Read in : English
சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படத்தில் இளையராஜா-யுவன் இணைந்து முதன்முறையாக இசையமைத்துள்ளனர். அந்தத் திரைப்படத்தை யுவனே தயாரிக்கிறார் என்பது புருவம் உயர்த்த வைத்தது. கனகச்சிதமாகத் திட்டமிடப்பட்டு 37 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவுற்ற ஒரு திரைப்படம், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு காத்திருப்பு பட்டியலில் இருந்து நான்கைந்து முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டதென்றால் என்னவாகும்? அப்படியொரு நிலைமையை எதிர்கொண்டு தியேட்டர்களை வந்தடைந்திருக்கிறது சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘மாமனிதன்’.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகால உழைப்பை முழுங்கியிருக்கும் இப்படைப்பு ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிறதா? சமகாலத்திற்குத் தேவையான ஏதேனும் ஒரு படிப்பினையைத் தாங்கியிருக்கிறதா?
எனது ஊர், எனது சுற்றம் என்று அக்கறையுடனும் வாஞ்சையுடனும் பண்ணைபுரத்தில் வாழ்ந்து வருகிறார் ராதாகிருஷ்ணன். சந்தர்ப்பவசத்தால் ஒரு நாள் சாவித்திரி எனும் பெண்ணைச் சந்திக்கிறார். பார்த்தவுடன் அவரைப் பிடித்துப் போகிறது. அவருக்கும் அவரது தந்தைக்கும் உதவி தேவைப்படும் சூழலில் ராதாகிருஷ்ணனின் கரங்கள் நீள்கின்றன. மெல்ல இருவரது இதயங்களையும் வெற்றி கொண்டு, அவர்களில் ஒருவராகிறார்.
சில ஆண்டுகள் கழித்து ஒரு மகன், மகள், மனைவி சாவித்திரியோடு அமைதியான வாழ்வை வாழ்கிறார் ராதாகிருஷ்ணன். கை நிறைய சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை, அவரை ரியல் எஸ்டேட் தொழிலில் இறக்குகிறது. மாதவன் என்பவரின் நிலத்தை விற்பனை செய்ய ராதாகிருஷ்ணன் உதவ, ஊர் மக்களும் அட்வான்ஸ் பணத்தை வாரியிறைக்கின்றனர். பணத்தை சுருட்டியதும் அந்த நபர் கம்பி நீட்ட, அந்த பணத்தை எப்படித் திருப்பித் தருவது என்ற பயத்தில் ஊரைவிட்டு ஓடுகிறார் ரா.கி. அதன்பின் அவரும் அவரது குடும்பமும் என்னவாகின்றர் என்பது மீதிக்கதை.
மேலும் படிக்க:
குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள்: முகமூடிகளைக் கழற்றும் சுழல்!
கமல் ஹாசன் கட்சித் தலைவரா, ஆக்ஷன் ஹீரோவா?: விக்ரம் எழுப்பும் கேள்வி!
இப்படத்தில் ‘ஆண்டவன் கட்டளை’, ’தர்மதுரை’ போன்ற படங்களில் கண்ட யதார்த்தமான ஒரு மனிதனைக் காண முடிகிறது. அப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்ததன் மூலமாக, அதன் மீது மக்களின் கவனம் பன்மடங்கு அதிகமாகிறது என்பதே அவரது இருப்புக்கான வெற்றி.
மாஸ்டர், விக்ரம் என்று தொடர்ச்சியாக விஜய் சேதுபதியை வில்லனாக பார்த்தவர்களுக்கும், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் அவரது ‘ட்ரேட்மார்க்’ நகைச்சுவையோடு ரசித்தவர்களுக்கும் ‘பெப்பே’ காட்டியிருக்கிறது ’மாமனிதன்’. இப்படத்தில் ‘ஆண்டவன் கட்டளை’, ’தர்மதுரை’ போன்ற படங்களில் கண்ட யதார்த்தமான ஒரு மனிதனைக் காண முடிகிறது. அப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்ததன் மூலமாக, அதன் மீது மக்களின் கவனம் பன்மடங்கு அதிகமாகிறது என்பதே அவரது இருப்புக்கான வெற்றி.
விஜய் சேதுபதியைவிட இரண்டு வளர்ந்த குழந்தைகளுக்கு அம்மாவாக காயத்ரி நடித்திருப்பதுதான் இப்படத்தின் சிறப்பு. லூஸான ரவிக்கை, தளர்வாகப் போர்த்திய நூல் சேலையுடன் வயோதிகத் தோற்றத்தில் அவர் வெளிப்படுவது செயற்கையாகத் தோன்றினாலும், அவரது நடிப்பு அதனை ஈடுசெய்துவிடுகிறது.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராக வரும் குரு சோமசுந்தரம், படம் முழுக்க கைலியுடன் வந்து நம் மனதை அள்ளுகிறார். நகைக்கடைக்குள் நுழைந்தவுடன் ‘அப்பச்சி’ என்று கடைக்காரரை அவர் அழைக்குமிடம், நாமும் தெற்கத்தி வட்டாரத்தில் நுழைந்துவிட்டோமே என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.
டீக்கடை நடத்துபவராக வரும் ஜுவல் மேரி, அவரது மகளாக வரும் ‘என்னை அறிந்தால்’ அனிகா, ஷரவண சக்தி, ‘பேட்ட’ மணிகண்டன், ரியல் எஸ்டேட் அதிபராக வரும் ஷாஜி, வீட்டு உரிமையாளராக வரும் மூர்த்தி, கஞ்சா கருப்பு, காயத்ரியின் தந்தையாக வருபவர் என்று அனைவருமே படத்தில் யதார்த்தமாக உலவுகின்றனர்.
முக்கிய பாத்திரங்கள் தாண்டி அவ்வப்போது தலைகாட்டுபவர்களின் நடிப்பு செயற்கையாகத் தென்பட்டாலும் காட்சிகள் சட்டென்று முடிந்து நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன. இப்படியொரு படத்தில் வசனங்கள் பெரும் பலம். அதற்கேற்ப ‘அப்பன் தோத்த ஊர்ல புள்ளை ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம்’ என்பது போன்ற வரிகள் அமைந்திருக்கின்றன. ஆனால், குரு சோமசுந்தரத்தை ஒரு காட்சியில் ‘வாப்பா’ என்றழைக்கும் விஜய் சேதுபதியின் மகன், அதற்கடுத்த காட்சியிலேயே ‘மாமா’ என்றழைப்பதும், ‘பாய்’ என்று சொல்லும் விஜய் சேதுபதி மற்றொரு இடத்தில் அவரை ‘வாப்பா’ என்றழைப்பதும் டப்பிங்கில் தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள்.
இதுபோலவே, படத்தில் போலீஸ் கெடுபிடியைக் காட்டாமல் தவிர்த்திருப்பது திரைக்கதையின் போக்கில் ‘சினிமாத்தனத்தை’ அதிகப்படுத்துகிறது. ’பீல்குட்’ உணர்வை அதுபோன்ற காட்சியமைப்புகள் சிதைக்கும் என்று இயக்குநர் கருதியிருக்கலாம்.
இளையராஜாவும் யுவனும் சேர்ந்து இசையமைக்கின்றனர் என்பது முதன்முறையாக மாமனிதன் படத்தில் நிகழ்ந்திருக்கிறது. ராஜாவின் மெட்டுக்கு யுவன் ஆர்கெஸ்ட்ராவை ஆட்டுவித்தாரா அல்லது யுவன் அமைத்த அஸ்திவாரத்தின் மீது ராஜா கோட்டை கட்டினாரா என்று நமக்குத் தெரியாது
அதையும் மீறி ஒரு நல்ல படம் பார்க்கிறோம் என்ற உணர்வை ஒளிப்பதிவாளர் சுகுமாரும் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர்பிரசாத்தும் தந்திருக்கின்றனர். இவர்களையெல்லாம் மீறி, இயக்குநரின் திறமையையும் அவரது எளிமையான கதையையும் மீறி படத்தைத் தாங்கி நிற்பது பின்னணி இசை.
இளையராஜாவும் யுவனும் சேர்ந்து இசையமைக்கின்றனர் என்பது முதன்முறையாக ‘மாமனிதன் படத்தில் நிகழ்ந்திருக்கிறது. ராஜாவின் மெட்டுக்கு யுவன் ஆர்கெஸ்ட்ராவை ஆட்டுவித்தாரா அல்லது யுவன் அமைத்த அஸ்திவாரத்தின் மீது ராஜா கோட்டை கட்டினாரா என்று நமக்குத் தெரியாது. ’தட்டிப்புட்டா’, ’ஏ ராசா’ உள்ளிட்ட பாடல்கள் திரைக்கதையோடு இயைந்து மிகச்சிறிய அளவில் நம் காதுகளை குளிர்விக்கின்றன. அதையும் தாண்டி ஒவ்வொரு காட்சியிலும் அதன் தன்மையை மேலோங்கச் செய்திருக்கிறது பின்னணி இசை. அதில் நிரம்பியிருப்பது முழுக்க முழுக்க ராஜ வாசம்!
சமீபத்தில் நடந்த ‘மாமனிதன்’ பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தன்னை இசைக்கோர்வை உருவாக்கத்தின்போதும் பதிவின்போதும் இளையராஜா அனுமதிக்கவில்லை என்று கூறியிருந்தார் இயக்குநர் சீனு ராமசாமி. நிச்சயம் ஒரு இயக்குநருக்கு அது ஒரு அவமரியாதைதான். இளையராஜாவின் மனதில் எத்தகைய எண்ணம் இருந்ததென்பது நமக்குத் தெரியாது.
ஆனால், அதில் ஒரு சதவிகிதம் கூட திரையில் தென்படவில்லை. சீனு ராமசாமியை உடன் வைத்துக்கொண்டே எத்தகைய ‘மாயஜாலத்தை’ இளையராஜா நிகழ்த்தியிருப்பாரோ, அது நிச்சயம் அவர் இல்லாமலும் நடந்தேறியிருக்கிறது. எந்தவொரு இடத்திலும் ’இது இப்படியிருந்திருக்க வேண்டாமே’ என்று சொல்ல முடியாத அளவுக்கு தன்னுழைப்பைக் கொட்டியிருக்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால், தொண்ணூறுகளின் முன்னும் பின்னும் ‘இதெல்லாம் சாதாரணமப்பா’ என்றவாறே அபூர்வங்கள் பலவற்றைத் தந்தாரே, அதேபோன்றதொரு அனுபவத்தை மாமனிதன் படத்திலும் காணலாம். ராஜ பலம் கைவசமிருப்பதால், மிக அழகாக ஒரு எளிமையானா கதையைத் திரையில் கோர்வையாகச் சொல்லியிருக்கிறார் சீனு ராமசாமி.
எதிலும் சிக்கல், எங்கும் பிரச்சினைகள் என்று கொதிநிலையில் இருப்பதே மனித இயல்பு என்றான உலகத்தில், எளிமையான வாழ்க்கை எத்தனை சிறப்பானது என்று காட்டியிருக்கிறார் இயக்குநர். என்னதான் மொபைல், கம்ப்யூட்டர் என்று வாழ்க்கை மாறினாலும், அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாத நிலைமையே வேண்டும் என்றிருக்கிறார். அதையெல்லாம் விட, குடும்பத்திற்காகத் தன்னையே ‘தீயோனாக’ காட்டிக்கொள்ளும் மாமனிதர்கள் உண்டு என்றிருக்கிறார்.
தனது தாயின் இறப்புக்கு ஷாஜி பாத்திரம் வரவில்லை என்றறிந்ததும், கேரளாவை விட்டு வி.சே. வெளியேறுமிடம் திரைக்கதையில் அற்புதமான இடம். அப்பாத்திரம் ஏன் காசியில் இருக்கிறது என்பதற்கான ‘புண்ணிய’ விளக்கம், எளிய மனிதர்கள் எப்படி அசம்பாவிதங்களை மிக அற்புதமாக கடந்து விடுகின்றனர் என்பதற்கான காரணத்தைச் சொல்லிவிடும்.
இலவசங்களை எதிர்பார்க்கும் மனங்களிடையே உற்ற நண்பர் என்றாலும் கடனாகத்தான் உதவியை வழங்க வேண்டும் என்று காட்டியிருப்பது, எல்லாவற்றையும் கோணலாக யோசிக்கும் நமது மனங்களுக்கு எளிதாக மருந்திடுகிறது.
பல காலம் முடங்கி, பிரச்சினைகள் பல கண்டிருந்தாலும், அவை எதுவும் திரையில் தென்படாதவாறு அமைந்திருக்கிறது ‘மாமனிதன்’. இப்படம் வெற்றி பெறுவதென்பது எளிமையான பல சிறுகதைகள் திரை வடிவம் பெற வழிகாட்டும். அது மட்டுமே, இப்படம் மீது மக்களின் கவனம் திரும்ப வேண்டுமே என்ற பதைபதைப்பை உண்டாக்குகிறது.
Read in : English