Read in : English
பிளஸ் டூ தேர்வில் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்ததுடன், மருத்துவப் படிப்பில் 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிபிஎஸ் படித்து முடித்து டாக்டராகியுள்ளார் பழங்குடியின மாணவி பி. ஜோதி (25). ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கடையீரட்டி என்ற சிறிய மலை கிராமத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி மட்டுமல்ல, அந்த ஊரின் முதல் டாக்டரும் அவர்தான்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பர்கூரிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் கடையீரட்டி என்ற சிறிய மலைப் பகுதி கிராமத்தைச் சேர்ந்தவர்] ஜோதி. அந்த ஊரில் மருத்துவமனை இல்லை. தமிழ்நாடு கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை வேண்டும் என்றால் பர்கூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத்தான் செல்ல வேண்டும். மலை கிராமத்துக்கே உரிய பல வசதி குறைவுகள் உள்ளது இந்த ஊர்.
ஜோதியின் அப்பா பேரன், ஊராளி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை படித்த அவருக்கு, விவசாயம்தான் தொழில். அவருக்கு இருந்த சிறிய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு போன்றவற்றைப் பயிர் செய்வார். இதுதான் குடும்பத்துக்கு வருமானம். கொஞ்ச நாள் கடை வைத்துப் பார்த்தார். அதுவும் அவருக்கு சரிப்பட்டு வரவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட சிறிய வீட்டில்தான் ஐந்து பேர் கொண்ட குடும்பம் வாழ வேண்டிய நிலை. ஐந்தாம் வகுப்பு வரை படித்த அம்மா பழனியம்மாள் வீட்டைக் கவனித்துக் கொள்வார்.
முதல் நாள் கவுன்சலிங்கிலேயே எனக்கு சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது. பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் இடம் இருந்தாலும்கூட, எனது மதிப்பெண்களுக்குப் பொது ஒதுக்கீட்டிலேயே இடம் கிடைத்தது.
மலை கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குழந்தைகள், அவர்களது வறுமைச் சூழ்நிலையில் பள்ளிப் படிப்பைத் தாண்டுவது என்பது சாதாரண காரியமில்லை. கடையீரட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை இருந்தாலும்கூட, இரண்டு ஆசிரியர்கள்தான். அந்தப் பள்ளியை விட்டால் ஊரில் வேறு பள்ளி இல்லை. அந்தப் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தார் ஜோதி.
ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை அந்தியூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். தினந்தோறும் கடையீரட்டியிலிருந்து அந்தியூருக்குச் சென்று வர குறிப்பிட்ட நேரங்களில்தான் பஸ் உண்டு. மலைப் பகுதியில் மழை நேரங்களில் பள்ளிக்குச் சென்று வருவது சிரமமாக இருக்கும். இதனால், தனது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று நினைத்து, அந்தியூரிலேயே ஒரு வீட்டைப் பார்த்து அங்கு தனது மகள்கள் மூவரையும் அங்கேயே தங்கியிருக்க வைத்துப் படிக்க வைத்தார். அவர்களுக்கு சமையல் செய்து கொடுத்து, அவர்களைப் பார்த்துக் கொள்ள அவரது அம்மாவையும் உடனிருக்கச் செய்தார்.
“மலைப்பகுதிகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பைத் தாண்டி படிக்க வாய்ப்பு கிடைக்காது. சின்ன வயதிலேயே சிலருக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால், எங்களது அப்பா எங்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கான தொடர்ந்து பாடுபட்டார். எனது அக்கா அலமேலு, டீச்சர் டிரெயினிங் முடித்து விட்டு, தற்போது பிஏ, பிஎட் படித்துள்ளார். தற்போது, ஆசிரியர் பணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த அக்கா சரோஜா, பத்தாம் வகுப்புப் படித்திருக்கிறார். எனது அக்காக்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நான் பள்ளியில் படிக்கும்போதே நன்றாகப் படிப்பேன். அதனால் என்னை எப்படியும் கல்லூரியில் படிக்க வைத்து விட வேண்டும் என்று எனது அப்பா நினைத்தார்” என்கிறார் ஜோதி.
ஜெனரல் மெடிசினில் எம்.டி. படிக்க வேண்டும் என்பது ஆசை. அதற்கான ஈரோட்டில் உள்ள அக்கா வீட்டிலில் தங்கி இருந்து நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன்.
