும்பவில்லை’ என்றார் திலகவதி.

‘மகாபாரதத்தில், பகடைத் துகில் என்ற கிருஷ்ணன் தூது மிகப் பெரிய கூத்து. அதில் பங்கேற்று ஆடியிருக்கிறேன். பின், காஞ்சிபுரம் கட்டைக்கூத்து ஆசிரியர் ராஜகோபால் நடத்திய பள்ளியில் சேர்ந்து கற்றேன்’ என்றவர் தொடர்ந்தார். ‘காஞ்சிபுரத்தில் ஏட்டுக் கல்வியும், கட்டைக்கூத்தும் சொல்லிக் கொடுத்தனர். விதவிதமான சீருடைகள் அணிந்தபோது இந்தக் கலையில் ஆர்வம் ஏற்பட்டது. நேரத்திற்கு உணவும் கிடைத்ததால் கவலையின்றி கற்றேன். இப்போது தனிக்குழு அமைத்து, தொழில் முறையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்’ என்றார் திலகவதி.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival