Read in : English

முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிங்காரச் சென்னையை உருவாக்குவதற்கான பாதை தற்போது திறக்கப்பட்டிருக்கிறது. காரணம் தற்போது நடந்துமுடிந்த சென்னைப் பெருநகர மாநகராட்சித் தேர்தலில் அவரது திமுக 153 வார்டுகளையும், தோழமைக் கட்சியான காங்கிரஸ் 13 வார்டுகளையும் கைப்பற்றியிருப்பதுதான். எதிர்க்கட்சியான அஇஅதிமுக 15 வார்டுகளையும், பாஜகவும், ஆளும்கட்சியின் பிறதோழமைக்கட்சிகளும் மிச்சமிருக்கும் வார்டுகளைக் கைப்பற்றியிருக்கின்றன.

தொடர்ந்துவந்த தேர்தல் வெற்றிகளால் திமுக தற்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நகர்ப்புற தமிழ்நாட்டின் பரபரப்பையும் ஆரவாரத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் கட்சியான திமுக, கடந்த பத்தாண்டுகளாகச் சென்னையிலும், பிற மாநகரங்களிலும் ஏற்பட்ட தாறுமாறான நகர்ப்புற முன்னேற்றத்தின் சீரழிவுகளை உடனடியாக களைவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்.

மாநிலத்தின் தலைநகரில் சில ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்கள் இன்னும் முடிவடையாமல் நிலத்தை மாசுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக தி நகரில் முடிவடையாமல் கிடக்கும் பாதசாரி மேம்பாலத் திட்டத்தைச் சொல்லலாம். திடக்கழிவு மேலாண்மை கட்டமைப்பு தொடர்ந்து பலனளிக்காமல் உள்ளது.

தேர்தல் வெற்றிக்களிப்பு முடிந்துவிட்டது. மாநில அரசும், புதிய பெருநகர மாநகராட்சிக் குழுவும் கடந்த பத்தாண்டுகளில் நிறையவே மாறியிருக்கும் ஓர் உலகத்தைக் கணக்கில் எடுத்து ஆராய வேண்டும்.

  • மாநகரங்கள் கரியமில வாயு வெளிப்பாடுகளை எதிர்த்துப் போராடுவதில் முன்னே நிற்கின்றன. எதிர்காலத் திட்டங்கள் பருவநிலை மாற்றத்தின் லட்சியங்களோடு இணைந்து கொள்ள வேண்டும்.

 

  • மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றியோர் புதிய சட்டம் இருக்கிறது. அதன் ஷரத்துகளை நடைமுறைப்படுத்தும்வகையில்  உட்கட்டமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும். எல்லோருக்குமான வடிவமைப்பும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தோழமையான உட்கட்டமைப்பும் எல்லோருக்கும் உதவக்கூடியவை.

 

  • சென்னையில் கார்களின் பெருக்கமும் இரு சக்கர வாகனங்களின் பெருக்கமும் கடந்த பலஆண்டுகளில் அபரிமிதமாகிவிட்டன. 2020-இல் கார்களின் எண்ணிக்கை 9.6 லட்சத்தையும், இரு சக்கர வாகனங்களின்  எண்ணிக்கை 47.56 லட்சத்தையும் தொட்டுவிட்டன. அதனால் சாலைகளைத் தாண்டி வாகன நிறுத்தவெளி உட்கட்டமைப்பை உருவாக்குவதில் சவால்கள் உள்ளன.

 

  • பூங்காக்களின் எண்ணிக்கை மக்கள்தொகை விகிதத்தைவிட மிகக்குறைந்த விகிதத்திலே இருக்கிறது. அதனால் நிறைய இடங்களை மரங்கள் அடர்ந்த பூங்கா நிலங்களாக மாற்ற வேண்டும்.

 

  • ஓரே நாளில்20 செமீ மழை பெய்ததைப் போனற கடுமையான வானிலை நிகழ்வுகள் 2021-ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்களுக்குத் தெளிவாக்கிவிட்டது. சராசரி சென்னைவாசிகள் விரும்புவது எதிர்காலத்தில் தங்கள் கால்களை ஈரம்படாமல் வைத்துக்கொள்வதற்கு நல்லதொரு மழைநீர்  வடிககால் திட்டங்களைத்தான்.

 

மாநகரங்கள் மக்கள்தொகை அடர்த்தியும் பொருளாதாரச் செயல்பாடுகளின் அடர்த்தியும் கொண்டிருப்பதால் அளவுக்கதிகமான அளவில் எரிபொருளை நுகர்கின்றன. உலகத்தில் நுகரப்படும் எரிபொருளில் 78 சதவீதம் மாநகரங்கள் நுகர்கின்றன; உலக அளவிலான பசுமை இல்ல வாயு வெளிப்பாடுகளில் 60 சதவீதம் மாநகரங்களில்தான் வெளிப்படுகின்றன என்று ஐக்கிய நாடுகளின் மனிதக்குடியிருப்புகளுக்கான செயல் திட்ட அமைப்பு (யு.என். ஹாபிடாட்) சொல்கிறது.

சென்னை தனது எதிர்காலத் திட்டத்தை கரியமிலவாயு வெளிப்பாட்டைக் குறைக்கும் இலக்கோடு இணைக்கவேண்டும். அதற்கு சூரிய ஒளி எரிபொருள் கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும்; சுற்றுப்புறச்சூழலுக்கு இணக்கமான கட்டடங்களைக, கடுமையான, நவீனப்படுத்தப்பட்ட கட்டடவிதிகள்படி கட்டுமானம் செய்யவேண்டும்; நிறைய சதுப்பு நிலங்களை உருவாக்க வேண்டும்; அவை நீண்ட காலத்திற்கு நீரைத் தக்கவைத்துக் கொள்ளும்; நகர்ப்புற வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும்; வெள்ளநீர்ச் சேமிக்குக் கிடங்குகளாகவும் செயல்படும். மாநில அரசுக் கட்டடங்கள்தான் முழுச்சீரமைப்புக்கு ஏற்ற இடங்கள்; அங்கேயிருக்கும் தரைகளை மரங்களடர்ந்த காடுகளாகவும்,  சதுப்பு நிலங்களாகவும் மாற்றியமைக்க முடியும்.

கரியமில வாயு வெளிப்பாடுகளைக் குறைப்பதற்குத் தனிமனித வாகனப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அதற்குப் பொதுஜனப் போக்குவரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும். மின்வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும்.  கரியமிலவாயு வெளிப்பாடு குறைவது மட்டுமல்ல, வளிமண்டலத்திலிருக்கும் நுண்மையான துகள் மாசும் மட்டுப்படும். மெட்ரோ ரயில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் விரிவடைந்துவிடும். அதேசமயம் பஸ் கட்டமைப்பும் வேகமாகச் செயல்பட வேண்டும்; புறநகர் குடியிருப்புகளின் உள்ளார்ந்த பகுதிகளை ரயில் நிலையங்களோடு இணைப்பதில் அது அக்கறை செலுத்த வேண்டும்.

புதிய சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்களும், மேயரும் ஒன்று சேர்ந்து மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் (2016) பிரிவுகளை நடைமுறைபடுத்த உறுதி எடுத்துக்கொண்டால் சென்னையை அவர்கள் ஒரு முன்மாதிரி மாநகரமாக்கலாம்


.

புதிய சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்களும், மேயரும் ஒன்று சேர்ந்து மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் (2016) பிரிவுகளை நடைமுறைபடுத்த உறுதி எடுத்துக்கொண்டால் சென்னையை அவர்கள் ஒரு முன்மாதிரி மாநகரமாக்கலாம். எளிதில் சென்றடையும் வசதி என்பதுதான் இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம்; ஆனால்  அரசுத்துறைகள், பொதுத்துறை, மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் நடைமுறையில் இதைப் புறக்கணித்துவிட்டன.

பொது இடங்கள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மற்றும் பஸ் போன்ற போக்குவரத்து முறைகள் ஆகியவை இந்த ’எளிதில் சென்றடையும் வசதி’ வரையறைகளுக்குள் வருகின்றன. அதைப்போலத்தான் பொதுவெளிக் கட்டடங்களும். ஆனால் இவையாவும் அன்றாடம் எடுக்கப்படும் முடிவுகளிலும் செயல்பாடுகளிலும்  இடம்பெறுவதில்லை. உண்மையைச் சொன்னால் எந்த உட்கட்டமைப்பையும் மறுகட்டுமானம் செய்யும்போது, இந்தப் பிரிவுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் கொள்கைக்கும், நடைமுறைக்கும் எப்போதும் ஒரு முரண் இருந்துகொண்டேதான் இருக்கிறது. பொறியியல் விதிகள்படியும், எங்கும் பொருந்தும் வடிவமைப்பு விதிகள்படியும் கட்டப்பட்ட நடைமேடைகள் இன்று சென்னையின் பெரும்பாலான சாலைகளில் இல்லை. சாலை விளிம்புவெளி உயிரற்றுக் கிடக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய ஒரு வேகத்தோடு செயல்பட வேண்டும்.

