Read in : English

தமிழ் வழியில் படித்து இயற்பியலில் பிஎச்டி பட்டம் பெற்ற கல்பாக்கம் வாயலூரில் உள்ள விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் இ. ஜெயபிரசாத் (34) தற்போது இங்கிலாந்து வேல்ஸில் உள்ள பேங்கர் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரல் ரிசர்ச் ஆபீசராகப் பணியாற்றுகிறார். அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியும் கூட.

ஜெயபிரசாத் கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் பெரிய காலனியைச் சேர்ந்தவர். கூரை வீட்டில்தான் வாழ்க்கை. அவரது அப்பா ஏழுமலை கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அம்மா கன்னியம்மாள் கட்டுமானப் பணிகளில் சித்தாள் வேலை பார்த்து வந்தார். அவருக்கு இரண்டு தங்கைகள். மூத்த தங்கை ஜெயஸ்ரீ 9ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு திருமணமாகிவிட்டது. அடுத்த தங்கை சுகன்யா பிளஸ் டூ முடித்த பிறகு, மெடிக்கல் லேப் டெக்னாலஜி டிப்ளமோ படித்து முடித்து விட்டு இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கிறார்.

விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று அரசுப் பள்ளி   மாணவர்களை 9ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை தங்களது வீட்டில் தங்க வைத்து அவர்களை நன்றாகப் படிக்க வைத்து, அவர்கள் கல்லூரியில் சேரவும் வழிகாட்டி வந்தார்கள் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானிகளாகப் பணிபுரிந்த ஸ்ரீதர், கலாவதி தம்பதி. (பணி ஓய்வுக்குப்பிறகு ஸ்ரீதர் கடந்த ஆண்டு மறைந்துவிட்டார். அவர்களது வீட்டில் தங்கி இருந்து படித்தவர்தான் ஜெயபிரசாத்.

விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று அரசுப் பள்ளி   மாணவர்களை 9ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை தங்களது வீட்டில் தங்க வைத்து அவர்களை நன்றாகப் படிக்க வைத்து, அவர்கள் கல்லூரியில் சேரவும் வழிகாட்டி வந்தார்கள் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்]ஞானிகளாகப் பணிபுரிந்த ஸ்ரீதர், கலாவதி தம்பதி.  

விளிம்பு நிலைக் குடும்பத்தில் பிறந்த ஜெயபிரசாத் வாயலூரிலிருந்து வேல்ஸில் உள்ள பேங்கர் பல்கலைக்கழகம் வரை சென்ற தனது வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

வாயலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழியில் 8ஆம் வகுப்பு வரைப் படித்தேன். அந்தப் பள்ளியில்  டியூஷன் எடுக்க வருவார் ஸ்ரீதர் சார். அவரிடம் நானும் டியூஷன் படித்திருக்கிறேன். அதனால் அவருக்கு என்னைத் தெரியும். தனது வீட்டில் தங்கிப் படிக்க விருப்பமா என்று கேட்டார். எனது பெற்றோர்களையும் அழைத்துப் பேசினார். எனக்கும் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அவரது வீட்டில் தங்கி சதுரங்கப்பட்டினத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9வது வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

மேலும் படிக்க:

மறைந்த மகனின் நினைவாக விளிம்பு நிலை மாணவர்களுக்காக பெற்றோர் நடத்தும் வித்தியாசமான இலவச ஆன்லைன் பள்ளி!


சப்தமின்றி சாதனை: கல்வி உதவித் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர முதல் தலைமுறை பட்டதாரிகளைக் கைதூக்கி விடும் ஆசிரியர்!

அவரது வீட்டில் அனைவரையும் ஒன்று போலதான் நடத்துவார். காலையில் அனைவரும் சீக்கிரமே எழுந்துவிட வேண்டும். யோகா இருக்கும். காலையில் ஹிந்து பேப்பரைப் படிக்கச் சொல்லுவார். முக்கியச் செய்திகள் குறித்து எங்களது கருத்தைக் கேட்டு விவாதிப்பார். வீட்டில் உள்ள புத்தகங்களை எடுத்துப் படிப்போம். வீட்டில் புத்தகங்களை எடுத்தால் எடுத்த இடத்தில் ஒழுங்காக வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ப வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்ட தட்டை கழுவி வைக்கவேண்டும். இந்த வேலைகள் எனக்குப் புதிதாக இருந்தது. இதுமாதிரி வேலைகளை எங்களது வீட்டில் செய்ததில்லை. நாங்கள் செய்யும் வேலைகளை அவர்களும் செய்வார்கள்.

