Read in : English
கோவில்பட்டியைச் சேர்ந்த பலசரக்குக் கடைத் தொழிலாளியின் மகளான முதல் தலைமுறை பட்டதாரி மாணவி பாலசுந்தரியின் தன்னம்பிக்கையுடன்கூடிய மன உறுதி நம்மை வியக்க வைக்கிறது. சாமானியக் ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும்கூட, மாநகராட்சிப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, பள்ளியில் முதலிடம் பெற்று, பொறியியல் பட்டம் பெற்ற அவர் தற்போது சாப்ட்வேர் என்ஜினியர். தான் படித்ததுடன், தனது இரு சகோதரிகளையும் கல்லூரியில் படிக்க வைத்து வருகிறார் பாலசுந்தரி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் எம். பாலசுந்தரி. அவரது அப்பா முருகேசன் பலசரக்குக் கடைகளில் வேலை பார்த்து வந்தார். அம்மா ராமலட்சுமி. அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். இந்த மாதிரியான குடும்பச் சூழ்நிலையில் எப்படி பொறியியல் பட்டதாரியானார் என்பதை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பாலசுந்தரி:
எங்களது குடும்பம் சாமானிய ஏழைக் குடும்பம். அப்பா பலசரக்குக் கடைகளில் வேலைபார்த்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் எங்களது ஆறு பேர் கொண்ட குடும்பம் சாப்பிட வேண்டும். அதுபோதுமானது இல்லை. அம்மா வீட்டில் இருக்கும்போது தீப்பெட்டிக்கட்டு ஒட்டுவார். நாங்களும் ஸ்கூலுக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் இரவு நேரம் வரை தீப்பெட்டிக்கட்டு ஒட்டுவோம். நான்கு பெண் குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்துப் பட்டதாரிகளாக்க வேண்டும் என்பது பத்தாம் வகுப்பு வரை படித்த எங்களது அப்பாவின் கனவு.
எனவே, எங்களது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. அங்குள்ள பலசரக்குக் கடை ஒன்றில் வாட்டர் கேன்களை தள்ளுவண்டியில் வைத்து வீடுகளுக்குக் கொண்டு போய் சப்ளை செய்ய வேண்டும். அதேபோல, பலசரக்குகளையும் டெலிவரி செய்ய வேண்டும். காலையிலிருந்து இரவு வரை ஓயாமல் வேலை இருக்கும். ஆனால், மதுரையில் ஆரப்பாளையம் பகுதியில் நாங்கள் தங்குவதற்கு ஒரு வீட்டை எங்க அப்பா வேலை செய்யும் கடைக்காரர் எடுத்துத் தந்திருந்தார். மாதச் சம்பளம் ரூ.8 ஆயிரம் வரை கிடைக்கும்.
2015இல் பிளஸ் டூ தேர்வில் பள்ளியில் நான் முதலிடம் பெற்றேன். பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1102 மதிப்பெண்கள் பெற்றேன். பொறியியல் படிப்பில் எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 184.5
கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த நான், மதுரையில் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தேன். எனது சகோதரிகளும் இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்தனர். பள்ளியில் பகலில் வழங்கும் சத்துணவுதான் எங்களுக்குச் சாப்பாடு. வீட்டிலிருந்து பகல் உணவை எடுத்துவரும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை.
ஆனாலும், நான் பள்ளியில் நன்கு படித்தேன். Ðபத்தாம் வகுப்பில் 500க்கு 469 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் ஒன் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன். Ðபள்ளியில் நான் நன்றாகப் படிப்பேன். அதற்கு முக்கியக் காரணம் எனது ஆசிரியர்கள். டியூஷன் போகும் வசதி கிடையாது. வீட்டிலிருந்தே பாடங்களைப் படிப்பேன். Ðபாடங்களில் சந்தேகம் இருந்தால் மறுநாள் ஆசிரியர்களிடம் கேட்பேன். அவர்கள் எனக்குப் புரியும்படி பாடங்களைச் சொல்லித் தருவார்கள். 2015இல் பிளஸ் டூ தேர்வில் பள்ளியில் நான் முதலிடம் பெற்றேன். பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1102 மதிப்பெண்கள் பெற்றேன். பொறியியல் படிப்பில் எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 184.5.

சத்யபாமா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றபோது தனது அம்மா ராமலட்சுமியுடன் பாலசுந்தரி.
பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்று எனது விருப்பத்தை அப்பாவிடம் கூறினேன். ஏற்கெனவே கடன் இருக்கிறது. பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கும் அளவுக்கு வசதி இல்லை என்று கூறிய அப்பா, கலைக்கல்லூரியில் வேண்டுமானால் சேர்க்கப் பார்க்கலாம் என்றார்.
இதற்கிடையில், கல்லூரியில் சேர்ந்து படிக்க அகரம் பவுண்டேஷனில் படிக்க உதவி கேட்கலாம் என்று பள்ளியில் ஆசிரியர்கள் தகவல் கூறினார்கள். நானும் விண்ணப்பித்தேன். சென்னை சத்யபாமா பல்கலைக் கழகத்தில் பிஇ எலெக்ட்ரிக் கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் படிப்பில் இடம் தருவதாகச் சொன்னார்கள். செலவு இல்லாம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சேர்ந்து படித்தேன். அங்கு எட்டாவது செமஸ்டர் படிக்கும்போதே. அதாவது 2018ஆம் ஆண்டு அக்டோபரில் ஹெக்ஸா வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்தது. Ðபடித்து முடிக்கும் முன்பே வேலைக்கு வரச் சொல்லி விட்டார்கள். பல்கலைக் கழக நிர்வாகமும் அதற்கு அனுமதி அளித்தது. அதனால், பகலில் வேலைக்குப் போவேன். மாலையில் ஹாஸ்டலுக்கு வந்து சக மாணவர்களிடம் அன்று நடத்திய பாடங்களைக் கேட்டுப் படிப்பேன். இப்படி கடைசி செமஸ்டர் தேர்வையும் எழுதி 7.5 ஜிபிஏ மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.
இதற்கிடையே, எனது முதல் தங்கை உஷா, கோவில்பட்டியில் அரசுக் கல்லூரியில் பிஏ தமிழ் படித்து முடித்துவிட்டு, அங்குள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பில்லிங் செக் ஷனில் வேலை செய்கிறார். அடுத்த சகோதரி கார்த்திகா அரசுக் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாவது ஆண்டும், கடைசி தங்கை பிகாம் முதல் ஆண்டும் படித்து வருகிறார்கள். நான் வேலைக்குச் சேர்ந்ததும் எனது குடும்பத்துக்கு இருந்த கடன்களை அடைத்துவிட்டேன். இரு சகோதரிகளையும் கல்லூரியில் படிக்க வைத்து வருகிறேன். அவர்களையும் பட்டதாரிகளாக்கிவிட வேண்டும்.
இதற்கிடையே அப்பாவுக்கு உடல்நலம் சரியல்லாதால், அவரை கடையில் வேலைபார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டு, எங்களது வீட்டையும் 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் கோவில்பட்டிக்கு மாற்றிவிட்டோம். ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக மூன்றரை ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டேன். ஒர்க் ஃபிரம் ஹோம் என்பதால் கோவில்பட்டியில் இருந்து கொண்டுதான் தற்போது வேலை பார்க்கிறேன். நேரில் வரும்படி அழைத்தால் சென்னைக்குச் செல்ல வேண்டியதிருக்கும் என்கிறார் முயன்றால் முடியாதது இல்லை என்று தன்னம்பிக்கையுடன் சாதித்துக்காட்டி இருக்கும் முதல் தலைமுறை பட்டதாரி பாலசுந்தரி.
Read in : English