Read in : English
ராமநாதபுரத்தில் கே. நந்தகுமார் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் ஸ்கூலில் தமிழ் வழியில் படித்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஆர். செல்வபாண்டி, எம்பிபிஎஸ் படித்து டாக்டர் ஆகியுள்ளர். அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி மட்டுமல்ல, மறவாய்க்குடி கிராமத்தின் முதல் டாக்டரும் இவர்தான்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மறவாய்க்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஆர். செல்வபாண்டி தான் கடந்து வந்த பாதையை நம்மிடம் நினைவுகூர்ந்தார்:
மறவாய்க்குடி கிராமத்தில் ஓட்டு வீட்டில் வசிக்கிறோம். எனது அப்பா ராமருக்கு ஆடு மேய்க்கும் வேலை. மாதம் ரூ.5 ஆயிரம் கிடைக்கும். அம்மா பாண்டியம்மாள், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்வார். அந்த வேலை இல்லாதபோது விறகு வெட்டும் வேலை செய்வார். இந்த வருமானத்தைக் கொண்டுதான் குடும்பம் நடக்க வேண்டும். இரண்டு பேரும் படித்ததில்லை. எனது தம்பி கவிப்பிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினியரிங் டிப்ளமோ படித்துவிட்டு, கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
அம்மாவின் பிறந்த ஊரான ஏர்வாடிக்கும் சிக்கலுக்கும் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இதம்பாடல் என்ற ஊரில் எனது அம்மாவைப் பெற்ற பாட்டி வீடு உள்ளது. அந்த ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். தனியே டியூஷன் எதுவும் சென்றது கிடையாது. அதற்கான வசதியும் இல்லை. 2014இல் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பெற்றேன்.
ஆனாலும், அதுவரை அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து எனக்கு எந்த நோக்கமும் இல்லை. அதுபற்றி எனக்குத் தெரியாது. என்னுடன் படித்த மாணவர்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த சிலர், சிறப்பாகச் செயல்படும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பில் படிக்கச் சேர்ந்துவிட்டார்கள்.
அந்த நிலையில், சிறப்பாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த எலைட் ஸ்கூலில் பிளஸ் ஒன் வகுப்பில் சேர்ந்து படிக்கிறாயா என்று எனது பள்ளித் தலைமை ஆசிரியர் கேட்டார். நானும் அங்கு சேர விருப்பம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். அங்குள்ள விடுதியில் தங்கிப் படித்தேன்.
நான் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் வரை எப்போதும் முதல் ரேங்க் எடுப்பேன். ஆனால் எலைட் ஸ்கூலில் 37 பேர் பிளஸ் ஒன் வகுப்பில் இருந்தோம். எல்லோரும் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள். அங்கு நான் 25வது ரேங்க், 30வது ரேங்க் எடுக்க முடிந்தது. கணிதம், உயிரியல் பாடங்களைப் படிப்பதில் எனகக்குப் பிரச்சினை இல்லை. இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க ஒன்றரை ஆண்டுகள் வரை சிரமப்பட்டேன். பிளஸ் டூ வகுப்பில்தான் எனக்கு அந்தப் பாடங்கள் நன்கு புரிய ஆரம்பித்தது. நானும் வகுப்பில் ஐந்தாவது ரேங்கிற்குள் வந்தேன்.
எனது நிலைமையை அறிந்த , எலைட் ஸ்கூல் ஒருங்கிணைப்பாளராக இருந்த கணித ஆசிரியர் நவநீதகிருஷ்ணன், என்னைப் படிக்க வைப்பதற்காக பலரை அணுகி உதவி பெற்றுத் தந்தார்
படிக்கும்போது அங்குள்ள ஆசிரியர்கள் நன்கு பாடம் சொல்லித் தருவார்கள். மாவட்ட கலெக்டராக இருந்த நந்தகுமார், வந்து பார்க்கும் போது எங்களது குறைகளைக் கேட்பார். எங்களுக்கு இருக்கும் குறைகளைக் அவரே கண்டுபிடித்து, அந்தக் குறைகளை நிவர்த்தி செய்துவிடுவார். தன்னம்பிக்கையூட்டும் வகையில் பேசுவார். எங்களுக்கு பேரிச்சம்பழம், கடலை மிட்டாய் போன்றவற்றை வாங்கித் தருவார்.
மேலும் படிக்க:
மளிகைக் கடையில் வேலை பார்த்த ஏழை மாணவர், இன்று டாக்டர்!
அங்கு படிக்கும்போதுதான், பிளஸ் டூ முடித்த பிறகு எந்த மாதிரியான படிப்பு வாய்ப்புகள் இருக்கின்றன என்பது தெரிய வந்தது. நாமும் நன்றாகப் படித்தால் என்ஜினியராகவோ டாக்டராகவோ ஆகலாம் என்று நினைக்க ஆரம்பித்தேன்.
2016இல் பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1157 மதிப்பெண்கள் பெற்றேன். கணிதத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றேன். வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா 198 மதிப்பெண்களும் இயற்பியலில் 196 மதிப்பெண்களும் எடுத்தேன். மருத்துவப் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்கள் 197.5. அந்த ஆண்டில் நீட் நுழைவுத் தேர்வு கிடையாது. மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, எனக்கு எப்படியும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துவிடும் என்று தெரிந்தது.
ஆனால், படிக்க பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அழுதேன். மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க சாத்தியமான மாணவர்களை அன்றைய தினம் பள்ளிக்கு வரச் சொன்னார்கள். படிக்க பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் இருந்த நான், அன்றைய தினம் பள்ளிக்குப் போகவில்லை.
எனது நிலைமையை அறிந்த , எலைட் ஸ்கூல் ஒருங்கிணைப்பாளராக இருந்த கணித ஆசிரியர் நவநீதகிருஷ்ணன், என்னைப் படிக்க வைப்பதற்காக பலரை அணுகி உதவி பெற்றுத் தந்தார். தூத்துக்குடியில் ஒரு டாக்டர், ராமநாதபுரத்தில் திரையரங்கு உரிமையளர், காரைக்குடியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோர் உதவி அளித்தனர்.
தங்களது பெயரைக் கூட சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். விலங்கியல் ஆசிரியர் ஆறுமுகம் மூலம் எனது நிலைமையைக் கேள்விப்பட்ட ராமநாதபுரத்தில் டாக்டர் தம்பதி, கல்லூரியில் படிப்பதற்கு எனக்குத் தேவையான ஆடைகளை வாங்கித் தந்தனர். எலைட் ஸ்கூலில் படித்தது நான் செய்த அதிர்ஷ்டம். இல்லாவிட்டால் நான் டாக்டராகி இருக்க முடியாது.
எலைட் ஸ்கூலில் படித்தது நான் செய்த அதிர்ஷ்டம். இல்லாவிட்டால் நான் டாக்டராகி இருக்க முடியாது
2016ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்தத முதல் நாள் அறிமுகக்கூட்டத்தில், பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து வந்தது யார் என்று கேட்டார்கள். நாங்கள் 25, 30 பேர் கையை உயர்த்தினோம். மÑருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் ஆங்கிலத்தில் நடக்கும்.
முதலில் சிரமமாக இருக்கலாம். ஆனால் கொஞ்ச நாளில் பிக்அப் செய்து விட முடியும் என்று நம்பிக்கையூட்டினார்கள். தொடக்கத்தில் வகுப்புகளைப் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. ஆனால், மற்றவர்களிடம் கேட்டுப் பாடங்களைப் புரிந்து கொள்வேன். படிப்படியாக பாடங்கள் எனக்குப் பிடிபட்டது.
அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடங்கிய. ஜெயலலிதா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் எம்பிபிஎஸ் படிக்க முதல் ஆண்டில் எனக்கு உதவி கிடைத்தது. ஜெயலலிதா மரணம் காரணமாக, இரண்டாவது ஆண்டில் அந்த உதவித் தொகை கிடைக்கவில்லை. நவநீதகிருஷ்ணன் சார், எனக்குப் பணம் கொடுத்து உதவினார். நாங்களும் கொஞ்சம் பணம் வெளியே கடன் வாங்கினோம். மூன்றாம் ஆண்டிலும் நான்காம் ஆண்டிலும் படிக்க ஜெயலலிதா டிரஸ்ட்டிடமிருந்து படிக்க நிதியுதவி கிடைத்தது.
இன்டர்ன்ஷிப் செய்யும்போது அரசு வழங்கும் ஸ்டைபண்ட் கிடைத்ததால், படிப்பதில் பிரச்சினை இல்லை. ஒரு வழியாக எம்பிபிஎஸ் படித்து முடித்து கடந்த வாரம் சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றேன்.
மருத்துவத் தேர்வு போர்டு நடத்தும் தேர்வு எழுதி எங்களது பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக வேண்டும். தற்போது அத்துடன், ஏதாவது மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டே, முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்புப் படிப்பதற்கான முதுநிலை நீட் தேர்வு எழுத தயாராகலாம் என்று இருக்கிறேன் என்கிறார் டாக்டர் செல்வபாண்டி.
நன்றாகப் படிக்கக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் மாதிரிப் பள்ளிகளுக்கு, ஓய்வு நேரங்களில் நேரில் சென்று அந்த மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார் பல்வேறு தடைகளைத் தாண்டி டாக்டரான முன்னாள் அரசுப் பள்ளி மாணவர் செல்வபாண்டி.
Read in : English