Read in : English
மலையாள மொழியில் தயாரான முதல் சினிமா விகதகுமாரன். இதை தயாரித்து, இயக்கி, நடித்தவர் ஜே..சி..டானியல். மலையாள சினிமாவின் தந்தை என போற்றப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர். இந்த ஊர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
திருவனந்தபுரம் பகுதியில் இயங்கி வந்தது கேப்பிடால் தியேட்டர் என்ற சினிமா நிறுவனம். இதுதான், டானியலின் சினிமா கனவை துாண்டியது. மலையாள மொழியில் சினிமா தயாரிக்கும் கனவை விதைத்தது. அதை மனதில் ஏந்தி சென்னை சென்றார் டானியல். அங்கு, சினிமா ஸ்டுடியோக்களுக்கு அலைந்து திரிந்தார். பயிற்சியளிக்க எந்த ஸ்டுடியோ கதவும் அவருக்காக திறக்கவில்லை.
சொந்த ஊரில் பாரம்பரிய சொத்துகளை விற்று, கிடைத்த பணத்தில் முதல்படமான விகதகுமாரன் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார்.
கனவை உயிர்ப்பிக்க அவர் மும்பை செல்ல வேண்டியிருந்தது. அங்கு திரைப்பட கலையை பயின்று திரும்பினார். சொந்த ஊரில் பாரம்பரிய சொத்துகளை விற்று, கிடைத்த பணத்தில் முதல்படமான விகதகுமாரன் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். இதை தயாரிக்க, நான்கு லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டது. இந்த படம், 1930ல் நிறைவு பெற்றது.

`விகதகுமாரன்’ திரைப்படத்தின் புகைப்படம். அதில் வலதுபுறம் இருப்பது டானியல்.
படப்பிடிப்பின் போது, நடிகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. நாயர் இனப் பெண் கதாபாத்திரம் தான் படத்தின் கதாநாயகி. அந்த பாத்திரத்துக்கு நடிகை கிடைக்கவில்லை. இதனால், சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த புலையர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அந்த பாத்திரத்தில் நடிக்க வைத்தார் டானியல். பலவாறாக முயன்று படப்பிடிப்பை முடித்தார்.
படத்தை திரையிட்ட போது, பெரும் பிரச்னை வெடித்தது. திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியில் அப்போது சாதிக் கொடுமை தாண்டவமாடியது. தாழ்த்தப்பட்ட, பின் தங்கிய இன மக்கள் அடிமையாக நடத்தப்பட்டனர்.
புலையர் இனத்தை சேர்ந்த பெண்ணை, நாயர் குலத்தவராக படத்தில் காட்டியது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், புலையர் இனத்தை சேர்ந்த பெண்ணை, நாயர் குலத்தவராக படத்தில் காட்டியது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. உயர் சாதியாக கருதப்பட்ட இனத்தவர், கடும் கோபம் கொண்டனர். திரையிட விடாமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். பெரும் வன்முறையும் வெடித்தது.

விகதகுமாரன் படத்தில் நடித்த பி.கே. ரோஸி
அந்த படத்தில் நடித்த புலையர் இனப் பெண், பெரும் நெருக்கடிக்கு உள்ளானார். அவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. உயிருக்குப் பயந்து தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது குடிசை தீக்கிரையாக்கப்பட்டது. அவரது குடும்பம் சிதைக்கப்பட்டது. படத்தை தயாரித்து இயக்கிய டானியல், திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியை விட்டு, குடும்பத்துடன் வெளியேறினார். அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. வாழ்வின் கடைசிகாலம் வரை வறுமையில் வாடும் அவலம் ஏற்பட்டது. அவர் தயாரித்த மலையாள மொழியின் முதல் சினிமா பிரதி அழிந்தது. எந்த அங்கீகாரமும் கிடைக்காமல், 1975ல் டானியல் உயிர் பிரிந்தது.
பின்னர் மலையாள பத்திரிகையாளர் சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் எடுத்த பெரும் முயற்சியால், டானியல்தான் மலையாள சினிமாவின் பிதாமகன் என அங்கீகரித்தது கேரள அரசு. அவரது மனைவிக்கு, கேரள அரசு உதவியது.
கேரள அரசின் சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, 1992 முதல் டானியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் பிதாமகன் என டானியல் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, டானியல் வாழ்க்கையை முன்னிறுத்தி, ‘செலுலாயிட்’ என்ற பெயரில் சினிமா ஒன்றை மலையாள பட இயக்குனர் கமல் தயாரித்துள்ளார். இந்த படம் கேரள அரசின் ஏழு விருதுகளை வென்றுள்ளது.
இந்திய சினிமாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, டானியல் வாழ்க்கையை முன்னிறுத்தி, ‘செலுலாயிட்’ என்ற பெயரில் சினிமா ஒன்றை மலையாள பட இயக்குனர் கமல் தயாரித்துள்ளார். இந்த படம் கேரள அரசின் ஏழு விருதுகளை வென்றுள்ளது. இதில் ஜே.சி..டானியல் வேடத்தில் நடிகர் பிருத்விராஜும், அவரது மனைவி ஜேனட் வேடத்தில் மம்தா மோகன்தாசும் நடித்துள்ளனர்.

2013இல் வெளியான ஜே.சி. டானியலின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் `செலுலாய்ட்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் போஸ்டர். அதில் பிரிதிவிராஜ் சுகுமாரன் நடித்துள்ளார். (Photo: IMDB)
மலையாளத்தில் டானியல் தயாரித்த முதல் படத்தில் நடித்த புலையர் இனப்பெண் வேடத்தில், நடிகை நந்தினி அறிமுகமாகியுள்ளார். யதார்த்தத்தின் உச்சம் தொட்டுள்ளார். டானியலுக்கு, நான்கு குழந்தைகள். அனைவரும் படிப்பு, வேலை என வெளியூர்களில் தங்கிவிட்டதால் மனைவி ஜேனட்டுடன் இறுதி நாட்களை சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் கழித்துள்ளார். இந்த விவரம் அறிந்து பத்திரிகையாளர் சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன், டானியலை சந்தித்து பேச முயன்றுள்ளார். எதற்கும் உடன்பட மறுத்துள்ளார் டானியல். முயற்சியை கைவிடாத கோபாலகிருஷ்ணன், டானியல் மனைவி ஜேனட்டை பேட்டி எடுத்து பிரசுரித்துள்ளார். அதை படித்த டானியல் மனம் கனிந்து, கோபாலகிருஷ்ணனை அழைத்து, தன் வாழ்க்கை கதையை கூறியுள்ளார்.
இப்படித்தான் வரலாற்றின் இருண்டு கிடந்த பக்கம் வெளியானது. மலையாள முதல் சினிமாவின் பிதாமகன் டானியல் தான் என்பதை நிறுவ, பல முயற்சிகளை எடுத்துள்ளார், பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன். அவை போராட்டமாகவும் இருந்துள்ளன. முக்கியமாக அந்த உண்மையை அங்கீககரிக்க வேண்டிய பொறுப்பிலிருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலையாற்றூர் ராமகிருஷ்ணன். இவர் மலையாளத்தில் முக்கிய எழுத்தாளர். பிரதியே இல்லாத படத்தை அங்கீகரிக்க முடியாது என, கோரிக்கையை முழுமையாக அவர் நிராகாரித்துள்ளார்.
உண்மையை நிலை நிறுத்த இவருடன் நடத்திய சந்திப்புகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதிலும் சாதிக் கொடூர முகம் வெளிப்பட்டதாக, வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்திலும் இது பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே மலையாள சினிமாவின் தந்தை என அங்கீகரிக்கப்பட்டிருந்தவர் பாலன். அதற்கான அங்கீகாரம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தால் பெறப்பட்டிருந்தது. மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பதவியில் இருக்கும்வரை, டானியலுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஆனாலும் நீண்ட முயற்சியால் உண்மையை சாத்தியப்படுத்தியுள்ளார் பத்திரிகையாளர்.
மூன்றரை கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள, செலுலாயிட் திரைப்படம், புதைந்து போன வரலாற்றை மீட்டுருவாக்கியுள்ளது. பிரபல தமிழ் சினிமா நடிகர் பி.யூ.சின்னப்பா, டானியலை ஏமாற்றும் காட்சிகள் சிலவும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.
Read in : English