Read in : English
வி. வெங்கயா காஞ்சிபுரத்தில் ஓர் உயர்நிலைப்பள்ளியில் விஞ்ஞான ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில், பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மன் கட்டிய கைலாசநாதர் கோயிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு. பல்லவ கட்டிடக்கலையின் பரிசுத்தமான அழகால் கவரப்பட்ட அவர், காஞ்சிபுரத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் உள்ள மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்களுக்கும் செல்ல ஆரம்பித்தார்.
அப்படி ஒருதடவை சென்றபோதுதான், ஹல்ட்ஷ் (1857-1927) வெங்கையாவைப் பார்த்து, “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்,” என்று கேட்டார். அதற்கு, ”நான் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. காஞ்சிபுரப் பள்ளிக்கூடத்தில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிகிறேன்,” என்று பதில் சொன்னார் வெங்கையா.
பல்லவகாலத்துக் கிரந்த கல்வெட்டுக்களை வெங்கையா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ணுற்ற ஹல்ட்ஷ், “இதுதான் உங்களுக்குச் சரியான இடம்,” என்றார்.
அப்போது மெட்ராஸ் பிரசிடென்ஸியில் தலைமைக் கல்வெட்டு ஆராய்ச்சியாளராக இருந்தார் ஹல்ட்ஷ். மேலதிகாரிகளுக்குக் கடிதம் எழுதி வெங்கையாவை தனக்கு உதவியாளராக நியமிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். ஆங்கில அரசும் அவரது தேவையை நிறைவேற்றியது. அப்போதிருந்து இளைஞர் வெங்கையா ஹல்ட்ஷ் உடன் பணிபுரிய ஆரம்பித்தார்.
அந்தக் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து மாமல்லபுரத்திற்குப் பயணிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒன்று பக்கிங்காம் கால்வாய் வழியாக படகில் செல்ல வேண்டும்; அல்லது மாட்டுவண்டியில் போக வேண்டும்.
ஜெர்மானியைச் சார்ந்த இந்தியவியல் அறிஞர் யூஜென் ஹல்ட்ஷ் என்பவரை மாமல்லபுரத்தில் வெங்கையா 1886-ல் சந்தித்தார். அந்தச் சந்திப்புதான் அவரது வாழ்க்கையிலும், தமிழகத்தின் கலாச்சார வரலாற்றிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க:
தமிழ்நாட்டையும் காஷ்மீரையும் இணைத்த கலாச்சாரத் தொடர்புகள்
புலிக்குகை அருகே உள்ள தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
வெங்கையா பழமையான நகரமான மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில்களில் பல்லவ, சோழ காலத்து கல்வெட்டுகளை மசிப்படிகள் எடுத்தார். ”ஆத்யந்தகாமா பல்லவேஸ்வர” கல்வெட்டை முதன்முதலில் கண்டுபிடித்தவர் வெங்கையா என்று பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் ஆய்வாளர் ஜி. யோவோ டுப்ரீயல் கூறினார்.
”ஆத்யந்தகாமா” என்றால் என்னவென்று புகழ்பெற்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஆர். நாகசுவாமி, தென்னிந்திய தொல்பொருளாராய்ச்சிக் கழகத்தில் சமர்ப்பித்த தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளார். ”இந்தக் கோயில் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது. முடிசூடிக் கொண்டபோது அவனுக்கு ராஜசிம்மன் என்று நாமகரணம் சூட்டப்பட்டது. நிஜத்தில் அவனுக்கு இன்னொரு பெயர் இருந்தது; அதுதான் ஆத்யந்தகாமா. தான் கட்டிய எல்லாக் கோயில்களிலும் அந்தப் பெயரைப் பொறிப்பதில் அவனுக்குப் பிரியம் அதிகம்.”
வெங்கையாவும், ஹல்ட்ஷும் கல்வெட்டுக்களைத் தேடி ஒன்றாகப் பயணம் செய்தனர். ஆனால் பெரும்பாலும் வெங்கையா மட்டுமே கோயில்களுக்குள் சென்றார். ஏனென்றால் ஹல்ட்ஷ் ஒரு வெளிநாட்டுக்காரர் என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் வெங்கையா கல்வெட்டுக்களை மசிப்படி எடுத்து வரும்வரை ஹல்ட்ஷ் வெளியே காத்திருப்பார்.
வெங்கையா படித்தது இயற்பியல் என்றாலும், அவருக்குச் சமஸ்கிருதத்தில் புலமை இருந்தது. அதனால்தான் அவரைத் தனது உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் ஹல்ட்ஷ்.
உத்திரமேரூர் கல்வெட்டுகளை வெங்கையா விளக்கிய பின்புதான், தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே குடவோலை மூலம் தேர்தல் நடத்தும் ஜனநாயக முறை இருந்தது என்று நமக்குத் தெரியவந்தது
மாமல்லபுரத்துப் பாறைகளிலும், கற்களிலும் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்களைப் புரிந்துகொள்வதற்கு வெங்கையாவும், ஹல்ட்ஷும் எடுத்த கடுமையான முயற்சிகளால்தான் இந்தத் துறைமுக நகரத்தின் சரித்திரத்தை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்று காலஞ்சென்ற நாகசுவாமி ஒருதடவை சொன்னார்.
வெங்கையாவும், ஹல்ட்ஷும் சேர்ந்து செய்த கூட்டுமுயற்சியின் முதல் விளைவாக, யூஜென் ஹல்ட்ஷ் எடிட் செய்த “தென்னிந்திய கல்வெட்டுகள் (தொகுதி 1, 1890)“ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. வெங்கையாவின் அர்ப்பணிப்பு உணர்வும், தீராத பற்றுமே இதன் காரணங்கள் என்று ஹல்ட்ஷ் கூறியிருக்கிறார். “தமிழ் கல்வெட்டுக்களைப் பொறுத்தமட்டில், எனக்கு ஒரு திறமையான உதவியாளர் கிடைத்திருக்கிறார். அவர்தான் திரு. வி. வெங்கையா. அவரைப்போன்ற இளமையான உள்ளூர் பட்டதாரிகளும் அவரைப் பின்பற்றித் தென்னிந்தியக் கல்வெட்டு என்னும் புறக்கணிக்கப்பட்ட ஆய்வுக்குள் இறங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று புத்தகத்தின் முன்னுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் கல்வெட்டு ஆராய்ச்சியாளராக வேகமாக மாறியதற்குக் காரணம் ஹல்ட்ஷ் வெங்கையாவைச் சரியான பாதையில் பயணம் செய்ய வைத்ததுதான். பல்லவர்களின், சோழர்களின், பாண்டியர்களின் கல்வெட்டுக்களையும், தாமிரத்தகடு வாசகங்களையும் புரிந்துகொள்ள வெங்கையா எடுத்த பகீரத முயற்சிகள்தான் தென்னிந்திய வரலாற்றை கல்வெட்டு ஆய்வாளர்களையும், சரித்திர நிபுணர்களையும் மறுபடியும் எழுத வைத்தன. கிபி இரண்டாம் நூற்றாண்டு மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகளையும், உத்திரமேரூர் முதலாம் பரந்தாகச் சோழன் (கிபி 907-955) கல்வெட்டுக்களையும், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் கல்வெட்டுக்களையும் அவர் கண்டுபிடித்தது கல்வெட்டு ஆராய்ச்சியில் அவருக்கிருந்த நிபுணத்துவத்தை நிரூபித்தது.
உதாரணமாக, உத்திரமேரூர் கல்வெட்டுக்களை வெங்கையா விளக்கிய பின்புதான், தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே குடவோலை மூலம் தேர்தல் நடத்தும் ஜனநாயக முறை இருந்தது என்று நமக்குத் தெரியவந்தது.
ஆரணிக்கு அருகே வளையாத்தூர் என்ற கிராமத்தில் 1864-ல் பிறந்த வெங்கையா தனது குழந்தைப் பருவத்திலே சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார். அவருடைய தகப்பனார் ஸ்ரீ ஆரணி அப்பா சீத்தாராமய்யா மகனின் கல்வியில் மிகவும் தீவிரமாக இருந்தார். கல்விப்படிப்பு முடிந்தவுடன், மேல்படிப்புக்காக வெங்கையா சென்னைக்கு அனுப்பப்பட்டார்.
விஞ்ஞான ஆசிரியராக இருந்து பிரிட்டிஷ் இந்திய அரசின் முதல் இந்திய தலைமைக் கல்வெட்டு ஆராய்ச்சியாளராக வெங்கையா எடுத்த அவதாரம் நாடகச்சுவை மிக்கது. 1903-ல் அவர் மெட்ராஸ் பிரசிடென்ஸியின் கல்வெட்டு ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அவர் கல்வெட்டு ஆய்வுத் துறைக்கும், சரித்திரத் துறைக்கும் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து அவருக்கு ஆங்கில அரசு 1906-ல் ‘ராய் பகதூர்’ என்னும் கெளரவப்பட்டமளித்துப் பாராட்டியது.
வெங்கையாவும், ஹல்ட்ஷும் சேர்ந்து செய்த கூட்டுமுயற்சியின் முதல் விளைவாக, யூஜென் ஹல்ட்ஷ் எடிட் செய்த “தென்னிந்திய கல்வெட்டுகள் (தொகுதி 1, 1890)“ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது
பிரிட்டிஷ் இந்திய அரசின் முதல் இந்திய தலைமைக் கல்வெட்டு ஆராய்ச்சியாளராக வெங்கையா 1908-ல் நியமிக்கப்பட்டார். 1912-ல் அவர் காலமானார்.
சில வருடங்களுக்கு முன்பு, வெங்கையாவின் கொள்ளுப்பேத்தி சுனிதா மாதவன் அவரைப் பற்றி ஒரு வாழ்க்கைச் சரிதத்தை வெளியிட்டார். “ராய் பகதூர் வி. வெங்கையாவின் வாழ்க்கையும் பணிகளும்” என்ற அந்தப் புத்தகம் அவர் வாழ்ந்த குறுகிய 48 ஆண்டுகளில் ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளராக அவர் சரித்திரத்திற்கு வழங்கிய கொடைகளைப் பற்றிப் பேசுகிறது.
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையோடு இணைந்து சுனிதா தனது கொள்ளுத் தாத்தாவின் பேரில் விருதுகள் வழங்க விரும்புகிறார்.
”இன்னும் பதிவுசெய்யப் படாத கல்வெட்டுக்களின் (இந்திய மொழிகளில்) கண்டுபிடிப்பில் நிகழ்த்திய அசாதாரணமான தனிப்பட்ட பங்களிப்புகளுக்காகவும், புதிய கோணங்களில் பதிவுசெய்த கல்வெட்டு விளக்கங்களுக்காகவும், கல்வெட்டுகள் மூலம் பெற்ற அறிவை மரபார்ந்த மற்றும் மின்னணு ஊடகம் மூலமாகப் பரப்பியதற்காகவும், கல்வெட்டுகளை எதிர்காலச் சந்ததிக்காக பேணிக் காத்ததற்காகவும் வி. வெங்கையா கல்வெட்டு விருது வழங்கப்படும்,” என்று தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் செய்திக்குறிப்பு சொல்கிறது.
விருது பாராட்டுப் பத்திரத்தோடும், ரூ. 20,000 பரிசுத் தொகையுடனும் வழங்கப்படும்.
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை உறுப்பினர்களும், கல்வெட்டு, சரித்திரம், பாரம்பரியம் ஆகிய துறைகள் சார்ந்த நிபுணர்களும் அடங்கிய குழு ஒன்று விருதுக்குத் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்கும். இதுசம்பந்தமான முன்மொழிவுகளை (நாமினேஷன்) awards.tht@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளைக்கு நாமினேஷன் அனுப்ப வேண்டிய கடைசித்தேதி ஜூன் 26, 2022.
மேலும் தகவல் பெறுவதற்கான இணைய முகவரி: http://www.tamilheritage.in
Read in : English