Read in : English
மொய் விருந்து என்று புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரங்களில் அழைக்கப்படும் விழா, மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கவரெடுப்பு, இல்ல விழா மற்றும் வசந்த விழா என்று அழைக்கப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிறமலை கள்ளர் சமூகத்தினர் குறிப்பாக இந்த நிகழ்வை தங்கள் வீடுகளில் நடத்துகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படும் இந்த கவரெடுப்பு நிகழ்வுக்கு முன்பு முக்கியமான சடங்குகளான காது குத்து, பூப்புனித நீராட்டு விழா முன்னிட்டுத்தான் நடந்து வந்தது. இவற்றோடு ஒரு முக்கிய சடங்காக பிறமலை கள்ளர் சமூகத்தினரிடம் இருந்து சமீப காலங்களில் மறைந்து வரும் ஒன்றுதான் மார்க்க கல்யாணம்.
விருத்தசேதனம் என்று யூதர்களிடையேயும் மற்றும் சுன்னத் கல்யாணம் என்று இஸ்லாமிய சமூகத்திடம் காணப்படும் இந்த சடங்கு, முக்குலத்தோரின் சமூகத்தின் ஒரு பிரிவான பிறமலை கள்ளர்களிடம் பரவியது எப்படி என்பது ஆச்சரியமான ஒன்று. பல நூற்றாண்டுகளாக இந்த சமூகம் சமுதாயத்தின் விளிம்பிலேயே இருந்து வந்திருக்கிறது. மற்ற சமூகங்களில் இல்லாத இந்த ஒரு வழக்கம் எங்கிருந்து இந்த இனக்குழுக்கு வந்தது என்பதை பற்றி பிறமலை கள்ளர் வாழ்வும் வரலாறும் நூல் எழுதிய சுந்தர வந்தியத்தேவன், இரண்டு வாய்ப்புகளை முன்வைக்கிறார். சிறு இனக்குழுக்களில் இந்த வழக்கம் உலகம் முழுதும் காணப்படுகிறது. என்றாலும் மாலிக்கபூர் படையெடுப்பினை தொடர்ந்து சிறிது காலம் மதுரையில் நீடித்த டெல்லி இஸ்லாமிய அரசின் மூலம் இந்த வழக்கங்கள் பிறமலை கள்ளர்களிடம் வந்திருக்கும் வாய்ப்புகளும் உண்டு என்கிறார் அவர்.
மார்க்க கல்யாணம் மட்டுமல்ல, இஸ்லாமியர்களிடம் இருந்து வரும் சில சடங்குகள் பிறமலை கள்ளர் சமூகத்திடம் இருந்து வந்திருக்கிறது. அவற்றில் ஒன்று மணமகன் மலராலான முகத்திரை அணிந்து குதிரை மேல் ஏறி திருமணத்துக்கு வருவது.
மார்க்க கல்யாணம் மட்டுமல்ல, இஸ்லாமியர்களிடம் இருந்து வரும் சில சடங்குகள் பிறமலை கள்ளர் சமூகத்திடம் இருந்து வந்திருக்கிறது. அவற்றில் ஒன்று மணமகன் மலராலான முகத்திரை அணிந்து குதிரை மேல் ஏறி திருமணத்துக்கு வருவது. இந்த வழக்கங்கள் எல்லாம் அருகி விட்டன என்கிறார் வந்தியத்தேவன்.
“நீங்கள் மார்க்க கல்யாணம் செய்திருக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு நடுத்தர வயதான மதுரை செக்கானூரணியை சேர்ந்த பாண்டியும் செல்வமும் பதிலளிக்க வெட்கப்படுகிறார்கள். இருவரும் பிறமலை கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். சிறுவர்களாக இருந்தபோது அது குறித்து மிகவும் பயந்து போயிருந்ததாகவும் ஆனால் தங்கள் தந்தையர் அந்தச் சடங்கை செய்ய விருப்பம் தெரிவிக்காததால் தாங்கள் தப்பியதாக சொல்கிறார்கள் இருவரும்.
நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு வருடங்கள் முன்பு பிறமலை கள்ளர் சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும் இது மிக முக்கியமான சடங்கு. பெண்ணுக்கு எப்படி பூப்புனித நீராட்டுவிழாவோ, வயது வரும் முன்பு சிறுவர்களுக்கு மார்க்க கல்யாணம் என்கிறார் உசிலம்பட்டியை சேர்ந்த தமிழறிஞர் புலவர் சின்னான். எண்பத்தேழு வயதான அவர், தனக்கு நடத்தப்பட்ட சடங்கை நினைவு கூர்ந்தார். கிராமங்களில் மார்க்க கல்யாணம் மிக முக்கியமான திருவிழா. ஒத்த வயதான சிறுவர்கள் சடங்கின் முந்திய நாள் மேளதாளத்துடன் குதிரையில் பவனி வருவார்கள். மறுநாள் அதிகாலை திரும்பவும் ஊர்வலமாக கிராமத்தின் நீர்நிலைகளுக்கு அவர்கள் கூட்டிசெல்லப்படுவார்கள்.
அங்கு காத்திருக்கும் கிராமத்தின் நாவிதர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த சடங்கை செய்வார். உடனே சிறுவர்கள் வலி தெரியாமல் இருக்க குளத்திலோ ஊரணியிலோ தள்ளிவிடப்படுவார்கள். சிறுவர்களின் ஆண் உறவினர்கள் அவர்களுடன் இருப்பர். பிறகு காவி உடுத்தி சிறுவர்கள் ஆளுக்கு ஒரு இரும்பு கம்பியுடன் வீடு திரும்புவார்கள். அவர்களை எதிர்பார்த்து கறிவிருந்து வீடுகளில் காத்திருக்கும் என்கிறார், சின்னான்.
அடுத்த ஒரு வாரம் கிராமம் அமர்க்களப்படும். சடங்கு முடிந்த சிறுவர்களுக்கு தாய்மாமன் சீர் செய்வது, பெண் உறவினர்களின் கிண்டலும் கேலியும் என கோலாகலமாக நாட்கள் நகரும். மார்க்க கல்யாணம் செய்த காயம் ஆற, மூலிகைப் புகை ஒத்தடம் கொடுப்பதும் உண்டு. ஒரு குழியில் நெருப்பு மூட்டி அதன் மேல் மூலிகைகளை தூவி சிறுவர்களை காலை அகட்டிவைத்து நிற்க சொல்வார்கள். அந்த ஒத்தடம் காயத்துக்கு இதமாக இருக்கும் என்கிறார் சின்னான். இந்த வழக்கம் ஹைதர் அலி மற்றும் திப்புவின் படையெடுப்புகளின் போது பிறமலை கள்ளர்களிடம் பரவியிருக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது அவரது கருத்து. இவற்றை நிரூபிக்க ஆதாரங்கள் ஏதுமில்லை என்றும் அவர் கூறுகிறார்.
இந்த காரணங்களாலோ என்னமோ, பிறமலை கள்ளர் சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு என்று ஒரு பிரத்தியேகமான இடம் ஒன்று. அவர்களை தாய் வழி சொந்தமாக கள்ளர்கள் கருதுகிறார்கள். விழாக்களின் அழைப்பிதழ்களில் இஸ்லாமிய பெயர்கள் மாமன்மார் கீழ்த்தான் குறிப்பிடப்படும் என்கிறார் சுந்தர வந்தியத்தேவன். முஸ்லிம் பெரியவர்களை சீயான் என்று அழைப்பார்கள் கள்ளர்கள் என்கிறார் சின்னான். சீயான் – சுத்த தமிழில் தூயவன் – என்னும் பதம் வயதானவர்களை முக்கியமாக அம்மாவின் தகப்பனை அழைக்க கள்ளர் சமூகத்தில் பயன்படுகிறது. தாய் வழி சொந்தமாக பிறமலை கள்ளர்கள் கருதும் இஸ்லாமியருக்கு எதிராக இந்த சமூகத்தை திருப்புவது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்கிறார் வந்தியத்தேவன்.
தாய் வழி சொந்தமாக பிறமலை கள்ளர்கள் கருதும் இஸ்லாமியருக்கு எதிராக இந்த சமூகத்தை திருப்புவது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்கிறார் வந்தியத்தேவன்.
முஸ்லிம்கள் என்றில்லை, பல்வேறு சாதிகளுடன் பிறமலை கள்ளர்களின் வழக்கங்கள் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன. எனவே இந்த சமூகத்தை திசைதிருப்புவது கடினம் என்று தனது கருத்தை கூறுகிறார் நாவலாசிரியர் மதுரை ஓ முருகன். கடந்த உள்ளாட்சி தேர்தலில் முக்குலத்தோர் சமூகத்தில் செல்வாக்கான பார்வார்ட் பிளாக் கட்சியின் பல்வேறு பிரிவுகள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. “ஜாதிய அரசியல் செய்யும் சிறு தலைவர்களை தவிர்த்து இந்தப் பிரிவினை கருத்துகள் பெரும்பான்மை பிறமலை கள்ளர்களிடம் இல்லை,” என்கிறார் முருகன்.
பிறமலை கள்ளர்கள் மத்தியில் வாழும் இஸ்லாமியர்கள் எவ்வாறு உணர்கிறார்கள்? “தாயாய் பிள்ளையாய் பழகும் போக்கில் இதுவரை எந்த பெரிய வித்தியாசமும் இல்லை,” என்கிறார் காதர் நிவாஸ். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கடந்த மூன்று தலைமுறைகளாய் நிவாஸின் குடும்பம் வசித்துவருகிறது. தன்னுடைய பல இந்து நண்பர்கள் போக்கில் வித்தியாசத்தை உணரும் நிவாஸ், பிறமலை கள்ளர் சமூகத்தில் அப்படி ஒரு வித்தியாசமான போக்கை தான் உணரவில்லை என்கிறார். “முத்துராமலிங்கத் தேவரை பாலூட்டி வளர்த்தது ஒரு இஸ்லாமிய பெண்மணி என்ற ஒரு தொடர்பு போதும்,” என்கிறார் நிவாஸ்.
சாதாரணமாகவே இஸ்லாமியர் வசிக்கும் பள்ளிவாசல் தெருக்களில் பிறமலை கள்ளர் இளைஞர்கள் நல்லவிதமாக நடந்து கொள்வார்கள் என்றும் இஸ்லாமிய பெண்களிடம் மிகவும் மரியாதையாக பழகுவார்கள் என்றும் குறிப்பிடுகிறார் முருகன்.
மார்க்க கல்யாணம் என்ற வழக்கம் மறைந்து வந்தாலும் அதை ஒட்டி வந்த கவரெடுப்பு அல்லது இல்ல விழாக்கள் பல லட்சங்களை வசூலிக்கும் நிகழ்வுகளாக சமீபத்தில் வளர்ந்துள்ளன. “வங்கியில் கடன் வாங்குவதற்கு பதில் பிறந்த சமூகத்தில் பணத்தை செய்முறையாக வாங்கி கொள்கிறோம். அவர்கள் விழா நடத்தும்போது திருப்பி செய்யப்போகிறோம்,” என்கிறார் கருமாத்தூரை சேர்ந்த அய்யர். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாக்களில் பணம் வசூல் செய்ய மென்பொருளை மதுரையை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியது என்பதையும் குறிப்பிட்டு சொல்லலாம்.
மொய் டெக் எனப்படும் இந்த மென்பொருள் இப்போது மிகவும் பிரபலம். “நமது தேவைக்கேற்ப செய்து தருகிறார்கள். மொய் டெக், செய்முறை செய்வதில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி,” என்கிறார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் விருமாண்டி.
Read in : English