Read in : English
மருத்துவக் கல்லூரியில் சேருவற்கு விண்ணப்பம் வாங்க வசதி இல்லாமல் பிளஸ் டூ படித்த பிறகு மளிகைக் கடையில் வேலைபார்த்த கிராமப்புற மாணவரான எஸ். கமலக்கண்ணன் (25), தற்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து டாக்டராகியுள்ளார்.
தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் படித்த அவர், அவரது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி மட்டுமல்ல, அவர் பிறந்த புங்கவாடி கிராமத்தின் முதல் டாக்டரும்கூட. தற்போது எம்.டி. படிப்பதற்கான முதுநிலை நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
சேலம் ஆத்தூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புங்கவாடி. Ñமலையை ஒட்டிய கிராமம். அந்த ஊரிலிருந்து பஸ் கிடையாது. 5 கிலோ மீட்டர் கெங்கவல்லிக்கு நடந்து போய் அங்கிருந்து பஸ் பிடிக்க வேண்டும். அல்லது மஞ்சினிக்கு போய் அங்கிருந்து பஸ் பிடிக்க வேண்டும். அதற்கும் 5 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். புங்கவாடியைச் சேர்ந்தவர் எஸ். கமலகண்ணன். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவர் தனது வாழ்க்கைக் கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
எனது அப்பா சுப்பிரமணி பள்ளிக்கூடமே போகாதவர். அம்மா பாலம்மாள் 5ஆம் வகுப்புவரைப் படித்திருக்கிறார். எங்களுக்குக் கொ]ஞ்சம் நிலம் இருக்கிறது. அது வானம் பார்த்த பூமி. Ñமழை பெய்தால் விவசாயம் இருக்கும். மற்ற நேரங்களில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அப்பாவும் அம்மாவும் வேலை செய்வார்கள். இதிலிருந்து கிடைக்கும் வருமானம்தான் எங்களது வாழ்க்கைக்கு ஆதாரம். ஐந்தாவது படிக்கும்போதிலிருந்தே விடுமுறை நாட்களில் விவசாய வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டேன். கெங்கவல்லியில் உள்ள அரசுப் பள்ளியில் எனது அக்கா கோமதி படித்தார். தொடர்ந்து படிக்க வைக்க வசதி இல்லை என்பதால் அவர் 9வது வகுப்புடன் படிபபை நிறுத்திவிட்டார். தற்போது அவருக்குத் திருமணமாகிவிட்டது.
நானும் புங்கவாடியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8வது வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். தொடர்ந்து படிக்க வசதி இல்லாத நிலையில், அவரது அக்காவைப் போல படிப்பை நிறுத்திவிடும் சூழ்நிலை இருந்தது. அந்த சமயம், ஆரியபாளையம் ஊரில் வசித்து வந்த எனது பெரியம்மா பொன்னம்மாளின் மகன் ப. பிரபு அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். Ðபடிப்பின் முக்கியத்தும் பற்றி எடுத்துக்கூறி, தனது வீட்டில் இருந்து என்னைப் படிக்கும்படி சொன்னார். அதையடுத்து அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9வது வகுப்பையும் 10வது வகுப்பையும் படித்தேன். அண்ணன் வீட்டில் எனக்குப் பாடங்களையும் சொல்லித் தருவார்.. பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 443 மதிப்பெண்கள். அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள். அத்துடன், பத்தாம் வகுப்பில் எனது பள்ளியில் 2வது ரேங்க்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கின்ற நன்கு படிக்கின்ற மாணவர்களுக்கு கட்டணம் வாங்காமல் வாழப்பாடியில் உள்ள வைகை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்க்கிறார்கள் என்பதை அறிந்த எனது அண்ணன், அவர்களிடம் பேசி அங்கு படிக்க ஏற்பாடு செய்தார்
பத்தாம் வகுப்புத் தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கின்ற நன்கு படிக்கின்ற மாணவர்களுக்கு கட்டணம் வாங்காமல் வாழப்பாடியில் உள்ள வைகை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்க்கிறார்கள் என்பதை அறிந்த எனது அண்ணன், அவர்களிடம் பேசி அங்கு படிக்க ஏற்பாடு செய்தார். அந்தப் பள்ளியில் உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன். வாழப்பாடியில் எனது அக்கா கோமதி, வீட்டில் இருந்து அந்தப் பள்ளிக்குப் போய் வந்தேன். தான் பள்ளிப் படிப்பைப் படிக்க முடியாமல் போனாலும்கூட, என்னை எப்படியாவது படிக்க வைத்துவிடுவதற்கு எனக்கு உதவியாக இருந்தார்.
2014ஆம் ஆண்டு எழுதிய பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1127 மதிப்பெண்கள் பெற்றேன். உயிரியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றேன். இயற்பியலில் 194, வேதியியலில் 198, கணிதத்தில் 194 மதிப்பெண்கள் எடுத்தேன். மருத்துவப் படிப்புக்கான கட் ஆப் மார்க் 195.50.
பிளஸ் டூ தேர்வுகள் முடிந்ததும், கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விண்ணப்பங்களைப் போடுவதற்கு பணம் வேண்டுமே என்பதற்காக கெங்கவல்லியில் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு சரக்குகளைப் பொட்டலம் கட்டித் தருவது, மூடைகளை தூக்கித் தருவது இப்படி காலை 8 எட்டு மணியிலிருந்து இரவு 8 மணி வரை வேலை இருக்கும். மாதம் ரூ.3 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள்.
அதை வைத்துக் கொண்டு, பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்ததும் எம்பிபிஎஸ் படிப்பில் சேரவும் கால்நடை மருத்துவப் படிப்பில் சேரவும் விண்ணப்பித்தேன். அந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. பிடிஎஸ் படிப்பில் இடம் இருந்தது. ஆனால், அதில் நான் சேரவில்லை. அப்புறம், கவுன்சலிங் மூலம் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பிவிஎஸ்சி படிப்பில் இடம் கிடைத்தது. அதில் சேர்ந்தேன். கல்லூரிப் படிப்பைப் படிப்பதற்கு அகரம் பவுண்டேஷனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று எனது அண்ணன் பிரபுதான் யோசனை சொன்னார். அகரம் பவுண்டேஷன் எனது படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டது. ஓராண்டு பிவிஎஸ்சி படிப்பைப் படித்தேன்.
அடுத்த ஆண்டில் மீண்டும் எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கச் சொன்னார்கள். இந்த முறை முதல் கவுன்சலிங்கில் எனக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது. பின்னர், நான்காவது கட்ட கவுன்சலிங்கில் எனக்கு சென்னையில் ஸ்டான்லி மருத்து கல்லூரியில் இடம் கிடைத்தது. எனவே, ஓராண்டு படித்த பிவிஎஸ்சி படிப்பை விட்டு விட்டு, எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தேன்.
இதுவரை தமிழ் வழியில் படித்துவிட்டு, கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஓராண்டும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து கொள்ள சிரமப்பட்டேன். அதேபோலதான் எம்பிபிஎஸ் படிப்பிலும் எனக்கு சிரமங்கள் இருந்தன. அகரம் பவுண்டேஷன் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். அவர்களது பயிற்சி வகுப்புகள் எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டுகளில் நன்றாகப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். 2015இல் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த நான் 2021இல் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தேன்.
தற்போது எம்டி முதுநிலை மருத்துவப் படிப்பைப் படிப்பதற்கான முதுநிலை நீட் தேர்வு எழுதத் தயாராகி வருகிறேன். வீட்டிலிருந்தே இத்தேர்வுக்குப் படித்து வருகிறேன்.
இரண்டு மாதங்கள் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தேன். தற்போது எம்டி முதுநிலை மருத்துவப் படிப்பைப் படிப்பதற்கான முதுநிலை நீட் தேர்வு எழுதத் தயாராகி வருகிறேன். வீட்டிலிருந்தே இத்தேர்வுக்குப் படித்து வருகிறேன். வருகிற மே மாதத்தில் இத்தேர்வை எழுதிவிட்டு மீண்டும் வேலைக்குப் போக வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தால் முதியோர் நல மருத்துவம் அல்லது குழந்தைகள் நல மருத்துவத்தில் எம்.டி. படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். முதுநிலைப் படிப்பைப் படிக்க உதவித்தொகை கிடைத்துவிடும் என்பதால் எம்டி படிப்பதில் பிரச்சினை இருக்காது.
மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி, அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்தால் மஞ்சினியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதரா நிலையத்தில் (அப்கிரேட்ட் பிரைமரி ஹெல்த் சென்டர்) அல்லது ஆத்தூர் வட்ட தலைமை மருத்துவமனையில் டாக்டராக வேலையில் சேர்ந்து எங்களது பகுதி மக்களுக்கு எனது மருத்துவ சேவையைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். எம்டி முடித்தாலும்கூட, எங்களது பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை. நான் பிறந்த புங்கவாடி கிராமத்தில் முதியோருக்காக இல்லம் ஒன்றை நடத்த வேண்டும் என்பதும் எனது எதிர்காலக் கனவு என்கிறார் டாக்டர் எஸ். கமலக்கண்ணன்.
Read in : English