Read in : English
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ் நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த வருடத்துக்கான தலைப்பாக கொடுத்த ஒன்றான இந்திய விடுதலை போராட்டம் @75 தழுவியே ஊர்தியில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களான சுப்பிரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை, வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அமைக்கப்பட்டன. எனினும் பாதுகாப்பு அமைச்சகம் அலங்கார ஊர்தியை நிராகரித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இந்த ஊர்தி கலந்துகொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
பாதுகாப்பு அமைச்சகம் அலங்கார ஊர்தியை நிராகரித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் இந்த ஊர்தி கலந்துகொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இந்த விவாதங்கள் மத்தியில், 2000 முதல் 2021 வரையான காலகட்டத்தில், தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி ஒன்பது முறை மட்டுமே கலந்துகொள்ள தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது. ஓய்வு பெற்ற மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர், தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்படுவது புதிய ஒன்றல்ல என்கிறார். இந்நிலையில் கலந்து கொண்ட ஒன்பது முறைகளில் நாம் காட்சிப்படுத்தியது என்ன என்று தெரிந்துகொள்வோம்.
2000ஆம் ஆண்டு கலந்துகொண்ட அலங்கார ஊர்தி தமிழகத்தின் டெர்ரகோட்டா எனப்படும் சுடுமண் கலையை காட்சிப்படுத்தியது. பெரிய அய்யனார் சிலையும் அவரது குதிரைகளும், பொம்மைகளும் அலங்கார ஊர்தியில் இருந்தன.
ஆறு வருடங்கள் கழித்து 2006 ஆம் ஆண்டு தமிழகத்தின் திருவிழாக்களில் ஓர் அங்கமான தேர் அலங்கார ஊர்தியில் காட்சிப்படுத்தப்பட்டது.
மூன்று வருடங்கள் கழித்து 2009ஆம் ஆண்டு நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி, தெருக்கூத்து கலையை காட்சிப்படுத்தியது. மகாபாரதத்தின் ஒரு அங்கமான பாஞ்சாலி துகிலுரிதல் தெருக்கூத்து நாடகம் இந்த ஊர்தியில் நடத்தப்பட்டது.
நான்கு ஆண்டுகள் கழித்து, தமிழகத்தின் அறுவடைத் திருநாளாம் பொங்கல் விழா போன்று அமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி 2014ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டது. அந்த ஆண்டின் சிறந்த அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு இரண்டாம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு கலந்து கொண்ட அலங்கார ஊர்தி தமிழகத்தின் பழங்குடியின மக்களின் வாழ்வை காட்சிப்படுத்துவதாக இருந்தது. நீலகிரி மாவட்டத்தின் பழங்குடியின மக்களின் வாழ்வு மற்றும் நடனங்கள் ஊர்தியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.2017ஆம் ஆண்டு கலந்து கொண்ட ஊர்தி தமிழ் நாட்டின் கரகாட்டத்தை மிகுந்த அழகியலுடன் காட்சிப்படுத்தி இருந்தது. அந்த ஆண்டின் சிறந்த ஊர்திகளில் மூன்றாம் பரிசை மகாராஷ்டிரத்துடன் தமிழ்நாடு பகிர்ந்து கொண்டது.
2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150 வது ஜெயந்தியை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அந்த ஆண்டுக்கான தலைப்பாக காந்தியை முன்னிலைப்படுத்தியது. செப்டம்பர் 22, 1921 காந்தியின் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். பாரம்பரியமான குஜராத்தி உடைகளைத் துறந்து இந்தியாவின் பாமர மக்களை போன்று உடையணிந்த நாள். இந்த நிகழ்வு தமிழகத்தின் மதுரையில் நடந்தது. அந்த ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த நிகழ்வை காட்சிப்படுத்துவதாக அமைந்தது.
எனினும் இந்த ஊர்தி ஒரு சர்ச்சையை உண்டாக்குவதாகவும் அமைந்தது. அந்த ஊர்தியில் பெண்கள் ரவிக்கை அணியாமல் காண்பிக்கப்பட்டது சர்ச்சைக்குரிய விவாதமாக மாறிவிட்டது.
தமிழகத்தின் சார்பாக 2020 ஆம் ஆண்டு கலந்துகொண்ட ஊர்தி கிராமியக்கலைகளை காட்சிப்படுத்தியது. பிரமாண்டமான அய்யனார் சிலை இந்த ஊர்தியின் ஒரு சிறப்பம்சம் எனலாம்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக 2021 ஆம் ஆண்டு நடந்த குடியரசு தின விழா ணிவகுப்பில் கலந்துகொண்ட தமிழ் நாட்டின் அலங்கார ஊர்தி மகாபலிபுரத்தின் கடற்கரை கோவில் மற்றும் பல்லவ சாம்ராஜ்யத்தின் கீர்த்தியை காட்சிப்படுத்தியது.
தமிழ் நாட்டின் சிறப்புகள் பல காட்சிப்படுத்த இருந்தாலும் அலங்கார ஊர்தி தேர்வு கடினமாகவே இருந்து வந்திருக்கிறது.
தென்னிந்தியாவைப் பொருத்தவரை கர்நாடகா, கேரள மாநிலங்கள் பலமுறை இந்த அணிவகுப்புகளில் கலந்துகொண்டுள்ளன. ஆனால் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்படுவது எப்பொழுதும் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டின் சிறப்புகள் பல காட்சிப்படுத்த இருந்தாலும், தமிழகத்தின் சார்பில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்தி தேர்வு பெறுவது என்பது கடினமாக இருந்து வந்துள்ளது.
இரண்டு மணிநேரம் நடக்கும் அந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் அலங்கார ஊர்திகளுக்கு கொடுக்கப்படும் நேரம் வரையறுக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் மாநிலங்கள் அளிக்கும் பரிந்துரைகளை இரு சுற்று முறையில் பரிசீலிக்கிறது. சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளில் ஆக சிறந்தவை மட்டுமே அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும். கடினமான இந்தத் தேர்வில் நம்முடைய அலங்கார ஊர்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால், அதற்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் திறமை மிக முக்கியம் என்கிறார் அந்தத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி.
Read in : English