Read in : English
இருநூறு நாட்கள் இந்தியாவின் வடக்கு பகுதியை சுற்றிய பின் சொந்த மாநிலம் திரும்பியிருக்கிறார் 23 வயதான மதுரையை சேர்ந்த ஜி.ஜி. சிவப்ரகாஷ். நாடு 73வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த நாளில் சிவப்ரகாஷின் அனுபவம் நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் பி டெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்த சிவப்ரகாஷ், வட இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்.
கடந்த ஜூலை 23ஆம் தேதி கோவாவில் தொடங்கிய தனது பயணத்தை சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தது தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார். இந்த 200 நாட்களும் சிவா பயணம் செய்தது பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் எனப்படும் பொதுப் பேருந்துகள், ரயில்கள், ஷேர் ஆட்டோ. இது போன்ற எதுவும் கிடைக்காத போது ஜீப்புகள், லாரிகள், ட்ராக்டர்கள் போன்ற வாகனங்களில் தனது பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். பயணத்தின் போது தங்குவதற்கு வேண்டிய இடத்தை பயணிகளுக்கான சில ஆப்கள் மூலம் தெரிவு செய்திருக்கிறார். ஒரு நாளைக்கான செலவு 400 ரூபாய். இவரது பயணத்துக்கு ஆன மொத்த செலவு ரூ.80 ஆயிரம்.
இந்த பணத்தை சம்பாதித்ததே ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்கிறார் சிவா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பு முடிந்தவுடன் பெற்றோரிடம் பயணத்திற்கான பணம் கேட்டிருக்கிறார். “உன் சொந்த பணத்தில் சென்றால்தான் அதன் மதிப்பு உனக்கு தெரியும் என்றார் அப்பா. எனவே இரண்டு ஆண்டுகள் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து பணம் சேர்த்தேன். பணம் சேர்ந்தவுடன் வேலையை விட்டுவிட்டேன்” என்கிறார் சிவா.
கோவாவில் தொடங்கிய பயணம் மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அசாம், மேகாலயா, அண்டை நாடான நேபாளம், மேற்கு வங்காளம், ஒடிஷா என்று நீண்டு தெலங்கானா மற்றும் ஆந்திரா வழியாக சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். ஓவ்வொரு மாநிலத்திலும் 20 முதல் 23 நாட்கள் தங்கியிருக்கிறார்.
எப்படி இருந்தது பயணம்? வட இந்தியர்களை பற்றி நம்மிடம் கற்பிக்கப்பட்டிருக்கும் கூற்றுகள் உண்மைதானா? ரூ.80 ஆயிரம் செலவில் 20 நாட்கள் பயணம் சிவாவுக்கு என்ன கற்றுக்கொடுத்தது?
அற்புதமான அனுபவம், அற்புதமான மக்கள் என்கிறார் சிவா. Ñமாகாராஷ்டிரத்தை கடந்து குஜராத்தில் நுழைந்த பிறகு அவர்களுடைய விருந்தோம்பல் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறுகிறார். எவ்வளவு என்றால், குஜராத்தில் மட்டும் ஒரு மாதத்திற்கும் மேல் தங்கியிருந்திருக்கிறார். “அதே போன்ற ஒரு விருந்தோம்பலை அண்டை மாநிலமான ராஜஸ்தானில் எதிர்பார்த்து சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது” என்கிறார் சிவா.
எனினும் ராஜஸ்தானும் ஒரு நல்ல அனுபவமே என்கிறார் இந்த இளைஞர். நாம் பயப்படும் அளவுக்கு பொது போக்குவரத்து வடமாநிலங்களில் மோசமாக இல்லை என்கிறார். “வடக்கு முழுதும் உள்ள முக்கியமான பிரச்சினை பொது இடங்களில் துப்பி வைப்பது. பானும் குட்காவும் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது” என்று சொல்கிறார் அவர்.
குருத்துவராக்களில் பிரயாணிகளுக்கு லங்கார் மூலம் உணவு கிடைக்கும் எனவும் இரவு தங்கிக்கொள்ள அவர்களிடம் அனுமதி கேட்டால் இடமும் கிடைக்கும்.
குஜராத்தை போன்று பஞ்சாப் மாநிலமும் வளம் நிறைந்ததாக இருக்கிறது. தங்குவதற்கும் உணவுக்கும் பஞ்சாபில் கவலையே இல்லை என்று கூறும் சிவா, குருத்துவராக்களில் பிரயாணிகளுக்கு லங்கார் மூலம் உணவு கிடைக்கும் எனவும் இரவு தங்கிக்கொள்ள அவர்களிடம் அனுமதி கேட்டால் இடமும் கிடைக்கும் என்று சொல்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் அவர் சென்று சேர்ந்த போது கொஞ்சம் நிலைமை சரியில்லை. அப்பாவிகளை தீவிரவாதிகள் என்று ராணுவம் கொன்றதாக மக்கள் கொதித்து போயிருந்த நேரம். என்றாலும் தன்னை நன்றாகவே கவனித்துக்கொண்டதாக கூறுகிறார் சிவா. காஷ்மீரிகளிடம் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு அதிகம். ஆனால் கொஞ்சம் பழகிவிட்டால் அவர்களுக்கு இணை அவர்கள்தான். இலவச உணவு முதல் சுற்றிபார்ப்பதற்கு அழைத்து செல்வது வரை அனைத்தும் தனக்காக செய்ததாக நினைவு கூறுகிறார்.
உத்தரப்பிரதேசமும் பீகாரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாக சொல்கிறார். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். விலைவாசி மிகவும் குறைவு. நான்கு ரூபாய்க்கு கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் வரை பயணித்ததை விவரிக்கிறார். அரசியல்வாதிகளை விட மதகுருக்களுக்கே மரியாதை அதிகமாக கிடைக்கிறது” என்கிறார் சிவா.
இரண்டு ஆண்டுகள் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து பணம் சேர்த்தேன். பணம் சேர்ந்தவுடன் வேலையை விட்டுவிட்டேன்” என்கிறார் சிவா.
நேபாளத்தின் இயற்கையழகு மனதை கொள்ளை கொள்வதாக அமைகிறது. விலைவாசி இங்கும் குறைவு. பேருந்துகளை விட ஜீப்புகள் நேரத்தை சேமிப்பதாக உள்ளது ஆனால் சாலைகள் தான் கொஞ்சம் மோசம். வடகிழக்கு மாநிலங்களிவும் அதே மாதிரி இயற்கையழகு கொட்டிக்கிடக்கிறது என்கிறார். அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் தனக்கு மிகவும் உதவியாக இருந்ததை சொல்கிறார். “இந்தியைவிட ஆங்கிலத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் கொஞ்சம் மவுசு அதிகம் என்று” சொல்கிறார் சிவா.
கேந்திரிய வித்யாலாயாவில் படித்த சிவாவுக்கு இந்தி ஒரு பிரச்சினையாக அமையவில்லை. இந்தி தெரியாதவர்கள் இவ்வாறு பிரயாணம் செய்யமுடியுமா? என்ற கேள்விக்கு சிவா தரும் பதில் பெரும் ஆறுதல். “நீங்கள் பேச முயற்சித்தாலே போதும். உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் எனக்கு அவர்கள் தங்க இடம் ஏற்பாடு செய்ய மெனக்கெட்டது நெகிழ வைப்பதாக இருந்தது. நாம் இங்கே அது போல செய்வோமா என்பது சந்தேகமே” என்கிறார்.
மேலும், வடமாநிலங்களில் இருந்து இங்கே வேலை செய்பவர்கள் இப்போது அதிகம். நமது மாநிலத்தின் பல இடங்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். “நான் தமிழ்நாடு என்று சொன்னவுடன் சென்னையில் வேலைபார்க்கும் ஒரு உறவினரிடம் பேச சொன்னார். அவரிடம் பேசியதும் மிகவும் மகிழ்ந்து போனார்கள் என்பதை அவர் நினைவு கூறுகிறார்.
மேற்கு வங்காளத்தில் முக்கியமாக கொல்கத்தாவில் ட்ராம் வண்டிகளையும் மஞ்சள் நிற அம்பாஸடர் கார்களையும் காணவே ஒரு சுற்றுலா பயணிகள் கூட்டம் வருகிறது. அதன் மதிப்பறிந்த உள்ளூர்க்காரர்கள் சில கிலோமீட்டர்கள் அம்பாஸடர் கார்களில் பயணம் செய்ய பெருந்தொகை வசூலிக்கிறார்கள் என்கிறார்.
தன்னந்தனியாக பயணம் செய்வதற்கு துணிவு வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகளை சமாளிக்க சமயோசிதம் வேண்டும். இவற்றோடு இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை அறிந்துகொள்ளவும் இந்த 200 நாள் பயணம் உதவியது
ஓமிக்ரான் பரவலை தொடர்ந்து மாநிலங்கள் கொண்டுவரும் பொதுமுடக்கத்தின் காரணமாக தனது பயணத்தை துரிதமாக முடித்து கொண்டதாக கூறும் சிவா, இந்த பயணத்தின் மூலம் தன்னம்பிக்கையும் வாழ்க்கையில் தெளிவையும் பெற்றதாக கூறுகிறார். தன்னந்தனியாக பயணம் செய்வதற்கு துணிவு வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகளை சமாளிக்க சமயோசிதம் வேண்டும். இவற்றோடு இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை அறிந்துகொள்ளவும் இந்த 200 நாள் பயணம் உதவியது என்கிறார் சிவா.
“வடநாட்டவர்களை பற்றியும் வடஇந்தியாவை பற்றியும் நாம் கொண்டிருக்கும் யூகங்களுக்கும் உண்மைக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. இந்தியாவும் இந்திய மக்களும் மிக மிக அழகானவர்கள். முடிந்தால் ஒருமுறை துணிந்து பயணித்துதான் பாருங்களேன்” என்று கூறும் சிவப்ரகாஷ், இந்த மாத இறுதியில் ஊட்டியில் நடைபெறும் பயணிகளின் சந்திப்பில் தனது அனுபவங்கலை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
Read in : English