Read in : English
இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டிற்கும் வடகோடியில் இருக்கும் காஷ்மீருக்கும் கலாச்சாரத் தொடர்பு இருக்கிறதா, என்ன? ஆம் என்கிறார் இளம் ஆராச்சியாளர் பிரதிக் முரளி.
“காஷ்மீர் தத்துவ ஆராய்ச்சி ஸ்தலமாக இருந்தது. அதனுடன் தென்னிந்தியாவின் இரண்டு பெரிய தத்துவஞானிகள் தொடர்பில் இருந்தார்கள். காஞ்சிபுரமும், காஷ்மீரும் ‘காடிகாஸ்தானங்கள்’ என்றறியப்பட்டன. அந்த இரண்டு இடங்களுக்கும் பல பிராந்தியங்களிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் பல்வேறு கலைகளைக் கற்க விஜயம் செய்தனர்,” என்றார் முரளி.
ராமானுஜரின் புனித வாழ்க்கை வரலாறு மணிப்பிரவாள மொழியில் (தமிழும் சமஸ்கிருதமும் கலந்த கிரந்த லிபியில் எழுதப்பட்ட ஒரு கலவைமொழி) எழுதப்பட்டிருக்கிறது. வேதாந்தம் பற்றிய சில பிரதிகளைக் கண்ணுற ராமானுஜர் காஷ்மீர்க்கு மேற்கொண்ட பயணத்தை அந்த நூல் விவரிக்கிறது. “வேதாந்தக் கோட்பாடு பற்றி தான் எழுத உத்தேசித்த ஓர் ஆராய்ச்சிக்காக அவருக்கு ’போதயான விருத்தி’ என்னும் நூல் தேவைப்பட்டது. அதை வாசித்து ஆலோசனைகள் பெற இமாலயத்திற்கு அவர் நடந்தே பயணம் சென்றார். ராமானுஜருக்கு முன்பு வாழ்ந்த ஆதி சங்கராச்சார்யாவும் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்த அறிஞர்களுடன் அளவளாவினார் என்று அவரைப் பற்றிய புனிதவரலாறு சொல்வது சுவாரஸ்யமானது,” என்றார் பிரதிக். ஒன்றிய அரசு எடுத்த ‘ஏக் பாரத் ஸ்ரேஷ்த பாரத்’ என்ற முனைப்பின்படி ஜம்மு இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் அவர் திங்கள் அன்று “தமிழ்நாட்டுக்கும் ஜம்மு, காஷ்மீருக்கும் இடையிலான கலாச்சார, வரலாற்று ஒற்றுமைகள்,” என்ற தலைப்பில் பேசியபோது மேற்கண்ட விசயங்களைப் பகிர்ந்துக்கொண்டார்.
தமிழ்ச்சங்க இலக்கியம், காஷ்மீரின் ‘நிலமாதா புராணம்’ மற்றும் ‘ராஜதரங்கிணி’ நூல்கள் ஆகியவற்றின் சரித்திரத்தன்மையைச் சொல்லுகின்ற மூலங்களைப் பற்றிய விவாதத்தோடு உரை ஆரம்பமானது. 12-ஆம் நூற்றாண்டுப் பிரதியான ‘ராஜதரங்கிணி’ சோழநாட்டையும், அதன் மக்களைப் பற்றியும் விவரித்துப் பேசுகின்றன. அந்த விவரணைகளைப் பற்றி பிரதிக் பேசினார்.
“ராஜதரங்கிணி மிஹிரகுலா என்னும் அரசனைப்பற்றிப் பேசுகிறது. தன்மனைவி இலங்கை அரசனின் சித்திரங்கள் பொறித்த ஆடையை அணிந்ததால் கோபப்பட்ட மிஹிரகுலா இலங்கைமீது படையெடுத்து அந்நாட்டு மன்னனை வெற்றி கொண்டதையும் ராஜதரங்கிணி பேசுகிறது,” என்றார் அவர்.