நாங்கள் வீட்டில் இருக்கும் போது மாலைவேளைகளில் இருட்டிய பிறகும்கூட நேரம் தெரியாமல் விளையாடுவோம். இங்கே, மாலையில் இருட்டும் வரை விளையாடலாம். அப்புறம் படிக்க வந்துவிட வேண்டும். மாலை நேரத்தில் எங்களுக்கு ஸ்ரீதர் சார் கணக்கு சொல்லித் தருவார் கலாவதி டீச்சர் மற்ற பாடங்களைச் சொல்லித் தருவார்கள்.

அரசுப் பள்ளி

கல்பாக்கம் விஞ்ஞானிகள் ஸ்ரீதர் கலாவதி தம்பதியின் வீட்டில் தங்கிப் பள்ளிப் படிப்பைப் படித்த விளிம்பு நிலை மாணவர்கள் இ. ஜெயபிரசாத், ஆர். கோவிந்தராஜன், எம்.ஜெய்சங்கர். (2003).

எப்போதாவதுதான் ஊருக்குப் போவோம். எங்களது அம்மா கட்டட வேலைக்காக பக்கத்து ஊருக்கு வந்தால் எங்களைப் பார்த்துவிட்டுப் போவார். விடுமுறை நாட்களில் டாக்டர் புகழேந்தி சாரும், ஹோமியோபதி மருத்துவர் முருகேசன் சாரும் வீட்டுக்கு வந்து எங்களுக்கு மருத்துவ சோதனை செய்வார்கள். சென்னைக்கு அருகே இருந்தால்கூட, நான் ரயிலில் ஏறியதில்லை. சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அழைத்துச் சென்றார் ஸ்ரீதர் சார். இருவரும் எங்கள் மீது அன்புடன் இருப்பார்கள். தங்களது குழந்தைகளைப் போல எங்களையும் அன்புடனும் பரிவுடனும் பார்த்துக் கொண்டனர். அவரது வீட்டில் தங்கி இருந்த நாட்கள் எனது வாழ்க்கையை நெறிப்படுத்த எந்த அளவுக்கு உதவியது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.

2003இல் பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 402 மதிப்பெண்கள் எடுத்தேன். கணிதப் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள். நான் படித்த பள்ளியிலேயே பிளஸ் ஒன் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன். பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 902 மதிப்பெண்கள் பெற்றேன்.

அதையடுத்து, 2005இல் சென்னை லயோலா கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் பாடத்தில் சேர இடம் கிடைத்து. டியூஷன் ஃபீசை ஸ்ரீதர் சாரே கட்டிவிட்டார். வீட்டிலிருந்து விடுதிக் கட்டணத்தைச் செலுத்தினார்கள். கல்லூரியிலிருந்து எனக்கு ரூ.ஆயிரம் கொடுத்தார்கள். பின்னர் கல்வி உதவித் தொகையும் கிடைத்தது. அதனால் படிக்கப் பிரச்சினை ஏற்படவில்லை.

கல்லூரி வகுப்பறைகளைத் தூய்மைப் பணியை பகுதி நேரமாக செய்யும் தன்னார்வலர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாய் வீதம் கொடுப்பார்கள். நான் காலை 5.30 மணியிலிருந்து 7.30 மணி வரை இரண்டு மணி நேரம் அந்த வேலையைச் செய்து விட்டு, கல்லூரிக்குப் போய்விடுவேன். கல்லூரியில் படிக்கும் போது அந்தப் பணம் எங்களது மற்ற செலவுகளுக்கு உதவியாக இருந்தது. 65 சதவீத மதிப்பெண்களுடன் பிஎஸ்சி பட்டம் பெற்றேன்.

2008இல் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி இயற்பியல் படிப்பில் சேர நுழைவுத் எழுதி எம்எஸ்சி படிப்பில் சேர்ந்தேன்.  எம்எஸ்சி படிப்பில் சேர்ந்தாலும்கூட முதலில் ஸ்ரீதர் சாரிடம் போய் பாடம் கேட்பேன். அவர் அந்தப் பாடத்தின் அடிப்படைகளை எல்லாம் நன்றாகச் சொல்லித் தந்துவிடுவார். அதனால் கல்லூரியில் நடத்தும் பாடங்கள் எளிதாகப் புரியும். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த சத்தியநாராயணாவிடமும், நேரில் சென்று சந்தேகங்களைக் கேட்போம். அவரும் எங்களுக்குத் தனியே பாடம் நடத்தி எங்களது சந்தேகங்களைப் போக்குவார்.

சீனாவில் சான்குவிங் என்ற இடத்தில் உள்ள சௌத் வெஸ்ட் யுனிவர்சிட்டியில் ஆய்வு செய்ய இரண்டு ஆண்டுகள் ஃபெல்லோஷிப் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு டிசம்பரில் இங்கிலாந்தில் வேல்ஸில் உள்ள பேங்கர் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரல் ரிசர்ச் ஆபீசர் வேலை கிடைத்தது

பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்திலேயே பிஎச்டி படிக்கச் சேர்ந்தேன். எனது பிஎச்டி ஆய்வு செமி கண்டக்டர் லேசர் டைனமிக்ஸ் குறித்தது. பேராசிரியர் எஸ். சிவப்பிரகாசம் எனது ரிசர்ச் கைடு. பிஎச்டி படிக்கும் போது யுனிவர்சிட்டி ஃபெல்லோஷிப் ரூ.5ஆயிரம் மாதந்தோறும் கிடைத்தது. இரண்டாம் ஆண்டில் அது எட்டாயிரமாகியது. இதற்கிடையில் யுஜிசி பிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் எனக்கு ரூ.17 ஆயிரம் உதவித் தொகை கிடைத்தது. சிஎஸ்ஐஆர் திட்டத்தின் கீழ் சிறந்த புராஜக்ட் செய்யும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அது. நான் செய்த புராஜக்ட்டுக்காக அந்த உதவித் தொகையை வழங்கினார்கள். பிஎச்டி நான்காம் ஆண்டு படிக்கும்போது சிஎஸ்ஐஆர் சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் கிடைத்தது. அதனால் ஆகஸ்ட் 2016வரை எனக்கு மாதம் ரூ.33 ஆயிரம் கல்வி உதவித் தொகையும் ஹவுஸ் ரெண்ட் அலவன்சும் கிடைத்தது. 2013இல் எனது அம்மா இறந்து போனதை அடுத்து என்னுடன் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி எர்த் சயின்ஸ் படித்த காரைக்குடியைச் சேர்ந்த சாந்த சோபியாவை 2014இல் திருமணம் செய்து கொண்டேன்.

பிஎச்டி முடித்ததும் 2017இல் சென்னை தரமணியில் உள்ள மேட் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் போஸ்ட் டாக்டரல் ஃபெல்லோவாகச் சேர்ந்தேன். அப்போது, சீனாவில் சான்குவிங் என்ற இடத்தில் உள்ள சௌத் வெஸ்ட் யுனிவர்சிட்டியில் ஆய்வு செய்ய இரண்டு ஆண்டுகள் ஃபெல்லோஷிப் கிடைத்தது. 2017ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் வரை அங்கு இருந்தேன். 2019ஆம் ஆண்டு டிசம்பரில் இங்கிலாந்தில் வேல்ஸில் உள்ள பேங்கர் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரல் ரிசர்ச் ஆபீசர் வேலை கிடைத்தது. தற்போது அங்கு செமி கண்டக்டர் அப்ளிக்கேஷன் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். அதாவது 5ஜி, 6ஜி போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்குத் தேவையான கம்யூனிக்கேஷன் ஸ்பீடை அதிகரிப்பது குறித்த ஆய்வு அது.  2023 வரை இங்கு இருக்கலாம். அதன் பிறகும் எனது ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம்.

மூன்றரை ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தாலேயே எனக்கு பெர்மணன்ட் ரெசிடென்ஸி கொடுத்தவிடுவார்கள். இந்தியாவில் ஐஐடி, ஐஐஎஸ்இஆர் போன்ற கல்வி நிலையங்களில் வேலை கிடைத்தால் இந்தியா வந்துவிடுவேன். பள்ளியில் படிக்கும் போது எனக்கு ஏணி போல் இருந்து என்னை இந்த அளவுக்கு உயர்த்தி விட்ட ஸ்ரீதர் சாரையும் கலாவதி டீச்சரையும் என்றும் மறக்க முடியாது.  அன்பினால் அரவணைத்து எங்களை வளர்த்து உருவாக்கியவர்கள் அவர்கள் என்று நெஞ்சம் நெகிழ்கிறார் டாக்டர் ஜெயபிரசாத்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival