Read in : English
சமகாலத்தில் இருக்கும் கட்சிகளின் பெயர், வரலாறு, அதன் தலைவர்கள் மட்டுமல்லாது தற்போதிருக்கும் அரசியல் சூழல் குறித்தும் திரையில் பேச முடியாது என்ற நிலையே நெடுங்காலமாக இருந்து வருகிறது. ரொம்பவும் ஆர்வப்பட்டால், ஆட்சியில் இல்லாத கட்சி அல்லது கட்சிகளைப் பற்றியும், கடந்த கால அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு நிகழ்வுகளைப் பற்றியும் திரைப்படம் எடுக்க முடியுமென்பதே நியதியாக இருந்து வருகிறது. தமிழில் மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் இதுவே நிலை. இதனை மீறுவதோடு மக்கள் சார்ந்த, அவர்களது குரலுக்கு வலு சேர்க்கிற, மிக நேர்மையான பார்வையை முன்வைத்து ‘மக்களுக்கான அரசியலை’ பேசுகிறது பிருத்விராஜ், சூரஜ் வெஞ்சாரமூடு, மம்தா மோகன் தாஸ், இளவரசு, கிட்டி உள்ளிட்டோர் நடிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியிருக்கும் ‘ஜன கண மன’ மலையாளத் திரைப்படம்.
மக்கள் சார்ந்த, அவர்களது குரலுக்கு வலு சேர்க்கிற, மிக நேர்மையான பார்வையை முன்வைத்து ‘மக்களுக்கான அரசியலை’ பேசுகிறது ‘ஜன கண மன’ மலையாளத் திரைப்படம்.
குறிப்பிட்ட சாதியினரை அடக்கி ஒடுக்கும் மனோபாவம் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் நிறைந்திருக்கிறது. அது கல்வி நிலையத்தில் தலைவிரித்தாடினால் என்னவாகும் என்பதற்கு ரோஹித் வெமூலாவின் மரணமே சாட்சி. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுப்படிப்பை மேற்கொள்பவர்கள் பேராசிரியர்களால், சக மாணவர்களால், உதவித்தொகையை இல்லாமலாக்கிய அரசினால் வாழ்வின் விளிம்பை நோக்கிச் செல்கின்றனர். இப்பிரச்சினையை விலாவாரியாகப் பேசுகிறது ‘ஜன கண மன’.
ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி கொலை செய்யப்படுவது குறித்தும், அதில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்தபிறகு அவர்கள் கொலை செய்யப்பட வேண்டுமென்று ‘மிலிட்டரி’ மனோபாவத்துடன் மக்கள் குரலெழுப்புவதும் சமீபகாலமாக பரவலாகி வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் தெலங்கானாவிலுள்ள ஷம்சாபாத்தில் நள்ளிரவில் ஒரு பெண் இவ்வாறு கொல்லப்பட்டதும் அக்கொடுமையைச் செய்ததாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சில தினங்களில் ‘என்கவுண்டர்’ செய்யப்பட்டதும், இவ்விரண்டுக்கும் நடுவே கைதானவர்களை கொல்ல வேண்டுமென்று காவல் நிலையம் முன்பாக பெண்ணிய அமைப்புகள் குரல் எழுப்பியதும் நிகழ்ந்தன. நிர்பயா விவகாரத்திற்கு ஈடாக ஊடகங்களின் பெருங்கவனத்தை அள்ளிக்கொண்டது இவ்விவகாரம். இதனை நினைவுபடுத்தும் வகையில், ஒரு பெண் ஆசிரியரின் மரணத்தையும் அதில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டவர்கள் போலி என்கவுண்டருக்கு உள்ளாவதையும் சொல்கிறது ‘ஜன கண மன’.
மேலே சொன்ன இரு சம்பவங்களையும் இணைத்து, அவற்றினால் ஒரு அரசியல் கட்சியும் அதன் தலைவரும் ஆதாயம் பெறுவதாகக் காட்டுகிறது இத்திரைப்படம். இத்தகைய காட்சிகள் இந்தியத் திரைப்படங்களில் இடம்பெறுவது புது விஷயமல்ல. ஆனால், உண்மை அல்லது குறிப்பிட்ட சதவிகிதத்தில் உண்மை கலக்கப்பட்ட இது போன்ற தகவல்கள் ஊடகங்களில் எத்தகைய இடத்தைப் பெற வேண்டும், எந்த சூழலில் அவை வெளியாக வேண்டும், பொதுமக்கள் மத்தியில் அதற்கு எத்தகைய எதிர்வினை உருவாகும் என்பதையெல்லாம் திட்டமிடுவது யார் என்ற கேள்விக்கு ‘கொஞ்சமாக’ பதில் சொல்கிறது ‘ஜன கண மன’.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து உருவாக்கப்படும் கற்பிதங்கள் மூலமாக, திரை மறைவில் யாரோ சிலர் ஆதாயம் பெறுகின்றனர் என்பதையும் உரக்கச் சொல்கிறது. இதனை நாயகன் திரையை நோக்கி வசனமாகப் பேசுகிறாரா என்றால், ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக ஒரு களத்தையும் சில கதாபாத்திரங்களையும் கண் முன்னே காட்டுவதன் மூலமாக மேலே சொன்ன அரசியல் கருத்துகள் சிறிதும் பிரச்சாரமாகத் தென்படாமல் இருப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்கிறது ‘ஜன கண மன’ குழு.
திரைக்கதையின் தொடக்கத்தில் பிருத்விராஜுக்கு நீதிமன்றம் தண்டனை அளிக்கும் காட்சி வருகிறது. அதன்பிறகு இடைவேளையில் நரைத்த முடியுடன் ஒரு வழக்கறிஞராக வருகிறார். இடைப்பட்ட பகுதி முழுக்க சபா மரியம் (மம்தா மோகன்தாஸ்) எனும் மத்தியப் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது குறித்த விசாரணையைச் சுற்றி வருகிறது. அவர் எப்படி கொல்லப்பட்டார் என்று போலீஸ் கண்டறிவதும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் என்கவுண்டருக்கு உள்ளாவதும் முதல் பாதியில் நிறைந்திருக்கிறது.
மக்களின் கருத்து என்ற பெயரில் பாசிசம் அகலக்கால் விரிப்பதை சொல்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட போதிலும் மக்கள் எதை அணிய வேண்டும், என்ன உண்ண வேண்டும், எதை ஊடகங்களில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை யாரோ சிலர் தீர்மானிக்கின்றனர் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது.
இரண்டாம் பாதியில் கொல்லப்பட்டவர்கள் உண்மையிலேயே சபாவின் மரணத்திற்கு காரணமானவர்களா என்பதை விலாவாரியாக விளக்குகிறது பிருத்விராஜ் ஏற்றிருக்கும் அரவிந்த் பாத்திரம். அப்போதும் சொல்லப்படும் ஒவ்வொரு விளக்கமும் தியேட்டரில் பார்வையாளர்களின் கைத்தட்டலை அள்ளுகிறது.
’கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ எனும் அரதப்பழசான ‘நீதி’ ஊடகங்களில் எப்படியெல்லாம் மீறப்படுகிறது என்பது இரண்டாம் பாதியில் பிருத்விராஜ் மூலம் விளக்கப்படுகிறது. கூடவே, ‘ஒருத்தரை பார்த்தா அவங்க குற்றவாளியா இல்லையான்னு தெரியாதா’ என்று நீதிபதி பாத்திரம் பேசும்போது சமூகத்தில் நிலவும் ‘அடையாள அரசியல்’ கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மக்களின் கருத்து என்ற பெயரில் பாசிசம் அகலக்கால் விரிப்பதை சொல்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட போதிலும் மக்கள் எதை அணிய வேண்டும், என்ன உண்ண வேண்டும், எதை ஊடகங்களில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை யாரோ சிலர் தீர்மானிக்கின்றனர் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. ஜன கண மன’ முன்வைக்கும் பல்வேறு அரசியல் கருத்துகளில் மிக முக்கியமானதாக நான் கருதுவது இதைத்தான். நடுநிலை அல்லது சார்புத்தன்மை அற்றிருத்தல் அருகிவிட்ட காலகட்டத்தில், இதனை நம் மனதில் பதிய வைக்கிறது.
அந்த வகையில், பார்வையாளர்கள் தம்மைச் சுற்றி நிகழ்வதை பகுத்தறிய முயல வேண்டும் என்பதே ’ஜன கண மன’வின் நோக்கமாகத் தென்படுகிறது.
‘ஜன கண மன’வின் டீசரில் போலீஸ் அதிகாரி சூரஜ் வெஞ்சாரமூடுவை விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பிருத்விராஜ் கோபப்படுத்தும் காட்சி இடம்பெற்றிருந்தது. ட்ரெய்லரில் தமிழ் பேசும் ஒரு அரசு அலுவலகத்திற்குள் சென்று அலுவலரைப் பார்த்துவிட்டு பிருத்விராஜ் வெளியே வருகையில் அங்கு குண்டு வெடிக்கும் காட்சி இருந்தது. இவ்விரு காட்சிகளும் ‘ஜன கண மன’ படத்தில் இல்லை. இவை ‘ஜன கண மன’வின் அடுத்த பாகத்தில் இடம்பெறும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் பிருத்விராஜ்.
