Read in : English
சின்ன வயதிலேயே ஆட்டோ ஓட்டும் அப்பாவை இழந்து, விவசாயக் கூலி வேலை செய்த அம்மாவின் கடும் முயற்சியாலும் மற்றவர்களின் உதவியுடனும் பிஇ படித்த கடலூர் மாவட்டம் காடுவெட்டி அறந்தாங்கியைச் சேர்ந்த டி. தங்கக்கிட்டு (29), தற்போது ஸ்காட்லாந்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அவர், அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.
தான் கடந்து வந்த பாதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் தங்கக்கிட்டு:
எங்களது அப்பா தனபால். சொந்த ஊரில் வருமானத்துக்கு வழியில்லாமல் சென்னைக்கு வந்து ஆட்டோ ஓட்டி வந்தார். அம்மா ரங்கநாயகி. இவர்கள் இருவரும் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள். இருந்தாலும் என்னையும் எனது தங்கை ஷோபனாவையும் நன்கு படிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்து, சென்னையில் நவ பாரத் பள்ளியில் இங்கிலீஷ் மீடியம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். அப்போதும் எங்களைப் படிக்க வைப்பதில் சிரமம்தான். இருந்தாலும் எப்படியோ அந்தப் பள்ளியில் படித்து வந்தோம்.
அம்மா விவசாயக் கூலி வேலைக்குப் போவார். அதை வைத்துதான் குடும்பம் நடக்க வேண்டும். எப்பாடுபட்டாவது எங்களை நன்றாகப் படிக்க வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் எனது அம்மா.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, எனது அப்பா இறந்து விட்டார். ஆட்டோ ஓட்டுவற்காக வாங்கிய கடன் வேறு இருந்தது. அந்த நிலையில், வருமானத்துக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எனது அம்மா திகைத்து நின்றார். அப்போது எனது மாமா பாலமுருகன் உடனிருந்து, எங்களுக்கு இருந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார்.
அதன் பிறகு சென்னையில் இருக்க முடியாது என்ற நிலையில், எங்களது குடும்பம் காடுவெட்டி அறந்தாங்கிக்குக் குடிபெயர்ந்தது. அங்கு அம்மாவைப் பெற்ற பாட்டி வீடு இருந்தது. அது பழைய கூரை வீடு. அந்த வீட்டில் கரண்ட் கூட இல்லை. வேறு எந்த வசதிகளும் இல்லை. பாட்டி வீட்டில் நானும் எனது தங்கச்சியும் அம்மாவுடன் தங்கி இருந்தோம். அம்மா விவசாயக் கூலி வேலைக்குப் போவார். அதை வைத்துதான் குடும்பம் நடக்க வேண்டும். எப்பாடுபட்டாவது எங்களை நன்றாகப் படிக்க வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் எனது அம்மா.
அங்குள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் தமிழ் வழியில் படிக்கச் சேர்ந்தேன். அது போர்டிங் பள்ளி. அந்தப் பள்ளி விடுதியிலேயே இலவசமாகத் தங்கி இருந்து சாப்பிட்டு படித்தேன். எனது தங்கை வீட்டிலிருந்து அந்தப் பள்ளியில் படித்தார். கிறிஸ்துவப் பள்ளி என்பதால், அந்தப் பள்ளியில் கட்டணம் குறைவு என்றாலும்கூட, அதைச் செலுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். அப்போதும் பாலமுருகன் மாமா உதவினார். அந்தப் பள்ளியில் இருந்த அருட் தந்தை ஸ்டீபன் ராஜ், எனது குடும்ப சூழ்நிலையை அறிந்து, பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார்.
எப்படியும் படித்து நல்ல வேலைக்குப் போய்விட வேண்டும் என்பதால் நான் நன்கு படித்தேன். டியூஷன் எதற்கும் போனது கிடையாது. அதற்கு வசதியும் இல்லை. பத்தாம் வகுப்புத் தேர்வில் நான் 500க்கு 472 மதிப்பெண்கள் பெற்றேன். மேற்கொண்டு எப்படிப் படிப்பது என்று திகைத்து இருந்த வேளையில் எனது பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் மோகன் என்கிற ரங்கநாதன் என்னை ஏதாவது தனியார் மேல்நிலைப் பள்ளியில் இலவசமாகப் படிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார். அதற்காக சில தனியார் மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்களை அணுகினார்.
பத்தாம் வகுப்பில் நான் பெற்ற மதிப்பெண்களைப் பார்த்து, கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி. மேல்நிலைப் பள்ளியில் இலவசமாகத் தங்கிப் படிக்க இடம் கிடைத்தது. அங்கு படிக்கச் சென்றபோதும் மாமா எனது செலவுக்குப் பணம் கொடுப்பார். அந்தப் பள்ளியில் உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் எடுத்துப் படித்தேன். 2011ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதினேன். அத்தேர்வில் 1200க்கு 1111 மதிப்பெண்கள் பெற்றேன். பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது கட் ஆப் மதிப்பெண்கள் 192.5.
எனது பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் மோகன் என்கிற ரங்கநாதன் என்னை ஏதாவது தனியார் மேல்நிலைப் பள்ளியில் இலவசமாகப் படிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார். அதற்காக சில தனியார் மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்களை அணுகினார்.
கல்லூரியில் படிக்க பணத்துக்கு என்ன செய்வது என்று நான் நினைத்திருந்தபோது, அகரம் பவுண்டேஷன் தரும் படிப்பு உதவித் திட்டத்துக்கு எனக்கே தெரியாமல் விண்ணப்பித்தவர் எனது துணைத் தலைமை ஆசிரியர். அதையடுத்து அகரம் பவுண்டேஷன் உதவி கிடைத்ததுது. நான் சத்யபாமா பல்கலைக் கழகத்தில் பிஇ மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தேன். அங்கு தங்கும் இடம், சாப்பாடு, புத்தகங்கள் எல்லாம் இலவசம்தான். படிப்புக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. எனவே, கல்லூரிப் படிப்பை எந்தச் சிரமமும் இல்லாமல் படிக்க முடிந்தது.
2015ஆம் ஆண்டில் 89.5 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். எங்களது மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையில் நான் மூன்றாவது ரேங்க். கல்லூரியில் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம் எனக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் நிறுவனத்திலும் வேலை கிடைத்தது.
நான் சி.டி.எஸ். என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர முடிவு செய்தேன். 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததும், ஹைதராபாத்தில் பயிற்சி அளித்தார்கள். அதன்பிறகு, சிறுசேரியில் வேலை. நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில், எட்டு மாதங்களுக்கு முன் என்னை அந்த நிறுவனத்திலிருந்து ஸ்காட்லாந்துக்கு அனுப்பி வைத்தார்கள். அங்குள்ள கிளாஸ்கோ நகரில் சிடிஎஸ் நிறுவனத்துக்காக என்எஃப்டி ஆர்க்கிடெக்ட்டாக அதாவது, சாப்ட்வேர் ஆர்க்கிடெக்டாக வேலை செய்கிறேன். தற்போது, ஸ்காட்லாந்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.
இதற்கிடையே, எனது வருமானத்தில் சொந்த வீட்டைக் கட்டி இருக்கிறேன். எங்களைப் படிக்க வைத்து, எங்களை வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு உறுதுணையாக இருந்த எனது அம்மாவை நன்கு பார்த்துக் கொள்கிறேன். கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் பி.டெக் படிக்கும்போதே திருமணமான எனது தங்கை ஷோபனா தற்போது எம்டெக் படித்து முடித்துவிட்டார் என்று கூறி முடித்தார் தங்கக்கிட்டு. முயற்சி திருவினையாக்கும்!
Read in : English