Read in : English
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதுவதற்காக, அறந்தாங்கியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்த முன்னாள் மாணவர்களும் மாணவிகளும் இலவசப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
இந்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் தொடங்கிய திசைகள் வழிகாட்டு அமைப்பு, இந்திய மருத்துவக் கழகத்தின் (இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்) அறந்தாங்கிக் கிளை ஆகிய அமைப்புகள் இணைந்து 2018ஆம் ஆண்டு முதல் சிகரம் இலவச நீட் பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டில் இந்த இலவசப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
![](https://inmathi.com/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-31-at-3.54.20-PM-1-150x150.jpeg)
சிகரம் இலவசப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் பிடித்துள்ள ஏ. சம்ஷியா அப்ரின்.
இந்த ஆண்டில் இந்த இலவசப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஷம்ஷியா அப்ரினுக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. அந்தப் பள்ளியிலிருந்து எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் முதல் மாணவி மட்டுமல்ல, மேற்பனைக்காட்டு கிராமத்திலிருந்து எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் முதல் மாணவியும் அவர். தமிழ் வழியில் படித்த அவர், அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி. விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது தந்தை அப்துல் முத்தலீப்பைப் போலவே அவரும் போலியோவினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. எம்பிபிஎஸ் படித்தபிறகு, மகப்பேறு மருவத்துவராக வேண்டும் என்பது அவரது விருப்பம்.
சிதம்பர விடுதி அரசுப் பள்ளி மாணவரான சிலையூரைச் சேர்ந்த நாகராஜனுக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அப்பா பெட்டிக்கடை வைத்திருக்கிறார். பள்ளியில் தமிழ் வழியில் படித்த அவரும், அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து செயல்படுத்தும் இந்த முயற்சி பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார் திசைகள் மாணவர் வழிகாட்டு அமைப்பின் தலைவரும் சிகரம் இலவச நீட் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ச. தெட்சிணாமூர்த்தி:
அறந்தாங்கியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்த 30க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்களும் மாணவிகளும் இணைந்து திசைகள் வழிகாட்டு அமைப்பை 2005ஆம் ஆண்டில் தொடங்கினோம். அறந்தாங்கியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கிக் கூறுவோம். அவர்கள் படிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை குறித்தும் விளக்கிக்கூறுவோம். மாணவர்களுக்கு ஆலோசனைகூறி வழிகாட்டும் இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அத்துடன், அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கஜா புயலினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார முகாம்களையும் நடத்தி வந்தோம்.
![](https://inmathi.com/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-31-at-3.03.12-PM-300x225.jpeg)
2020ஆம் ஆண்டு இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த கவிவர்மன், கிருஷ்ணவேணி, பிடிஎஸ் படிப்பில் சேர்ந்த நர்மதா ஆகியோருடன் டாக்டர் தெட்சிணாமூர்த்தி.
எம்பிபிபிஸ் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு, மருத்துவப் படிப்புகளில் சேரும் கனவுகளுடன் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க முடிவு செய்தோம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயிற்சி இல்லாவிட்டால் அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது. தனியார் கோச்சிங் மையங்களில் சென்று பயிற்சி பெறும் வாய்ப்புகள் இல்லாதவர்கள் இவர்கள். எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி கொடுக்க முடிவு செய்தோம். நீட் தேர்வு மாணவர்களை வடிகட்டுவதுபோல, எங்களது பயிற்சி முகாமில் சேர யாரையும் வடிகட்டுவதில்லை. யாரும் கலந்து கொள்ளலாம். பயிற்சி இலவசம்தான்.
அறந்தாங்கியில் உள்ள இந்திய மருத்துவக் கழகத்தின் ஒத்துழைப்புடன் இந்த இலவசப் பயிற்சி முகாமை 2018லிருந்து நடத்தி வருகிறோம். அதன் தலைவர் டாக்டர் லெட்சுமி நாராயணன் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கு ஆர்வத்துடன் முழுமையான ஒத்துழைப்பை அளித்து வருகிறார். இந்தப் பயிற்சி மையம் தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த அவர், எங்களுக்கு மிகப் பெரிய பலம்.
அறந்தாங்கியில் இந்திய மருத்துவக் கழக அரங்கில் இந்தப் பயிற்சி முகாமை நடத்துவோம். பஸ் நிலையத்திலிருந்து இந்த அரங்கத்துக்கு வரும் மாணவர்களுக்கு நாங்களே வாகன வசதி ஏற்பாடு செய்து தருகிறோம். பயிற்சி நேரத்தில் தேநீர், ஸ்நாக்ஸ் வழங்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பிளஸ் டூ தேர்வு முடிந்தபிறகு, தினந்தோறும் காலை 9 மணியிலிருந்து 2 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்.
2018இல் பயிற்சி பெற்ற 54 மாணவர்களில் 9 பேரும் 2019இல் 104 மாணவர்களில் 17 பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், அந்த இரண்டு ஆண்டுகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும்கூட அந்த மாணவர்களால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர முடியவில்லை.
2020இல் கொரோனா காரணமாக இணையதள வழியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற 19 மாணவர்களில் 9 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் இரண்டு பேருக்கு எம்பிபிஎஸ் படிப்பிலும் ஒருவருக்கு பிடிஎஸ் படிப்பிலும் இடம் கிடைத்துள்ளது.
2020 இல் கொரோனா காரணமாக இணையதள வழியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற 19 மாணவர்களில் 9 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் இரண்டு பேருக்கு எம்பிபிஎஸ் படிப்பிலும் ஒருவருக்கு பிடிஎஸ் படிப்பிலும் இடம் கிடைத்துள்ளது. சிதம்பர விடுதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கவிவர்மனுக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது. தாந்தானி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருஷ்ணவேணிக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. சுப்பிரமணியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நர்மதாவுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது.
![](https://inmathi.com/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-31-at-3.54.21-PM-150x150.jpeg)
சிகரம் இலவசப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் பிடித்துள்ள மாணவர் நாகராஜன்.
எங்களிடம் பயிற்சி பெற்று கடந்த ஆண்டில் (2021) நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற இரண்டு பேருக்கு தற்போது எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங்கில் இடம் கிடைத்துள்ளது. எங்களது முயற்சிக்கு கிடைத்த சிறிய அங்கீகாரம் இது.
உயிரியல் ஆசிரியர் முருகையன், இந்தப் பயிற்சி வகுப்பின் ஆணிவேர். அவரது உழைப்பும், அர்ப்பணிப்புமே இந்த வெற்றிகளை சாத்தியப்படுத்தியுள்ளது. இந்தப் பயிற்சி மையத்தின் திட்ட இயக்குநரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான பாஸ்கரனின் தொடர் கண்காணிப்பும், கவனமும் இன்றி இந்தச் சாதனைகள் சாத்தியமில்லை. அறந்தாங்கி சுற்றியுள்ள அரசுப்பள்ளி மாணவர்களை மருத்துவராக்கும் எங்கள் பயணம் தொடரும். எங்கள் அனிதாக்களின் கழுத்துகளில் ஸ்டெதாஸ்கோப்புகளை மாட்டிக்கொண்டே இருப்போம் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் தோல் நோய் மருத்துவரான டாக்டர் ச. தெட்சிணாமூர்த்தி.
Read in : English