‘நிலமாதா புராணம்’ (6-ஆம் அல்லது 8-ஆம் நூற்றாண்டு பொ.ஆ) காஷ்மீரின் சரித்திர, பூகோள மற்றும் மதம்சம்பந்தப்பட்ட தகவல்களை அள்ளித் தருகிறது.
கல்ஹனா என்னும் காஷ்மீரி சரித்திர ஆசிரியர் சமஸ்கிருதத்தில் 12-ஆம் நூற்றாண்டில் எழுதிய ’ராஜதரங்கிணி’ இந்தியாவின் வடமேற்குப் பகுதியின் வரலாற்றை, குறிப்பாக காஷ்மீர் மன்னர்களைப் பற்றி, பதிவு செய்திருக்கிறது. “ராணாதித்யா என்னும் காஷ்மீர் அரசன் சோழநாட்டுக்குப் பயணித்து கடலில் பிறந்த சோழ இளவரசி ரதிசேனாவை மணந்த கதையைப் போன்று ஏராளமான கதைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தக் கதைகள் எல்லாம் காஷ்மீரி மொழி மூலங்களில் கிடைக்கிறது என்றாலும், தெற்கிலிருந்து இதற்கான ஆதாரங்கள் இல்லை,” என்றார் அவர்.
காஷ்மீரிலிருந்து வந்த புனித யாத்ரீகர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு நன்கொடைகள் கொடுத்ததாகச் சொல்லும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டுக்கும், காஷ்மீருக்கும் இடையே இருந்த கலாச்சாரப் பரிவர்த்தனைகளுக்கு நல்ல சாட்சிகள். “தமிழ்நாட்டுக்குக் காஷ்மிரிலிருந்து பயணிகள் வந்தனர் என்று இரண்டு கல்வெட்டுக்கள் – திருநெல்வேலியில் ஒன்றும், கிருஷ்ணகிரியில் மற்றொன்றும் – சொல்கின்றன. ஆத்ரேயா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு காஷ்மீர் மனிதன் ‘ஏகம்பமுடையான்’ என்ற தமிழ்பெயரைக் கொண்டிருந்தான் என்று ஒரு 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு சொல்வது விசித்திரமாக இருக்கிறது,” என்றார் பிரதிக்.
“ஷ்மீரிலிருந்து வந்த சோமதேவாவும் அவரது மனைவியும் திருநெல்வேலிக்கருகே இருக்கும் கைலாசநாதர் கோயிலுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்|று இன்னொரு கல்வெட்டு சொல்கிறது. கோயில் தர்மகர்த்தாக்கள் அந்த மானியத்தைப் பற்றிக் கல்வெட்டில் பொறித்து வைத்தார்கள். இந்தமாதிரியான மதரீதியிலான, கலாச்சார ரீதியிலான உறவுகளைப் பற்றிய செய்திகள் கல்வெட்டு மூலங்களிலிருந்துதான் பெறக்கிடைக்கின்றன.”
கலை, கவிதையியல், சைவம், வைஷ்ணவம், பெளத்தம், சுஃபியியல் ஆகிய விசயங்களில் காஷ்மீரின் மற்றும் தமிழ்நாட்டின் பங்களிப்புகள் பற்றி அந்த உரையில் பேசப்பட்டன. அந்தச் சொற்பொழிவு காஷ்மீரின் திரிக சைவம், தமிழ்நாட்டின் சைவச்சித்தாந்தம் ஆகியவற்றின் ஆதிமூலங்கள் பற்றி அறிமுகம் செய்துவைத்தது. மேலும் ’பஞ்சராத்ர வைஷ்ணவம்’ தமிழ்நாட்டில்
பிறந்ததா, இல்லை காஷ்மீரில் பிறந்ததா என்ற விவாதம் பற்றிய அறிமுகத்தையும் கொடுத்தது. ஏனென்றால் இரண்டு பக்கங்களிலும் அதற்கான சான்றுகள் இருக்கின்றன.
மகாபாரதத்தில் உள்ள குறிப்புகள் பற்றிப் பேசும்போது, பிரதிக் இப்படிச் சொன்னார்: “மகாபாரதத்தில் போர் வர்ணனையில் காஷ்மீர் மன்னர்கள் பற்றி சுத்தமாக எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் பாண்டவர்களோடு சேர்ந்து போராடினர் என்று தமிழகத்துப் பாண்டிய அரசர்கள் பற்றி அந்த இலக்கியம் பேசுகிறது. தாமிர ஓடுகள் மற்றும் கல்வெட்டுகள் போன்ற பாண்டியர்களின் சரித்திரச் சான்றுகள், மகாபாரதத்தில் சொல்லப்பட்டது போல, அவர்களும் குருஷேத்திரப் போரில் பங்கெடுத்ததாகச் சொல்கின்றன.”
ஆனால் காஷ்மீரை ஆண்ட முதலாம் கோனந்தா மதுராப்போரில் ஜராசந்தனுக்கு (கிருஷ்ணனால் கொல்லப்பட்ட கம்சனின் மாமனார்) ஆதரவாகப் போரிட்டான் என்று ‘நிலமாதா புராணம்’ மற்றும் ‘ராஜதரங்கிணி’ ஆகிய பிற்காலத்து காஷ்மீரிப் படைப்புகள் சொல்கின்றன. யமுனை நதிக்கரையில் நடந்த போரில் கிருஷ்ணனின் படையை எதிர்த்துப் போரிட கோனந்தாவின் உதவியை ஜராசந்தன் கேட்டிருந்தான். கடுமையான அந்தப் போரில் கிருஷ்ணாவின் மூத்த சகோதரர் பலராமன் காஷ்மீர் அரசனைக் கொன்றான் என்று கல்ஹனா விவரிக்கிறார்
கோனந்தாவின் மரணத்திற்குப் பின்பு அவனது மகன் தாமோதரா அரியணை ஏறினான். துயரத்தில் இருந்த தாமோதரா தன் தந்தையைக் கொன்ற விர்ஷினியின் இனமக்களைக் கருவறுக்க வேண்டும் என்று பழியுணர்வோடு காத்திருந்தான். காந்தாரா அரசன் தன் மகளுக்காகச் சுயம்வரம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தான். அதில் கலந்துகொள்ள வந்த விர்ஷினி படையைத் தாமோதரா தாக்கினான். பின்பு கிருஷ்ணனோடு தொடர்ந்த சண்டையில் தாமோதரா கொல்லப்பட்டான்.
அப்போது காஷ்மீரில் தாமோதராவின் மனைவி யசோவதி கருவுற்றிருந்தாள். கிருஷ்ணன் அவளை அரியணையில் அமர்த்தி மகாராணியாக்கி, பிராமணர்களை அவள் ஆட்சியை ஒப்புக்கொள்ள வைத்தான். “பின்பு அரசனான அவளது மகன் குழந்தையாக இருந்தபடியால் அவனால் போர்களில் ஈடுபட முடியவில்லை. கிரேக்க எழுத்தாளர் மெகஸ்தெனீஸ் இந்தியாவைப் பற்றி எழுதிய தன்படைப்பில் மதுரை ராஜ்யம் பாண்டியோ என்னும் ஒரு பெண்மணியால் ஆளப்பட்டது என்று சொல்லியிருக்கிறார் என்பது சுவாரஸ்யமான விசயம். இதிலிருந்து தமிழ்நாட்டிலும் காஷ்மீரிலும் தொன்மப்புகழ் மிக்க பெண்கள் சக்ரவர்த்தினிகளாகக் கொண்டாடப் பட்டிருகிறார்கள் என்று தெரிகிறது.
Read in : English