Read in : English
ஜெய்பீம் படம் வெளிவந்த பிறகு, இருளர் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கொடுமைகள் பொது வெளியில் வெளிச்சத்துக்கு வந்தன. ஆனால், இருளர் இனத்தில் பிறந்து இருளர்களுக்காக பாடுபட்ட வி.ஆர். ஜகன்நாதன் போன்றவர்கள் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளனர்.
விளிம்பு நிலையில் தங்களது வாழ்க்கையை நடத்தி வரும் இருளர்களுக்காக மட்டுமின்றி பழங்குடியினர் நலனுக்காகவும் பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் வி.ஆர். ஜகன்நாதன். பழங்குடி இருளர் தலைவர்களில் முன்னோடி இவர்.
இருளர்களில் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தவர் அவர். அதனால் தன்னைத் தேடி வரும் இருளர் பழங்குடியினரின் கோரிக்கைகளை மனுவாக எழுதி அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அளிப்பார். அந்தக் கோரிக்கைகள் நிறைவேறவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வார். பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் சாதிச் சான்று பெறுதற்காக மனு எழுதிக் கொடுப்பார். இருளர் இன பழங்குடியினர் இன்றைக்கும் சாதிச் சான்றிதழ் பெறுவது என்பது பெரும் பிரச்சினையாகத்தான் உள்ளது. சாதிச் சான்றிதழ் பெறுவதற்காக மற்றவர்களுக்கு வாழ்நாள் பூராவும் மனு எழுதிக் கொடுத்த ஜெகன்நாதனுக்கு அவர் இறக்கும் வரை சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை. அவரது மறைவுக்குப் பிறகுதான் அவரது குடும்பத்தின்ர் சாதிச் சான்றிதழ் பெற முடிந்தது என்பது நிகழ்கால அவலம்.
இருளர்களில் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தவர் அவர். அதனால் தன்னைத் தேடி வரும் இருளர் பழங்குடியினரின் கோரிக்கைகளை மனுவாக எழுதி அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அளிப்பார். அந்தக் கோரிக்கைகள் நிறைவேறவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வார்.
தென்னாற்காடு ஜில்லா திண்டிவனம் தாலுகா முதலாவது இருளர் குல மாநாடு 1930ஆண்டில் திண்டிவனத்தில் நடைபெற்றது. 1930ஆம் ஆண்டு ஜனவரி திராவிடன் இதழில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இது எந்தச் சங்கத்தின் மூலம் நடைபெற்றது என்பது தெரியவில்லை.
ஜெகன்னாதன் முதலில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அரசியலில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருக்கமான உறவு இருந்தது. காங்கிரஸ் கட்சியின் சென்னை மண்டல பொருளாளராகப் பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு, இருளர் பழங்குடியினருக்காக தொடர்ந்து பணியாற்றிய அவருக்கு காமராஜர் முன்னிலையில் இந்திராகாந்தி விருது வழங்கினார். 1965ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டு மலரில் இவருடைய புகைப்படம் இடம் பெற்றது.
காங்கிரஸ் கட்சியில் கிடைத்த அரசியல் அனுபவம், துறைமுகத்தில் தொழிலாளராகப் பணியாற்றிய அனுபவம் போன்றவை இருளர்களின் மேம்பாட்டுக்கு ஒரு சங்கம் அமைப்பதற்கு ஜெகன்நாதனுக்குத் தூண்டுதலாக இருந்தது. 1937இல் பிறந்து 1978இல் மறைந்த அவர், சென்னை வியாசர்பாடியில் உள்ள தேபர் தோட்டத்தில் 1958ஆம் ஆண்டு தென்னிந்திய ஆதிவாசிகள் சேவா சங்கத்தை நிறுவினார். அவரது செயல்பாடுகள் காரணமாக 1961இல் தமிழ்நாடு ஆதிவாசிகள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இவரை தமிழக அரசு நியமித்தது. இதனால் இருளர் மட்டுமின்றி பல்வேறு பழங்குடியினர் முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டார்.
பழங்குடியினர் குழந்தைகள் கல்வி கற்பதற்காக சென்னை சைதாப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் சத்தியவேடு ஆகிய பகுதிகளில் மாணவர் விடுதி•களை ஏற்படுத்தினார். அங்கு படித்த பலரும் தற்போத மத்திய மாநில அரசுப் பணிகளில் பணிபுரிகிறார்கள்.
இருளர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ்வதற்கு சொந்தமாக நிலம் இல்லை. எனவே, இருளர்களுக்கு அரசு மூலம் வீட்டுமனை, வீடு கிடைப்பதற்குக் போராடினார்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் இருளர் மக்கள் வசிக்கின்ற கிராமங்களில் உள்ளவர்களுக்கு வீட்டுமனையும் குடியிருப்பும் பெற்றுக் கொடுத்தார். குடிநீர் கிணறுகளை ஏற்படுத்தித் தந்தார். அத்திமூர் கிராமத்தில் 15 இருளர் குடும்பத்தினருக்கு வீட்டுமனை, வீடு, கிணறு ஆகியவற்றை பெற்றுக் கொடுத்தார்.
தேபர் நகரில் இருளர் குடியிருப்பை உருவாக்கினார். கொடுங்கையூர், மீஞ்சூர் ஆகிய பகுதிகளிலும் இருளர்களுக்கு என வீட்டு மனைகளும் பெற்றுக் கொடுத்தார்.
சென்னை வியாசர்பாடியில் அதிகாரிகளுடன் பேசி 12 இருளர் குடும்பங்களுக்கு மனைப்பட்டா பெற்றுக் கொடுத்து தேபர் நகர் என்ற புதிய இருளர் குடியிருப்பை உருவாக்கினார். கொடுங்கையூர், மீஞ்சூர் ஆகிய பகுதிகளிலும் இருளர்களுக்கு வீட்டுமனைகள் பெற்றுக் கொடுத்தார்.
சில இடங்களில் இருளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் விவசாய நிலங்களைப் பெற்றுத் தந்தார். பாசனத்துக்கான கிணறும் பெற்றுத் தந்தார். அத்துடன், ஒரு ஜோடி மாடு, ஏர் கலப்பை, மண்வெட்டி, இரும்புச் சட்டி ஆகியவற்றை மானியத்தில் கிடைக்க வழி செய்தார். ஆடு மாடு வளர்க்கவும் வழி வகுத்தார். இப்படி இவரது பணிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
கிராமங்•களில் கூலி வேலை செய்தல், தோப்புகளில் காவல் இருத்தல், செங்கற்சூளை, அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக இருத்தல் போன்ற அவலநிலைகளில் இருந்து ஜெகன்நாதனின் சீரிய பணி இருளர்களை மேம்படுத்தியது. அவர் எதைச் செய்தாறோ அது இன்றும் இருளர்களுக்குத் தேவையாக இருக்கின்றது
“இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடி இருளர் இனத் தலைவர் பற்றிய பெரிய பதிவுகள் இல்லை. இந்த நிலையில், கவசம் அமைப்பின் சார்பில் இயக்குநர் அருட்தந்தை ரபேல் ராஜ் உதவியுடன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், இருளர்களின் இதயம் வி.ஆர். ஜெகன்நாதன் என்ற சிறு வெளியீடு 2017இல் கொண்டு வரப்பட்டுள்ளது. பழங்குடி இருளர் இன மக்களுக்காகப் பாடுபட்ட அவரைப் பற்றி சிறிய அறிமுகம் செய்யும் நூல் இது. கிராமங்களில் கூலி வேலை செய்தல், தோப்புகளில் காவல் இருத்தல், செங்கற்சூளை, அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக இருத்தல் போன்ற அவலநிலைகளில் இருந்து ஜெகன்நாதனின் சீரிய பணி இருளர்களை மேம்படுத்தியது. அவர் எதைச் செய்தாறோ அது இன்றும் இருளர்களுக்குத் தேவையாக இருக்கின்றது” என்கிறார் இந்த நூலைத் தொகுத்தவரும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவருமான முருகப்பன் ராமசாமி.
“1967இல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆதிவாசிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுத்த ஜெகன்நாதன், கல்வி நிலையங்களில் படிக்கும் ஆதிவாசி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மாத கடைசிக்கும் உபகாரச் சம்பளம் வழங்கும் படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தீர்மானம் போட்டார். சமீபத்தில் ஏற்பட்ட புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்குத் தங்கள் வீடுகளைப் புதுப்பித்துக் கொள்ள குடும்பம் ஒன்றுக்கு 100 ரூபாய் இனமாகக் கொடுக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் தீர்மானம் போட்டார்.
விழுப்புரத்தில் 1919இல் நடந்த பழங்குடியினர் மாநாட்டில் ஜெகன்நாதனின் படத்தைக் கொண்ட டீ சர்ட்டை வெளியிட்டோம். மாநாட்டிலேயே 500 டீ சர்ட்டுகள் விற்பனையாயின. இருளர் தலைவராக அவரை முன்னெடுக்கும் முயற்சியின் ஒருபகுதிதான் இது” என்கிறார் அவர்.
“அவரால் பயன்பெற்றவர்கள்கூட அதனைச் சொல்வதைத் தவிர்த்து வருகிறார்கள். வாக்கு வங்கி அரசியல் முக்கியத்தும் பெறும் இந்தக் காலத்தில் இருளர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகப் பாடுபட்ட அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது ஆச்சரியமல்ல. அவரைப் பற்றி பதிவு செய்ய வேண்டிய தகவல்கள் ஏராளமாக உள்ளன” என்கிறார் ஜெகன்நாதனின் பேரன் சுகுமாரன்.
Read in : English