Read in : English
கிராமத்தில் சாமானிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், மற்றவர்களின் உதவியுடன் தனது விடா முயற்சியால் டாக்டராகி ராணுவ மருத்துவமனையில் கேப்டன் அந்தஸ்தில் பணிபுரிகிறார் பி. வாணி பிரியா (25). பிளஸ் டூ வரை எந்த டியூஷனுக்கும் போகாமல் தானே படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த அவர், பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.
பட்டுக்கோட்டையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாமரங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வாணி பிரியா. அவரது அப்பா பாலசுப்பிரமணியன், பெட்டிக் கடை வைத்திருந்தார். அதை வைத்துத்தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அவரது அம்மா பானுமதி வீட்டு வருமானத்துக்காக களை எடுத்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்வார். அப்பா படித்தவர் இல்லை. அப்பா பெரியார் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவர்.இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சாதாரண தொண்டராகப் பங்கேற்றிருக்கிறார். வாணிப் பிரியாவுக்குப் புத்தகம் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் அவர்தான். அம்மா 12ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். தனது மகளை எப்படியும் நன்கு படிக்க வைத்து விட வேண்டும் என்று விரும்பியவர் அவர்.
முத்துப்பேட்டையில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தார் வாணி பிரியா. தனியார் பள்ளியில படிக்க வைக்க மேற்கொண்டு பொருளாதார வசதி இல்லை என்பதால் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தாமரங்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில் 500க்கு 478 மதிப்பெண்கள் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டையில் உள்ள பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பில் கணிதம், உயிரியில், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தார். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்ததைக் கருத்தில் கொண்டும், அவரது குடும்ப சூழ்நிலையைக் கருதியும் பள்ளி நிர்வாகம் வேன் கட்டணம் உள்பட அவரிடம் எந்தக் கட்டணத்தையும் பெறவில்லை. அதனால், எந்தத் தடங்கலும் இல்லாமல் அவரால் பிளஸ் டூ படிக்க முடிந்தது.
எனக்கு டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால், பிளஸ் டூ படிக்கும்போதே எனது அப்பாவுக்கு புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். ஏற்கெனவே எங்களுக்கு இருந்த கடன்களுடன், மருத்துவச் செலவுகளுக்கான கடனும் சேர்ந்துவிட்டது. பிளஸ் டூ படிக்கிற போது, அப்பா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் வீட்டு வேலைகளையும் பார்க்க வேண்டும். அத்துடன் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குப் போக வேண்டும். பல சிரமங்களுக்கு இடையிலும் நான் படிப்பதில் தீவிர கவனம் செலுத்தினேன். அப்பாவை பிறகு வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். அப்போதும் மிகவும் கஷ்டமாக இருந்தது. இவ்வளவு கடனை எப்படி அடைக்கப் போகிறாய்? மகளுக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டியதுதானே என்று எனது நெருங்கிய உறவினர்கள் அம்மாவுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இப்போதே சொன்னால் எனது படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்பதால், தேர்வு முடிந்த பிறகு பார்க்கலாம் என்று சொல்லி அவர்களை சமாளித்தேன். இதற்கிடையே நான் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்ததும் எனது அப்பா இறந்து போனதும், மீண்டும் திருமணப் பேச்சை உறவினர்கள் எடுத்தார்கள். ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம் என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தேன். ஆனால் எப்படியும் டாக்டராகி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்று கூறிய வாணி பிரியா தனது கதையை தொடர்ந்தார்.
இவ்வளவு கடனை எப்படி அடைக்கப் போகிறாய்? மகளுக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டியதுதானே என்று எனது நெருங்கிய உறவினர்கள் அம்மாவுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். ஆனால் எப்படியும் டாக்டராகி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
பள்ளியில் எனது படிப்புக்குத் துணை நின்றவர்கள் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் எனக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் அளித்தனர். பள்ளியில் படிக்கும்போது நான் டியூஷன் எதுவும் போனது கிடையாது. நானே வீட்டில் படிப்பதுதான். பத்தாம் வகுப்பு வரை, பாடங்களைப் படிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டது கிடையாது. பிளஸ் ஒன் வகுப்பில் சேர்ந்த பிறகுதான் இரவில் நீண்ட நேரம் முழித்துப் படிப்பது, காலையில் சீக்கிரம் எழுந்து படிப்பது என்று இருந்தேன். பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும்கூட, எப்படியாவது பிளஸ் டூ வகுப்பில் நல்ல மதிப்பெண்•கள் எடுத்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தேன். 2013இல் பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1173 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே இரண்டாவது இடம் பெற்றேன். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள். நான் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கியதால் பள்ளியிலே ‘பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடன்ட்’ ஆக தேர்வு பெற்றேன்.