சட்டத்தின் விதிகள் 2017-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அந்த விதிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று சட்டம் கெடு விதித்திருந்தது. ஆனால் அந்தக் காலக்கெடு கடந்து விட்டது. அதனால் இப்போது அந்தப் பொறுப்பு புதிய கவுன்சிலுக்கும், சென்னைப் பெருநகரத் திட்டக்குழுவிற்கும் இருக்கிறது.

வாகனம் நிறுத்த கட்டணம் செலுத்து, என்பது சென்னைக்குப் பொருந்தும் ஒருநல்ல வழி. அந்தந்தப் பகுதியைப் பொறுத்து பார்க்கிங் கட்டணங்களை நிர்ணயிக்கலாம். மாநகரத்திற்குப் புதிய வருமானம் கிடைக்க இது வழிவகுக்கும்.

பலமானதோர் பொதுப்போக்குவரத்து அமைப்பு இருந்தபோதும், தனிமனித வாகனங்களான கார்களும், இருசக்கர வாகனங்களும் செல்வச்செழிப்பாலும், தனிப்பட்ட விருப்பங்களாலும் இன்னும் பெருகத்தான் போகின்றன. அதனால், பொதுவெளியை ஆக்கிரமிக்கும் தனிமனித வாகனங்களை நிறுத்துவதற்கான தற்போதைய ‘பார்க்கிங்’ மறுபடியும் ஆராய்வது அவசியம்.

கட்டணப் பார்க்கிங் இடங்களை ஒதுக்குவதன்மூலம், கட்டணப் பார்க்கிங் உட்கட்டமைப்பைத் தனியார்கள் உருவாக்குவதை அனுமதிப்பதன் மூலம், அரசு நல்ல வருமானத்தைப் பெறலாம். கார் உரிமையாளர்களுக்கும் பார்க்கிங் செய்ய பாதுகாப்பான இடங்கள் கிடைக்கும். காரை எங்கே வேண்டுமானாலும் நிறுத்துவது தனியுரிமை என்பது தவறான கொள்கை. உலகத்தில் எங்கேயும் இது சாத்தியமில்லை. கொலம்பியாவின் போகோட்டாவில் புத்திசாலியான மேயரான என்ரிக் பெனிலோசா, குறிப்பிட்ட பார்க்கிங் இடங்களை வரையறுத்துத் தந்தார்; அப்படித்தான் தெருவில் வாகனங்களை நிறுத்துவதை அவர் ஒழித்தார். வாகனம் நிறுத்த கட்டணம் செலுத்து, என்பது சென்னைக்குப் பொருந்தும் ஒருநல்ல வழி. அந்தந்தப் பகுதியைப் பொறுத்து பார்க்கிங் கட்டணங்களை நிர்ணயிக்கலாம். மாநகரத்திற்குப் புதிய வருமானம் கிடைக்க இது வழிவகுக்கும்.

அருகிலேயே பார்க்கிங் வசதியிருந்தால் திருவல்லிக்கேணியில் ரத்னா கஃபேக்கு அல்லது மைலாப்பூர் தெற்குமாட வீதிக்கு அல்லது ஜார்ஜ் டவுனில் இருக்கும் வடஇந்திய உணவகங்களுக்குச் செல்வது மிக எளிதாக இருக்கும்.

சென்னையில் 525 பொதுப்பூங்காக்களும் 128 போக்குவரத்துத் தீவுகளும், மேலும் பல சாலை இடைநிலைப் பிரிப்பான்களும் உள்ளன என்று பெருநகரச் சென்னை மாநகராட்சி சொல்கிறது. இவற்றையெல்லாம் பூங்காக்கள் என்றழைப்பது தவறு. ஏனென்றால் இவை சிலமரங்கள் கொண்ட வெறும் துண்டு நிலங்கள்.

மாநகரத்தில் இருக்கும் நிஜமான பூங்காக்கள் என்றால் தியோசோபிக்கல் சொசைட்டி தோட்டம், கிண்டி தேசிய பூங்கா மட்டுமே. பனகல் பார்க், நடேசன் பார்க், ஜீவா பார்க், சேத்துப்பட்டு, அடையார், செம்மொழிப் பூங்கா ஆகிய சுற்றுப்புறச்சூழல் பூங்காக்கள் ஆகியவை பெங்களூருவில் இருக்கும் லால்பாக் அல்லது கப்பன் பார்க்கிற்கு ஈடுகொடுக்க முடியாத வெறும் பலகீனமான பதிலிகள்தான்.