அதாகப்பட்டது, முதல் பாதி முழுக்க சபா எனும் பாத்திரம் வல்லுறவுக்கு ஆளாகி கொல்லப்பட்டது குறித்த விசாரணையாக நீள்கிறது. இரண்டாம் பாதியில் அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை என்பதை நீதிமன்றத்தில் அரவிந்த் பாத்திரம் நிரூபிக்க முயல்வதைச் சொல்கிறது. வெவ்வேறு திசையில் செல்லும் இவ்விரு கதைகளுக்கு பாலமாக விளங்குகிறது சூரஜ் வெஞ்சாரமூடு ஏற்றிருக்கும் ஏசிபி சஜ்ஜன் குமார் பாத்திரம். அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் ஒட்டுமொத்த சமூகத்தின் போக்கை தீர்மானிக்கின்றனர் என்ற வாதத்திற்கு வலு சேர்ப்பது இப்பாத்திரம்தான். அந்த வகையில் சமகால பிரச்சினைகள் மட்டுமின்றி நீண்டகாலமாக நம் சமூக அரசியல் களத்தில் நிலவிய போக்கையும் கேள்விக்குட்படுத்துகிறது இத்திரைப்படம்.
அந்த வகையில் சமகால பிரச்சினைகள் மட்டுமின்றி நீண்டகாலமாக நம் சமூக அரசியல் களத்தில் நிலவிய போக்கையும் கேள்விக்குட்படுத்துகிறது இத்திரைப்படம்.
ஆனால், ஒரு திரை வடிவத்திற்குள் இக்கதை அடங்கியதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. மம்தா மோகன்தாஸ், அவரது தாயாக நடித்த சாதனா, சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் ஒரு மாணவியின் தந்தையாக வரும் இளவரசுவை சுற்றியே நகர வேண்டிய திரைக்கதை தடம் மாறி இரண்டாம் பாதியில் பிருத்விராஜை சுற்றி சுழல்கிறது. இதனால் அவர் யார், எதற்காக இப்படியொரு செயலில் இறங்குகிறார் என்ற கேள்விகளுக்கு திரைக்கதையில் பதில்கள் இல்லை. அவை அனைத்தும் அடுத்த பாகத்தில் இடம்பெறும் என்ற பதிலே கிடைக்கிறது. உண்மையில், ஒரு திரை வடிவமாக ‘ஜன கண மன’ தோற்கும் இடம் இதுதான்.
படத்தின் நீளம் குறித்த புரிதல் படப்பிடிப்பின்போது இல்லாமல் போனதோ அல்லது கேஜிஎஃப் போல ஒரே கதையை வெவ்வேறு திசைகளுக்கு நீட்டித்து அடுத்தடுத்த பாகங்களை வெளியிடும் எண்ணமோ இதற்குக் காரணமாக இருக்கலாம். படம் முடிகையில் அது மட்டுமே நமக்குத் துருத்தலாகத் தெரிகிறது.
ஆனாலும், இக்குறைகளைத் தாண்டி சமகாலப் பிரச்சினைகளை ஒரு குடிமகன் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை உணர்த்திய வகையில் அரசியல் படம் எடுப்பவர்களுக்கான பாடமாகவும் அமைந்திருக்கிறது ‘ஜன கண மன’. மிக முக்கியமாக ‘நாங்க நினைச்சா நோட்டுக்கும் தடை போடுவோம்; ஓட்டு போடறதையும் தடை பண்ணுவோம்’ என்றொரு வசனம் இதில் வருகிறது. கொஞ்சம் கூட ‘ம்யூட்’ செய்யாமல் இப்படியொரு வசனத்தை இடம்பெற்றச் செய்ததற்கு, திருவனந்தபுரத்தில் இருக்கும் தணிக்கை வாரியப் பிரிவுக்கு ஒரு ‘கும்பிடு’வை பார்சலில் அனுப்பி வைக்கலாம். இப்படியொரு தைரியத்தை தராமல், பெறாமல், கருத்துச் சுதந்திரத்தை செயலில் வெளிப்படுத்தாமல் எப்படி ஒரு நேர்மையான அரசியல் சினிமாவை உருவாக்க முடியும்?
Read in : English