Read in : English
பின்னணி பாடகர் கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் பற்றிய சித்திரத்தை மனதில் வரைய முற்படும்போது, அவர் இன்னொரு ’பாடும் நிலா’ பாலுவாகத்தான் தென்படுகிறார். ஒரு கலைஞரை இன்னொரு மேதைமையுடன் ஒப்பிடுவது நிச்சயம் தவறுதான். ஆனால், சில நேரங்களில் அப்படிப்பட்ட இக்கட்டான நிலைக்கு நாம் ஆளாக நேரிடும். இப்படியொரு ஒப்பீடு கேகேவின் மறைவுச் செய்தியைக் கேள்விப்பட்டபின்னர் தோன்றுவது இன்னும் வருத்தத்திற்குரிய விஷயம்.
ஒருகாலத்தில் எனது செல்போனில் காலர் ட்யூனாக ‘ஜி’ படத்தில் இடம்பெற்ற ‘வம்பை விலைக்கு வாங்கும் வயசுடா’ பாடல் இருந்திருக்கிறது. அந்த ஆல்பத்தில் எல்லா பாடல்களும் பிடிக்குமென்றாலும், அப்போதைய காலகட்டத்தில் எனக்கு ஆற்றலூட்டும் பாடலாக அது இருந்தது என்பதே உண்மை. போனில் அழைப்பவர்கள் எல்லாம் ‘அப்படியா.. வம்பை விலைக்கு வாங்க ஆரம்பிச்சுட்டீங்களா’ என்று தவறாமல் கேட்டிருக்கின்றனர். வித்யாசாகரின் இசையும் வைரமுத்துவின் வரிகளும் சேர்ந்து பதின்பருவத்தின் துள்ளலை அப்படியே பொங்க வைக்கும். அனுபவத்தில் வார்த்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் இவை. சத்தியமாக, இந்த பாடலை பாடியது கேகே என்று இதுநாள்வரை நான் அறிந்ததில்லை. ஆனால், அவரது குரல்தான் அந்த உற்சாகத்தின் அடித்தளமாக இருந்தது என்பது பிடிபடுகிறது.
அதே நேரத்தில், கேகே யார் என்று அறிய வைத்த சில பாடல்களையும் எனது தலைமுறை கடந்து வந்திருக்கிறது. அதில் முதலிடம் பெறுவது, யுவன்சங்கர் ராஜா இசையில் ‘7ஜி ரெயின்போ காலனி’யில் இடம்பெற்ற ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ பாடல். இதே பாடலைத் தனியாக ஷ்ரேயா கோஷலும் பாடியிருப்பார். அவரது குரல் ஆன்மாவுக்குள் ஊடுருவி அதனுள்ளிருக்கும் காதலைத் தோண்டியெடுத்தது என்றால், அந்த காதல் வெளியில் கரைகிறதே என்ற வருத்தத்தை ஊற்றெடுக்க வைத்தது கேகேவின் குரல்.
அவரது குரல் ஆன்மாவுக்குள் ஊடுருவி அதனுள்ளிருக்கும் காதலைத் தோண்டியெடுத்தது என்றால், அந்த காதல் வெளியில் கரைகிறதே என்ற வருத்தத்தை ஊற்றெடுக்க வைத்தது கேகேவின் குரல்
90’ஸ் கிட்ஸின் காதல் கனவுகளுக்கு உயிர் கொடுத்த பாடல்களில் கேகேவின் பங்களிப்பு கணிசம். ’மன்மதன்’ படத்தில் வரும் ‘காதல் வளர்த்தேன்’, ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ஸில் இடம்பெற்ற ‘பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு’, ’ஐயா’வில் வரும் ‘ஒரு வார்த்தை கேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்’, ’ஒரு கல்லூரியின் கதை’யில் வரும் ‘கண்கள் கண்டது கண்கள் கண்டது’ என்று இந்த பட்டியல் தொடரும். இந்த வரிசையில் ‘தாஸ்’ படத்தில் கேகே பாடிய ‘சக்கபோடு போட்டாளே’ பாடலுக்கு தனி இடமுண்டு. போலவே, ‘கண்ட நாள் முதல்’ படத்தில் இடம்பெற்ற ‘பனித்துளி பனித்துளி’ பாடலும் மனதுக்குள் காதலைச் சாரலாய் தூவும். இரண்டுக்கும் இசை யுவன் தான். இவ்விரண்டு பாடலையும் கேட்டுவிட்டு ‘உன்னாலே உன்னாலே’ படத்தில் வரும் ‘முதல் நாள் இன்று’ பாடலைக் கேட்டால், புதிதாகப் பிறப்பெடுத்த உணர்வு பிறக்கும். மேலே சொன்ன பாடல்களில் காதல் உண்டென்றாலும், ஒவ்வொன்றும் வெவ்வேறு தாள லயத்துடன் ஒலிப்பவை. அதற்கேற்ப, கேகேவின் குரலும் மயங்கி முயங்கி வெவ்வேறு பரிமாணத்தைக் கண்டிருக்கும். அதனாலேயே, கேகேவின் வெவ்வேறு பாடல்களைக் கேட்கும்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் அவரை ஒப்பிடலாமோ என்ற எண்ணம் தோன்றும்.
