Read in : English
பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்துவதற்காக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச் சட்ட மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்தது.
இந்த நிலையில், இந்த குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதாவால் பெண்களுக்கு நன்மை ஏற்படுமா? அல்லது மத்திய அரசு கொண்டு வரும் மசோதா பெண்களை மீண்டும் ஒரு வட்டத்திற்குள் அடைப்பதற்கான முயற்சியா? என்ற சர்ச்சைகள் சமூகப் பொதுவெளியில் எழுந்துள்ளன.
“சமூக பொருளாதார வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி காரணமாக கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பெண்களின் சராசரி திருமண வயது 22.1 ஆண்டுகளாக உள்ளது. எல்லோரும் சரியாக 18 வயதிலேயே திருமணம் செய்து கொள்வதில்லை. அதனால் பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தி சட்டம் கொண்டு வருவதில் எந்த பலனும் இல்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் பெரும்பாலும் பெண் கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால் சராசரியாக பெண்கள் 21 வயதை கடந்து திருமணம் செய்யும் கலாச்சரத்திற்கு எப்பொழுதோ மாறிவிட்டனர். அப்படி இருக்கையில் சட்டம் கொண்டு வந்து அவர்களை நாம் கட்டாயப்படுத்த முடியாது” என்கிறார் சமுக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.
“18 வயதிற்கு குறைவான பெண்கள் மட்டுமின்றி அனைவருமே ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் பொழுது இளம் வயதில் பிரசவ இறப்புகள் அதிகரிப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. நமது நாட்டில் பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துகள் முழுமையாகக் கிடைப்பதில்லை. இதனால் தான் பெண்களின் வளர்ச்சி தடைப்படுகிறது. பேறுகாலத்தின்போது மரணங்கள் நிகழ்கின்றன. சில பெண்களின் வீடுகளில் மூன்று வேளை உணவே முறையாக கிடைப்பதில்லை. பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதைவிட்டுட்டு திருமண வயதை அதிகரித்தால் பெண்களின் பேறுக்கால மரணத்தை குறைக்கலாம் என்பது எல்லாம் கட்டுக்கதை” என்கிறார் அவர் மேலும்.
“இந்தச் சட்டத்தால் சட்ட விரோத கருக்கலைப்புகளும், பெண்களின் கருக்கலைப்பு மரணங்களும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 10 முதல் 13 தாய்மார்கள் உயிரிழக்கின்றனர். பேறுகால தாய்மார்களில் 20 சதவீதத்தினர் தவறான கருக்கலைப்பால் கருக்கலைப்பு, மற்றும் அதீத ரத்த போக்கினால் உயிரிழக்கின்றனர். முதலில் பேறுக்காலத்திற்கு தேவையான அவசர மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
திருமண வயது 21 என சட்டமாக்கினால், இதுவரை 21 வயதிற்குள் திருமணம் செய்தவர்களின் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாது. அப்படி ஒரு பெண் கருவுற்றிருந்தால் அது சட்ட விரோதக் கருவாகும். அதை கலைக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும். இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் அரசு இந்த சட்டத்தை கொண்டு வருவது முற்றிலும் தவறானது. இதற்குப் பதிலாக பெண்களுக்கு கல்வியையும், வேலை வாய்ப்பையும் அதிகரிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தினால் தானாகவே அவர்களின் திருமண வயதை தள்ளிப்போகும். படிக்கும் பெண்ணோ, வேலைக்கு செல்லும் பெண்ணோ குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே திருமண முடிவுக்கு வருவார்கள். இதை தான் மத்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். சட்டத்தால் எதையும் முழுமையாக மாற்றிட முடியாது” என்று டாக்டர் ரவீந்திரநாத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“திருமண வயது என்பது தன்னிச்சையாக இருக்க வேண்டுமே தவிர அது 21ஆக தான் இருக்க வேண்டும் என்பது சட்டமாக கொண்டுவது குற்றவியல் சட்டத்தின்படி சரியானதாக இல்லை. வரதட்சணைத் தடுப்பு சட்டம், குழந்தை திருமணம் தடை சட்டங்கள் கொண்டு வந்தும் பலனில்லையே. வெளிப்படையாக வரதட்சணையைக் கொடுக்கவும் செய்கிறார்கள், வரதட்சணையை வாங்கவும் செய்கிறார்கள். திருமண வயது வரம்புச் சட்டம் கொண்டு வந்தால் எல்லாரும் அதே வயதில் திருமணம் செய்து கொள்வார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியாது. 21வயது திருமணம் தான் செல்லும் என்றால், அதற்கு கீழே திருமணம் செய்தவர்கள் கேள்விக்குறியாக்கப்படுவார்கள், அவர்களின் திருமணம் செல்லாது. அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களாக நடத்தப்படுவார்கள். இந்த சட்டத்தை கொண்டு வருவது அதை எப்படி செயல்படுத்துவது என்பதில் தான் உள்ளது. திருமண வயதை சட்டமாக்குவதை விடுத்து, பெண்களுக்கு கல்வியையும், வேலை வாய்ப்பையும் கொடுத்தால் அவர்களின் திருமண வயது தானாகவே உயரும் இல்லையா?” என்ற கேள்வியை எழுப்பும் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், “பட்டதாரிகள் எல்லாம் 21 வயதிற்கு மேல் தானே திருமணம் செய்து கொள்கின்றனர். அதற்காக கல்வியையும், வேலையையும் தான் கொடுக்க வேண்டும். இந்த சட்டத்தை கொண்டு வருவதால் கலப்பு திருமணமும், பெண்ணின் திருமண உரிமையும் பறிக்கப்படும் என்பதே உண்மை. சமூகத்தில் மாற்றம் கொண்டு வராமல் சட்டம் போட்டு அரசால் எதையும் சாதித்திட முடியாது” என்கிறார்.
சாதியை ஆதரிக்கின்ற பெற்றோருக்கு சாதகமாகவே குழந்தை திருமணத் தடை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர முயற்சிப்பதாக எழுத்தாளரும், பெண்ணிய செயற்பாட்டாளுமான ஜீவ சுந்தரி கூறுகிறார். “நமது நாட்டில் சட்ட மீறல்கள் என்பது எப்பொழுதும் உள்ளது. தன் விருப்பப்படி பெண்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதை தடுக்கும் ஒரு செயலாக தான் இது உள்ளது. சுயசாதித் தேர்வு திருமணத்தை அதிகரிக்க இந்த திருமண சட்டம் சாதகமாக உள்ளது. கலப்பு திருமணத்தையும், தன் விருப்ப தேர்வு திருமணத்தையும் மறைமுகமாக எதிர்க்கவே குழந்தைத் திருமணத் தடைச் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. சாதிமறுப்பு திருமணங்களை ஒழிக்கும் ஒரு முயற்சியாக தான் இந்தச் சட்டத்தை பார்க்கிறோம். மக்களுக்கு எத்தனையோ தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கும் பொழுது அதையெல்லாம் விட்டு விட்டு, திருமண வயது குறித்த சட்டத்திருத்தம் தற்பொழுது தேவையில்லையே. 21 ஆக திருமண வயதை அதிகரிப்பதால் குழந்தை திருமணம் கண்டிப்பாக தடுக்க முடியும் என்பதை மத்திய அரசை உறுதியாக கூற முடியுமா? திருமணம் என்பது விருப்ப தேர்வாக இருக்க வேண்டுமே தவிர, அதை ஒரு கட்டாயமாக்க கூடாது” என்கிறார் ஜீவ சுந்தரி.
“ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் குடும்ப வறுமை சூழலால் 13, 14 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். நான் எல்லாம் 13 வயதில் திருமணம் செய்தேன், எனது மகளுக்கு 17 வயதில் திருமணம் ஆனது. ஆனால் எனது பேத்தி படிப்பதால் பொறுமையாக தான் திருமணம் செய்து கொள்வாள். அப்பறம் எதுக்கு இவங்க 21 வயதுல திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் கொண்டு வருகிறார்கள்?” என முத்தமிழ் என்ற மூதாட்டி கேட்கிறார்.
“”தற்போதைய காலத்தில் பெண்களின் வாழ்க்கை துணையை அவர்களே தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளதால் சட்டம் போட்டு இந்த வயதில் தான் திருமணம் செய்ய வேண்டுமென கூறுவது அவசியமில்லாதது” என்கிறார் ஒரு பெண்ணின் தாய்.
ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதையும், அவளின் வருங்கால துணையை தேர்ந்தெடுப்பதையும் அவளின் சுய விருப்பமாக இருக்க வேண்டும். இதில் சட்டத்தையோ, ஜாதியையோ தனிப்பட்ட மனிதர்களின் விருப்ப வெறுப்புகளையோ திணித்தால் காலங்காலமாக பேசப்பட்டு வரும் பெண்களின் முன்னேற்றம், மேலும் பின்னோக்கிச் சென்று விடும் என்பதில் சந்தேகமில்லை.
Read in : English