Read in : English

Share the Article

தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்புக்கு நீண்ட வரலாறு உண்டுஇந்தி மொழித் திணிப்பு குறித்த மத்திய அரசின் நடவடிக்கைகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய விஷயங்களாகி விவாதப்பொருளாவதும் தொடர்கதைதான்இந்தச் சூழ்நிலையில்எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு (1919-1992என்கிற ஆர்நாராயணசாமிகவிஞர் மீரா சிவகங்கையில் இருந்து நடத்திய அன்னம் விடு தூது இதழில் (ஜனவரி1985எழுதிய `’இந்தி என்ற தலைப்பில் எதிர்வினையாக எழுதிய கட்டுரை முக்கியமானது.

பல நல்ல சிறுகதைகளையும் பசித்தமானிடம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த நாவலையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ள எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு சம்ஸ்கிருதத்திலும்இந்தியிலும்தமிழிலும் விற்பனர்வேதம் பயின்றவர்கரிச்சான் குஞ்சு எழுதிய கட்டுரை 37 ஆண்டுகளுக்குப் பிறகும்இன்றைக்கும் கவனத்துக்கு உரியதாக இருக்கிறதுஅவரது கட்டுரையிலிருந்து சில முக்கியப் பகுதிகள்:

 

இருபதாம் நூற்றாண்டின் முதற்காலின் இறுதியில்தான், உத்தர பிரதேசத்தில் சற்றே வளர்ந்து உருப்பெற்றது இந்தி. வட நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் (வங்கமொழி தவிர) வழங்கிய அந்தக் காலத்து மொழிகள், வட மொழி பிராகிருத மொழிகளின் சிதைந்து திரிந்த பல்வேறு சிறுமொழிகளே. அந்த மொழிகளுடன் மகம்மதிய ஆட்சி ஆதிக்கப் பரம்பரைகள் பரப்பிய, அராபியப் பாரசீகச் சொற்கள் மிகுதியாகச் சேர்ந்தன. அந்தக் காலகட்டத்தில் உருவான ஒரு மொழிக் கலப்பு மொழியாக, உருது (உரது) பிறந்து, தன் தலைகீழான இடமிருந்து வலம் எழுதும் படிக்கும் வரிவடிவத்துடனேயே பரவிற்று: ஆட்சியின் நிழலில் வளர்ந்தது. அதன் பெயரான ‘உருது (உரது) என்ற சொல்லின் பொருள் கேம்ப் – முகாம் – படைவீடு – பாளையம்.

இவ்வாறாக நேர்ந்துவிட்ட மகம்மதியச் சின்னமும் ஆகிவிட்ட கலப்படத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய இந்துப் பண்டிதர்கள், அதைத் தூய்மைப்படுத்த விரும்பிப் படைத்தது இந்தி. தெளிந்த – கலப்படம் இல்லாத இதையே அவர்கள் ‘கடீபொலீ’ எனக் குறிப்பிட்டனர். இந்தி மொழியின் பழைய இலக்கியங்கள் என்று அவர்கள் மொழியின் இலக்கிய வரலாறு காட்டும் நூல்கள் யாவும், இந்தி என்ற மொழிக்குள் வராத பழைய மொழிகளில் உள்ளவையே.

விரஜ பாசை, அவதீ என்ற கிழக்கத்திய மொழி (பூரப்) போன்றவை அவை. கபீரும் துளசிதாசரும் சூர்தாசும் போன்றவர்களின் பாட்டுகளையே பழைய இலக்கியமாகக் காட்டுகின்றனர். இவை தவிர, ரீதி காலத்து நூல்கள், ராசோ காவியங்கள், வீரகாதைகள் எனக் கூறுவனவும் இத்தகையனவே. தமிழின் 2000 ஆண்டு வயதும், இன்றுவரை இடையறாத தொடர்ச்சியும் வட மொழி தவிர வேறு எந்த இந்திய மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்புகள். நமது தமிழ் உயர்தனிச் செம்மொழி என்ற செம்மாப்பில் நியாயமுண்டு, பகையும் வெறியும் தலைதூக்காதவரை.

காந்தியடிகள், காவி கதர் கிராமக் கைத்தொழில் அரிஜனத் தொண்டு என்பவற்றுடன், தேசீயத்துக்கு உகந்தது என்று பொதுமொழியாக – தேச மொழியாக இந்தியை இணைத்திருந்தார்.

காந்தியடிகள், காவி கதர் கிராமக் கைத்தொழில் அரிஜனத் தொண்டு என்பவற்றுடன், தேசீயத்துக்கு உகந்தது என்று பொதுமொழியாக தேச மொழியாக இந்தியை இணைத்திருந்தார். இந்தியில் வட மொழிக் கலப்பைத் தாங்காமல் அவர் மிகவும் பொறுமையிழந்து எழுதினார்; பேசினார். இந்தப் போக்கு இந்தி மொழியைப் பாமர பொது மக்களிடமிருந்து பிரித்து வெகுதூரத்துக்குக் கொண்டுபோய்விடும்; இதில் இந்துப் பெரும்பான்மை எனும் வேண்டாத உணர்வும் வளரும் ஆபத்து உண்டு என்றும் அஞ்சிப்போனார். அதே வேகத்தில் அவர் சென்னைக்கு வந்தபோது இதைப் பற்றி நிறையவே பேசினார்.