மருத்துவப் படிப்புக்கான எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 197.5. பொறியியல் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் 198.5. மருத்துவப் படிப்பில் எப்படியும் சேர வேண்டும் என்பதற்காக அகில இந்திய மருத்துவ ஓதுக்கீட்டுக்காக மட்டும் அப்போது நடத்தப்பட்ட நீட் தேர்வை எழுதி அதிலும் தகுதி பெற்றேன். அந்தத் தேர்வுக்கும் நானே வீட்டிலிருந்தபடியே படித்தேன். ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வைக்கூட எழுதினேன். பொறியியல், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் விண்ணப்பித்தேன். அம்மாவைப் பொறுத்தவரை பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்தால் நான்கு ஆண்டுகளில் வேலையில் சேர்ந்து விடலாம் என்று நினைத்தார். நான் எடுத்த மதிப்பெண்களுக்கு கிண்டி பொறியியல் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும்.
அதேசமயம், எனக்கு கவுன்சலிங் மூலம் எனக்கு முதலில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலில் இடம் கிடைத்தது. பிறகு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து. எனது சொந்த ஊருக்கு அருகில் என்பதால், அப்பா இல்லாத சூழ்நிலையில் தனியே இருக்கும் எனது அம்மாவையும் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்ள முடியும் என்பதால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். எனது படிப்புச் செலவுக்கு உதவுவதற்கு திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் முன்வந்தது. எனவே, எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து படிக்க முடிந்தது. படிப்புக் காலத்தில் அவர்கள் நடத்தும் பயிற்சி வகுப்பு•கள் எனக்கு தன்னம்பிக்கையூட்டின.
2019இல் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற பிறகு, திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் கொ]ஞ்ச காலம் வேலை பார்த்தேன். அப்போது கிடைத்த வருமானத்தில் எனது குடும்பத்துக்கு இருந்த கடன்களைத் தீர்த்து விட்டேன். ராணுவத்தில் பணியில் சேர வேண்டும் என்பது கல்லூரி கால விருப்பம். இதை
எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ராணுவ மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிவதற்காக, சார்ட் சர்வீஸ் கமிஷன் தேர்வை எழுதி அதில் தகுதி பெற்றேன். இந்த ஆண்டு மே மாதத்தில் கேப்டன் அந்தஸ்தில் வேலை கிடைத்துள்ளது. ஊட்டியில் உள்ள வெலிங்டனில் பயிற்சி பெற்ற பிறகு, தற்போது உத்தரப்பிரதேசத்தில் ஜான்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிகிறேன். இங்கு நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தால் மேஜர் ஆகிவிடலாம். அதன் பிறகு ராணுவ மருத்துவக் கல்லூரியில் சர்ஜரியில் முதுநிலைப் படிப்பையும், அதன் பிறகு புற்றுநோய் மருத்துவத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பையும் படிக்க வேண்டும். ராணுவத்திலேயே நிரந்தரப் பணி செய்ய வேண்டும் என்பது விருப்பம்.
அகரம் பவுண்டேஷன் உதவியுடன் படித்து ராணுவத்தில் தற்போது மேஜராகப் பணிபுரியும் டாக்டர் கிருஷ்ணவேணியுடன் இணைந்து, விடுமுறை காலத்தில் சமூக ஆர்வர்கள் ஒத்துழைப்புடன் மருத்துவ வசதிகள் கிடைக்காத மலைப் பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறார் கேப்டன் டாக்டர் வாணி பிரியா.
அப்பா இறந்த பிறகு அம்மா தற்போது திருச்சியில் நாங்கள் முன்பு இருந்த வீட்டில் இருந்து வருகிறார். இடுப்பு எலும்பு தேய்மானம் காரணமாக அவரை எனது உறவினர் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறேன். சில ஆண்டுகளாகவது ஒரே இடத்தில் பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்ததும் எனது தாயையும் என்னுடன் அழைத்துக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்” என்கிறார் வாணி பிரியா.
அகரம் பவுண்டேஷன் உதவியுடன் படித்து ராணுவத்தில் தற்போது மேஜராகப் பணிபுரியும் டாக்டர் கிருஷ்ணவேணியுடன் இணைந்து, விடுமுறை காலத்தில் சமூக ஆர்வர்கள் ஒத்துழைப்புடன் மருத்துவ வசதிகள் கிடைக்காத மலைப் பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறார் கேப்டன் டாக்டர் வாணி பிரியா. “பல்வேறு தன்னார்வ அமைப்புகள், சமூக சேவகர்கள் உதவியுடன் நடத்தப்படும் இந்த மருத்துவ முகாம்களுக்குச் செல்லும் போது எங்களது சொந்த செலவில் மருந்துகளை வாங்கிக் கொண்டு செல்வோம். என்னைக் கைதூக்கி விட்ட இந்த சமூகத்துக்கு நாங்கள் செய்யும் பதில் மரியாதை” என்று கூறும் கேப்டன் டாக்டர் பி. வாணி பிரியா, “படிப்பு என்பது வாழ்க்கை முன்னேற்றத்துக்கான படிக்கட்டு. எத்தனை சிரமங்கள் வந்தாலும் படிப்பைத் தொடர்ந்து படித்து முடித்து விட வேண்டும் என்பதை இலக்காகக் கொள்ள வேண்டும். அத்துடன் எந்த வேலையாக இருந்தாலும் நமது தனித்தன்மையை மிஸ் பண்ணிவிடக்கூடாது” என்கிறார். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
Read in : English