Read in : English
அரசுப் பள்ளியிலும் சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில் படித்து 26 வயதில் மாவட்ட உரிமையியல் நீதிபதியாகி இருக்கிறார் ஆதியான் என்ற மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்து மாணவர்.
பள்ளியில் சராசரியாக படிக்கும் மாணவன். கல்லூரியில். தனக்கான உரிமையை சட்டமூலம் போராடியதால் கல்லூரி நிர்வாகத்தின் வெறுப்புக்கு ஆளானவர். ஆனால், தனது உரிமைகளுக்காகப் போராடியதன் மூலம் சட்டப் படிப்பை தமிழ் வழியில் படித்தற்கான மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) பெற்றவர். அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மாவட்ட நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வில் தேர்வு பெற்று, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட நீதிபதியானவர். அவர்தான் ஆதியான்.
மதுரை மாவட்டம் செட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதியான். அப்பா விவசாயக் கூலித் தொழிலாளி. அம்மா வீட்டையும் ஆடு, மாடுகளையும் கவனித்து கொள்பவர். இருவரும் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள். ஆதியானுக்கு 4 அண்ணன்கள். ஆதியான் பள்ளியில் படிக்கும்போது சராசரி மாணவர்தான். எட்டாம் வகுப்பு வரை உள்ளூரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அவர், அதன்பிறகு உசிலம்பட்டியில் அரசு மேல் நிலைப் பள்ளியில் சேர்ந்தார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 355 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பிளஸ் ஒன் வகுப்பில் தமிழ் வழியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்துப் படித்தார். தொடக்கத்தில் படிப்பில் விளையாட்டுத் தனமாக படிப்பில் சராசரியாக இருந்த அவர், பிளஸ் டூ படிக்கும் போது அவரது தந்தையின் விருப்பத்திற்கேற்ப படிப்பில் தீவிர அக்கறை செலுத்தினார். 2012இல் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 999 மதிப்பெண்கள் பெற்று அந்த அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.
அதன் பிறகு, மதுரை சட்டக் கல்லூரியில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்பில் தமிழ் வழியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் படிக்கும்போது, சட்டம் தொடர்பான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற அவருக்கு தற்போது உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் தங்கப்பதக்கம் வழங்கினார்.
2012இல் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 999 மதிப்பெண்கள் பெற்று அந்த அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.
சட்டக் கல்லூரியில் 4வது ஆண்டு படிக்கும் போது கல்லூரியில் சமத்துவ பொங்கல் நடத்த மாணவர்கள் முடிவெடுத்தனர். அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கவே, மத நல்லிணக்கத்தை வளர்க்கும் சமத்துவ பொங்கல் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆதியான், ரிட் மனு தாக்கல் செய்தார். இதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பள்ளியில் தமிழ் வழியில் படித்த ஆதியான், சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில் படித்துள்ளார். ஆனால், அந்தச் சட்டக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு ஆங்கில வழியில் படித்ததாக மாற்று சான்றிதழ் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதை அறிந்த ஆதியான், தனக்கு தமிழ் வழியில் படித்ததாக மாற்றுச் சான்றிதழ் வேண்டுமென கேட்டார். இதற்குக் கல்லூரி நிர்வாகம் மறுக்கவே, இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார். 1995ஆம் ஆண்டு முதல் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு ஆங்கில வழியில் படித்ததாக அனைவருக்கும் சான்றிதழ் கொடுக்கப்பட்டதாகவும், ஆதியான் 4வது ஆண்டில் படித்து கொண்டிருப்பதால் அவரது படிப்புப் பதிவுகள் எல்லாமே ஆங்கில வழியில் இருப்பதாகவும் கல்லூரி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரியில் படிக்கும்போது, சட்டம் தொடர்பான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற அவருக்கு தற்போது உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் தங்கப்பதக்கம் வழங்கினார்.
முதலாம் ஆண்டில் இருந்து தமிழ் வழி படிப்பை தேர்வு செய்ததை சுட்டி காட்டி, தமிழில் படித்து, தமிழில் தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்று ஆதியான் வாதாடினார். ஆதியானுக்கு சாதகமாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. அதிலும் வெற்றி பெற்ற ஆதியான், தமிழ் வழியில் படித்ததாக மாற்றுச் சான்றிதழைப் பெற்றார்.
2017ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு, சட்ட நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டு பயிற்சி பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடம் ஜூனியராகச் சேர முயற்சி செய்தார். அவருக்கு ஆங்கில மொழித் திறனில் தடுமாற்றம் இருந்ததால் அதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞராக பணி செய்வது என்று முடிவு செய்தார். அங்கு வரும் சில வழக்குகளுக்கு மூத்த வழக்கறிஞர்களின் உதவியுடன் இலவசமாக ஆஜரானார். அதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 300 வழக்குகள் வரை அவரிடம் வந்தன. நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞர்கள் வாதாடுவதை உன்னிப்பாக கவனித்து வந்தார். அத்துடன் ஆங்கில மொழித் திறனையும் சட்டத்திறமையையும் வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்அவர்.
இந்த சூழ்நிலையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி தேர்வுக்கான அறிவிப்பு வந்தது. சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தவுடன் 27 வயதிற்குள் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிபதிக்கான தேர்வை எழுதலாம். 27 வயதை கடந்தவர்கள் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் இருந்தால் மட்டுமே மாவட்ட உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்க முடியும். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளைப் போல, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முக தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வில் தேர்வு பெற்று, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட நீதிபதியானவர்.
இந்தப் பணியில் சேருவதற்கு விண்ணப்பித்த ஆதியான், முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க விரும்பினார். அதற்குக் கட்டணம் ரூ.30 ஆயிரம். அந்த அளவுக்கு பணம் செலுத்த வசதி இல்லாததால் வாரத்திற்கு இரு நாட்கள் மட்டும் மதுரையிலேயே பயிற்சியில் சேர்ந்தார். அதற்காக ரூ.8 ஆயிரம் கட்டணத்தை செலுத்தினார். இதையடுத்து, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், நேர்முகத் தேர்விலும் தேர்வானார். அதையடுத்து ஆதியான், திருப்பூர் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த டிசம்பரில்தான் நியமிக்கப்பட்டு, தற்போது அந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக பணி செய்து வருகிறார்.
”ஆங்கிலம் ஒரு மொழி. ஆங்கில புலமை தேவை தான். அதற்காக ஆங்கில மோகம் தேவையில்லை. தாய் மொழியில் படிக்கும் புரிதல் பிற மொழியில் இருக்காது. தாய் மொழி கல்வியையும், அரசுப் பள்ளிகளையும் ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் கட்டாயம் தினமும் செய்தித்தாள்களை படிக்க வேண்டும். செய்தித்தாள்களைப் படித்தால் முதல் பக்கத்தில் இருந்து இறுதி பக்கம் வரை அனைத்து துறை சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ளலாம். அத்துடன், புத்தகத்தை படிக்கும் பழக்கத்தையும் மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்” என்பது நீதிபதி ஆதியானின் அறிவுரை. உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் எதையும் சாதிக்க முடியும்.
Read in : English