Read in : English

ஷேக்ஸ்பியரின் நாடகம் ’ஜூலியஸ் சீசர்’. அதில் கதாநாயகன் பாதிக்கு முன்பே இறந்துவிடுவார். ஆனால் சீசரின் மரணம்தான் மீதி நாடகத்தை ஜீவனுடனும் விறுவிறுப்புடனும், வேகத்துடனும் கொண்டுபோகும். ஆகப்பெரிய ஆளுமையான சீசரைத் தவிர்த்து ரோமானிய அரசியல் இல்லை.

தமிழ்நாட்டில் மூன்று தலைமுறையைச் சினிமாவிலும் அரசியலிலும் ஆட்டிப்படைத்த எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற எம்ஜியார் என்னும் அந்த மந்திரச்சொல் அவர் காலமாகி முப்பத்திநான்கு ஆண்டுகள் கழித்தும் அவரது காலத்திற்குப் பின்னர்வந்த நவநாகரீக இணைய, இளைய தலைமுறையை அவரை அதிசயமாகப் பார்க்க வைத்திருக்கிறது. சர்வாதிகாரம், சர்வமும் நான் என்கிற சரியாத உணர்வு, சில உடல்குறைகள் என்று பலமாக வலம்வந்த சீசரின் ஞாபகங்கள் வருகின்றன, எம்ஜியார் பற்றி நிறைய வாசிக்கும் போது; கேள்விப்படும்போது; தேர்தல் நேரங்களில் ஒலிக்கும் தன்னம்பிக்கைமிக்க அவரது சினிமாப்பாடல்களைக் கேட்கும்போது.

தமிழ்சினிமாவில் அவர் விட்டுச்சென்ற வெற்றிச் சூத்திரம் (சக்ஸஸ் ஃபார்முலா) அவருக்குப் பின்வந்த வெள்ளித்திரை கதாநாயகர்களை 21-ஆம் நூற்றாண்டில் கூட இயக்கிக்கொண்டுதான் இருக்கிறது; அரசியலில் அவர் விட்டுச் சென்ற பாதையில்தான் அவரது அஇஅதிமுக உட்பட எல்லாக் கட்சிகளும் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வளவுக்கும் ஆகப்பெரிய நடிகர்களான சிவாஜிகணேசன், எம்.ஆர். ராதா, எஸ்.வி. ரங்காராவ், டி.எஸ். பாலையா போன்றோர் தொட்ட நடிப்புக்கலையின் உச்சத்தை ஒருபோதும் எம்ஜியார் தொட்டதில்லை. நுண்மையான நடிப்புக்கலையை அவர் முயன்று பார்த்த ‘பாசம்’, ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற திரைப்படங்கள் பேசப்படவில்லை. (’பாசம்’ திரைப்படத்தில் இறுதிக்காட்சியில் எம்ஜியார் இறந்துபோவதாக அமைத்த காட்சியைப் பார்க்கச் சகிக்காத அவரது ரசிகர்கள் இயக்குநர் வீட்டுக்குச் சென்று சண்டைப் போட்டதாக ஒரு தகவல் உண்டு, அரங்குகளில் பெஞ்சுகளைப் போட்டுடைத்த காட்சியை இந்த எழுத்தாளரே தனது பதின்மவயதில் பார்த்திருக்கிறார்),

தமிழ்சினிமாவில் அவர் விட்டுச்சென்ற வெற்றிச் சூத்திரம் (சக்ஸஸ் ஃபார்முலா) அவருக்குப் பின்வந்த வெள்ளித்திரை கதாநாயகர்களை 21-ஆம் நூற்றாண்டில் கூட இயக்கிக்கொண்டுதான் இருக்கிறது;

அந்நாளைய பாடகர் ‘சூப்பர் ஸ்டாரான’ எம்.கே. தியாகராஜ பாகவதர் திரையில் ஆட்சி செய்துகொண்டிருந்த காலக்கட்டத்த்தில் தானும் கதாநாயகன் ஆவது என்பது எம்ஜியாருக்கு பெரும்மலைப்பாக இருந்திருக்கும்.

ஆரம்ப காலங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகள் 1940-களின் இறுதியில்தான் வெற்றிபெறத் தொடங்கின; கிட்டத்தட்ட அவர் சினிமாவில் நுழைந்து 12 வருடங்கள் கழித்து.

ஆனால் அவருக்கு முன்பே சாதித்த ஒரு கதாநாயகன் இருந்தார். அவரும் ஒருசில ‘ஹிட்டு’களைக் கொடுத்தார். அவருடைய திறமைகள் பற்பல; அசாத்தியமானவை; ஒப்பீட்டளவில் அவருக்கு முன்பு எம்.ஜி. ராம்சந்தர் (ஆம். அப்போது அதுதான் அவரது பெயர்) ஒன்றுமே இல்லை. எஸ். எஸ். வாசன் தயாரித்த ’சந்திரலேகா’ என்னும் பிளாக்பஸ்டரில் வில்லனாக அதகளம் பண்ணிய ரஞ்சனுக்கு கதாநாயகன் எம்.கே. ராதாவை விட அதிகப் புகழ், ஆரவாரம் கிடைத்தது. வில்லனும் கதாநாயகன் போல பேர்வாங்க முடியும் என்று முதன்முதலாக நிரூபித்த ரஞ்சன், பின்னர் எழுபதுகளில் ‘ஆண்டி-ஹீரோவாக’ நடித்து பேர்வாங்கிய ’சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கே முன்னோடி.

அந்த ரஞ்சன் கதாநாயகனாக நடித்த ‘சாலிவாகனன்’ (1945) படத்தில் எம்ஜியார் அவருடன் வாள்சண்டை போடும் காட்சி ஒன்று வரும். நிஜத்தில் ரஞ்சனே ஆகச்சிறந்த வாள்சண்டை வீரர்; ஸ்பெயினில் அதைக் கற்றவர்; அந்தக் காலத்திலே அவர் ஒரு முதுகலைப் பட்டதாரி; எழுத்தாளர்; பத்திரிக்கையாளர்; கர்நாடக இசையில், பரதநாட்டியத்தில் நிபுணர்; ஆராய்ச்சியாளர். விமானஓட்டி (அவரிடம் உரிமம்வேறு இருந்தது); மந்திரவாதி. உயரமான, ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட அவர் பல்வேறு மொழிகளில் பேசும்போது ஏற்படும் கம்பீரப்படிமம் யாரையும் அச்சப்பட வைக்கும்; பொறாமைப்பட வைக்கும். இரட்டை வேடத்தில் அவர் நடித்த ’மங்கம்மா சபதம்’ அவரைச் சிகரத்திற்குக் கொண்டுபோனது.

சிறந்த நடிகரின் திறன்கள் என்று எதுவும் கிடையாது; சிறந்த அரசியல் தலைவருக்குரிய அசாத்தியமான தனித்திறமைகள் என்று எதுவுமில்லை எம்ஜியாரிடம். ஆனால் இரண்டு துறைகளிலும் சிகரத்தைத் தொட்ட அவர் அடைந்த வெற்றிகள், இமாலயப் புகழ் யாரும் தொட்டுப்பார்க்கக் கனவுகூடக் காணமுடியாது

.

நிச்சயமாக அவரையே தன் போட்டியாளராக எம்ஜியார் நினைத்திருப்பார். எம்ஜியாரின் ஆப்தநண்பர் சின்னப்பத் தேவர்கூட ரஞ்சனை வைத்து ‘நீலகிரித் திருடன்’ படத்தை எடுத்தார். ரஞ்சன் கெளபாய் உடையில் குதிரைமீது சவாரி செய்துகொண்டே பாடும் பாட்டு ‘சத்தியமே லட்சியமாக் கொள்ளடா.” எம்ஜியார் ’மலைக்கள்ளன்’, ‘மதுரை வீரன்’ ‘நாடோடி மன்னன்’ போன்ற படங்களில் அடித்தட்டு மக்களைக் கவர்வதற்குக் கடைப்பிடிக்க ஆரம்பித்த உத்தி அது. ஆனால் ரஞ்சனிடம் இருந்த பற்பல திறமைகளில் ஒருசில தவிர பெரும்பாலானவை எம்ஜியாரிடம் இல்லை. ஆனால் ’எழுதிச் செல்லும் விதியின் கை’ கடைசியில் எம்ஜியாரை சிம்மாசனத்தில் உட்கார வைத்து, அவரை ஜனங்களின் ‘வாத்தியார்’ ஆக்கியது; ரஞ்சனை அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஒரு பல்கலைக்கழகத்தில் வாத்தியராக்கியது. இறுதிக்காலம் வரை அங்கேதான் வசித்தார் ரஞ்சன்.

இது சினிமாவில்.

அரசியல் என்று பார்த்தால் சாணக்கியன் என்று போற்றப்படும் கலைஞர் எம். கருணாநிதியின் மதிநுட்பம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்து நிறுவனர்களில் ஒருவரான சி.என். அண்ணாத்துரையின் நாவன்மை, காமராஜரின் எளிமையான சுதந்திரப்போராட்ட படிமம் என்று ஆகப்பெரியதோர் அரசியல் ஆளுமைக்கான லட்சணங்கள் என்று எதுவும் இல்லை எம்ஜியாரிடம். தமிழ்த்தி ரைப்படம் பேசத் தொடங்கிய 1930-களில் முழுமூச்சாக நடிக்க முயன்று முயன்று தோற்றுப்போன எம்.ஜி. ராம்சந்தரிடம் யாராவது ஒரு ஜோசியர் “நாற்பது வருடம் கழித்து நீங்கள் தமிழ்நாட்டை ஆள்வீர்கள்” என்று சொல்லியிருந்தால் அந்த ஜோசியர் பாடு என்னவாகியிருக்கும் என்று கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.

மூலம்: ட்விட்டர்

சிறந்த நடிகரின் திறன்கள் என்று எதுவும் கிடையாது; சிறந்த அரசியல் தலைவருக்குரிய அசாத்தியமான தனித்திறமைகள் என்று எதுவுமில்லை எம்ஜியாரிடம். ஆனால் இரண்டு துறைகளிலும் சிகரத்தைத் தொட்ட அவர் அடைந்த வெற்றிகள், இமாலயப் புகழ் யாரும் தொட்டுப்பார்க்கக் கனவுகூடக் காணமுடியாது. அதனால்தான் எம்ஜியார் என்னும் ஆளுமை புரியாத ஒரு புதிராக, காரணகாரியத்தை அலசும் பகுத்தறிவுக்கு உட்படக்கூடியதாகத் தெரியவில்லை. என்னதான் மர்மம் அது? அதனால்தான் அவரை ஆங்கிலத்தில் ‘ஃபினாமினன்’ என்றழைக்கிறார்கள்.

அவரை மையமாக வைத்துக் கட்டமைத்து உருவாக்கிய நிஜக்கதைகள், எழுத்துக்கள், அவர் எழுதிய ’நான் ஏன் பிறந்தேன்’ உட்பட வாழ்க்கை வரலாறுகள், பற்பலத் தொடர்கள், இன்றைய யூடியூப் வீடியோக்கள் என்று மலைபோல் குவிந்துக் கிடக்கின்றன. ஆங்கிலத்திலும் அவரைப் பற்றிய ஆராய்ச்சிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, சமூக அறிவியல் பேராசிரியர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் எழுதிய The Image Trap: M.G. Ramachandran in Film and Politics, ஆர் கண்ணண் எழுதிய MGR: The Life, முன்னாள் டிஜிபி ஆர்.மோகன்தாஸ் எழுதிய MGR: The Man and the Myth ஆகியவற்றைச் சொல்லலாம்.

நிறையவே இருக்கின்றன. ஆனால் எம்ஜியார் என்ற அசாதாரண வெற்றியாளருக்குள் புதைந்துகிடக்கும் அந்த நிஜமனிதர் யார்? அவரை எப்படித் தோண்டி எடுத்துப் பார்ப்பது?

வாழ்க்கையில் சோறு முக்கியம் என்பதை உணர்ந்த ஓர் ஏழைக்குழந்தை அந்த நிஜமனிதர்;

வறுமையின் காரணமாக ஏழு வயதில் நாடகத்தில் நடிக்கவந்து அடிவாங்கிப் போராடி, அவமானங்கள், தோல்விகள் என்று கண்ணீர்ச் சோதனைகளில் உருண்டு, புரண்ட இளைஞன் அந்த நிஜமனிதர்;

இறுதிக்காலம் வரை, சோற்றுக்காகப் போராடும் அடித்தட்டு ஏழைகள் மீது என்றுமே தீராத ஓர் ஆத்மார்த்தமான உணர்வைக் கொண்டு வாழ்ந்த ஒரு திரைக்கலைஞன் அந்த மனிதர்.

திரையிலும், தரையிலும் தாய்ப்பாசம் கொண்ட மகனாக, அன்புகொண்ட சகோதரனாக, ஏழைப் பங்காளனாக, தூயக்காதலனாக, தீமைக்கு எதிராக போராடும் இலட்சியவாதியாக அவர் கட்டமைத்த பிம்பத்தை எம்ஜியார் இறுதிவரைக் கட்டிக்காத்தார். வசீகரமாய்ச் சிரிக்கும் அந்த முகத்தில் களங்கம் இல்லை; கள்ளங்கபடம் இல்லை என்று ஜனங்கள் நம்பினார்கள். அவரது அரசியல் குருநாதர் அண்ணாத்துரையே ”பணம் வேண்டாம்; உன் முகத்தைக் காட்டு மக்களிடம்; ஓட்டு குவியும்,” என்று சொன்னதாக ஒரு தகவல் உண்டு.

வசீகரமாய்ச் சிரிக்கும் அந்த முகத்தில் களங்கம் இல்லை; கள்ளங்கபடம் இல்லை என்று ஜனங்கள் நம்பினார்கள். அவரது அரசியல் குருநாதர் அண்ணாத்துரையே ”பணம் வேண்டாம்; உன் முகத்தைக் காட்டு மக்களிடம்; ஓட்டு குவியும்,” என்று சொன்னதாக ஒரு தகவல் உண்டு

.

எம்ஜியாரே ஒருதடவை சொன்னது போல, அவர் நிஜத்தில் நல்லவராக மட்டுமல்ல, நல்லவர் என்ற பிம்பத்தை உடையாதபடியும் பார்த்துக் கொண்டார்.

மிக எளிமையான சூத்திரம்தான் எம்ஜியார் என்னும் அசாத்தியமான மனிதர் கடைப்பிடித்தது; அதுதான் அவரது வெற்றியின் சூத்திரம். ஆனால் அது எவ்வளவு கடினமானது, எவ்வளவு கடின உழைப்பை வாங்கக்கூடியது, எவ்வளவு அசாதாரணமானது என்பதை கோடம்பாக்கத்திலிருந்து புனித ஜார்ஜ் கோட்டைக்குப் போகும் சாலையில் பயணித்த, பயணித்துக் கொண்டிருக்கும் கதாநாயகர்கள் சிலருக்கு மண்டையில் உறைத்திருக்கும்

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival