Read in : English
பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பெரும் தாக்கம் மற்றும் விளைவுகள் பற்றி உலக அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. பல கோணங்களில் கட்டுரைகள் வெளியாகின்றன. அழிவை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களும் நடக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், சூழலியல் சார்ந்த ஒருவகை செயல்வழி பிரசாரம், மிக எளிமையாக முனைப்புடன் தமிழகத்தில் நடந்து வருகிறது. முக்கியமாக வசிப்பிடச் சூழலை, சிறுவர் சிறுமியர் உணர்ந்து சிந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை, ஒரு வித்தியாசமான செயல்முறை கற்றல் என்றுகூட சொல்லலாம். வாழ்விடச் சூழலை புரிய ஏதுவான எளிய பயிற்சி முறை. இது வகுப்பறை சார்ந்தது அல்ல; பல்லுயிரினங்கள் வாழும் சூழல் சார்ந்தது. இந்த நிகழ்வுக்கு, இயற்கை நடை என பெயரிடப்பட்டுள்ளது
சென்னை, சோழிங்கநல்லுார் அடுத்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கடந்த வாரம் நடந்த, ‘இயற்கை நடை’ நிகழ்வில் பங்கேற்றேன். சிறுவர் சிறுமியருடன் பெற்றோர், இளைஞர்கள் என பலதரப்பினரும் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு தகவல், சூழல் அறிவோம் என்ற குழுவின் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்படுகிறது. பதிவு மற்றும் பங்கேற்புக்கு எந்த கட்டணமும் இல்லை. பங்கேற்போர் கடைபிடிக்க சில எளிய நெறிகளை மின்னஞ்சலில் வலியுறுத்தி உறுதி செய்கின்றனர். அன்று ஞாயிற்று கிழமை. காலை, 6:30 மணிக்கு சோழிங்கநல்லுார் தனியார் கல்லுாரி அருகே சிறு அறிமுகத்துடன் இயற்கை நடை துவங்கியது.
சோழிங்கநல்லுார் – மேடவாக்கம் சாலையில் இயற்கை பேராற்றலின் தகவமைப்பு பறறிய அறிமுகத்துடன் தொடர்ந்தது. குறிப்பிட்ட பகுதியின் புவியியல் அமைப்பு, நீர்வழிப்பாதைகள் குறித்த விவரங்கள் பகிரப்பட்டது. பின், சாலையோர மரம், செடி, கொடி மற்றும் பூச்சி, கணுக்காலி, நீர்தாவரங்களை அறிமுகம் செய்தனர். அவற்றின் தோற்றம், பயன், மருத்துவ பயன்பாடு, முக்கியத்துவம், பல்லுயிர் சார்பு, சூழலியம் என, எளிமையாக விளக்கினர்.
அயல் மண்ணிலிருந்து வந்த தாவரங்கள் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவு பற்றிய விளக்கமும் தெளிவாக இருந்தது. இவற்றை கவனித்தபடி தயக்கமின்றி களத்தை உள்வாங்கினர் சிறுவர்கள். சந்தேகங்களை கேள்விகளால் நிவர்த்தி செய்து கொண்டனர்.
ஏரியில் நீந்தி வேட்டையாடிய நிலையில், ஓய்வெடுத்த நிலையில், பறந்த நிலையில் பல வகை பறவைகளை அறிமுகம் செய்தனர். அவற்றை அடையாளம் காணும் எளிய வழிமுறையையும் கற்பித்தனர். பறவைகளின் புகைப்படம் அச்சிட்ட பதாகைகளை தாங்கி வந்தனர். துாரத்தில் பறப்பவற்றை எளிதாக அடையாளம் காட்டும் வழிமுறையாக அது அமைந்திருந்தது.
சூழல் சீரழிவதைத் தடுக்க, சூழல் சார்ந்த அறிவை முதலில் மக்களிடம் பரவலாக்க வேண்டும். அதை எளிமையாக செய்யும் நோக்கில் தான் இந்த நிகழ்வை வடிவமைத்துள்ளோம்.
உயிரினங்களின் சூழல் உறவு, சார்பு நிலை வாழ்கை, உயிர்ச்சூழல் பன்மியம் போன்றவையும் கூட்டு நடையுடன் இயல்பாக பேசப்பட்டது. அறிவின் சாராம்சத்தை விளக்கிடும் வகையில் அது அமைந்திருந்தது. அடுத்து, காரப்பாக்கம் பகுதிக்கு பயணம்.
அங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டில் மரங்கள், பல்லுயிரியம், பறவைகளின் கூடமைப்பு என காடு சார்ந்த அறிவு நடையாக அது நிகழ்ந்தது. மரங்களின் பயன், அதை வளர்த்து பெருக்குவதால் ஏற்படும் நன்மை, நெகிழிக்கு மாற்றாக இயற்கை பொருட்களை அன்றாடம் பயன்படுத்தும் வழிமுறை போன்றவை கவனத்துடன் பகிரப்பட்டன. அடுத்து, தமிழக வனத்துறையின் காரப்பாக்கம் கற்றல் மையக் கூட்ட அரங்கில் சந்திப்பு நிகழ்வு நடந்தது. பறவைகள் குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள கையேடு பரிமாற்றத்துடன் துவங்கியது. சூழல் சார்ந்து வெளிவந்துள்ள முக்கிய புத்தகங்கள் அங்கு அறிமுகம் செய்யப்பட்டன. அது தொடர்பான உரயைாடலும் நடந்தது.
அன்றாடம் பயன்படுத்தும் பலவகை நெகிழிப் பொருட்கள், ரசாயனப்பொருட்கள் எல்லாம் சூழலை சீரழிப்பது பற்றி விரிவாக விளக்கினர். அவற்றுக்கு மாற்றாக இயற்கையில் சுலபமாக கிடைக்கும் பொருட்கள் முன் வைக்கப்பட்டன. அவற்றை நடைமுறையில் பயன்படுத்துவோரின் அனுபவமும் பகிரப்பட்டது. பொதுமக்கள் அறிய வேண்டிய சூழலியல் சட்டங்கள் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது. நுகர்வை மட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே, சூழல் சீர்கேட்டைக் கட்டுப்படுத்த முடியும் என தெளிவுபடுத்தினர்.
கிட்டத்தட்ட, மூன்று மணி நேரம் சலிப்பு இன்றி நகர்ந்தது. பல் உயிரினச் சூழலை புரியும் முன்னோட்டமாக அமைந்தது. நிகழ்வை வழிநடத்தியவர்கள் சூழல் அறிவோம் குழுவைச் சேர்ந்த குணா, பவித்ரா, கீர்த்தி, சந்தோசு, வித்யா, குமரேசன், சத்யா, துர்கா ஆகியோர். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களும் சூழல் சார்ந்த தேடலுக்கு உள்ளாகியிருந்தவர்கள்தான். அந்த தேடலால் சூழல் அறிவோம் குழுவில் பங்கேற்று, பயிற்சி பெற்றவர்கள். அந்த பயிற்சி அனுபவத்தை கற்றல் மூலம் மேலும் விரிவாக்கி, பயிற்சியாளராக உயர்ந்துள்ளனர்.
இயற்கை நடை நிகழ்வை வடிவமைத்துள்ளவர், தீபக் வெங்கடாசலம். சூழல் அறிவோம் குழுவை நிறுவி வழிநடத்தி வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் குழுவின் செயல்பாடு பற்றி கூறியதாவது: இயற்கை நடை என்ற நிகழ்வை, 2015ல் வடிவமைத்தோம். முதலில் சில இடங்களில் நடத்தி வந்தோம். சிறு மாற்றங்களுடன் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளோம். சூழல் சீரழிவதைத் தடுக்க, சூழல் சார்ந்த அறிவை முதலில் மக்களிடம் பரவலாக்க வேண்டும். அதை எளிமையாக செய்யும் நோக்கில் தான் இந்த நிகழ்வை வடிவமைத்துள்ளோம்.
இதுபோன்ற நிகழ்வுகளை பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கும் தரத் தயாராக உள்ளோம். விரும்புவோர், suzhalarivom@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில், சென்னை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி என பல பகுதிகளிலும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. பொதுமக்களிடம் பரவலாக அறிமுகமாகி, வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கும் தரத் தயாராக உள்ளோம். விரும்புவோர், suzhalarivom@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
இயற்கை நடை மட்டுமின்றி, இயற்கை மற்றும் அறிவியல், சூழல் பாதுகாப்பு சார்ந்த சிறப்பு சொற்பொழிவுகளையும், இணைய வழியில் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறோம். இவற்றில் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை பேச வைக்கிறோம். இதுபோல், 120க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை ஒருங்கிணைத்துள்ளோம்.
இவை, யூடியூப் காணொளிகளாக உள்ளன. நாங்கள் நடத்தும் எந்த நிகழ்வுக்கும் கட்டணம் வசூலிப்பதில்லை. இயற்கை சார்ந்த அறிவை பரவலாக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம் என்றார் தீபக்
சூழல் அறிவோம் குழுவில், பல துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் அறிஞர்களின் உரை, https://www.youtube.com/channel/UCyO9rU_7e7DBceX_pxKv9WQ/videos என்ற தள முகவரியில் காணொளியாக உள்ளது. சூழல் அறிவோம் குழுவின் முகநுால் பக்கத்திலும் இது சார்ந்த தகவல் கிடைக்கிறது. தமிழகத்தில் சூழலியல் சார்ந்த அறிவுப் பரவலை மிக எளிமையாக நிகழ்த்தி வருகிறது, சூழல் அறிவோம் குழு.
Read in : English