Read in : English
தமிழகத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இனத்தில் உள்ளது நரிக்குறவர் இனம். இந்த மக்கள் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கம் வினோதமானது. சொந்தக் குடியிருப்பு தவிர, வேறு எங்கும் இரவில் அவர்கள் தங்குவதில்லை. இதை, முக்கிய சமூகக் கட்டுப்பாடாகவே கடைப்பிடித்து வந்தது அந்த இனம். குழந்தைகளுக்குக்கூட இந்தக் கட்டுப்பாட்டில் விலக்கில்லை.
பன்நெடுங்காலமாக நிலவும் இந்தக் கட்டுப்பாட்டை, நரிக்குறவர் இனத்தில் மூன்று பேர், குடியிருப்பு நிலத்துக்கான போராட்டத்தில் கைதாகி, 15 நாட்கள் சிறையில் அடைபட்டதன் மூலம் தகர்ந்தது. வாழ்வில் முதன்முறையாக, வீட்டு வசதிக்காக சொந்தக் குடியிருப்பை துறந்து, சிறையில் வாழ்ந்தனர். தமிழக நரிக்குறவர் இன மக்கள் வரலாற்றில், குடியிருப்புக்காக நடந்த முதல் போராட்டம் இது.
சென்னை அடுத்த ஆவடியில், 1981இல் நடந்த இந்தப் போராட்டம் வெற்றியடைந்தது. அதன் பலனாக கிடைத்த நிலத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மாணவியர், திவ்யா, ப்ரியா, தர்ஷினி ஆகியோர், குடியிருப்பு இடத்தில் அடிப்படை வசதி கேட்டு சமீபத்தில் முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.
அது சமூக வலை தளங்களில் வைரலானது. இதையடுத்து அவர்களை அழைத்து, கனிவுடன் குறைகளை கேட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உதவி செய்வதாக உறுதியளித்ததுடன் அந்தக் குடியிருப்பை பார்வையிட வருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

சென்னை அடுத்த ஆவடியில், 1981இல் நடந்த இந்தப் போராட்டம் வெற்றியடைந்தது. அதன் பலனாக கிடைத்த நிலத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மாணவியர், திவ்யா, ப்ரியா, தர்ஷினி ஆகியோர், குடியிருப்பு இடத்தில் அடிப்படை வசதி கேட்டு சமீபத்தில் முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். (Photo credit: Screen grab of the video posted on M K Stalin twitter page
‘நரிக்குறவர் இனமக்கள், ஓரிடத்தில் நிலையாக வசிப்பவர்கள் அல்ல… சுற்றிக்கொண்டே இருப்பவர்கள். அவர்களுக்காக வீடோ, குடியிருக்க நிலமோ வழங்குவது பயன் தராது’ என்று தமிழக ஆட்சியாளர்கள் கூறி வந்தனர். இது தவறான கூற்று என்பதை ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு மாணவியர், முதல்வரை சந்தித்த நிகழ்வு நிரூபித்துள்ளது. போராடிப் பெற்ற நிலத்தில், வீடமைத்து, 40 ஆண்டுகளாக வசித்து வருவதை வெளிப்படுத்துகிறது. நரிக்குறவர் இன மக்கள் ஒரே இடத்தில் வசிப்பதை உறுதி செய்கிறது.
தமிழக நரிக்குறவர் பேரவை என்ற அமைப்பு, 1980இல் துவங்கப்பட்டது. அடிப்படை தேவைகளான வீட்டு வசதி, கல்வி, பழங்குடி இன பட்டியல் சாதி சான்று பெறுவதை முதன்மை நோக்கமாக கொண்டு அரசை வலியுறுத்தி வந்தது. நரிக்குறவர் இனமக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் கூட்டங்கள், பேரணிகள் நடத்தி கோரிக்கையை வலியுறுத்தியது.
சென்னை அருகே ஆவடி, டேங்க் பேக்டரி சாலை, போலீஸ் குடியிருப்பு அருகே, நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் 1981இல் குடியிருப்பு அமைத்திருந்தனர். அதைக் காலி செய்ய வலியுறுத்தினர் போலீசார். பிடிவாதமாக மறுத்தனர் நரிக்குறவர் இன மக்கள். அதிகாரத்தை மதிக்காத நரிக்குறவர்களை வழிக்கு கொண்டு வர, போலீஸ் நிலையம் அழைத்து சென்று, அவர்கள் பாணியில் கவனித்தனர். கைது செய்வதாக பயமுறுத்தினர்.

குடியிருப்புக்காக நடத்திய போராட்டத்தில் 15 நாள் சிறை தண்டனைக்கு பின், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நரிக்குறவர்கள். உடனிருப்பவர் நரிக்குறவர் பேரவை அமைப்பாளர் போதி தேவவரம்.
எதற்கும் அசையாது, வசித்த இடத்தை விட்டுத்தர மறுத்தனர் நரிக்குறவர்கள். அந்த நிலத்தைப் பிரித்து பட்டா வழங்கக் கோரிக்கை வைத்தனர். ஆத்திரம் அடைந்த போலீசார், மூன்று பேரை சிறையில் அடைத்தனர். வழக்கமாக, நரிக்குறவர் இனத்தவர், தங்கள் குடியிருப்புக்கு வெளியே ஓர் இரவு கூட தங்குவதில்லை. இந்த கட்டுப்பாட்டை, மூன்று பேர் சிறையில் அடைபட்ட நிகழ்வு தகர்த்தது.
நரிக்குறவர் இன மக்கள். கிட்டத்தட்ட, 40 ஆண்டுகளுக்கு பின், அதே குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி மூன்று சிறுமியர் குரல் எழுப்பியுள்ளனர்.
போலீஸ் எதிர்பார்ப்புக்கு மாறாக, பிரச்சினை வேறு திசையில் திரும்பியது. கைது செய்யப்பட்டிருந்த நரிக்குறவர்கள் யாதகிரி, சந்திரன், ஜெகதீசன் ஆகியோர், பூந்தமல்லி கிளை சிறையில் 15 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களைப் பார்க்க, நரிக்குறவர் இன மக்கள் தினமும் திரண்டு வந்தனர்.
பூந்தமல்லி பஸ்நிலையத்தில் துவங்கி, சிறைச்சாலை வரை பேரணி நடத்தி கோரிக்கையை வலியுறுத்தினர். சிறையில் அடைபட்டிருந்தவர்களைச் சந்தித்துப் பேச தினமும் சிறைத்துறையில் பலர் மனு போட்டனர், இது, அரசுக்கும், நீதித்துறைக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. வெளியூர்களில் இருந்து வந்த நரிக்குறவர் இனமக்கள், பூந்தமல்லி சிறை அருகே தற்காலிகக் குடியிருப்பு அமைத்து, கோரிக்கையை வலியுறுத்தினர்.
வேறு வழியின்றி, 15 நாட்களில் மூன்று பேரையும் விடுதலை செய்தது நீதிமன்றம். விடுதலையான அன்று, சிறை வாசலில் பேரணியும், தொடர்ந்து பாராட்டுக் கூட்டமும் நடத்தப்பட்டது. ஏராளமான நரிக்குறவர் இன மக்கள் அங்கு திரண்டிருந்தனர். போராட்டம் தொடர்ந்தது.
அப்போதைய அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலி நாளேட்டில், நரிக்குறவர் இன மக்களுக்கு ஆதரவாகக் கட்டுரை எழுதினார். சினிமாவில் நரிக்குறவர் வேடமிட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் ஆடிப்பாடும், ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க…’ என்ற பாடலின் பொருளை முன்னிலைப்படுத்தி, அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
பல வகையிலும் நெருக்கடி ஏற்பட்டதால், பணிந்தது அரசு. ஆவடியில் நரிக்குறவர் இன மக்கள் தங்கியிருந்த நிலத்தை அவர்களுக்கே தர சம்மதித்தது. அந்த இடம் போலீஸ்துறைக்குச் சொந்தமாக இருந்தது. அதை வருவாய்த்துறை நிலமாக, மாற்றி, அங்கு குடியிருந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த, 22 குடும்பங்களுக்கு தலா கால் கிரவுண்டு வீதம் பிரித்து, பட்டா வழங்கியது அரசு.
நரிக்குறவர் இனத்தை, பழங்குடி பட்டியலினத்தில் சேர்த்து, தேவையான குடியிருப்பு வசதியும், கல்வி, பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்யும் திட்டங்களை வகுத்து, அரசு இயந்திரத்தை முடுக்கிவிடுவது மட்டும் தான், வளர்ச்சியை ஊக்குவிக்கும்
குடியிருப்பு உரிமைக்காக நரிக்குறவர் இனமக்கள் நடத்திய முதல் போராட்டமே வெற்றி வாகை சூடியது. அதை உற்சாகமாக கொண்டாடி அங்கேயே வசித்த வருகின்றனர் நரிக்குறவர் இன மக்கள். கிட்டத்தட்ட, 40 ஆண்டுகளுக்கு பின், அதே குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி மூன்று சிறுமியர் குரல் எழுப்பியுள்ளனர்.
நரிக்குறவர் இன மக்களுக்காக குடியிருப்பு போராட்டத்தை 1981இல் திட்டமிட்டு நடத்தியவர் அப்போதைய நரிக்குறவர் பேரவை அமைப்பாளர் போதி தேவவரம். அடித்தள மக்களின் குடியிருப்பு உரிமைக்காக இன்றும் போராடி வரும் சமூக செயல்பாட்டாளர்.
அந்தப் போராட்டம் குறித்த நினைவுகளை, ‘இன்மதி.காம்’ இணைய இதழுடன் பகிர்ந்து கொண்டதுடன், ‘அரசில் முதன்மை பொறுப்பு வகிக்கும் முதல்வர் போன்றோர், விளிம்பு நிலை மக்களின் குரலைக் கேட்டு, அழைத்துப் பேசுவது மகிழ்ச்சி தருகிறது. அரசியிலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அடித்தள மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும்’ என பெருமிதமாக கூறினார்.
அதே நேரம், மற்றொரு சிக்கலையும் சுட்டிக்காட்ட அவர் தவறவில்லை. ‘நரிக்குறவர் போன்ற விளிம்பு நிலை மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு முதல்வர் அடிக்கடி வருவதும், அவர்களுடன் விருந்துண்பதும் வரவேற்கத்தக்கது தான். என்றாலும், இது மட்டுமே, அந்த மக்கள் வாழ் நிலையில் வளர்ச்சியை ஏற்படுத்திவிடாது என்பதையும் தெளிவு படுத்தினார்.
அதற்கு ஆதாரமாக, ‘தமிழக முதல்வராக இருந்த பலரும் இதே செயலை பலமுறை செய்துள்ளனர். அவற்றால் துளிகூட வளர்ச்சி ஏற்படவில்லை. நரிக்குறவர் இனத்தை, பழங்குடி பட்டியலினத்தில் சேர்த்து, தேவையான குடியிருப்பு வசதியும், கல்வி, பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்யும் திட்டங்களை வகுத்து, அரசு இயந்திரத்தை முடுக்கிவிடுவது மட்டும் தான், வளர்ச்சியை ஊக்குவிக்கும்.’ என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் போதி தேவவரம்.
Read in : English