Read in : English
சமீபத்தில் நான் யூடியூப்பில் 120 ரூபாயையும், தவணைமுறையில் நான்குமணி நேரத்தையும் செலவழித்து ‘கான் வித் த விண்ட்’ (காற்றோடு போனது) என்ற அமெரிக்கச் செவ்வியல் திரைப்படத்தைப் பார்த்தேன். ஒரு காலத்தில் பெரும்புகழைச் சம்பாதித்த இந்த ஹாலிவுட் கலாச்சாரச் சின்னம் இப்போது நிஜத்தில் மாயமாகிப் போனது; பொதுமக்களின் கண்களிலிருந்து வேகமாகவே மறைந்துகொண்டிருக்கிறது.
எச்பிஓ மாக்ஸ் தன் பட்டியலிலிருந்து இந்தப்படத்தை நீக்கிவிட்டது. தற்போது இதை வாடகைக்கு ஓடவிட்டிருக்கும் யூடியூப், படத்தின் பெருங்குறையைப் பற்றி, அதாவது அதன் இனச்சார்புக் கருப்பொருளைப் பற்றி, மன்னிப்புக் கேட்டே இந்தப் படத்தை அறிமுகம் செய்கிறது.
அமெரிக்கா முழுவதுமிருந்த ஆப்ரிக்கா-அமெரிக்க இனத்தவர்களும், அடிமைமுறையை ஒழிக்கப் போராடும் சித்தாந்தவாதிகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்புகள் இல்லாமல் இந்தப் படம் வெளியாகியிருந்திருக்காது. என்றாலும், ‘பீரியட்’ படத்திற்குச் சரியாகப் பொருந்தும் தெற்கத்தி உச்சரிப்பையும், மிகநுண்மையான தொழில்நுட்பங்களையும் படத்தில் உருவாக்குவதற்கு மெனக்கெட்ட தயாரிப்பாளர்கள் (எல்லோரும் வெள்ளையர்கள்) பலகோடி ஆப்ரிக்க அமெரிக்கர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. படத்தில் சந்தோசமான கறுப்பு அடிமைகளை கற்பனாவாதமாகச் சித்தரித்திருப்பதும், தவறாக நடத்தப்பட்டாலும் அவர்கள் தங்களின் வெள்ளை எஜமானர்களுக்காக வாழ்வதாகவும், சாவதாகவும் காட்டப்பட்டிருப்பதும் ஆப்ரிக்க-அமெரிக்கர்களைக் கோபப்படுத்தியது.
பிரதான பாத்திரங்களுக்கிடையே காட்டப்படும் காதல் வசீகரமானதுதான்; கட்புலக் காட்சிகள் அமரத்துவம் பெற்றவைதான்; நடிப்பும் கவனத்தைக் குவிக்கக்கூடியதுதான்; ஆனாலும் நடப்புகாலத்து அமெரிக்கப் பார்வையாளர்களிடம் படம் மெல்லமெல்ல தோற்றுப்போனது. பார்ப்பதற்குத் தகுதியற்றது என்றும் முத்திரை குத்தப்பட்டது என்று சொல்வதுகூட அவசியமில்லை.
புத்திகெட்ட மசாலாப்படங்கள் மட்டுமல்ல, தமிழ் நெஞ்சங்களில் மதிப்போடும் மரியாதையோடும் சிம்மாசனம்போட்டு உட்கார்ந்திருக்கும் படங்கள் கூட தற்காலத்தில் அதிகமாகிவிட்ட சமூக உணர்வாலும், பெண்ணியல்வாதத்தாலும், விழிப்புணர்வாலும் கொடூரமாகவே பரிகசிக்கப்பட்டு பரணில் தூக்கியெறியப்படுகின்றன.
தமிழ்ப் படங்களை ஒப்பிட்டால், ஒன்றல்ல, நிறையவே அந்தமாதிரி உண்டு. புத்திகெட்ட மசாலாப்படங்கள் மட்டுமல்ல, தமிழ் நெஞ்சங்களில் மதிப்போடும் மரியாதையோடும் சிம்மாசனம்போட்டு உட்கார்ந்திருக்கும் படங்கள் கூட தற்காலத்தில் அதிகமாகிவிட்ட சமூக உணர்வாலும், பெண்ணியல்வாதத்தாலும், விழிப்புணர்வாலும் கொடூரமாகவே பரிகசிக்கப்பட்டு பரணில் தூக்கியெறியப்படுகின்றன.
மணிரத்தினம் இயக்கிய ‘மௌனராகம்’ (1986) ஆராதனைக்குரிய செவ்வியல் படைப்புக்கு கொஞ்சம்கூட குறைந்ததாகக் கருதப்படவில்லை. அதீதமான அற்புதமான காதல் சித்திரங்களில் ஒன்றாகவே தமிழர் இதயங்களில் அது கோலோச்சி வந்திருக்கிறது. கதாநாயகி திவ்யாவின் (ரேவதி) அழகைப் பார்த்தும், வினோதப் போக்கையும் பார்த்து ஆண்களும் பெண்களும் ரசனையோடு மிரண்டார்கள். மேலும் அவளின் துடிப்பான காதலன் மனோகரையும் (கார்த்திக்), கண்ணியவான் கணவன் சந்திரகுமாரையும் (மோகன்) ரசிகர்கள் மிகவும் நேசித்தார்கள். அது அந்தக்காலம். இப்போது அப்படியல்ல.
கொஞ்சகாலத்திற்கு முன்பு, ‘அர்பன் நக்கலைட்ஸ்’ என்ற யூடியூப் சானலில் ‘மௌனராகம்’ படத்தைப் பரிகாசம் செய்து ‘மௌன ரோகம்’ (அமைதியான நோய்) என்ற பெயரில் நகல்படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அசல் திரைப்படத்திலிருந்த நச்சை எல்லாம் வெளியேற்றியது இந்தச் சிரிப்புப்படம்.
அசல் திரைப்படத்திலிருந்து மறக்கமுடியாத காட்சிகளைத் தேர்ந்தெடுத்து அமிலம் தோய்ந்த வசனங்களோடு அவற்றை மீளுருவாக்கம் செய்து பார்வையாளர்களைச் சிரிக்க வைத்தது அந்த யூடியூப் படம். திரைப்படம் கொண்டாடிய, கற்பனாவாத அழகோடு சொல்லப்பட்ட, திருமணப் பந்தத்தில் கற்பழிப்பு, சம்மதமின்மை, குறுகுறுவென்று பார்க்கும் ஆண்பார்வை, உணர்ச்சி மிரட்டல் ஆகிய விஷயங்களைப் பற்றி மக்களைப் மறுபார்வை, மறுசிந்தனை கொள்ளவைக்க அதிரடியாகச் சொன்னது அந்த ‘ஸ்பூஃப்’ சிரிப்புப்படம். “நீ யாரோ ஒருவனைக் காதலிக்கும்போது நான் உன்னை முட்டாள்தனமாகக் கல்யாணம் செய்துகொண்டது முக்கியமில்லை; நீ உன் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்பதே எனக்கு முக்கியம்.”
யூடியூப்பில் இதுவரை அந்த ‘ஸ்பூஃப்’ படத்தை முப்பது லட்சம்பேர் பார்வையிட்டுள்ளனர். கருத்துப்பகுதியில் 99 விழுக்காடு நேர்மறையான எதிர்வினைகள் பதிவிடப்பட்டிருக்கின்றன. எதிர்வினையாற்றியவர்கள் ஆரம்பத்தில் தங்களுக்குச் சந்தேகம் இருந்ததாகவும், பின்புதான் அசல் ‘மௌனராகம்’ எவ்வளவு பிரச்சினைஃகளைக் கொண்டிருக்கிறது என்று தாங்கள் புரிந்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
கான் வித் த விண்ட் சந்தோசமான கறுப்பு அடிமைகளை ஆர்வமுடன் சித்தரித்தது. அதைப்போலவே, ‘மௌனராகம்’ போன்ற தமிழ்ப் படங்கள் எப்போதும் ஒரு கண்ணியமான கணவன், மகிழ்ச்சி அடக்கப்பட்ட ஒரு மனைவி என்ற சித்திரத்தை வரைந்தெடுக்கவே முயன்றிருக்கின்றன. சமூகத்தின் அடிமனதில் உள்வாங்கப்பட்டிருக்கும் பெண் வெறுப்பு உணர்வை அந்த மாதிரியான படங்கள் தட்டியெழுப்பி காசுபார்க்கின்றன.
விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ பல மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்ட மற்றுமொரு ஜனரஞ்சகப் புகழ்பெற்ற திரைப்படம். பெண்ணுக்கெதிரான எல்லாக் கருத்தாக்கங்களையும் அழகியல்படுத்தியதோடு நில்லாமல், சாதிநிறைந்த இந்தியக் குடும்ப அமைப்பின் பிற்போக்கு விழுமியங்களையும் தூக்கிப்பிடித்த படம் அது.