சிறுநிலங்களில் உருவாக்க நினைக்கும் மியாவாகிக் காடுகள் பற்றி இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் கடுமையாகவே இருக்கின்றன. ஏனென்றால் இந்தக் காடுகள் சுற்றுச்சூழலியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை; பொறியியல் உத்திகள்மூலம் வெறும் அடர்த்தியான பசுமையை மட்டுமே அவை உருவாக்குகின்றன.

இந்தத் தடவை நகர்ப்புற எல்லைக்குள் கணிசமான நிலப்பகுதியைத் தேடிக் கண்டுபிடித்து நிஜமான பூங்காக்களை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும். கட்டடங்களின் அருகே திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலத்தில் கட்டப்படும் பொதுமக்கள் நுழைய முடியாத சுவர்த்தடை கொண்ட தோட்டங்கள் பிரயோஜனமில்லை.

மழைநீர் வடிகாலாகச் செயற்படக்கூடிய சதுப்புநிலங்கள் நிறையவே சென்னை மாநகரத்திற்குத் தேவை என்பதை 2021-ல் நவம்பர், டிசம்பர் வெள்ளங்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம்

மழைநீர் வடிகாலாகச் செயற்படக்கூடிய சதுப்புநிலங்கள் நிறையவே சென்னை மாநகரத்திற்குத் தேவை என்பதை 2021-இல் நவம்பர், டிசம்பர் வெள்ளங்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம். இதற்கு ஒரு புத்தம்புதிய சித்தாந்தம் தேவைப்படலாம். அதன்படி நன்றாகக் கட்டமைக்கப்பட்ட நகர்ப்புறப் பகுதி்களை கையகப்படுத்தி அவற்றை வெள்ளநீரை உள்வாங்கிக் கொள்ளும் நீர்நிலைகளாக மாற்றிவிடலாம். டட்ச் மாடல் கால்வாய்களைச் சென்னை மாநகரத்தில் உருவாக்கி அவற்றின் மூலம் கடலுக்குச் செல்லும்வழியில் பள்ளிக்கரணையில் இருக்கும் கிழக்குச் சதுப்புநிலத்திலும் வேறு இடங்களிலும் நீரைக் கொண்டு சேர்க்கலாம்.

இந்த விவேகமான உத்தி பருவ நிலை மாற்றத்தோடு அனுசரித்துப் போகும்  வல்லமையைத் தரக்கூடியது. ஏனென்றால் பெரிய சதுப்புநிலங்கள் கோடைக்காலத் தாக்கத்தை மிதப்படுத்தும்; உஷ்ணத்தைப் பெரிதும் குறைக்கும்.

நகர்ப்புறத்தைத் திட்டமிடுதல், பூங்காக்கள், தோட்டங்கள், சாலைகள், பஸ் நிறுத்தங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் போன்ற பொதுவெளி வசதிகள், பெரிய அளவில் வறுமை ஒழித்தல் ஆகிய விஷயங்களில் நல்ல கொள்கைகளை உருவாக்கி எல்லா மாநகரங்களின் தலைவிதியையும் வடிவமைக்கும் வாய்ப்பை, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கும், மேயர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 243டபிள்யூ பிரிவும், 12-வது அட்டவணையும் தருகின்றன. இந்த விஷயங்களின் பெரும்பாலானவை மாசு கட்டுப்பாடு, பருவநிலை மாற்றத்தைக் குறைத்து அதனுடன் அனுசரித்துப் போதல் என்ற பெரிய லட்சியத்தோடு நேரடியான தொடர்பு கொண்டவை.

சென்னையைக் தொடர்வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய நேரம், முதல்வர் ஸ்டாலினுக்கும். விரைவில் வரவிருக்கும் மேயருக்கும் வந்துவிட்டது. மேலும் திடக்கழிவு மேலாண்மை, நெகிழிக் குறைப்பு போன்ற மற்ற பெரிய முனைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றைப் பற்றி தனியாக விவாதிக்க வேண்டும்.

தொடர்புள்ள இணைப்புகள்:

https://inmathi.com/2021/11/11/act-up-chennai-this-year-rain-will-be-the-norm-in-future/29529/

https://inmathi.com/2022/02/04/can-we-stop-chennai-floods-this-year-if-we-vote-in-the-february-19-urban-local-body-polls/39947/

https://inmathi.com/2022/01/01/a-deluge-and-carpocalypse-in-chennai/36185/

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival