Read in : English
கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை அவசியம் இல்லை என்று அங்குள்ள உயர் நீதிமன்றம் கருத்துக் கூறியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் கூறிய கருத்துக்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஹிஜாப், இஸ்லாம் மதத்தின் அடிப்படை அவசியமா என்பது குறித்தும், ஹிஜாப் இஸ்லாமிய பெண்களின் ஆடை உரிமையை பறிக்கிறதா என்பது குறித்தும் தமிழ்நாடு சமூக நல வாரிய முன்னாள் தலைவியும் கவிஞருமான சல்மா கூறிய பதில்கள்:
கேள்வி: ஹிஜாப் இஸ்லாமியர்களின் அடிப்படை அவசியமா? இல்லையா?
கவிஞர் சல்மா: ஹிஜாப் இஸ்லாமியர்களின் அடிப்படை தேவையா, இல்லையா என்பது அந்த மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஹிஜாப் அணிவது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. சாதி, மத சார்பற்ற இந்தியாவில் இத்தனை ஆண்டு காலமாக அவரவர் விருப்படி தான் வாழ்ந்து வருகின்றனர். இத்தனை ஆண்டு காலமாக கடைப்பிடித்து வந்த மத நம்பிக்கையை நீதிமன்றம் கேள்விக்குறியாக்கி இருக்கக் கூடாது. நீதிமன்றத்தின் கருத்து குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளுக்கும், நம்பிக்கைக்கும் எதிராகப் பார்க்கப்படுகிறது. ஹிஜாப் அணிவதால் யாருக்காவது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா என்று கேட்டால் பதில் கூற முடியாது. நெற்றியில் பொட்டு வைப்பதோ, பூணூல் அணிந்து செல்வதோ, கையில் சாமிக்கயிறு கட்டி செல்வதோ, சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து செல்வதோ நமது நாட்டில் வழக்கமாக நடைபெற்று வரும் நடைமுறை. அதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டும் இந்த உடை அணிய கூடாது என்று கூறுவது தான் இங்கு விவாதப்பொருளாக மாறியுள்ளது.
ஒவ்வொரு மக்களும் அவரவர் விருப்பதிற்கேற்ற உடையை அணிந்து வருகின்றனர். உடை என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்ப உரிமை. அதில் தனிநபரோ, ஒரு சமூகமோ அல்லது அரசோ கட்டுப்பாடுகளையும், தீர்மானத்தையும் கொண்டுவர முடியாது.
கேள்வி: ஹிஜாப் வழக்கு விசாரணையின் போது ”இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அவசியமானதா” என அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எதிர் தரப்பில் ஹிஜாப் இஸ்லாம் மதத்தின் அடிப்படை அவசியமான ஒன்று என்பதை நிரூபிக்க தவறிவிட்டார்களா?
சல்மா: இஸ்லாம் கண்ணியமான ஆடைகளை அணிய சொல்லி வலியுறுத்துகிறது. நமது நாட்டில் சேலை அணிவதைக் கண்ணியமாகப் பார்க்கிறோம். அண்டை நாடான பாகிஸ்தானில் சேலை அணிவதை ஆபாசம் என்கின்றனர். அதனால் அவர்கள் சேலையை தவிர்த்து சுடிதார் அணிகின்றனர். அதுதான் அவர்களுக்குக் கண்ணியமான ஆடையாக பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் நில அமைப்பு, கலாச்சாரம், காலநிலை சூழல் உள்ளிட்டவற்றிற்கு ஏற்றார்போல் ஒவ்வொரு மக்களும் அவரவர் விருப்பதிற்கேற்ற உடையை அணிந்து வருகின்றனர். உடை என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்ப உரிமை. அதில் தனிநபரோ, ஒரு சமூகமோ அல்லது அரசோ கட்டுப்பாடுகளையும், தீர்மானத்தையும் கொண்டுவர முடியாது. மத நம்பிக்கையை நிரூபித்துக் கொண்டிருக்க முடியாது. இதைக் காரணமாக கொண்டு உடையை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்.
கேள்வி: ஆடையை வைத்து அரசியல் செய்யப்படுகிறதா? அப்படி இருந்தால் ஆடை அரசியலுக்கான காரணம் என்ன?
சல்மா: கண்டிப்பாக ஆடை அரசியலை தான் செய்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்து உறவுகளை ஒன்றிணைத்து குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக திசைத்திருப்புவது நடைபெற்று வருகிறது. வாக்கு வங்கிக்காக எதிர்தரப்பினரிடையே பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவும், வாக்குகளை தன்வசப்படுத்தவும் இது போன்ற செயல்கள் அரங்கேறுகின்றன. அண்மையில் காஷ்மீர் குறித்து வெளிவந்த “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். அந்தத் திரைப்படத்தை இந்திய அரசாங்கம் கொண்டாடி வருவதுடன், அவசியம் அதை பாருங்கள் என அரசு அதிகாரிகளே வலியுறுத்தி வருகின்றனர். இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது திட்டமிட்டு வெறுப்பை அரசே அரங்கேற்றுவதைக் காட்டுகிறது. இதுபோன்று ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய செயல்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் செய்யப்படுகின்றன. அடுத்த தேர்தலுக்கான வாக்கு வங்கி, வேலைகளை இப்பொழுது இருந்தே ஆளும் அரசு மறைமுகமாகத் தொடங்கி விட்டது என்பதையே இது உணர்த்துகிறது.
கேள்வி: ஹிஜாப் அணிய வேண்டும் என பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? ஹிஜாப் அணிய வேண்டுமென கூறும் மத நம்பிக்கையால் பெண்களின் ஆடை சுதந்திரம் பறிக்கப்படுகிறதா?
சல்மா: ஆரம்ப காலத்தில் இருந்து ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையாக இருந்து வருகிறது. எனக்கு சேலை அணிவது பிடிக்காது. ஆனால், சில நேரங்களில் சேலை அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். அதுபோல தான் ஹிஜாபும். அவர்களுக்கு விருப்பம் என்ற பெயரில் தான் ஹிஜாப் அணிந்து செல்கின்றனர். விருப்பத்திற்கு மாறாக ஒருவரை நாம் இதுதான் போட வேண்டுமென வலியுறுத்த முடியாது. நான் ஹிஜாப் அணிவதில்லை. அது எனது விருப்பம். என்னை கட்டாயப்படுத்த முடியாது. இந்த ஆடையை அணியக் கூடாது என்றும், அணிய வேண்டும் என்றும் யாரும், யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. கண்ணியமான ஆடையை அணிய வேண்டும் என இஸ்லாம் மார்க்கம் சொல்வதால் அவர்களின் விருப்பத்தேர்வாக ஹிஜாப் உள்ளது. காலங்காலமாக ஒரு சமூகம் பின்பற்றி வரும் மத நம்பிக்கையை திடீரென மாற்றும்படி கூறுவதோ, ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோ ஏற்றுக் கொள்ள முடியாது. அவரவர் விருப்பத்தினாலும், நம்பிக்கையாலும் அணிவதால் ஹிஜாப் ஆடை சுதந்திரத்தைப் பறிப்பதில்லை.
விருப்பத்தின் பேரில் ஹிஜாப் அணிவதை பெண்களைக் கட்டுப்படுத்தும் கருவியாக பார்க்க முடியாது. இதுதான் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அது தவறாகும்.
கேள்வி: ஹிஜாப் மற்றும் முக்காடு அணிவது பெண்களை கட்டுப்படுத்தும் கருவியாக வெகு காலத்திற்கு முன்பாகவே கருதப்படுகிறது. இது குறித்த உங்களின் கருத்து?
சல்மா: நம்பிக்கை அடிப்படையில் ஹிஜாப் அணிவதோ அல்லது முக்காடு போடுவதோ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விருப்பத்தின் பேரில் ஹிஜாப் அணிவதை பெண்களைக் கட்டுப்படுத்தும் கருவியாக பார்க்க முடியாது. இதுதான் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அது தவறாகும். பாரம்பரிய கலாச்சாரமும், மத அடிப்படை வாதமும் கொண்ட நமது நாட்டில் ஆரம்பத்தில் இருந்து இந்து என்றால் பொட்டு வைக்க வேண்டும், முஸ்லீம் என்றால் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி விட்டனர். அதை ஏற்றுக் கொண்டு வாழவும் பழகிவிட்டனர். அவர்களுக்கே அது தவறாக இல்லாத போது மற்றவர்கள் ஏன் கட்டுப்பாடு என கூற வேண்டும். ஆனால், சிறு குழந்தைகளுக்கு ஹிஜாப் போட்டு பழக்கப்படுத்துகின்றனர். குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஹிஜாப் போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரம், கருத்து தெரிந்து விருப்பத்தின் பேரில் ஆடை அணிவதை எதிர்க்கவும் முடியாது.
கேள்வி: பள்ளி மற்றும் கல்லூரிகளில் சீருடை கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ், வேஷ்டி உள்ளிட்ட ஆடைகள் அணிய கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த வகையில் ஹிஜாப் அணிவதற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு கேட்க வேண்டும்..?
சல்மா: சீருடை கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் காலம் காலமாக இருக்கும் பழக்கத்தை திடீரென மாற்றிட முடியாது. சீருடைக் கட்டுப்பாடு ஆடையில் மட்டும் பார்க்கப்படுகிறது. நெற்றியில் பொட்டு வைப்பதிலோ, கையில் கட்டியிருக்கும் மஞ்சள், கருப்பு கயிற்றிலோ, டர்பனிலோ, சிகை அலங்காரத்திலோ ஏன் பார்க்கப்படுவதில்லை? சீருடைக் கட்டுப்பாட்டின்படி பார்க்க போனால் மாணவ, மாணவிகள் அனைவரும் ஒரேசீராகத் தானே இருக்க வேண்டும். ஆடையில் மட்டும் கட்டுப்பாட்டை போட்டு மற்றவற்றில் ஏன் வேற்றுமையை காட்ட வேண்டும் ” என்கிறார் கவிஞர் சல்மா.
Read in : English