விசு, மணிரத்னம், மற்றும் பிற்காலத்துப் பாலசந்தர் ஆகிய தமிழ் பிராமண இயக்குநர்கள், மற்ற தமிழர்களிடமிருந்து வேறுபட்ட தமிழ் பிராமணக் குடும்பங்களைப் பற்றி படமெடுத்ததில்லை.
விசு, மணிரத்னம், மற்றும் பிற்காலத்துப் பாலசந்தர் ஆகிய தமிழ் பிராமண இயக்குநர்கள், மற்ற தமிழர்களிடமிருந்து வேறுபட்ட தமிழ் பிராமணக் குடும்பங்களைப் பற்றி படமெடுத்ததில்லை. அவர்களின் திரைப்படங்கள் சூத்ர சாதிகள், முதலியார்கள். பிள்ளை அல்லது செட்டியார் ஆகிய சாதிகளைப் புகழ்வதாகவே இருக்கும். அந்தப் பாத்திரங்கள் பிராமண நடிகர்களால் நடிக்கப்பெற்றன. உதாரணமாக, பிறப்பால் பிராமணரான ஜெமினி கணேசன் ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் ‘பிலகரி மார்த்தாண்டம் பிள்ளை’யாக நடித்திருப்பார். ஆனால் ஆனல் அது புது பாட்டிலில் கொடுக்கப்பட்ட பழைய கள். ஏனென்றால் அந்தப் பாத்திரம் இயல்பிலேயே சாதீயமும், பிராமண அம்சமும் கொண்டது.
அந்தச் சாதி மக்களைக் குதூகலப்படுத்தி தாங்களும் பிராமணர்களுக்கு இணையானவர்கள் என்று அவர்களைச் சிந்திக்க வைப்பது பலமானதோர் உத்தி. ஆனால் அதேசமயம் அவர்கள் மூலம் இயக்குநர்கள் பேசுவது பிராமணக்குரல்.
பிராமணச் சிந்தனைகளும், கருத்துகளும் சின்ன சின்ன பாத்திரங்கள் வாயிலாக தமிழ் சாதி இந்துக்களுக்குக் கொண்டுசேர்க்கப்படுகின்றன. அவற்றை எழுதி நடிப்பது பிராமணர்கள்தான்
பிராமணச் சிந்தனைகளும், கருத்துகளும் சின்ன சின்ன பாத்திரங்கள் வாயிலாக தமிழ் சாதி இந்துக்களுக்குக் கொண்டுசேர்க்கப்படுகின்றன. அவற்றை எழுதி நடிப்பது பிராமணர்கள்தான்.
‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் கிறித்துவர்களுக்குக் கனமான மறைவான சேதிகளைச் சொல்கிறது. எவ்வளவுதான் பணமும் சமூக அந்தஸ்தும் கொண்டவர்கள் ஆயினும், கிறித்துவர்கள் சமூக அன்பைப் பெற வேண்டுமானால் அவர்கள் இந்துக்களையும், இந்து மரபுகளையும் மிக உயர்வாக மதிக்க வேண்டும். சாதி இந்துவின் முன்பு அவர்கள் பணிவாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் சாதி இந்துவின் “கௌரவம்” உயர்வானதாகவும் மதிப்புமிக்கதாகவும் கருதப்படுகிறது
படித்த, சுய கருத்துள்ள, சுதந்திரமான பெண்களை அந்தப்படம் மோசமான பெண்களாகக் காட்டுகிறது; படிக்காத, பணிவான ‘வேலைக்காரப்’ பெண்களை ஆணாதிக்கச் சமூகத்தைத் தூக்கிப்பிடிக்கும் திறனுள்ளவர்களாகக் காட்டுகிறது. இதையெல்லாம் சரியாகச் செய்தது இந்தப்படம்.
விருது பெற்று புனிதச் சின்ன மரியாதையோடு பல ஆண்டுகளாக இருக்கும் இந்தப் படத்திற்கு, இப்போது வேடிக்கையான மீம்களின் மொத்த கொள்முதல் இடம் என்பதைத் தவிர மரியாதை வேறொன்றும் இல்லை.
சரித்திரத்தை அப்படியே நிகழ்ந்தவண்ணம் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது முக்கியமானதுதான்; ஆனாலும் என்னதான் நம் இதயத்திற்கு மிகநெருக்கமாக சில சின்னங்கள் இருந்தாலும், அவை தூக்கிப்பிடிப்பது பிறழ்ந்துபோன விழுமியங்கள்தான் என்று தெளிவாகத் தெரிந்தவுடன் அவற்றைக் காற்றில் கரைய விட்டுவிடுவதும் மிகவும் முக்கியமானது.
(தமிழில் மொழிபெயர்ப்பு: மாரியப்பன்)
Read in : English