Read in : English
பிரபல நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்னும் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்தவுடன் தந்த ஒரு பேட்டியில் ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை தனது அரசியல் தகவல்தொடர்பின் வாகனமாகப் பயன்படுத்தப்போவதாகச் சொன்னார். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரைப்படங்கள் மூலம் அரசியல் பரப்புரை செய்து அவரது அதிமுக கட்சியை, திமுகவைவிட அதிகப் பலமுள்ள கட்சியாக்கியது போல செய்ய முடியுமா என்ற கேள்விக்குக் கமல் அப்போது விடையளித்துக் கொண்டிருந்தார்.
2018இல் தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான அந்தப் பேட்டியில் கமல் சொன்னது இதுதான்: “நான் பிக் பாஸைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பணம் பண்ணுவதற்காக அல்ல; எனக்குத் தகவல்தொடர்பு வேண்டும். அது பயனுள்ளதாக இருந்தால் மீண்டும் அதை நான் செய்வேன்.”
இன்று சென்னை, குறிப்பாக தமிழ்நாட்டின் பெரும்பகுதி, இந்தப் பருவமழை வானிலையைத் திகிலோடு கவனித்துக் கொண்டிருக்கிறது. இப்போது கவனத்தை ஈர்த்துக் கொண்டிருப்பது சமூக ஊடகங்கள் வாயிலாக குடிமக்கள் அனுப்பும் செய்திகளின் வெள்ளம்; அதே சமயத்தில் இந்த மின்னுலகச் சொல்லாடலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசியல் கட்சிகளும், தனிப்பட்ட அரசியல்வாதிகளும், அவர்களின் தகவல்தொழில்நுட்ப பிரிவுகளும் தொடர்ந்து ஏராளமான செய்திகளை ஒலி, ஒளியாக்கிக் கொண்டிருக்கின்றன.
பல தசாப்தங்களுக்கு முன்பு, ஊடகம் பற்றி சொன்ன சமூகவியலாளர் மார்ஷல் மெக்லூகனின் தீர்க்கதரிசனத்தை நிரூபிக்கும்வகையில், தற்போது ஊடகமே செய்தியாகி விட்டது. பேரழிவை அதன் ரணவலியோடு பேசுகிறது. அதன்மூலம் அதிகாரவர்க்கத்தைப் பதில் சொல்ல வைத்துவிட்டது. ஆள்வோர்களையும், அதிகாரிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் கவனம்செலுத்த வைப்பதும், முக்கியமான நடைமுறைப் போக்குகளை ’ஹாஷ்டாக்’ செய்து கவனத்தைக் குவிப்பதும் இப்போதைய மைய நீரோட்டம். அரசுகள் மும்முரமாக பணிசெய்யும் என்றால், நிஜ உலகில் எது முக்கியம் என்பதை அவை கற்றுக்கொள்ளும்.
இந்த 2021ஆம் ஆண்டு முழுவதும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து குறுஞ்செய்திகளை, காணொலிகளை, புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். சென்னையின் முக்கிய பகுதிகளிலும், தொலைதூர மாவட்டங்களிலும் விளிம்புப் பகுதிகளிலும் கால்முட்டியளவு வெள்ளத்தில் அவர் நடந்து போவதை, அதிகாரப்பூர்வமாக உணவு, மற்றும் வெள்ள நிவாரணப் பொருட்களை அவர் வழங்குவதை சமூக ஊடகங்கள் பளிச்சிடுகின்றன. மழைகோட் அணிந்துகொண்டு கமலும் அதைப்போல தண்ணீரில் ஷுக்கள் நனைய மக்கள் குறைகளைக் கேட்கிறார். பின்பு, அவர் வெளிநாடு சென்றார்; கோவிட் நோய்க்கு ஆளானார்; திரும்பிவந்தார்; சிலகாலம் மும்முரமான அரசியல் பணிக்கு விடுமுறை விட்டார். உள்ளாட்சித் தேர்தல்கள் வரும்போது, இந்த மாதிரியான அரசியல் பரபரப்புச் செயல்கள், நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிர் பெறும்.
சமூக ஊடகங்கள் மற்ற மைய நீரோட்ட ஊடகங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. ராஜ் பகத்தின் துணைக்கோள் படிமங்களும், ஆராய்ச்சிகளும் ஒருநாள் கழித்து ‘சென்னையில் ஏன் மழை வெள்ளம்’ என்ற முழுப்பக்க அலசலுக்கு அடிப்படை ஆனது.
திமுகவுக்கு எதிரான, பாஜகவுக்கு ஆதரவான முகாமைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் அரசாங்கத்தின் எதிர்வினைக்கு மறுவினை ஆற்றும்வகையில் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் படகுகளை மிதக்கவிட்டனர். அனைந்திந்திய அண்ணா திமுக தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும், “திமுக அரசு வானிலையை கணித்துச் செயல்படத் தவறிவிட்டது; அதனால்தான் இப்படி வெள்ளம் வந்தது” என்று பேசினார்கள். ஆயினும் பத்தாண்டு அஇஅதிமுக ஆட்சிக்குப் பின்பு இப்போது மக்களின் அனுதாபம் நிச்சயம் எதிர்த்திசையில்தான் இருக்கிறது.
2015-ஆம் ஆண்டு பெருவெள்ள காலத்தில் முகநூல் ஏற்கனவே வளர்ந்திருந்தது. ஆனால், அரசிற்கும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சமூக ஊடகங்களில், குறிப்பாக டிவிட்டரில் நுழைவதற்கு சற்று அதிககாலம் ஆனது. 2018இல் சமூக ஊடகப் பயனாளிகள் முகநூலில் 2.26 பில்லியனும், யூடியூப்பில் 1.9 பில்லியனும், வாட்ஸ்அப்பில் 1.33 பில்லியனும், இன்ஸ்டாகிராமில் ஒரு பில்லியனும், டிவிட்டரில் 329.5 மில்லியனும் இருந்ததாக ‘அவர் வேர்ல்டு இன் டேட்டா புராஜெக்ட்’ சொல்கிறது. இந்தப் பயன்பாடு கோவிட்-19 வந்தபின்பு அதிகரித்தது.
தமிழ்நாட்டிலும், ஆந்திரா போன்ற அண்டை நாடுகளிலும் ஏற்பட்ட 2021ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் இனிவரும் ஆண்டுகளில் நிகழப்போகும் பலத்த மழை வெள்ளத்திற்கு ஒரு முன்னோட்டமே. ஒருவேளை பருவகாலங்களுக்கு இடையே சின்னச் சின்ன இடைவெளிகள் இருக்கலாம்.
ஸ்பெஷலிஸ்ட்டுகளின் வருகை
நடப்பு ஆண்டில் இணையத்தின் மீதான மையத்தை விசேஷமாக்குவது என்ன நடக்கப்போவது என்பதை விளக்கும் விஞ்ஞானத் தரவுகளின் பயன்பாடுதான். அதிகாரப்பூர்வமான வானிலை அறிக்கைகள் அளிக்கும் இந்திய வானிலைத் துறையைத் தவிர, தமிழ்நாடு ’வானிலை மனிதர்’ என்று பரிச்சயமான பிரதீப் ஜானை 4,05,000 பேர் தொடர்கிறார்கள் (https://twitter.com/praddy06). வெள்ளத்தால் களைப்பான மின்னுலகவாசிகள் அவரை ஆர்வத்துடன் டிவிட்டரிலும் முகநூலிலும் தொடர்கின்றனர். அதே சமயம், தொலை நுண்ணுணர்வு நிபுணரான பி. ராஜ் பகத் துணைக்கோள் படிமங்களைப் பயன்படுத்தி வெள்ள விளக்கத்திற்கு ஒரு புதிய பரிமாணம் தருகிறார் https://twitter.com/rajbhagatt).
வெள்ளம்சூழ்ந்த வடிகால் பகுதிகளைக் கவனமாக ஆராய்ந்தால், சென்னையின் எந்தப் பகுதிகள் மோசம் என்பதைக் கண்டுபிடிக்கலாம்; பின்பு எதிர்காலத் துயரங்களைச் சமாளிக்கத் தயாராக இருக்கலாம். அந்தப் பகுதிகளில் வீடுவாங்குவதைத் தவிர்க்கலாம்.
சமூக ஊடகங்கள் மற்ற மைய நீரோட்ட ஊடகங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. ராஜ் பகத்தின் துணைக்கோள் படிமங்களும், ஆராய்ச்சிகளும் ஒருநாள் கழித்து ‘சென்னையில் ஏன் மழை வெள்ளம்’ என்ற முழுப்பக்க அலசலுக்கு அடிப்படை ஆனது.
சமூகவியலாளர் மானுவல் காஸ்ட்டெல்ஸ் இணைய யுகத்தை வரையறுக்கும்போது சொன்ன இந்த ’நெட்வொர்க் சமூகத்தில்’ ஆகப்பெரும் மாற்றம் என்பது நிஜநேரத்து தகவல் பரிவர்த்தனைகள் குடிமக்களிடம் கடத்தப்பட்டதுதான். ஓர் இயற்கைப் பேரழிவு உச்சம் தொடும்போது, பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகமான டிவிட்டரில் (வாட்ஸ்அப் போலில்லாமல், டிவிட்டரில் பரிசோதிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் இருக்கிறார்கள்), திடீர் ட்ரெண்ட் உருவாகிப் பொங்கி எழுகிறது.
முகநூலில் உள்ள உள்ளூர் மாநகரக் குழுக்கள் 2015இல் சாதித்ததைவிட இப்போது மிகப் பலமான கூட்டுணர்வைச் சாதித்திருக்கின்றன. நிகழ்வுகளின் தாக்கம், தயார்நிலைச் சேவைகள் ஆகியவற்றைப் பற்றி அந்தக் குழுக்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.
இதன்மூலம் கவனம் எல்லாம் நகரத்தில் அதிக இணைப்புடன் கூடிவாழும் மக்கள் மீதே குவிகிறது. முகநூலில் உள்ள உள்ளூர் மாநகரக் குழுக்கள் 2015இல் சாதித்ததைவிட இப்போது மிகப் பலமான கூட்டுணர்வைச் சாதித்திருக்கின்றன. நிகழ்வுகளின் தாக்கம், தயார்நிலைச் சேவைகள் ஆகியவற்றைப் பற்றி அந்தக் குழுக்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. உதாரணத்திற்கு, மேற்கு மாம்பலவாசிகளின் முகநூல் பக்கத்தைச் சொல்லலாம்.
உயர்தர ஆழ்வார்பேட்டை- சீதா காலனி முதல் நடுத்தரவர்க்கத்து கே.கே. நகர், மேற்கு மாம்பலம் வரையிலான வெவ்வேறு சென்னைப் பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட மழைச்சீரழிவின் காணொலிகள் வெளிவந்தன. அணைக்கட்டுகளிலிருந்து பொங்கி வழிந்த நீரால் தனிமைப்பட்டுப் போன ஐடி காரிடர் கொண்ட பழைய மகாபலிபுரம் சாலையின் (ஓஎம்ஆர்) படூர்வாசிகள், ஸ்டாலினுக்கு இந்தப் பிரச்சினையை ‘ஹாஷ்டாக்’ செய்து அவரது கவனத்தை ஈர்த்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பளபளப்பான விளம்பரங்கள் மூலம், சோழிங்கநல்லூர் வரை உள்ள புறநகர்ப் பகுதிகளில் ‘கேட்டட் கம்யூனிட்டி’ அபார்ட்மெண்ட்டுகளை விற்கும்போது, பருவமழைக் காலங்களில் ஓஎம்ஆரை அடைவதற்குத் தேவைப்படும் படகுகள் அல்லது லாரிகள் பற்றி எதுவும் பேசுவதில்லை.
ஹாஷ்டாக் பிரபஞ்சம்
இந்த ’ஹாஷ்டாக் பிரபஞ்சம்’ சொல்லும் ஆருடம் என்ன? மீரா நாயரும் அவரது சகப்பணியாளர்களும் 2015-ஆம் ஆண்டு வெள்ளம் பற்றி செய்த ஆய்வின்படி, அந்தப் பேரழிவுக் காலக்கட்டத்தில் பரப்பப்பட்ட பெரும்பாலான டிவீட்கள் எல்லாம் ‘உதவியும் நிவாரணமும் தேவை’ என்ற பிரிவின் கீழே அமைந்திருந்தன. வெள்ளநீர் வடிந்த பின்பு, அவை நன்றி, புகார்கள், மற்றும் பிற அம்சங்கள் என்ற பிரிவுகளில் தொடுக்கப்பட்டன.
கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் கேப்ஸ்டோன் திட்டத்திற்காக டிவிட்டரை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, தேசிய பேரழிவு எதிர்வினை குழுவும், அதன் மாநில அலகும் சமூக ஊடகங்களைப் பகுத்தாயும் திறமைகளை வளர்த்துக்கொண்டு தங்களின் வீச்சை பலமாக நீட்டிக்க வேண்டும் என்ற முடிவைச் சொன்னது.
பேரழிவுத் தகவல்தொடர்பை (உதாரணத்திற்கு ஹாஷ்டாக்கை அடிப்படையாகக் கொண்ட தகவல்தொடர்பை) ஆராய்வதற்கு உதவும் பகுத்தாய்வுக் கருவிகளை மனதில் வைத்து, அரசுகள் எதிர்காலத் தகவல்தொடர்புகளை பகுந்தாய்ந்து தலையிடுவதற்கு தங்களின் சொந்த நிரல்களை (கம்ப்யூட்டர் ப்ரோகிராம்ஸ்) எழுதிக் கொள்ளலாம். அப்போது தகவல் ஆய்வில் பங்கெடுப்பதற்கு அரசு ஏஜென்ஸிகளுக்குச் சாத்தியமாகும். அரசின் அதிகாரப்பூர்வமான் பங்கெடுப்பு மின்னுலகப் பிளவை வென்று செய்திப்பரவலின் பாரபட்சத்தை நீக்கிவிடும். இப்போது ‘ட்ரோன்’ விதிகள் தளர்த்தப்பட்டுவிட்டதால், ஒரு நிகழ்வு முடிந்த பின்பு, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் காட்டும் விண்வெளிக் கட்புலக் காட்சிப் பரிமாணத்தைச் சேர்த்துக் கொள்வதைச் சாத்தியமாக்க வேண்டும்.
எம்ஜிஆர் தன் அரசியல் எதிரிகளை திரைப்பட வசனங்கள், பாடல்கள் மூலம் தாக்கினார். இன்றைய அரசியல் தகவல்தொடர்பு என்பது பேரழிவுக் காலங்களில் சமூக ஊடகங்களில் குடிமக்கள் வெளிப்படுதலோடு நின்றுவிடுகிறது. கமலின் ‘பிக் பாஸ்’ அல்லது ஆமீர்கானால் உந்துதல் பெற்ற பிரபல சத்யமேவ ஜெயதே போன்ற நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, குடிமக்களால் வழிநடத்தப்படும் சமூக ஊடகம்தான் மாற்றத்தின் வேகத்தை உருவாக்கும்.
Read in : English