“பத்தாம் வகுப்பு வரை அந்தியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் 500க்கு 485 மதிப்பெண்கள் கிடைத்து பள்ளியிலேயே முதலிடம் பெற்றேன். பத்தாம் வகுப்பு தேர்வில் நான் அதிக மதிப்பெண் பெற்றதுடன், பள்ளியிலேயே முதலிடம் பெற்றதால், பவானி அருகே பருவாச்சி என்ற இடத்தில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயாவில் இலவசமாகத் தங்கிப் படிக்க எனக்கு இடம் அளித்தார்கள். பிளஸ் ஒன் வகுப்பில் தமிழ் மீடியத்தில் உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவில் சேர்ந்தேன். காலையில் சீக்கிரமே படிக்க எழுந்துவிடுவேன். இரவிலும் 11 மணி வரை கண் விழித்துப் படிப்பேன். அப்போது, பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் எம்பிபிஎஸ் அட்மிஷன் நடந்து வந்தது. அதனால், எப்படியும் பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எனது பெற்றோரின் ஆசையும்கூட” என்கிறார் அவர்.
“2014ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1187 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பெற்றேன். உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள். எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 200 என்பதால், மருத்துவப் படிப்பிலும் பொறியியல் படிப்பிலும் நிச்சயம் இடம் கிடைத்துவிடும். ஆனால், நான் எம்பிபிஎஸ் படிப்பில் கவுன்சலிங் மூலம் சேர விண்ணப்பித்தேன். முதல் நாள் கவுன்சலிங்கிலேயே எனக்கு சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது. பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் இடம் இருந்தாலும்கூட, எனது மதிப்பெண்களுக்குப் பொது ஒதுக்கீட்டிலேயே இடம் கிடைத்தது. எனது படிப்புச் செலவுக்காக மாவட்ட ஆட்சியர் ரூ.20 ஆயிரம் வழங்கினார். அத்துடன், தமிழக அரசின் கல்வி உதவித்தொகை கிடைத்தது. கல்லூரியில் தங்கிப் படிப்பதற்கான செலவுகளை அகரம் பவுண்டேஷன் பார்த்துக் கொண்டது. அதனால், படிப்பிற்கு பணப்பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. ஆனால், பள்ளியில் தமிழ் வழியில் படித்ததால், சென்னையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது, அங்கு ஆங்கில வழியில் பாடங்கள் நடத்தப்பட்டதைப் புரிந்து கொள்வதில் முதலாண்டில் எனக்கு சிரமமாக இருந்தது. ஆனாலும், பாடங்கள் குறித்து என்னை மாதிரி இருந்த சக மாணவிகளிடம் பேசி, கேட்டு புரிந்து கொள்வேன். ஒரு வழியாக சமாளித்து, படிப்படியாகப் படிப்பில் பிக் அப் செய்து விட்டேன். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவிட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.
என்னைப் போல விளிம்பு நிலை குடும்பத்தில் பிறந்து டாக்டராகி ராணுவத்தில் பணிபுரியும் கிருஷ்ணவேணி, வாணிப்ரியா, ஈரோடில் மருத்துவராகப் பணிபுரியும் தாமரைக்கண்ணன் ஆகியோர் உதவியுடன் எங்களது ஊரில் இலவச மருத்துவ முகாம் நடத்தினோம்.
“சில மாதங்கள் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தேன். தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளேன். ஜெனரல் மெடிசினில் எம்.டி. படிக்க வேண்டும் என்பது ஆசை. அதற்கான ஈரோட்டில் உள்ள அக்கா வீட்டிலில் தங்கி இருந்து நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். இதற்கிடையே, எனது அப்பா உடல் நலமில்லாமல் இறந்துவிட்டார். ஆனாலும், முதுநிலைப் படிப்பில் சேர்ந்து படித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். படிக்க இடம் கிடைத்து விட்டால் விட்டால் ஸ்டைபண்ட் கிடைத்துவிடும். அதை வைத்துக் கொண்டு எம்.டி. படித்து முடித்து விடலாம்” என்கிறார் அவர் நம்பிக்கையுடன்.
”மலை வாழ் கிராமத்தைச் சேர்ந்த நான், டாக்டருக்குப் படித்ததும் அந்த கிராமத்துக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். அதைத்தொடர்ந்து என்னைப் போல விளிம்பு நிலை குடும்பத்தில் பிறந்து டாக்டராகி ராணுவத்தில் பணிபுரியும் கிருஷ்ணவேணி, வாணிப்ரியா, ஈரோடில் மருத்துவராகப் பணிபுரியும் தாமரைக்கண்ணன் ஆகியோர் உதவியுடன் எங்களது ஊரில் இலவச மருத்துவ முகாம் நடத்தினோம். அது எங்களது ஊர்க்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதுபோல, இனியும் நான் வாழ்ந்த சமூகத்துக்கு பயன்படும் வகையில் செய்ய வேண்டும்” என்பது எனது விருப்பம் என்கிறார் டாக்டர் பி. ஜோதி. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
Read in : English