தென்னாடும் வடநாடும் ஒன்றுபட, தேசீய ஒருமைப்பாடு மலரத் தென்னாட்டவரும் கற்றல் வேண்டும் எனத் தான் கருதும் மொழி ‘இந்துஸ்தானி’ என்பது; அது பொதுப் பாமர மக்கள் பேசும் மொழி; தூய்மைப்படுத்தப்பட்ட புதிய சமஸ்கிருத மொழி போன்ற ஒன்று அன்று என விளக்கினார். சென்னையிலும் மைசூர், பெங்களூர் போன்ற இடங்களிலும் உள்ள இந்திப் பிரச்சார சபைக் கட்டிடங்களில் இந்துஸ்தானிப் பிரச்சார சபை என்று மாற்றி எழுதவும் கட்டளையிட்டார்; ஆனால், அவர் முயற்சி சிறுமாற்றம் விளைவித்ததுடன் போய்விட்டது. காலப்போக்கில் இந்த வட மொழிக் கலப்பு மிகமிக வளர்ந்துவிட்டது.

இன்று வெளியிடப்படும் இந்தி நூல்கள் அனைத்துமே இந்துஸ்தானியில் இல்லை; மிகுந்த விழிப்புடன் அராபியப் பாரசீகச் சொற்கள் வந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். மத்திய அரசின் பிரசுரங்கள், மனுக்கள் போன்ற எல்லாமே வட மொழி கலந்தவை. பெரும்பான்மை மக்கள் பேசுவது இந்தி என்பது உ.பி.யை மட்டுமே வைத்துக்கொண்டு பேசும் பழங்கதை.- ஒரு ‘மித்’. இன்றைய உண்மைநிலைக்கு மாறுபட்டது; வட நாட்டில் மாநிலத்துக்கு மாநிலம் மொழி வேறுபடுகிறது; வழக்காற்றில் அந்த மக்கள் பேசும் இந்தியும் மாறுபடுகிறது.

மத்திய அரசின் உதவியுடன் அலகாபாத்தில் கோடிக்கணக்கான பணச் செலவில் வளரும் இந்தி, வேற்றுமை உருபுகளும் சில துணைவினைச் சொற்களும் தவிர, மற்ற யாவும் வட மொழிச் சொற்களாகவே ஏராளமாய்க் கலந்து, வளம் பெறுவதுபோல் காட்டப்படுவது பெரிய ஏமாற்றம்;

எனக்கு இந்தியுடன் 45 வருடப் பழக்கம் உண்டு. பயிற்சியும் தேர்ச்சியும் உண்டு. பல நூல்களை மொழிபெயர்த்துள்ளேன். ஆகவே, நான் கூறுபவை வெறும் பேச்சல்ல; புத்தக இந்திக்கும் பேச்சு மொழி இந்திக்கும் இடைவெளி மிகுந்துவிட்டிருக்கிறது. மத்திய அரசின் உதவியுடன் அலகாபாத்தில் கோடிக்கணக்கான பணச் செலவில் வளரும் இந்தி, வேற்றுமை உருபுகளும் சில துணைவினைச் சொற்களும் தவிர, மற்ற யாவும் வட மொழிச் சொற்களாகவே ஏராளமாய்க் கலந்து, வளம் பெறுவதுபோல் காட்டப்படுவது பெரிய ஏமாற்றம்; ஆகவே, இந்தப் புத்தக மொழி முற்றிலும் செயற்கையான மொழி. நாட்டு மக்கள், பல்வேறு மாநிலத்து மக்கள் கலந்துரையாடப் பயன்படும் இணைப்பு மொழியாகும் என்று கூறுவதன் அர்த்தம் மறைந்துபோய் பல காலம் ஆகிவிட்டது.

எனக்கு வட மொழியிலும் ஓரளவு நல்ல பயிற்சியுண்டு. இந்தக் கலப்பட மொழியால் வட மொழிக்கு நன்மை வளர்ச்சி என்று கூறும் சிலர் கருத்தை என்னால் ஏற்கவே முடியவில்லை. மத்திய அரசின் இன்றைய போக்கு விரைவில் இந்தியை-அரசாங்க மொழியாக-ஆட்சி மொழியாக-ஆங்கிலத்தின் இடத்துக்குக் கொண்டுவரும் வேகம் இருப்பதைக் காட்டுகிறது. இது வெறி; வீண் பேராசை; வெற்றிபெறவே முடியாத முயற்சி. ஒற்றுமை குறைய வழி தேடும் விபரீத முயற்சி.


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day