2000 தொடங்கி 2010 வரை தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிய பாடகராக இருந்தவர் கேகே. ஏ.ஆர். ரஹ்மான் தொடங்கி வித்யாசாகர், யுவன்சங்கர் ராஜா, பரத்வாஜ், ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், ஜி.வி.பிரகாஷ் என்று முன்னணி இசையமைப்பாளர்களில் பெரும்பாலானவர்களின் இசையில் பாடியிருக்கிறார்.
ஹாரிஸின் இசையில் ‘செல்லமே’யில் இடம்பெற்ற ‘காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும் வரை’ போன்ற பாடல் இப்போதும் தேனாய் இனிக்கும். அது போலவே ’காக்க காக்க’வில் வரும் ‘உயிரின் உயிரே’வை சுலபத்தில் மறந்துவிட முடியுமா? அதற்காக, வெறுமனே மெலடி, டூயட் பாடல்கள் மட்டுமே பாடியிருக்கிறார் என்று ஒரு வட்டத்திற்குள் கேகேவை அடக்கிவிட முடியாது. காரணம், ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்து ஆடவைக்கும் விதமாகவும் அவர் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
’குருவி’ பட பாடல்கள் வெளியான காலத்தில் இசைத்தட்டு தேயத் தேய கேட்ட பாடலொன்று உண்டு. அது ‘மொழமொழன்னு யம்மா யம்மா..’ பாடல். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பணியாற்றிய நேரம் அது. அப்போது, சகாக்களுடன் அமர்ந்து அப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தபோது, எங்களைக் கடந்தவர்கள் எல்லாம் வினோதமாகப் பார்த்தது இப்போதும் மனதுக்குள் வந்து போகிறது. அன்றைய காலகட்டத்தில், அந்த பாடலைக் கேட்டதும் முகம் சுளித்தால் நீங்கள் ‘ஓல்டு’ என்று முடிவு கட்டப்பட்டிருப்பீர்கள். வளைந்து நெளிந்து பாயும் நீரோடை மலையில் இருந்து ‘ஹோ..’வென்ற சத்தத்துடன் அருவியாகக் கீழிறங்குவதுபோல, அந்த பாடலில் விதவிதமான ஏற்ற இறக்கங்களுடன் நமது ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தவும் குறைக்கவும் செய்யும் கேகேவின் குரல். அது நிச்சயம் ஒரு மாயாஜாலம்தான்.
இந்த பாடலுக்கு விஜய்யும் த்ரிஷாவும் ஆடியதை பார்த்தவர்களுக்கு, உடனடியாக ‘கில்லி’யில் வரும் ‘அப்படிப் போடு.. அப்படிப் போடு..’ பாடல் நினைவுக்கு வருவது சாதாரணம். அதைப் பாடியவரும் நம்ம கேகேதான். ‘தூள்’ படத்தில் வரும் ‘குண்டு குண்டு’, ‘ரெட்’டில் இடம்பெற்ற ‘ஒல்லிக்குச்சி உடம்புக்காரி’, ‘சாமி’யில் வரும் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’. ‘அந்நியன்’ படத்தில் வரும் ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’, ’சிவகாசி’யில் இடம்பெற்ற ‘தீபாவளி தீபாவளி..’, ‘தீபாவளி’யில் இடம்பெற்ற ‘டோலு பாஜே’, ’இது கதிர்வேலன் காதல்’லில் வரும் ‘சர சர சரவெடி’ உட்பட வேறு சில பாடல்களின் வழியே நம் உடலில் அணுஅணுவாக ஆட்டத்தைப் புகுத்தியவர் கேகே.
இவரது முதல் பாடலும் கூட இதே ரகம்தான் என்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயம். வெறுமனே விளம்பரப் படங்களில் பாடிக்கொண்டிருந்த கேகேவை முதன்முதலாக பின்னணி பாட வைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது ‘காதல் தேசம்’ படத்தில் ’க..க..க.. கல்லூரி சாலை’ என்ற பாடலைப் பாடி இளைய தலைமுறையின் கலர்புல் கனவுகளுக்கு ஒலியுரு தந்தவர் கேகே தான்.
ஆனாலும், அவரை ஒரு பாடகராக அடையாளம் காட்டியது ‘மின்சார கனவு’ படத்தில் வரும் ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே’ பாடல். கொஞ்சம் பாடல் கொஞ்சம் வசனம் என்றிருந்த இப்பாடல் ‘தங்கத்தாமரை மகளே’ தந்த தேசிய விருதுக்கு முன் சாதாரணமாகிப் போனது. தொடர்ந்து ரஞ்சித் பரோட் இசையில் ‘விஐபி’யில் ‘ஈச்சங்காட்டு முயல் ஒண்ணு’ பாடலில் காமத்தீயைப் பற்ற வைத்திருப்பார் கேகே. இந்த வரிசையில், ஆகோஷ் இசையில் இன்றுவரை வெளியாகாமல் இருக்கும் ‘கோடீஸ்வரன்’னின் ‘அல்வா பாப்பா’ பாடலையும் ’நான் கீழ்நாட்டு கிளியோபாட்ரா’ பாடலையும் கூடச் சேர்க்கலாம்.
2001இல் ஹாரிஸ் ஜெயராஜ் அறிமுகமான ‘12பி’யில் ‘லவ் பண்ணு’, ‘முத்தம் முத்தம் முத்தம்மா’ பாடல்களின் மூலமாகப் பிற இசையமைப்பாளர்களின் குட்புக்கிலும் தமிழ் திரையிசை ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். அன்று முதல் சுமார் இருபதாண்டு காலம் தொடர்ச்சியாகப் பல விமானநிலையங்கள் ஏறி இறங்கிப் பாடி வந்திருக்கிறார் கேகே.
ஏ.ஆர். ரஹ்மான் தொடங்கி வித்யாசாகர், யுவன்சங்கர் ராஜா, பரத்வாஜ், ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், ஜி.வி.பிரகாஷ் என்று முன்னணி இசையமைப்பாளர்களில் பெரும்பாலானவர்களின் இசையில் பாடியிருக்கிறார்
2010 காலகட்டத்தில் அனிருத் தலைமுறை தலையெடுத்தபிறகு தமிழ் திரையுலகில் கேகேவின் குரல் மெல்ல மங்கிப் போனது. அதன்பிறகு கோக் ஸ்டூடியோ, எம்டிவி அன்பிளக்டு மற்றும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றார். அதேநேரத்தில் இந்தியில் விஷால் பரத்வாஜ், அமித் த்ரிவேதி, சங்கர் இஷான் லாய், ப்ரீதம், விஷால் சேகர், அங்கித் திவாரி, அர்மான் மாலிக் என்று பல இசையமைப்பாளர்களின் படைப்புகளில் இடம்பிடிப்பது தொடர்கதையானது.
இந்த காலகட்டத்தில் இணை இசையமைப்பாளராக, ஆல்பம் கம்போஸராக விளங்கியிருக்கிறார் கேகே. ‘கலோனியல் கஸின்ஸ்’ லெஸ்லி லீவிஸின் இசையில் இவர் பாடிய ‘பால்’ ஆல்பம், ஒரு தலைமுறையின் பதின்பருவத்து கனவுலகத்துக்கு உயிர் தந்தது என்றால் அது மிகையல்ல.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி மொழிகளில் பின்னணி பாடியிருக்கும் கேகே டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். இவரது பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணகுமார் குன்னத் எனும் கேகே, தொண்ணூறுகளில் பின்னணி பாடகராக வேண்டுமென்ற தனது கனவைத் தேடி ஓடத் தொடங்கினார். முறையான பயிற்சியை கேகே பெற்றதில்லை என்று சொன்னாலும், கல்லூரிப் பருவம் அவருக்குள் இருந்த இசைத்திறமையை வளர்த்தெடுத்தது. அப்போது கிடைத்த ஊக்கமே அவரை திரையுலகை நோக்கிப் பயணிக்கச் செய்தது. அதற்கான வாசலாக விளம்பரப் பட வாய்ப்புகள் அமைந்தன.
அன்று முதல் நேற்று (மே 31, 2022) வரை கேகே தனது கனவுப் பயணத்தைத் தொடந்து வந்திருக்கிறார். கொல்கத்தாவில் நஸ்ருல் மஞ்சா அரங்கில் குருதாஸ் கல்லூரி மாணவர்களுக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்றவர், தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பாடல்களைப் பாடி இளங்கூட்டத்தை ஆட்டுவித்திருக்கிறார். அதன்பிறகான ஒரு மணி நேரத்தில் அவரது உயிர் இந்த பூமியை விட்டு மறைந்திருக்கிறது.
துக்கம் தொண்டையை அடைத்தாலும், அவர் பாடிய பாடல்களைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் நினைவுகூர்கின்றனர் ரசிகர்கள். இதனைக் காண்கையில், இந்தியா முழுக்க கேகேவுக்கு ரசிகர்கள் உண்டென்பது தெளிவாகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இசையுலகில் இளமையோடு பவனி வந்தவர் கேகே. குரல் மட்டுமல்ல, அவரது தோற்றத்திற்கும் இந்த பாராட்டு பொருந்தும். உள்ளத்தில் இளமை பொங்கினால் மட்டுமே அது வெளியிலும் நிறையும். கேகேவின் மறைவுக்குப் பிறகு, அவர் வெளிப்படுத்திய இளமையும் உத்வேகமும் இனி அவரது படைப்புகளின் வழியே நம்முள் பாயும்!
Read in : English